புதன், 23 டிசம்பர், 2020

தெம்மாங்குப் பாடல் - நாட்டுப்புறப்பாடல்

 

தெம்மாங்குப் பாடல்

நாட்டுப்புற மக்களின் பாடல்களில் மிகவும் சிறப்புடையது தெம்மாங்குப் பாடல்களாகும். இவற்றை மக்கள் இசையுடன் பாடி ஆடி மகிழ்வர்.  தேனின் இனிமையைப் போன்று பாடல் இனிமையாக இருப்பதனால் "தேன் பாங்கு என்பதே தெம்மாங்கு என மாறி வருகிறது" என்பர். தென் பாங்கு எனப் பொருள் கொண்டு தென்னகத்தின் பாங்கான பாடல் என்று கூறுவதும் உண்டு. 

நாட்டுப்புறங்களில் தனி வழியே நடக்கும் போது, வண்டி ஓட்டும்போது, வயல் வெளிப்பணிகளின்போது என எந்தச் சூழ்நிலையிலும் தெம்மாங்குப் பாடல் எழலாம். ஒருவரே பாடுவது, ஒருவர் கேள்விக்கு மற்றவர் பதில் கூறிப் பாடுவது, ஒருவர் பாட ஏனையோர் அதனையே ஒருமித்துப் பாடுவது எனப் பல்வேறு மரபுகள் இதில் உள்ளன.

தெம்மாங்கு பாடலும் அதன் வடிவமைப்பும் அந்தந்த பகுதி மக்களின்  மண்ணின் அடிப்படையிலும் தொழிலின் அடிப்படையிலும் மாறுபடும். இப்பாடல், பெரும்பாலும் ஒரே மெட்டைக்கொண்டு பாடப்படுகின்றது. மலைவாழ் மக்களும் கடல்வாழ் மக்களும் சமவெளிமக்களும் இயற்கையின் சூழலைப் பாடுபொருளாக் கொண்டு பாடுகின்றனர், சமவெளி மக்களால் அதிகம் பாடப்படும் தெம்மாங்கு பாடல் நையாண்டி கலந்ததாக அமைகின்றது.

தெம்மாங்குப் பாடல்

காடுவெட்டிக் கல்பொறுக்கிக்
கம்புசோளம் தினைவிதைத்துக்
காலைமாலை காட்டைக் காக்கத் -
தங்கரத்தினமே
கண்விழித்திருந்தாளாம் -
பொன்னுரத்தினமே. 1


அள்ள
அள்ள விதைத்த
அழ
குத்தினை சாகாதடி
மொள்ளமொள்ள விதைத்த -
தங்கரத்தினமே
மொந்தத்தினை சாகாதடி -
பொன்னுரத்தினமே. 2


கறுப்பானை ஓடிவரக்
கள்ளரெல்லாம் தினைவிதைக்க
வெள்ளானை ஓடிவரத் -
தங்கரத்தினமே
வேடரெல்லாம் தினைவிதைக்கப் -
பொன்னுரத்தினமே. 3


சின்னச்சின்ன வெற்றிலையாம்
சேட்டுக்கடை மிட்டாயாம்
மார்க்கட்டு மல்லிகைப்பூ -
தங்கரத்தினமே
(உன்) கொண்டையிலே மணக்குதடி -
பொன்னுரத்தினமே. 4


சாலையிலே ரெண்டுமரம்
சர்க்காரு வச்சமரம்
ஓங்கி வளர்ந்தமரம் -
தங்கரத்தினமே
உனக்கேத்த தூக்குமரம் -
பொன்னுரத்தினமே. 5


எல்லோரும் கட்டும்வேட்டி
ஏழைக்கேற்ற மல்லுவேட்டி
சந்தனங் கட்டும்வேட்டி -
தங்கரத்தினமே
சரியான சரிகைவேட்டி -
பொன்னுரத்தினமே. 6


ஒத்தத்தலை நாகன்வந்து
ஒட்டாக்காட்டை அழிச்சிடுத்தே
ஆராரைக் காவல்வைப்போம் -
தங்கரத்தினமே
அழகான தினைப்பயிர்க்குப் -
பொன்னுரத்தினமே. 7


தெய்வானையைக் காவல்வைத்தால்
தீஞ்சிடுமே தினைப்பயிருவள்ள
ியைக்
காவல்வைத்தால் -
தங்கரத்தினமே
வனத்துக்கொரு சேதமில்லை -பொன்னுரத்தினமே.
8


மூத்தண்ணன் பொண்சாதியை
மூணுமாசம் காவல்வைப்போம்
ஏழையண்ணன் பொண்சாதியை -
தங்கரத்தினமே
ஏழுமாசம் காவல்வைப்போம் -
பொன்னுரத்தினமே. 9


சாய்ந்திருந்து கிளிவிரட்டச்
சாய்மானமும் பொன்னாலே
உட்கார்ந்து கிளிவிரட்டத் -
தங்கரத்தினமே
முக்காலியும் பொன்னாலே -
பொன்னுரத்தினமே. 10

பாடல் விளக்கம்

விளை நிலத்தில் தினை விதைத்து அதைப் பாதுகாத்துப் பயிராக்குவதில் ஏற்படுகின்ற சிக்கல்களையையும், சமூக ஏற்றத்தாழ்வுகளால் உழவர்கள்படும் வேதனைகளையும் இத்தெம்மாங்கு பாடல் விவரிக்கின்றது.  ஓர் ஆண் ஒரு பெண்ணைப் பார்த்துப் பாடுவதுபோல இப்பாடல் அமைந்திருக்கின்றது. இசையோடு பாடப்படும் பாடல் ஆதலால் தங்கரத்தினமே, பொன்னுரத்தினமே என்ற சொற்கள் சந்த நயத்திற்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.

தினை விதைத்தல்

கம்பு, சோளம் முதலிய சிறுதானியங்கள் கடுமையான வறட்சியைத் தாங்கக்கூடியவை. ஆடி, புரட்டாசி மாதங்கள் இவ்வகைத்தானியங்களைப் பயிரிடுவர். சிறுதானியங்கள் குறைந்த செலவில் நிறைந்த பலனைத் தரும் என்பதால் அத்தினைகளை விதைப்பதில் கள்ளர், வேடர் உள்ளிட்ட சிறு, குறு விவசாயிகள் ஆர்வம் காட்டுவர்.

விதைப்பதற்கு முன் நிலம் கலப்பைக் கொண்டு ஆழமாக உழப்படும். கோடை மழையால் முளைத்திருக்கும் களைகள் வெட்டி எடுக்கப்படும். விதைப்பதற்கு இடையூறாக இருகு்கும் சிறு சிறு கற்கள் நீக்கப்படும். விளைநிலங்கள் உழுவதற்குத் தயார் நிலையில் வைத்த பிறகு, கம்பு, சோளம் உள்ளிட்ட விதைகளைக் கைகளால் அள்ளி எடுத்தும், விதைப்பான் கருவி கொண்டும் வரிசை வரிசையாக விதைப்பர். கைகளால் அள்ளி எடுத்து விதைக்கும்போது மெள்ள மெள்ளவே விதைப்பர். அவ்வாறு விதைத்தால் தினை விதைகள் சாகாமல் நிலத்தை பிளந்து முளைக்கத் தொடங்கும். இதையே,

‘அள்ள அள்ள விதைத்த
அழ
குத்தினை சாகாதடி
மொள்ளமொள்ள விதைத்த -
தங்கரத்தினமே
மொந்தத்தினை சாகாதடி –
பொன்னுரத்தினமே’

என்ற வரிகள் விளக்குகின்றன.

தினைப்புனம் பாதுகாத்தல்

தினை விதைத்த பிறகு அவற்றை யானை, பன்றி, பறவைகள் முதலிய உயிரினங்களிடமிருந்து பாதுகாக்க விளைநிலங்களுக்குச் சற்று அருகில் பரண் வீடு கட்டி காலையும் மாலையும் காவல் இருப்பர்.  அவ்வாறு காவல் இருக்கும் பெண்ணைக் கண்டு, “பெண்ணே! நீ சிறிய வெற்றிலை போன்ற அழகும், சேட்டுக் கடையில் விற்கும் மிட்டாய் போன்று இனிமையும் கொண்டவள். உன் கொண்டையில் சந்தையில் விற்ற மல்லிகைப் பூவின் மணம் வீசுகின்றது” என்று பாடுகின்றார்.

இயற்கையைக் காப்போம்

வாகனங்கள் செல்லும் சாலைகளில் அரசால் வைக்கப்பட்ட மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன. இயற்கை வளத்திற்கு முதன்மை கொடுத்து  மரம், செடி, கொடிகளை வளர்த்தால் மழை பெய்யும். உழவுத்தொழில் வளமைடையும். ஆனால், சுயநலத்திற்காகக் காடுகளை அழித்துவிட்டு சாலை ஓரங்களில் மரம் நடுவதால் ஒரு பயனும் இல்லை. அதனால் அம்மரங்கள் யாவும், மழையின்றி வாடும் உழவர்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளவே பயன்படுகின்றது என்ற அவல நிலையை எடுத்துக் கூற, “சாலையிலே ரெண்டு மரம், சர்க்காரு வைச்ச மரம், ஓங்கி வளர்ந்த மரம், உனக்கேத்த தூக்கு மரம் ” என்று பாடுகின்றார்.

சமூக ஏற்றத்தாழ்வுகள்

உயிர் பிழைக்க, உடல் வருத்தி, உழவு செய்து, ஊருக்கே உணவளிக்கும் நாங்கள் பருத்தியாலான வேட்டியைத்தான் வாங்க முடிகின்றது. அவற்றைக் கட்டிக் கொண்டு  எங்கள் மானம் காக்கின்றோம். ஆனால், உழைக்காது உடல் வளர்த்து உணவுகளை வீணாக்கும் பணம் படைத்தவர்கள் சரிகை வேட்டிக் கட்டிக் கொண்டு, தங்கள் பகட்டைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இதுதான் இன்றைய உழவர்களின் நிலை என்பதை வெளிப்படுத்துகின்றார்.

யாரைக் காவல் வைப்பது?

இரவும் பகலும் கண் விழித்துப் பாதுகாத்தாலும், நாகப்பாம்புகள் வயலில் புகுந்து சோளக்காட்டை அழித்துவிடுகின்றன. இதனால் யாரைக் காவல் வைப்பது என்று தெரியவில்லை என்று வருந்துகின்றா ர்.

வள்ளி வேடர் குலத்தைச் சேர்ந்தவள். தினைப்புனம் காவல்காத்து முருகனை மணந்தவள். உழவின் அருமையும் பெருமையும் உணர்ந்தவள். எனவே அவளைக் காவல் வைத்தால் சோளக் காட்டிற்கு எந்த ஒரு சேதமும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வாள். ஆனால், தெய்வானை செல்வக்குடியில் பிறந்தவள். அவளுக்கும் உழவுக்கும் தொடர்பில்லை. ஆகவே, அவளைக் காவல் வைத்தால் தினைப் பயிரைப் பாதுகாக்கத் தெரியாமல் பயிர் அழிந்து போகக் காரணமாகிவிடுவாள் என்பதை, “தெய்வானையைக் காவல் வைத்தால் தீஞ்சுடுமே தினைப்பயிரு. வள்ளியைக் காவல் வைத்தால் வனத்துக்கொரு சேதமில்லை” என்று பாடுகின்றார். இதனால், ஏழைகளின் துன்பங்களை அறிந்தவனே நாட்டுக்குத் தலைவனாக வரவேண்டும். இல்லையெனில் நாடு அழிந்துவிடும் என்ற மறைபொருள் வெளிப்படுகின்றது.

குடும்பத்தில் ஏற்றத்தாழ்வு

வீட்டில் மூத்தவனாகப் பிறந்தவன் பொறுப்புடன் குடும்பத்தைக் கட்டிக் காப்பவனாக இருக்கின்றான். அதனால் அவனுக்கு முன்னுரிமை கொடுத்து அவனுடைய மனைவியை மூன்று மாதம் மட்டுமே தினைப்புனத்திற்குக் காவல் வைப்போம். அண்ணனைச் சார்ந்து வாழும் இளையவனின் மனைவியை ஏழு மாதங்களுக்குக் காவலாக நியமிப்போம் என்று பாடுகின்றார். அதனால், மூத்தவள் சாய்ந்திருந்து கிளிகளை விரட்டித் தினைகளைப் பாதுகாக்க பொன்னால் செய்யப்பட்ட சாய்மானம் தரப்படுகின்றது. இளையவள் உட்கார்ந்து கிளிகளை விரட்ட பொன்னால் ஆன முக்காலி தரப்படுகின்றது. இதன் மூலம், உறவுகளுக்குள் நடைபெறும் ஏற்றத்தாழ்வுகளையும், அதனால் ஏற்படும் மனச்சிக்கல்களையும் அறியலாம்.


புகைப்பட இணைப்பு - https://vaiyan.blogspot.com/2016/07/natrinai-134_2.html

 

 

3 கருத்துகள்: