புதன், 23 டிசம்பர், 2020

ஏற்றப்பாட்டு - 2 - கோலாட்டக் கும்மிப்பாடல்

 

ஏற்றப்பாட்டு - 2

அயோத்தி என்றொரு ராஜ்யமாம்

அதனைத் தசரதர் ஆண்டனராம்

அவருக்கு மூன்று மனைவியராம்

அருமைப் புத்திரர் நால்வர்களாம்

நால்வரில் கோசலை மகன் ராமன்

நலமுள்ள கைகேயி மகன் பரதன்

நற்குண சுமத்திரையின் புதல்வர்

நயன லட்சமணன் சத்துருக்கன்

இவர்களில் ராமன் மூத்தவனாம்

எல்லா வித்தையும் கற்றவனாம்

இசைபெறுகிற வித்தையில்

இவர்களிலே இவன் வலியவனாம்

அரண்மனைப் பின்புறச் சோலையிலே

அம்பெய்தி விளையாடையிலே

அங்கொரு கிழவியும் வருவாளாம்

அவள்கூனி பெயர் மந்தரையாம்

விளையாட்டா யவள் மேல் ராமன்

வில்லுண்டை யினால் அடிப்பானாம்

விசனத்தனத்துடன் அவன் மீது

வெகுநாள் வஞ்சம் வைத்தனளாம்

பட்டாபிஷேகம் நடத்துதற்கு

பறந்தார் தசரதர் ராமனுக்கு

பரபரப்புடன் கூனி சென்றாளாம்

பாவை கைகேயி முன் நின்றாளாம்

திட வரம் தசரதரிடம் பெறவே

திரும்பினாள் கைகேயி ராமனையே

காட்டில் திரிந்தும் ராமனுமே

கஷ்டப்பட்டானே பலதினமே

கேட்டிருப்பீர் பாலர்களே!

கேலி செய்யாதீர் சீலர்களே!

 

பாடல் விளக்கம்

இராமாயணத்தின் கதைநாயகனாகத் திகழும் இராமனின் வரலாற்றை மிக எளிய முறையில் இப்பாடல் விவரிக்கின்றது.  நாட்டுப்புற நடனமாகிய கோலாட்டக் கும்மிப்பாடலாகவும் இதைப் பாடி மகிழ்வர்.

அயோத்தியை ஆண்ட மன்னன் தசரதன். அவருக்குக் கோசலை, கைகேயி, சுமித்ரை என்ற மூன்று மனைவிகள் இருந்தனர். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர். கோசலையின் மகன் இராமன். கைகேயியின் மகன் பரதன். இலக்குவணும், சத்ருக்கனும் சுமித்ரையின் மகன்கள். இந்நால்வருள் இராமன் மூத்தவன். அனைத்துக் கலைகளையும் கற்றவன். இசையிலும் வல்லவன். சிறு வயதில் அரண்மனையின் பின்புறத்தில் உள்ள சோலைகளில் நால்வரும் அம்பெய்தி விளையாடுவர். அப்போது கூன் விழுந்த முதுகுடன் மந்தரை எனும் வயதான பெண் வருகின்றாள்.  அவள் மீது வில் எய்தி விளையாடினான் இராமன். வலி பொறுக்காத கூனி இராமன் மீது வஞ்சினம் கொண்டாள். உரிய வயது நிரம்பியவுடன் இராமனுக்குப் பட்டாபிஷேகம் நிகழ்த்த தசரதர் முயன்றார். அதைக் கேள்விப்பட்ட கூனி இராமனின் பட்டாபிஷேகத்தை நிறுத்துவதற்குச் சூழ்ச்சி செய்தாள். இதற்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று எண்ணிய வேளையில் கைகேயி தென்பட்டாள். அவள் மனதைத் தன் சூழ்ச்சியால் மாற்றினாள். இராமன்பால் தீராத அன்பு கொண்டிருந்த கைகேயி தன் மகன் பரதன் நிமித்தம் மனம் மாறினாள். தசரதனிடம் வரங்களைப் பெற்றாள். இராமனைக் காட்டுக்கு அனுப்பினாள். பரதனுக்கு மகுடம் சூட்டினாள். இராமனும் இலக்குவணனும் சீதையும் காட்டில் பல துன்பங்களை அடைந்தனர். இறை வடிவாகிய இராமனுக்கே இந்நிலை ஏற்பட்டது. ஆகவே யாரையும் இழிவாக எண்ணவோ, கேலி செய்யவோ கூடாது என்று உணர வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்ய இக்கதையைப் பாடுவர்.

 

 நன்றி - DVR EDUCATIONAL CHANNEL


நன்றி - சங்கீத சாம்ராஜ்யம்.

தெம்மாங்குப் பாடல் - நாட்டுப்புறப்பாடல்

 

தெம்மாங்குப் பாடல்

நாட்டுப்புற மக்களின் பாடல்களில் மிகவும் சிறப்புடையது தெம்மாங்குப் பாடல்களாகும். இவற்றை மக்கள் இசையுடன் பாடி ஆடி மகிழ்வர்.  தேனின் இனிமையைப் போன்று பாடல் இனிமையாக இருப்பதனால் "தேன் பாங்கு என்பதே தெம்மாங்கு என மாறி வருகிறது" என்பர். தென் பாங்கு எனப் பொருள் கொண்டு தென்னகத்தின் பாங்கான பாடல் என்று கூறுவதும் உண்டு. 

நாட்டுப்புறங்களில் தனி வழியே நடக்கும் போது, வண்டி ஓட்டும்போது, வயல் வெளிப்பணிகளின்போது என எந்தச் சூழ்நிலையிலும் தெம்மாங்குப் பாடல் எழலாம். ஒருவரே பாடுவது, ஒருவர் கேள்விக்கு மற்றவர் பதில் கூறிப் பாடுவது, ஒருவர் பாட ஏனையோர் அதனையே ஒருமித்துப் பாடுவது எனப் பல்வேறு மரபுகள் இதில் உள்ளன.

தெம்மாங்கு பாடலும் அதன் வடிவமைப்பும் அந்தந்த பகுதி மக்களின்  மண்ணின் அடிப்படையிலும் தொழிலின் அடிப்படையிலும் மாறுபடும். இப்பாடல், பெரும்பாலும் ஒரே மெட்டைக்கொண்டு பாடப்படுகின்றது. மலைவாழ் மக்களும் கடல்வாழ் மக்களும் சமவெளிமக்களும் இயற்கையின் சூழலைப் பாடுபொருளாக் கொண்டு பாடுகின்றனர், சமவெளி மக்களால் அதிகம் பாடப்படும் தெம்மாங்கு பாடல் நையாண்டி கலந்ததாக அமைகின்றது.

தெம்மாங்குப் பாடல்

காடுவெட்டிக் கல்பொறுக்கிக்
கம்புசோளம் தினைவிதைத்துக்
காலைமாலை காட்டைக் காக்கத் -
தங்கரத்தினமே
கண்விழித்திருந்தாளாம் -
பொன்னுரத்தினமே. 1


அள்ள
அள்ள விதைத்த
அழ
குத்தினை சாகாதடி
மொள்ளமொள்ள விதைத்த -
தங்கரத்தினமே
மொந்தத்தினை சாகாதடி -
பொன்னுரத்தினமே. 2


கறுப்பானை ஓடிவரக்
கள்ளரெல்லாம் தினைவிதைக்க
வெள்ளானை ஓடிவரத் -
தங்கரத்தினமே
வேடரெல்லாம் தினைவிதைக்கப் -
பொன்னுரத்தினமே. 3


சின்னச்சின்ன வெற்றிலையாம்
சேட்டுக்கடை மிட்டாயாம்
மார்க்கட்டு மல்லிகைப்பூ -
தங்கரத்தினமே
(உன்) கொண்டையிலே மணக்குதடி -
பொன்னுரத்தினமே. 4


சாலையிலே ரெண்டுமரம்
சர்க்காரு வச்சமரம்
ஓங்கி வளர்ந்தமரம் -
தங்கரத்தினமே
உனக்கேத்த தூக்குமரம் -
பொன்னுரத்தினமே. 5


எல்லோரும் கட்டும்வேட்டி
ஏழைக்கேற்ற மல்லுவேட்டி
சந்தனங் கட்டும்வேட்டி -
தங்கரத்தினமே
சரியான சரிகைவேட்டி -
பொன்னுரத்தினமே. 6


ஒத்தத்தலை நாகன்வந்து
ஒட்டாக்காட்டை அழிச்சிடுத்தே
ஆராரைக் காவல்வைப்போம் -
தங்கரத்தினமே
அழகான தினைப்பயிர்க்குப் -
பொன்னுரத்தினமே. 7


தெய்வானையைக் காவல்வைத்தால்
தீஞ்சிடுமே தினைப்பயிருவள்ள
ியைக்
காவல்வைத்தால் -
தங்கரத்தினமே
வனத்துக்கொரு சேதமில்லை -பொன்னுரத்தினமே.
8


மூத்தண்ணன் பொண்சாதியை
மூணுமாசம் காவல்வைப்போம்
ஏழையண்ணன் பொண்சாதியை -
தங்கரத்தினமே
ஏழுமாசம் காவல்வைப்போம் -
பொன்னுரத்தினமே. 9


சாய்ந்திருந்து கிளிவிரட்டச்
சாய்மானமும் பொன்னாலே
உட்கார்ந்து கிளிவிரட்டத் -
தங்கரத்தினமே
முக்காலியும் பொன்னாலே -
பொன்னுரத்தினமே. 10

பாடல் விளக்கம்

விளை நிலத்தில் தினை விதைத்து அதைப் பாதுகாத்துப் பயிராக்குவதில் ஏற்படுகின்ற சிக்கல்களையையும், சமூக ஏற்றத்தாழ்வுகளால் உழவர்கள்படும் வேதனைகளையும் இத்தெம்மாங்கு பாடல் விவரிக்கின்றது.  ஓர் ஆண் ஒரு பெண்ணைப் பார்த்துப் பாடுவதுபோல இப்பாடல் அமைந்திருக்கின்றது. இசையோடு பாடப்படும் பாடல் ஆதலால் தங்கரத்தினமே, பொன்னுரத்தினமே என்ற சொற்கள் சந்த நயத்திற்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.

தினை விதைத்தல்

கம்பு, சோளம் முதலிய சிறுதானியங்கள் கடுமையான வறட்சியைத் தாங்கக்கூடியவை. ஆடி, புரட்டாசி மாதங்கள் இவ்வகைத்தானியங்களைப் பயிரிடுவர். சிறுதானியங்கள் குறைந்த செலவில் நிறைந்த பலனைத் தரும் என்பதால் அத்தினைகளை விதைப்பதில் கள்ளர், வேடர் உள்ளிட்ட சிறு, குறு விவசாயிகள் ஆர்வம் காட்டுவர்.

விதைப்பதற்கு முன் நிலம் கலப்பைக் கொண்டு ஆழமாக உழப்படும். கோடை மழையால் முளைத்திருக்கும் களைகள் வெட்டி எடுக்கப்படும். விதைப்பதற்கு இடையூறாக இருகு்கும் சிறு சிறு கற்கள் நீக்கப்படும். விளைநிலங்கள் உழுவதற்குத் தயார் நிலையில் வைத்த பிறகு, கம்பு, சோளம் உள்ளிட்ட விதைகளைக் கைகளால் அள்ளி எடுத்தும், விதைப்பான் கருவி கொண்டும் வரிசை வரிசையாக விதைப்பர். கைகளால் அள்ளி எடுத்து விதைக்கும்போது மெள்ள மெள்ளவே விதைப்பர். அவ்வாறு விதைத்தால் தினை விதைகள் சாகாமல் நிலத்தை பிளந்து முளைக்கத் தொடங்கும். இதையே,

‘அள்ள அள்ள விதைத்த
அழ
குத்தினை சாகாதடி
மொள்ளமொள்ள விதைத்த -
தங்கரத்தினமே
மொந்தத்தினை சாகாதடி –
பொன்னுரத்தினமே’

என்ற வரிகள் விளக்குகின்றன.

தினைப்புனம் பாதுகாத்தல்

தினை விதைத்த பிறகு அவற்றை யானை, பன்றி, பறவைகள் முதலிய உயிரினங்களிடமிருந்து பாதுகாக்க விளைநிலங்களுக்குச் சற்று அருகில் பரண் வீடு கட்டி காலையும் மாலையும் காவல் இருப்பர்.  அவ்வாறு காவல் இருக்கும் பெண்ணைக் கண்டு, “பெண்ணே! நீ சிறிய வெற்றிலை போன்ற அழகும், சேட்டுக் கடையில் விற்கும் மிட்டாய் போன்று இனிமையும் கொண்டவள். உன் கொண்டையில் சந்தையில் விற்ற மல்லிகைப் பூவின் மணம் வீசுகின்றது” என்று பாடுகின்றார்.

இயற்கையைக் காப்போம்

வாகனங்கள் செல்லும் சாலைகளில் அரசால் வைக்கப்பட்ட மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன. இயற்கை வளத்திற்கு முதன்மை கொடுத்து  மரம், செடி, கொடிகளை வளர்த்தால் மழை பெய்யும். உழவுத்தொழில் வளமைடையும். ஆனால், சுயநலத்திற்காகக் காடுகளை அழித்துவிட்டு சாலை ஓரங்களில் மரம் நடுவதால் ஒரு பயனும் இல்லை. அதனால் அம்மரங்கள் யாவும், மழையின்றி வாடும் உழவர்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளவே பயன்படுகின்றது என்ற அவல நிலையை எடுத்துக் கூற, “சாலையிலே ரெண்டு மரம், சர்க்காரு வைச்ச மரம், ஓங்கி வளர்ந்த மரம், உனக்கேத்த தூக்கு மரம் ” என்று பாடுகின்றார்.

சமூக ஏற்றத்தாழ்வுகள்

உயிர் பிழைக்க, உடல் வருத்தி, உழவு செய்து, ஊருக்கே உணவளிக்கும் நாங்கள் பருத்தியாலான வேட்டியைத்தான் வாங்க முடிகின்றது. அவற்றைக் கட்டிக் கொண்டு  எங்கள் மானம் காக்கின்றோம். ஆனால், உழைக்காது உடல் வளர்த்து உணவுகளை வீணாக்கும் பணம் படைத்தவர்கள் சரிகை வேட்டிக் கட்டிக் கொண்டு, தங்கள் பகட்டைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இதுதான் இன்றைய உழவர்களின் நிலை என்பதை வெளிப்படுத்துகின்றார்.

யாரைக் காவல் வைப்பது?

இரவும் பகலும் கண் விழித்துப் பாதுகாத்தாலும், நாகப்பாம்புகள் வயலில் புகுந்து சோளக்காட்டை அழித்துவிடுகின்றன. இதனால் யாரைக் காவல் வைப்பது என்று தெரியவில்லை என்று வருந்துகின்றா ர்.

வள்ளி வேடர் குலத்தைச் சேர்ந்தவள். தினைப்புனம் காவல்காத்து முருகனை மணந்தவள். உழவின் அருமையும் பெருமையும் உணர்ந்தவள். எனவே அவளைக் காவல் வைத்தால் சோளக் காட்டிற்கு எந்த ஒரு சேதமும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வாள். ஆனால், தெய்வானை செல்வக்குடியில் பிறந்தவள். அவளுக்கும் உழவுக்கும் தொடர்பில்லை. ஆகவே, அவளைக் காவல் வைத்தால் தினைப் பயிரைப் பாதுகாக்கத் தெரியாமல் பயிர் அழிந்து போகக் காரணமாகிவிடுவாள் என்பதை, “தெய்வானையைக் காவல் வைத்தால் தீஞ்சுடுமே தினைப்பயிரு. வள்ளியைக் காவல் வைத்தால் வனத்துக்கொரு சேதமில்லை” என்று பாடுகின்றார். இதனால், ஏழைகளின் துன்பங்களை அறிந்தவனே நாட்டுக்குத் தலைவனாக வரவேண்டும். இல்லையெனில் நாடு அழிந்துவிடும் என்ற மறைபொருள் வெளிப்படுகின்றது.

குடும்பத்தில் ஏற்றத்தாழ்வு

வீட்டில் மூத்தவனாகப் பிறந்தவன் பொறுப்புடன் குடும்பத்தைக் கட்டிக் காப்பவனாக இருக்கின்றான். அதனால் அவனுக்கு முன்னுரிமை கொடுத்து அவனுடைய மனைவியை மூன்று மாதம் மட்டுமே தினைப்புனத்திற்குக் காவல் வைப்போம். அண்ணனைச் சார்ந்து வாழும் இளையவனின் மனைவியை ஏழு மாதங்களுக்குக் காவலாக நியமிப்போம் என்று பாடுகின்றார். அதனால், மூத்தவள் சாய்ந்திருந்து கிளிகளை விரட்டித் தினைகளைப் பாதுகாக்க பொன்னால் செய்யப்பட்ட சாய்மானம் தரப்படுகின்றது. இளையவள் உட்கார்ந்து கிளிகளை விரட்ட பொன்னால் ஆன முக்காலி தரப்படுகின்றது. இதன் மூலம், உறவுகளுக்குள் நடைபெறும் ஏற்றத்தாழ்வுகளையும், அதனால் ஏற்படும் மனச்சிக்கல்களையும் அறியலாம்.


புகைப்பட இணைப்பு - https://vaiyan.blogspot.com/2016/07/natrinai-134_2.html

 

 

ஏற்றப்பாட்டு - நாட்டுப்புறப்பாடல்

 

ஏற்றப்பாட்டு

நாட்டுப்புறத் தொழிற் பாடல்களுள் வேளாண் தொழிற் பாடல்கள் சிறப்பிடம் பெற்றவை.  வேளாண் தொழிற் பாடல்களில் விதைவிதைப்பது முதல் நீர் பாய்ச்சி, களையெடுத்து, கதிர் அறுத்து, போரடித்து, வண்டியில் ஏற்றி செல்லும் வரை ஒவ்வொன்றுக்கும் பாடல்கள் பாடப்படுகின்றன. அவற்றை ஏற்றப்பாட்டு, நடவுப்பாட்டுகளையெடுப்புப் பாட்டு, கதிர் அறுப்புப் பாட்டு, நெல் தூற்றுவோர் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு எனப் பல வகைப்படுத்துவர். அவற்றுள்  ஒன்றான ஏற்றப்பாட்டு குறித்த விளக்கத்தைக் காணலாம்.

பெயர்க்காரணம்

பழங்காலத்தில் ஆறு மற்றும் வாய்க்கால் பாசனம் இல்லாத இடங்களில், கிணற்றிலிருந்து தண்ணீரை ஏற்றத்தின் மூலமாகவே இறைத்து நீர்ப் பாய்ச்சினர். இவ்வாறு, ஏற்றம் இறைக்கும்போது பாடப்படும் பாடல் ஏற்றப்பாடல் எனப்பட்டது.

பாடும் நேரம்

ஏற்றம் இறைப்போர் அதிகாலையிலேயே நீர் இறைக்கத் தொடங்குவர். நீர் இறைக்கும் காலைப் பொழுதிற்கு ஏற்றவாறு ஏற்றப்பாடலின் நீளம் குறையலாம் அல்லது நீளலாம்.

பாடும் நெறிமுறை

ஏற்றத்தின் கீழே சாலைப் பிடித்துக் கவிழ்ப்பவர், பாடலின் ஒவ்வொரு அடியையும் பாடுவார். ஏற்றத்தின் மிதி மரத்தில் இருப்போர் ஒன்றாகச் சேர்ந்து அவ்வடியைத் திரும்பப் பாடுவர். மிதி மரத்தில் இருப்போர் பாடி முடித்தபின் அடுத்த அடியைச் சால் பிடிப்பவர் பாட வேண்டும். இவ்வாறு ஓர் ஒழுங்கு முறையில் இப்பாடல் காணப்படும். இதனாலேயே “ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டில்லை” என்பர்.

பாடல் அமைப்பு

கிராமப்புற மக்கள் எந்தச் செயலைச் செய்தாலும் முதலில் கடவுளை வணங்குவர். அந்த வகையில் ஏற்றப் பாட்டின் முதலில் கடவுள் வாழ்த்து பாடப்படும். இடையிடையே  ஏற்றம் இறைக்கும் எண்ணிக்கையும், வாழ்வியல் சார்ந்த கருத்தமைந்த பாடல்களும் இடம்பெறும்.

ஏற்றமும் சால் அளவுக் கணக்கும்

ஒருபதியால் ஒண்ணு, இருபதியால் ஒண்ணு எனக் கணக்கிடும் முறையில் நூறு சால் வரை இறைக்கும் நீரின் அளவு, ஒரு பரியம் என்றும், ஆயிரம் சால் இறைக்கும் நீரின் அளவு பத்துப் பரியம் என்றும் கணக்கிடப்படும். 500 சால்கள் நீர் இறைத்தால் ஒரு குழி (60 சென்ட்) நீர்வளம் பெறும் என்பது மூத்தோர் கணக்காகும்.

ஏற்றப்பாட்டு

பிள்ளையாரே வாரும்
பெருமாளே வாரும்
சிவனாரே வாரும்
வேலவரே வாரும்
சிவனும் பெருமாளும்
சேர்ந்து ரதமேற
அரியும் சிவனும்
அமர்ந்து மலலேற
குருவும் பெருமாளும்
கூடி ரதமேற
பொற் கொடையும் தேரும்
போக வரவேணும்

அறுவதியா லொண்ணு

அறுவதியா ரெண்டு
அறுவதியா மூணு
அறுவதியா நாலு
அறுவதியா லஞ்சி
அறுவதியா லாறு
அறுவதியா லேழு
அறுவதியா லெட்டு

ஆரணி நடுவ
தாம்பர நடுவ
வேலூரு நடுவ
வெத்தல கிடங்கு

வெள்ள வெத்தலயோ
வேலங் களிப்பாக்கே
சுண்ணாம்பு கடையும்
சோனகத் தெருவும்

போனவன் திரும்ப
போட்டாளே மருந்த..
போட்டாளே மருந்த
பொடி மருந்து கள்ளி..

கள்ளி மருந்தாலே
கருத்த மறந்தேனே..
தாசி மருந்தாலே
தாய மறந்தேனே..

வேசி மருந்தாலே
வீட்டை மறந்தேனே
பாயி மருந்தாலே
பாசத்த மறந்தேனே

அண்ணன் தம்பி எல்லாம்
அடுத்தப் பகையானேன்
கூட்டாளி மார்க்கெல்லாம்
கொல்லும் பகையானேன்

மாமன் மைத்துனர்க் கெல்லாம்
மனது பகை யானேன்
சுற்றத் தார்க் கெல்லாம்
உற்ற பகை யானேன்
தாசிகளைக் கண்டா
தல மறஞ்சி வாடா
வேசிகளைக் கண்டா
வழி விலகி வாடா

பாடல் விளக்கம்

ஏற்றம் இறைப்பவர் முதலில் பிள்ளையார், பெருமாள், சிவன், வேலன் ஆகிய தெய்வங்களை வணங்கி வழிபடுகின்றார். சிவனும் பெருமாளும் ஒரு சேர தாங்கள் ஏற்றம் இறைக்கும் கருவியில் இறங்கி வந்து அமர்ந்து, தங்கள் பணி சிறக்க அருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றார். அவர்களிருவரும் தங்களுக்குக் குருவாக இருந்து வழிகாட்ட வேண்டும் என்றும் பாடுகின்றார்.

இறைவனை வணங்கிப் பாடி முடிப்பதற்குள் ஒன்றிலிருந்து தொடங்கி அறுவதியாலொண்ணு, அறுவதியா ரெண்டு என்று 68 வரை ஏற்றம் இறைத்திருக்கின்றதை எண்ணி மகிழ்ச்சி கொள்கின்றார். ஏற்றம் இறைப்பதை எண்ணிக் கொண்டே தாசிகளால், திசை மாறிப் போன தன் வாழ்க்கையைப் பாடுகின்றார்.

ஆரணி, தாம்பரம், வேலூர் ஆகிய இடங்கில் வெற்றிலை விவசாயம் செய்து, வெற்றிலைக் கிடங்கு அமைத்து செல்வந்தனாக வாழ்ந்தவன் நான். வெற்றிலை, கள்ளிப்பாக்கு, சுண்ணாம்பு என்று சுழன்று கொண்டிருந்த என் வாழ்க்கையில் தாசி ஒருத்திக் குறுக்கிட்டாள்.  சோனகத்தில் (இலங்கையில் உள்ள ஓர் ஊர்) உள்ள தெருவிற்குச் சென்ற நான் வீடு திரும்பவில்லை. அங்கே தாசி ஒருத்தியின் அழகில் மயங்கி, அவளுடைய உடல்மொழிக்கு அடிமையாகி, நான் என் கொள்கைகளை மறந்து, என் வாழ்க்கையினைத் துறந்து அவளோடு போய்விட்டேன். அதனால், பெற்ற தாயை மறந்தேன், என் மனைவி, பிள்ளைகளின் பாசத்தைத் துறந்தேன், உடன் பிறந்த அண்ணன், தம்பிகளுக்குப் பகையாளியானேன். நண்பர்களுக்கெல்லாம் வாழ்க்கையைக் கெடுக்க வந்த துரோகி ஆனேன். மாமன், மைத்துனர்கள் உள்ளத்தால்  என்னை வெறுத்துவிட்டனர். உறவினர்கள் யாரும் மதிப்பதில்லை. என் வளமான வாழ்க்கையை இழந்து விட்டேன். அதனால், தாசிகளைக் கண்டால் தலை குனிந்து மறைந்தே செல்லக் கற்றுக்கொள்ளுங்கள். வேசியைக் கண்டால் வழி விட்டு விலகிச் சென்று விடுங்கள்” என்று அறிவுரை கூறிப் பாடிக் கொண்டே ஏற்றம் இறைக்கின்றார்.

ஏழு மல வாசா
எளய பெருமாளே
எழுதும் மணவாளா
எங்கள நீ காரும்
எழுபதியா லொண்ணு
எழுபதியா ரெண்டு
எழுபதியா மூணு
எழுபதியா நாலு
எழுபதியா லஞ்சி
எழுபதியா லாறு
எழுபதியா லேழு
எழுபதியா லெட்டு

எட நாட்டு இடையா
கடா ஓட்டி வாடா
மல நாட்டு இடையா
மந்த ஓட்டி வாடா
எட நாடு தூரம்
கடா வரா தய்யா
மல நாடு தூரம்
மந்த வரா தய்யா
குட்டியாடு ரொம்ப
கூட வரா தய்யா
மொட்ட ஆடு ரொம்ப
மோடு ஏறா தய்யா

விளக்கம்

ஏழுமலையாகிய திருப்பதியில் அருள் செய்து கொண்டிருக்கும் பெருமாளை நோக்கி “நீ எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு மீண்டும் சால் இறைக்கின்றார். எழுபதியாலொண்ணு, எழுபதியா ரெண்டு என்று எண்ணிக்கொண்டே ஆடு மேய்க்கும் இடையர்களைப் பார்த்துப் பாடுகின்றார்.

வளம் பொருந்திய இடைநாட்டுக்கு இடையே, மலை நாட்டுக்கு இடையே “உன் எருமைக் கடாக்களையும், ஆட்டுக் கடாக்களையும் ஓட்டிக் கொண்டு வாடா” என்று அழைக்கின்றார். அதற்கு “என் கடா இடை நாடு தூரம் நடக்காது, மலை நாடு தூரம் என் ஆட்டு மந்தைகள் வராது, ஏனெனில் இப்போதுதான் குட்டிப்போட்ட ஆடுகள் மிக நீண்ட தூரம் நடந்து வர முடியாது. இன்னும் வளர்ச்சி பெறாத மொட்டை ஆடுகள் மேடு ஏற சிரமப்படும் ஐயா”என்று இடையன் பதிலுரைக்கின்றார்.

மாசி மல கந்தா
மயி லேறும் முருகா
மலப் பழனி வேலா
மங்க மண வாளா
வளரும் பிள்ளையாரே
காரும் பகவானே
ஏத்த முகம் பாரும்
எங்கள நீ காரும்
பிள்ளை யாரைப் பாடி
பிடித்தன் கையில் கோல
ஆனை முகனைப் பாடி
அனைத்தும் இறைச்சனே

விநாயகனைப் பாடி
விட்டு விடப் போறன்
கணபதியைப் பாடி
கரை ஏறப் போறன்
ஒண்ணே ரகு ராமா
ரெண்டே ரகு ராமா
மூணே ரகு ராமா
நாலே ரகு ராமா
அஞ்சே ரகு ராமா

விளக்கம்

இடையன் சொன்னதைக் கேட்டவாறே, முருகனைப் பாடி ஏற்றம் இறைக்கத் தொடங்குகின்றார். மலை மீது வாழும் முருகனே, மயிலை வாகனமாகக் கொண்டவனே நீ எங்களைக் காக்க வேண்டும்” என்று வேண்டுகின்றார். “பிள்ளையாரை வணங்கி, கையில் கோல் பிடித்து ஏற்றம் இறைக்கத் தொடங்கினேன்.  இப்போது கணபதியைப் பாடி ஏற்றம் இறைப்பதை முடிக்கப் போகிறேன். ஏற்றம் இறைக்கும் பணி நிறைவடைந்ததால், ஒண்ணே ரகு ராமா, இரண்டே ரகு ராமா என்று எண்ணியவாறே கரையேறப் போகின்றேன்” என்று பாடுகின்றார்.

இவ்வாறு தம் செய்யும் தொழிலில் களைப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, நீண்ட நேரம் பாடிக் கொண்டே தங்கள் பணியைச் செவ்வனே செய்து முடிப்பர் கிராம மக்கள். தங்களோடு பணி செய்யும் மற்றவருடன் பாடல் மூலம் உரையாடிக் கொண்டே வேலை செய்வதால் உற்சாகத்துடன் இருப்பர்.  

இணைய உதவி - https://ta.wikipedia.org/wiki