புதன், 23 டிசம்பர், 2020

ஏற்றப்பாட்டு - 2 - கோலாட்டக் கும்மிப்பாடல்

 

ஏற்றப்பாட்டு - 2

அயோத்தி என்றொரு ராஜ்யமாம்

அதனைத் தசரதர் ஆண்டனராம்

அவருக்கு மூன்று மனைவியராம்

அருமைப் புத்திரர் நால்வர்களாம்

நால்வரில் கோசலை மகன் ராமன்

நலமுள்ள கைகேயி மகன் பரதன்

நற்குண சுமத்திரையின் புதல்வர்

நயன லட்சமணன் சத்துருக்கன்

இவர்களில் ராமன் மூத்தவனாம்

எல்லா வித்தையும் கற்றவனாம்

இசைபெறுகிற வித்தையில்

இவர்களிலே இவன் வலியவனாம்

அரண்மனைப் பின்புறச் சோலையிலே

அம்பெய்தி விளையாடையிலே

அங்கொரு கிழவியும் வருவாளாம்

அவள்கூனி பெயர் மந்தரையாம்

விளையாட்டா யவள் மேல் ராமன்

வில்லுண்டை யினால் அடிப்பானாம்

விசனத்தனத்துடன் அவன் மீது

வெகுநாள் வஞ்சம் வைத்தனளாம்

பட்டாபிஷேகம் நடத்துதற்கு

பறந்தார் தசரதர் ராமனுக்கு

பரபரப்புடன் கூனி சென்றாளாம்

பாவை கைகேயி முன் நின்றாளாம்

திட வரம் தசரதரிடம் பெறவே

திரும்பினாள் கைகேயி ராமனையே

காட்டில் திரிந்தும் ராமனுமே

கஷ்டப்பட்டானே பலதினமே

கேட்டிருப்பீர் பாலர்களே!

கேலி செய்யாதீர் சீலர்களே!

 

பாடல் விளக்கம்

இராமாயணத்தின் கதைநாயகனாகத் திகழும் இராமனின் வரலாற்றை மிக எளிய முறையில் இப்பாடல் விவரிக்கின்றது.  நாட்டுப்புற நடனமாகிய கோலாட்டக் கும்மிப்பாடலாகவும் இதைப் பாடி மகிழ்வர்.

அயோத்தியை ஆண்ட மன்னன் தசரதன். அவருக்குக் கோசலை, கைகேயி, சுமித்ரை என்ற மூன்று மனைவிகள் இருந்தனர். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர். கோசலையின் மகன் இராமன். கைகேயியின் மகன் பரதன். இலக்குவணும், சத்ருக்கனும் சுமித்ரையின் மகன்கள். இந்நால்வருள் இராமன் மூத்தவன். அனைத்துக் கலைகளையும் கற்றவன். இசையிலும் வல்லவன். சிறு வயதில் அரண்மனையின் பின்புறத்தில் உள்ள சோலைகளில் நால்வரும் அம்பெய்தி விளையாடுவர். அப்போது கூன் விழுந்த முதுகுடன் மந்தரை எனும் வயதான பெண் வருகின்றாள்.  அவள் மீது வில் எய்தி விளையாடினான் இராமன். வலி பொறுக்காத கூனி இராமன் மீது வஞ்சினம் கொண்டாள். உரிய வயது நிரம்பியவுடன் இராமனுக்குப் பட்டாபிஷேகம் நிகழ்த்த தசரதர் முயன்றார். அதைக் கேள்விப்பட்ட கூனி இராமனின் பட்டாபிஷேகத்தை நிறுத்துவதற்குச் சூழ்ச்சி செய்தாள். இதற்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று எண்ணிய வேளையில் கைகேயி தென்பட்டாள். அவள் மனதைத் தன் சூழ்ச்சியால் மாற்றினாள். இராமன்பால் தீராத அன்பு கொண்டிருந்த கைகேயி தன் மகன் பரதன் நிமித்தம் மனம் மாறினாள். தசரதனிடம் வரங்களைப் பெற்றாள். இராமனைக் காட்டுக்கு அனுப்பினாள். பரதனுக்கு மகுடம் சூட்டினாள். இராமனும் இலக்குவணனும் சீதையும் காட்டில் பல துன்பங்களை அடைந்தனர். இறை வடிவாகிய இராமனுக்கே இந்நிலை ஏற்பட்டது. ஆகவே யாரையும் இழிவாக எண்ணவோ, கேலி செய்யவோ கூடாது என்று உணர வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்ய இக்கதையைப் பாடுவர்.

 

 நன்றி - DVR EDUCATIONAL CHANNEL


நன்றி - சங்கீத சாம்ராஜ்யம்.

2 கருத்துகள்: