ஏற்றப்பாட்டு
நாட்டுப்புறத்
தொழிற் பாடல்களுள் வேளாண் தொழிற் பாடல்கள் சிறப்பிடம் பெற்றவை. வேளாண் தொழிற் பாடல்களில் விதைவிதைப்பது முதல் நீர்
பாய்ச்சி,
களையெடுத்து, கதிர் அறுத்து, போரடித்து, வண்டியில் ஏற்றி செல்லும்
வரை ஒவ்வொன்றுக்கும் பாடல்கள் பாடப்படுகின்றன. அவற்றை ஏற்றப்பாட்டு, நடவுப்பாட்டு, களையெடுப்புப் பாட்டு, கதிர்
அறுப்புப் பாட்டு, நெல் தூற்றுவோர் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு எனப் பல வகைப்படுத்துவர். அவற்றுள் ஒன்றான ஏற்றப்பாட்டு குறித்த விளக்கத்தைக்
காணலாம்.
பெயர்க்காரணம்
பழங்காலத்தில் ஆறு மற்றும் வாய்க்கால் பாசனம்
இல்லாத இடங்களில், கிணற்றிலிருந்து தண்ணீரை ஏற்றத்தின் மூலமாகவே
இறைத்து நீர்ப் பாய்ச்சினர். இவ்வாறு, ஏற்றம் இறைக்கும்போது பாடப்படும் பாடல்
ஏற்றப்பாடல் எனப்பட்டது.
பாடும் நேரம்
ஏற்றம் இறைப்போர் அதிகாலையிலேயே நீர்
இறைக்கத் தொடங்குவர். நீர் இறைக்கும் காலைப் பொழுதிற்கு ஏற்றவாறு ஏற்றப்பாடலின் நீளம்
குறையலாம் அல்லது நீளலாம்.
பாடும் நெறிமுறை
ஏற்றத்தின் கீழே சாலைப் பிடித்துக்
கவிழ்ப்பவர், பாடலின் ஒவ்வொரு அடியையும் பாடுவார். ஏற்றத்தின் மிதி மரத்தில்
இருப்போர் ஒன்றாகச் சேர்ந்து அவ்வடியைத் திரும்பப் பாடுவர். மிதி மரத்தில்
இருப்போர் பாடி முடித்தபின் அடுத்த அடியைச் சால் பிடிப்பவர் பாட வேண்டும். இவ்வாறு ஓர் ஒழுங்கு முறையில் இப்பாடல் காணப்படும். இதனாலேயே
“ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டில்லை” என்பர்.
பாடல் அமைப்பு
கிராமப்புற மக்கள் எந்தச் செயலைச் செய்தாலும்
முதலில் கடவுளை வணங்குவர். அந்த வகையில் ஏற்றப் பாட்டின் முதலில் கடவுள் வாழ்த்து பாடப்படும்.
இடையிடையே ஏற்றம் இறைக்கும் எண்ணிக்கையும், வாழ்வியல் சார்ந்த கருத்தமைந்த பாடல்களும் இடம்பெறும்.
ஏற்றமும் சால் அளவுக் கணக்கும்
ஒருபதியால் ஒண்ணு, இருபதியால் ஒண்ணு எனக் கணக்கிடும் முறையில் நூறு
சால் வரை இறைக்கும் நீரின் அளவு, ஒரு பரியம் என்றும், ஆயிரம் சால் இறைக்கும் நீரின்
அளவு பத்துப் பரியம் என்றும் கணக்கிடப்படும். 500 சால்கள் நீர் இறைத்தால் ஒரு குழி
(60 சென்ட்) நீர்வளம் பெறும் என்பது மூத்தோர் கணக்காகும்.
ஏற்றப்பாட்டு
பிள்ளையாரே
வாரும்
பெருமாளே வாரும்
சிவனாரே வாரும்
வேலவரே வாரும்
சிவனும் பெருமாளும்
சேர்ந்து ரதமேற
அரியும் சிவனும்
அமர்ந்து மலலேற
குருவும் பெருமாளும்
கூடி ரதமேற
பொற் கொடையும் தேரும்
போக வரவேணும்
அறுவதியா
லொண்ணு
அறுவதியா
ரெண்டு
அறுவதியா மூணு
அறுவதியா நாலு
அறுவதியா லஞ்சி
அறுவதியா லாறு
அறுவதியா லேழு
அறுவதியா லெட்டு
ஆரணி
நடுவ
தாம்பர நடுவ
வேலூரு நடுவ
வெத்தல கிடங்கு
வெள்ள
வெத்தலயோ
வேலங் களிப்பாக்கே
சுண்ணாம்பு கடையும்
சோனகத் தெருவும்
போனவன்
திரும்ப
போட்டாளே மருந்த..
போட்டாளே மருந்த
பொடி மருந்து கள்ளி..
கள்ளி
மருந்தாலே
கருத்த மறந்தேனே..
தாசி மருந்தாலே
தாய மறந்தேனே..
வேசி
மருந்தாலே
வீட்டை மறந்தேனே
பாயி மருந்தாலே
பாசத்த மறந்தேனே
அண்ணன்
தம்பி எல்லாம்
அடுத்தப் பகையானேன்
கூட்டாளி மார்க்கெல்லாம்
கொல்லும் பகையானேன்
மாமன்
மைத்துனர்க் கெல்லாம்
மனது பகை யானேன்
சுற்றத் தார்க் கெல்லாம்
உற்ற பகை யானேன்
தாசிகளைக் கண்டா
தல மறஞ்சி வாடா
வேசிகளைக் கண்டா
வழி விலகி வாடா
பாடல் விளக்கம்
ஏற்றம் இறைப்பவர் முதலில் பிள்ளையார், பெருமாள், சிவன், வேலன் ஆகிய
தெய்வங்களை வணங்கி வழிபடுகின்றார். சிவனும் பெருமாளும் ஒரு சேர தாங்கள் ஏற்றம் இறைக்கும் கருவியில் இறங்கி வந்து அமர்ந்து,
தங்கள் பணி சிறக்க அருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றார். அவர்களிருவரும் தங்களுக்குக் குருவாக இருந்து வழிகாட்ட வேண்டும் என்றும்
பாடுகின்றார்.
இறைவனை வணங்கிப் பாடி முடிப்பதற்குள் ஒன்றிலிருந்து தொடங்கி அறுவதியாலொண்ணு,
அறுவதியா ரெண்டு என்று 68 வரை ஏற்றம் இறைத்திருக்கின்றதை எண்ணி மகிழ்ச்சி கொள்கின்றார்.
ஏற்றம் இறைப்பதை எண்ணிக் கொண்டே தாசிகளால், திசை மாறிப் போன தன் வாழ்க்கையைப் பாடுகின்றார்.
ஆரணி, தாம்பரம், வேலூர் ஆகிய இடங்கில் வெற்றிலை விவசாயம் செய்து, வெற்றிலைக்
கிடங்கு அமைத்து செல்வந்தனாக வாழ்ந்தவன் நான். வெற்றிலை, கள்ளிப்பாக்கு, சுண்ணாம்பு
என்று சுழன்று கொண்டிருந்த என் வாழ்க்கையில் தாசி ஒருத்திக் குறுக்கிட்டாள். சோனகத்தில் (இலங்கையில் உள்ள ஓர் ஊர்) உள்ள தெருவிற்குச்
சென்ற நான் வீடு திரும்பவில்லை. அங்கே தாசி ஒருத்தியின் அழகில் மயங்கி, அவளுடைய உடல்மொழிக்கு
அடிமையாகி, நான் என் கொள்கைகளை மறந்து, என் வாழ்க்கையினைத் துறந்து அவளோடு போய்விட்டேன்.
அதனால், பெற்ற தாயை மறந்தேன், என் மனைவி, பிள்ளைகளின் பாசத்தைத் துறந்தேன், உடன் பிறந்த
அண்ணன், தம்பிகளுக்குப் பகையாளியானேன். நண்பர்களுக்கெல்லாம் வாழ்க்கையைக் கெடுக்க வந்த
துரோகி ஆனேன். மாமன், மைத்துனர்கள் உள்ளத்தால் என்னை வெறுத்துவிட்டனர். உறவினர்கள் யாரும் மதிப்பதில்லை.
என் வளமான வாழ்க்கையை இழந்து விட்டேன். அதனால், தாசிகளைக் கண்டால் தலை குனிந்து மறைந்தே
செல்லக் கற்றுக்கொள்ளுங்கள். வேசியைக் கண்டால் வழி விட்டு விலகிச் சென்று விடுங்கள்”
என்று அறிவுரை கூறிப் பாடிக் கொண்டே ஏற்றம் இறைக்கின்றார்.
ஏழு மல
வாசா
எளய பெருமாளே
எழுதும் மணவாளா
எங்கள நீ காரும்
எழுபதியா லொண்ணு
எழுபதியா ரெண்டு
எழுபதியா மூணு
எழுபதியா நாலு
எழுபதியா லஞ்சி
எழுபதியா லாறு
எழுபதியா லேழு
எழுபதியா லெட்டு
எட
நாட்டு இடையா
கடா ஓட்டி வாடா
மல நாட்டு இடையா
மந்த ஓட்டி வாடா
எட நாடு தூரம்
கடா வரா தய்யா
மல நாடு தூரம்
மந்த வரா தய்யா
குட்டியாடு ரொம்ப
கூட வரா தய்யா
மொட்ட ஆடு ரொம்ப
மோடு ஏறா தய்யா
விளக்கம்
ஏழுமலையாகிய திருப்பதியில் அருள் செய்து கொண்டிருக்கும்
பெருமாளை நோக்கி “நீ எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு மீண்டும் சால்
இறைக்கின்றார். எழுபதியாலொண்ணு, எழுபதியா ரெண்டு என்று எண்ணிக்கொண்டே ஆடு மேய்க்கும்
இடையர்களைப் பார்த்துப் பாடுகின்றார்.
வளம் பொருந்திய இடைநாட்டுக்கு இடையே, மலை நாட்டுக்கு
இடையே “உன் எருமைக் கடாக்களையும், ஆட்டுக் கடாக்களையும் ஓட்டிக் கொண்டு வாடா” என்று
அழைக்கின்றார். அதற்கு “என் கடா இடை நாடு தூரம் நடக்காது, மலை நாடு தூரம் என் ஆட்டு
மந்தைகள் வராது, ஏனெனில் இப்போதுதான் குட்டிப்போட்ட ஆடுகள் மிக நீண்ட தூரம் நடந்து
வர முடியாது. இன்னும் வளர்ச்சி பெறாத மொட்டை ஆடுகள் மேடு ஏற சிரமப்படும் ஐயா”என்று
இடையன் பதிலுரைக்கின்றார்.
மாசி
மல கந்தா
மயி லேறும் முருகா
மலப் பழனி வேலா
மங்க மண வாளா
வளரும் பிள்ளையாரே
காரும் பகவானே
ஏத்த முகம் பாரும்
எங்கள நீ காரும்
பிள்ளை யாரைப் பாடி
பிடித்தன் கையில் கோல
ஆனை முகனைப் பாடி
அனைத்தும் இறைச்சனே
விநாயகனைப்
பாடி
விட்டு விடப் போறன்
கணபதியைப் பாடி
கரை ஏறப் போறன்
ஒண்ணே ரகு ராமா
ரெண்டே ரகு ராமா
மூணே ரகு ராமா
நாலே ரகு ராமா
அஞ்சே ரகு ராமா
விளக்கம்
இடையன் சொன்னதைக் கேட்டவாறே, முருகனைப் பாடி ஏற்றம்
இறைக்கத் தொடங்குகின்றார். மலை மீது வாழும் முருகனே, மயிலை வாகனமாகக் கொண்டவனே நீ எங்களைக்
காக்க வேண்டும்” என்று வேண்டுகின்றார். “பிள்ளையாரை வணங்கி, கையில் கோல் பிடித்து ஏற்றம்
இறைக்கத் தொடங்கினேன். இப்போது கணபதியைப் பாடி
ஏற்றம் இறைப்பதை முடிக்கப் போகிறேன். ஏற்றம் இறைக்கும் பணி நிறைவடைந்ததால், ஒண்ணே ரகு ராமா,
இரண்டே ரகு ராமா என்று எண்ணியவாறே கரையேறப் போகின்றேன்” என்று பாடுகின்றார்.
இவ்வாறு தம் செய்யும் தொழிலில் களைப்பு ஏற்படாமல்
இருப்பதற்காக, நீண்ட நேரம் பாடிக் கொண்டே தங்கள் பணியைச் செவ்வனே செய்து முடிப்பர்
கிராம மக்கள். தங்களோடு பணி செய்யும் மற்றவருடன் பாடல் மூலம் உரையாடிக் கொண்டே வேலை
செய்வதால் உற்சாகத்துடன் இருப்பர்.
இணைய உதவி - https://ta.wikipedia.org/wiki
Priya.v
பதிலளிநீக்குTTM department
Completed mam
Indhumathi
பதிலளிநீக்குB.com general
Shift 1
Kameshwaran
பதிலளிநீக்குB. Com accounting and finance
Shift 1