புதன், 16 அக்டோபர், 2024

மொழிப்போர்

 

மொழிப்போர்

இந்தி மொழியை இந்தியாவில் ஆட்சி மொழியாக்கும் இந்திய அரசின் முயற்சிக்குத் தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இராசகோபாலச்சாரியார் தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்திப் படிப்தை கட்டாயமாக்கியது. சத்தியமூர்த்தியும் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனும் இதற்கு எதிராக இருந்தனர். இந்தியை விருப்பப்பாடமாகவோ அல்லது பெற்றோர்கள் தம் சிறுவர்களை இந்திப் பாடத்திலிருந்து விலக்கிக்கொள்ள அனுமதி கோரும் விதிகளைக் கொண்டதாகவோ திருத்தக் கோரினர். ஆனால் இராஜாஜி பிடிவாதமாக இருந்தார்.

விடுதலைக்கு முன்பு….

1937இல் முதன் முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மறைமலையடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கி..பெ.விசுவநாதன் ஆகியோர் திருச்சியில் முதல் இந்தித்திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினர்.  எதிர்க்கட்சியாக இருந்த நீதிக்கட்சியின் தலைவர் பெரியாரும் மூன்று ஆண்டுகள் உண்ணா நோன்பு போராட்டம், மாநாடுகள், பேரணிகள் என போராட்டத்தில் ஈடுபட்டார்.

1938ஆம் ஆண்டு 125 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார் இராஜாஜி. ஆகவே, திசம்பர் 3, 1938 இந்தி எதிர்ப்பு நாளாகக் கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் தமிழ் மொழி பேசும் மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.

1938ஆம் ஆண்டு ஸ்டாலின் ஜெகதீசன் என்ற இளைஞர் கட்டாய இந்திக் கல்வியை எதிர்த்து உண்ணா நோன்பு இருந்தார். அவரைத் தொடர்ந்து பொன்னுசாமி என்பவரும் இராஜாஜியின் வீட்டின் முன்னர் உண்ணாநோன்பு இருந்தார்.

1939இல் பேரணியில் பங்கேற்றதாக காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோர் சிறையிலேயே உயிர் இழந்தனர். இவர்கள் பின்னாளில் மொழிப்போர் தியாகிகள் ன்று அழைக்கப்பட்டனர். பெரியார் உட்பட 1200 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் ஆட்சியிலிருந்து விலகிய பின்னர் கட்டாய இந்திக் கல்வி விலக்கப்பட்டது.

1940-46 ஆண்டுகளில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு உணர்வைத் திராவிடர் கழகமும் பெரியாரும் உயிரூட்டி வந்தனர். இந்திய அரசு இந்திக் கல்வியைக் கட்டாயப் பாடமாக்கத் துணியும்போதெல்லாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தி அதனைத் தடுப்பதில் வெற்றி கண்டனர். இந்த காலகட்டத்தில் மிகத்தீவிரமான போராட்டம் 1948-49 ஆம் ஆண்டுகளில் நடந்தது.

விடுதலைக்குப்பின்பு

இந்தியா விடுதலை பெற்ற பின்னர் காங்கிரசு தலைமையிலான புதிய இந்திய அரசு, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது. அதன்படி சென்னை மாகாணத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரசு அரசு 1948ஆம் ஆண்டு கட்டாயமாக்கியது. பெரியாரின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்கு இம்முறை காங்கிரசில் இருந்த ம. பொ. சிவஞானம் மற்றும் திரு.வி.க தங்கள் முந்தைய இந்தி ஆதரவுநிலைக்கு மாறாக ஆதரவளித்தனர்.

ஜூலை 17, 1948ல் திராவிடர் கழகம் (தி.க)ஒரு அனைத்துக் கட்சி இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டி இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 1937-40ல் நடந்தது போலவே பேரணிகள், கருப்புக் கொடி போராட்டங்கள், அடைப்புகள் ஆகியவை நடத்தப்பட்டன. அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜாஜி ஆகஸ்ட் 23ஆம் தேதி சென்னை வந்தபோது திராவிடர் கழகத்தினர் அவருக்கு கறுப்புக்கொடி காட்டினர். இதற்காக அண்ணாதுரை, பெரியார் உட்பட பல தி.க.வினர் ஆகஸ்ட் 27 அன்று கைது செய்யப்பட்டனர். பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், போராட்டம் தொடர்ந்தது. டிசம்பர் 18 ஆம் தேதி பெரியார் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் விரைவில் அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் சமரச உடன்பாடு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்; அரசும் அவர்கள் மீது தொடுத்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. பின்னர் இந்திப் பாடத்தை 1950-51 கல்வியாண்டிலிருந்து விருப்பப்பாடமாக மாற்றி விட்டது. இந்தி கற்கவிரும்பாத மாணவர்கள் இந்தி வகுப்புகளின் போது பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

1953ஆம் ஆண்டு மு.கருணாநிதியும், பிற திமுக தொண்டர்களும், டால்மியாபுரம் என்ற ஊரின் பெயரைத் தமிழில் கல்லக்குடி என்று மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். தொடர்நிலையப் பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழித்து இருப்புப்பாதையில் படுத்து வண்டிப் போக்குவரத்தைத் தடுத்தனர். காவலர்களுடன் நடந்த கலவரத்தில் இருவர் மரணம் அடைந்தனர். கருணாநிதி உட்பட ஏனையவர் கைது செய்யப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தியா விடுதலை பெற்ற பின்பு அரசியலமைப்பு சட்டமன்றத்தில் பல்வேறு விவாதங்களுக்குப்பின் இந்தி அரசுப்பணி மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1965ஆம் ஆண்டிலிருந்து இந்தி மட்டுமே அரசுப் பணிமொழியாக விளங்க வேண்டும் என்று இந்தியஅரசு மேற்கொண்ட முயற்சிகள், இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பைக் கிளப்பியது. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி திணிப்பு எதிர்ப்பில் முன்னணியில் இருந்தது. “இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும். இந்தி திணிக்கப்படமாட்டாது என்ற நேருவின் வாக்குறுதி மீறப்பட்டது. அறிஞர் அண்ணாதுரையின் தலைமையில் திராவிட முன்னேற்ற இயக்கத்தார் இந்தி எதிர்ப்புப் போரைத் தொடங்கினர்.

1963இல் அரசியல் சட்ட எரிப்பு, 1964இல் திருச்சியில் சின்னசாமியின் தீக்குளிப்பு, 1964 இல் சென்னையில் சிவலிங்கத்தின் தீக்குளிப்பு முதலியன இந்தி எதிர்ப்பு எல்லைக் கற்களாக எழுந்தன. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் பலர் போராட்டத்தில் இணைந்தனர். இந்தித் திணிப்பு நாளை திராவிட முன்னேற்ற இயக்கத்தார் துக்க நாளாக்கினர். சென்னை, தஞ்சை, மன்னார்குடி, திருச்சி, புதுவை, செஞ்சி, திருப்ப்பூர், குமாரபாளையம், வெள்ளக்கோவில் முதலிய இடங்களில் கலவரங்கள் வெடித்தன. துப்பாக்கிச்சூடுகள் தொடர்ந்தன. திருப்பூரில் காவல் அதிகாரிகள் உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கம் தமிழகத்தை ஒட்டு மொத்தமாகக் குலுக்கியது. இலால் பகதூர் சாஸ்திரியின் வாக்குறுதிக்குப்பின் போராட்டம் தணிந்தது. 1967ஆம் ஆண்டு அமைந்த இந்திராகாந்தி தலைமையிலான இந்திய அரசு, அரசுப்பணி மொழிச் சட்டத்தில் என்றென்றும் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளும் அரசு மொழிகளாக விளங்கும் என்ற வகையில் திருத்தம் கொண்டு வந்தது.

போராட்டத்திற்குத் துணை நின்றோர்

இப்போராட்டத்திற்குப் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியினரும் துணை நின்றனர். மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கா.அப்பாதுரை, முடியரசன், இலக்குவனார் போன்றோர் ஆதரவு அளித்தனர். இப்போராட்டத்தில் பெண்களும் பெரும்பான்மையாகப் பங்கேற்றனர். மூவலூர் இராமாமிருதம், நாராயணி, ..தாமரைக்கனி, முன்னகர் அழகியார், டாக்டர் தர்மாம்பாள், மலர் முகத்தம்மையார், பட்டம்மாள், சீதாம்மாள் ஆகியோர் சிறை சென்றனர்.

 -------------------------------------------------------------------------------------------------------------------

 குறிப்பு

பாடத்தின் அளவு கருதி இக்கருத்துகள் இங்கே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் - வே.தி.செல்லம், தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் -டாக்டர் கே.கே.பிள்ளை, விக்கிபீடியா ஆகியவற்றில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளன. 

மாணவர்களின் தேர்வு நலன் கருதி இக்கருத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, இதனை நூலாக்கம் செய்யவோ, கைடு நூலாக்கவோ, வலையொளியிலோ பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். புரிதலுக்கு நன்றி. 


மொழிப்போர் குறித்து அறிய பின்வரும் இணைய தளத்தைக் காணவும்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

நன்றி விக்கிபீடியா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக