வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

திருவெண்ணெய் நல்லூர் திருமுறை - சுந்தரர்


சுந்தரர்

சுந்தரமூர்த்தி நாயனார் சமயக்குரவர் நால்வரில் மூன்றாமவர். அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவர். திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினைச் சேர்ந்தவர்இவரது இயற்பெயர் நம்பியாரூரன். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார். சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனைத் தத்தெடுத்து, தம் அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.

இறைவன் தடுத்தாட் கொள்ளல்

மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். அதனால் திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த முதியவர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனை தம்முடைய நண்பராக்கிக் கொண்டார். சிவத்தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன்பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இவருடைய காலம் கி.பி.எட்டாம் நூற்றாண்டு.

திருமணங்கள்

திருவாரூரில் பதியிலார் குலத்தைச் சார்ந்த பரவையார் என்ற பெண்ணையும், திருவொற்றியூரில், வேளாளர் குலத்தைச் சார்ந்த  'சங்கிலியார்' என்ற பெண்ணையும் சிவனருள் துணை கொண்டு திருமணம் செய்து கொண்டார்.

பாடிய பாடல்கள்

இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101. இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன

இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 எனக் கையாண்டார்.

முக்தி

சுந்தரர் தனது 18 ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தரருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் அவரை வரவேற்று முக்தியளித்தனர்.

அற்புதங்கள்

1.   செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது

2.   சிவபெருமான் கொடுத்த பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.

3.   காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.

4.   அவிநாசியில் முதலை விழுங்கிய  குழந்தையை அம்முதலையின் வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.

5.   வெள்ளை யானையில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.

திருவெண்ணெய்நல்லூரில் இறைவன் தடுத்தாட்கொண்டபோது அவர் பாடிய பித்தா பிறை சூடி என்று தொடங்கும் பாடல்களே இங்குப் பாடமாகும்.

 பாடல் - 1

பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

விளக்கம்

பித்தனே, பிறையைச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில், "அருட்டுறை" என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய், அதனால், உன்னை மறவாமல் நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, "உனக்கு அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

 

பாடல் - 2

நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை,
பேய் ஆய்த் திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்;
வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

விளக்கம்

மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் அருட்டுறை என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய நான் உன்னை பலவற்றினும் மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன், ஆயினும், இப்போது, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

 

பாடல் - 3

மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை;
பொன்னே, மணிதானே, வயிர(ம்)மே, பொருது உந்தி
மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

விளக்கம்

தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என்று எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.

 

பாடல் - 4

முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றம் ஊர்தீ!
கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள், நீ!
செடி ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

விளக்கம்

இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித்தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப்படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறுக்காது ஏற்றருள். 

 

பாடல் - 5

பாதம் பணிவார்கள் பெறும் பண்டம்(ம்) அது பணியாய்!
ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா!
தாது ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆதி! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?.

விளக்கம்

அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லாதவன் ஆயினேன்; அதனால், "ஆதன்" என்னும் சொல்லுக்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிஞர்கள் பெறும் பேற்றை எனக்கு அளித்தருள்க.

 

பாடல் - 6 

தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ!
எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண(ந்) நகை செய்தாய்!
மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

விளக்கம்

குளிர்ச்சி நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீயால் எரித்தவனே, பாவத்தைக் கழுவுகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ. 

 

பாடல் - 7

ஊன் ஆய், உயிர் ஆனாய்; உடல் ஆனாய்; உலகு ஆனாய்;
வான் ஆய், நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்;
தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆனாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

விளக்கம்

பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்ற உயிர்கள் ஆகியும், உயிர்கள் நிற்கின்ற உடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ. 

 

பாடல் - 8

ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்!
தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர் வான் நீர்
ஏற்றாய்! பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

விளக்கம் 

பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த சடையில் ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை, அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனான நான் இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

 

பாடல் – 9

மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கை பங்கா!
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே;
செழு வார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அழகா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

 

விளக்கம்

மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகனே, உன்னை வணங்குபவர்களின் துன்பங்களை நீக்குதல் உன் தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

 

பாடல் - 10

கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக் கையால்
பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி,
சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே? .

விளக்கம்

மேகத்தினின்று நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளி வந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் "அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

http://aathirainayagan.blogspot.com/2015/05/blog-post_71.html


புதன், 18 ஆகஸ்ட், 2021

திருத்தில்லைப் பதிகம் - திருஞானசம்பந்தர்

 

திருத்தில்லைப் பதிகம் 

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர்  சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் ஒருவர். தேவார மூவருள் முதலாமவர். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில்சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாத இருதயர், தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மை அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது  உமாதேவியார்சிவபெருமானுடன்  இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் தமிழில் அறிவுசேரர் என்று பொருள்பட திருஞானசம்பந்தர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். மகன்மை நெறியில் இறைவனை வழிபட்டார். இவர் பாடிய பதினாறாயிரம் பதிகங்களுள் 384 பதிகங்களே கிடைத்துள்ளன. இவர் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளாக வைத்துப்போற்றப்படுகிறது.

வேறு பெயர்கள்

ஆளுடைய பிள்ளை, காழி வள்ளல் என்ற வேறு பெயர்களாலும் வழங்கப்படுகிறார். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று பாராட்டப்பட்டார். ஆதி சங்கர்ர் தன்து சௌந்தர்ய லகரியில் இவரை திராவிட சிசு என்று குறிப்பிட்டுள்ளார்.

இறை ஒளியில் கலந்தார்

பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க தனது பதினாறாவது வயதில் திருநல்லூர் நம்பாண்டர் மகள் சொக்கியாரை மணம் முடிக்கச் சம்மதித்தார். திருப்பெருமணநல்லூரில் திருமணத்திற்கு முன் ஒரு பதிகம் பாடி திருமணக்கோலத்துடன் சுற்றம் சூழ இறைஒளியில் கலந்து விட்டார். 

அற்புதங்கள்

மூன்று வயதில் உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டமை, சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும் பெற்றமை, வேதாரணியத்தில் திருக்கதவு அடைக்கப் பாடியமை, பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கியமை, தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தமை, வைகையிலே திருவேட்டை விட்டு எதிரேறும்படி செய்தமை,  சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றமை, விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தமை.

திருஞானசம்பந்தர் 220 பதிகளுக்குச் சென்று இறைவனை வழிபட்டதாகக் கூறப்படுகின்றது. அவற்றுள் சிதம்பரத்தில் உள்ள நடராசப் பெருமானைப் பாடிய திருத்தில்லைப் பதிகத்திலிருந்து பதினொரு பாடல்கள் இங்கே பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

பதிகம் - அமைப்பு முறை

± திருஞானசம்பந்தரின் பதிகங்களில் முதல் ஏழு பாடல்கள் தலவரலாற்றின் பெருமையை எடுத்துரைக்கின்றார்.

±      எட்டாவது பாடல் இராவணன்  செயலை விளக்குகிறது.

± ஒன்பதாவது பாடல் அயன், அரி இவர்களுக்கு அரிதான சிவபெருமானின் பெருமையை இயம்புகின்றது.

±   பத்தாவது பாடல் சமண பௌத்த சமயங்கள் துன்பம் தரும் தீங்கினை உடையன என்றும் போலி சமயங்கள் என்ற பாங்கில் அமைத்திருக்கக் காணலாம்.

± பதினோராவது பாடலில் தன் பெயரை ஊரையும் குறிப்பிட்ட பின்னர், இந்தப் பதிகத்தைப் பாடுவோருக்குக் கிடைக்கும் பயன்களை விளக்கி கூறியுள்ளார்.

பாடல் எண்: 01

கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே

செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய

முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

பொருள்:

வேதம் முதலிய நூல்களைக் கற்று, அவற்றின் நெறியிலே நின்று, வேள்விகள் செய்து, இவ்வுலகில் வறுமையை வாராமல் ஒழிக்கும் அன்பர்கள் வாழ்கின்ற தில்லையில் எழுந்தருளியவன் சிவபெருமான். பிறை நிலவைச் சூடியவனாகிய அச்சிவபெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு வாழ்பவர்களைப் பாவம் தொடர்வதில்லை.

பாடல் எண்: 02

பறப்பைப் படுத்தெங்கும் பசு வேட்டு எரி ஓம்பும்

சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய

பிறப்பு இல்பெருமானை பின் தாழ்சடையானை

மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே.

பொருள்:

பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து, ஆன்ம போதத்தைக் கொன்று, அன்பர்கள் வாழும் தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியவன் சிவபெருமான். அவன் பிறவி என்பதைப் பெறாதவன். அத்தகு சடை முடி கொண்ட சிவபெருமானை மறவாது வணங்குபவர்கள், ஆணவம், கன்மம், மாயை என்ற மயக்க உணர்வுகளிலிருந்து விடுதலை பெறுவர்.

பாடல் எண்: 03

மை ஆர் ஒண்கண்ணார் மாட நெடுவீதிக்

கையால் பந்து ஓச்சும் கழிசூழ் தில்லையுள்

பொய்யா மறைபாடல் புரிந்தான் உலகு ஏத்தச்

செய்யான் உறைகோயில் சிற்றம்பலம்தானே.

பொருள்:

மை தீட்டப்பட்ட ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள் மாட வீதிகளில் தம் கைகளால் பந்து எறிந்து விளையாடுவர். அப்படிப்பட்ட அழகுடைய உப்பங்கழிகள் சூழ்ந்துள்ள தில்லை, வேதப்பாடங்களை விரும்புகின்ற சிவபெருமான் உறைந்திருக்கின்ற கோவிலைக் கொண்டுள்ளது. அது உலக மக்கள் யாவரும் தொழுகின்ற கோயிலாக விளங்குகின்றது.

பாடல் எண்: 04

நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்

பிறை வந்து இறைதாக்கும் பேரம்பலம் தில்லைச்

சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேய

இறைவன் கழல்ஏத்தும் இன்பம் இன்பமே.

பொருள்:

மாடவீடுகளில் நிறைந்துள்ள வெண்மையான கொடிகள் வானத்திலுள்ள பிறையின் நெற்றியை நேரே தீண்டுமாறு வந்து தாக்கும் அளவிற்கு உயர்ந்தது தில்லைப்பதி. அப்பதியில் சிறகுகளை உடைய வண்டுகள் எப்போதும் ஒலிக்கும் சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவுவதே இன்பம் ஆகும்.

பாடல் எண்: 05

செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்

செல்வ மதி தோய செல்வம் உயர்கின்ற,

செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய

செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.

பொருள்:

வானளாவ உயர்ந்து நிற்கின்ற செல்வ வளம் மிக்க மாட வீடுகள் உடையது தில்லைப்பதி. அம்மாட வீடுகளின் மதில்கள் யாவும் வானத்தில் உள்ள மதியினை உரசிச் செல்கின்றன. அத்தகு அழகு நலன் வாய்ந்த, ஞானச் செல்வர்கள் பலர் வாழ்கின்ற திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் வீடுபேறாகிய செல்வத்தைத் தருகின்றான். அவன் திருவடிகளை வாழ்த்துவதே நமக்குப் பெரும் செல்வமாகும்.

பாடல் எண்: 06

வருமாந் தளிர்மேனி மாது ஓர்பாகம் ஆம்

திருமாந் தில்லையுள் சிற்றம்பலம் மேய

கருமான் உரி-ஆடைக் கறைசேர் கண்டத்து எம்

பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே.

பொருள்:

மாந்தளிர் போன்று மென்மையாண திருமேனியை உடைய உமையம்மையைத் தன் உடலின் ஒரு பாகமாக வைத்துள்ள இறைவன், திருமகளின் அருளால் நிறைந்து விளங்கும் செல்வச் செழிப்பான தில்லை நகரில் உள்ள சிற்றம்பலத்தில் உறைகின்றான். கரிய நிறம் கொண்ட யானையின் தோலை உரித்து ஆடையாக அணிந்தவனாகவும், நஞ்சினை உண்டு அதைத் தன் கழுத்தில் தேக்கியதால் கறை படிந்த கழுத்தினை உடையவனாகவும் இருக்கும் சிவபெருமானின் திருவடிகளை அன்றி என் உள்ளம் வேறு எதையும் விரும்பாது.

பாடல் எண்: 07

அலையார் புனல்சூடி ஆகத்து ஒருபாகம்

மலையான் மகளோடும் மகிழ்ந்தான் உலகு ஏத்தச்

சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம் தன்னைத்

தலையால் வணங்குவார் தலை ஆனார்களே.

பொருள்:

அலைகள் வீசுகின்ற கங்கை நதியைத் தன் முடியில் சூடியவன். உமையம்மையைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக வைத்தவன். மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை அழித்தவன். இத்தகு சிறப்பு வாய்ந்த சிற்றம்பலத்துப் பெருமானைத் தலை தாழ்த்தி வணங்குபவர்கள் தலையானவர்கள் ஆவர்.

பாடல் எண்: 08

கூர்வாள் அரக்கன் தன் வலியைக் குறைவித்து

சீராலே மல்கு சிற்றம்பலம் மேய

நீரார் சடையானை நித்தல் ஏத்துவார்

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.

பொருள்:

கூர்மையான வாளை உடைய அரக்கர் குலத்தைச் சேர்ந்த இராவணின் வலிமையை அழித்தவன். சிறந்த புகழ் எய்திய சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளியவன். கங்கையினைத் தன் தலைமுடியில் தரித்தவனாகிய சிவபெருமானை நாள்தோறும் வணங்குபவர்க்குத் தீராத நோய்கள் எல்லாம் தீர்ந்து விடும்.

பாடல் எண்: 09

கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும்

காணார் கழல் ஏத்த கனல் ஆய் ஓங்கினான்

சேணார் வாழ்தில்லைச் சிற்றம்பலம் ஏத்த

மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.

பொருள்:

பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரைமேல் விளங்கும் நான்முகனும், சிவனின் அடிமுடிகளைக் காண முடியாதவர்களாக சிவனின் திருவடிகளைப் பற்றிய வேளையில், தீ வடிவில் ஓங்கி நின்றவன் சிவபெருமான். சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள அவனைப் போற்றிப் பாடினால் கொடிய நோய்கள் எல்லாம் ஒழிந்து போகும்.

பாடல் எண்: 10

பட்டைத் துவராடைப் படிமம் கொண்டாடும்

முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே

சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய

நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே.

பொருள்:

மரப்பட்டையின் சாயம் ஏற்றிய ஆடையை உடுத்திய புத்தரும், நோன்புகள் பலவற்றை மேற்கொண்டு திரியும் சமணர்களும் உரைக்கின்ற அறியாமையோடு கூடிய உரைகளைக் கேட்காமல், ஒழுக்கத்தால் மேம்பட்டவர்கள் வாழ்கின்ற சிறப்புடைய சிற்றம்பலத்தில் எழுந்தருளிய நடராசப்பெருமானை நாள்தோறும் நாம் தொழுவோம்.

பாடல் எண்: 11

ஞாலத்து உயர்காழி ஞானசம்பந்தன்

சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய

சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை

கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.

பொருள்:

சீர்காழியில் பிறந்த ஞானசம்பந்தன் ஒழுக்கமுடையவர்களால் புனிதமாகப் போற்றப்படும் தில்லைச் சிற்றம்பலத்தில் சூலப்படையுடைய எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடிய இத்தமிழ் மாலையாகிய திருப்பதிகத்தைப் பாடவல்லவர் நல்லவர் ஆவர்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

அற்புதத் திருவந்தாதி - காரைக்காலம்மையார்

 

அற்புதத் திருவந்தாதி 

காரைக்காலம்மையார்

நூல் குறிப்பு

அற்புதத் திருவந்தாதி  என்னும் நூல் சைவத்திருமுறைகளில்  பதினோராம் திருமுறைத் தொகுதியில் அமைந்துள்ளது. இந்நூலை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான  காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார். இந்நூல் அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூல் என்பதால் ஆதி அந்தாதி என்றும், இறைவனின் மீது பாடப்பெற்றதால் திருவந்தாதி என்றும் அழைக்கப்படுகிறதுஇந்நூல் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது. இதன் காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டு. இந்நூல் 101 வெண்பாப் பாடல்களைக் கொண்டது.  இவ் அந்தாதி சைவ நெறி குறித்தும், சிவபெருமானை முழுமையாகச் சரணடைவதைக் குறித்தும் கூறுகின்றது. சிவபெருமானின் திருஉருவச் சிறப்பினையும், திருவருட் சிறப்பினையும், இறைவனின் குணத்தையும் விரிவாக இந்நூல் பாடுகிறது.

காரைக்காலம்மையார்

காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் ஒருவர். சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர். காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதால் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப் பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்த இவர், ஒரு நாள் தன் கணவன் கொடுத்தனுப்பிய இரு மாம்பழங்களில் ஒன்றினைச் சிவனடியாருக்குப் படைத்துவிட்டார். உணவு உண்ண வீட்டிற்கு வந்த பரமதத்தன் ஒரு மாம்பழத்தை உண்டுவிட்டு, இன்னொரு மாம்பழத்தினைக் கேட்க, செய்வதறியாது திகைத்த  அம்மையார் இறைவனிடம் வேண்டி ஒரு மாம்பழத்தினைப் பெற்றார்.  அந்நிகழ்வை நேரில் பார்த்த பரமதத்தன் இவர் இறைவன் அருள் பெற்றவர் என்பதை உணர்ந்து அம்மையாரை விட்டு இல்லற வாழ்விலிருந்து நீங்கினார். வேறு நாட்டிற்குச் சென்று மறு திருமணம் செய்து கொண்டு, ஒரு பெண் குழந்தையும் பெற்றார். இதனால் மனமுடைந்த அம்மையார் கணவனுக்காகத் தாங்கிய அழகு உருவம் நீங்கிப் பேய் வடிவத்தைத் தர வேண்டும் என்று இறைவனை வேண்டினார்.  அதுமுதற்கொண்டு இறைவனைப் பாடுதல் ஒன்றேயே தன் தொழிலாகக் கொண்டார். முதன்முதலாக இசைத்தமிழால் இறைவனைப் பாடிய பெருமை இவருக்கு உண்டு. அந்தாதி எனும் இலக்கண முறையை தமிழுக்கு அறிமுகம் செய்தார். அற்புதத் திருவந்தாதிதிருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்திருஇரட்டை மணிமாலை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

 

அற்புதத்திருவந்தாதி

பாடல் – 1

பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்   

விளக்கம்

நஞ்சை உண்டதால் நீல நிறம் கொண்ட கழுத்தினை உடைய சிவபெருமானே! நான் இவ்வுலகில் பிறந்து மொழியினைப் பயின்று பேசத் தொடங்கிய காலம் முதல் உன்மீது கொண்ட அன்பினால் உன் திருவடிகளையே என் மனம், மொழி, மெய்களால் இடைவிடாது எண்ணிப் போற்றி வழிபடுகின்றேன். என் பிறவித் துன்பத்தைத் தீர்த்து எனக்கு எப்போது அருள் செய்வாய்!

பாடல் – 2

இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும் நெறி பணியாரேனும் - சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்நெஞ் சவர்க்கு               

விளக்கம்

இறைவன் எனக்கு நேருகின்ற இடர்களைக் களையவில்லை என்றாலும், மனம் இரங்கி எனக்கு அருள் செய்யவில்லை என்றாலும், நான் செல்ல வேண்டிய நல்வழிகளைக் காட்டவில்லை என்றாலும், நெருப்பின் வடிவில் எலும்பு அணிந்து ஆடுகின்ற சிவனிடம் நான் கொண்டுள்ள அன்பு ஒருபோதும் குறையாது.

பாடல் – 3

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கே நாம் அன்பாவதல்லால் - பவர்ச்சடைமேல்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்

விளக்கம்

ஏழு பிறவியிலும் சிவபெருமான் ஒருவரையே வணங்குவோம். இன்பம் வந்தபோதிலும், துன்பம் வந்தபோதிலும் அவருக்கே அன்பு செய்வோம். கொடிபோல் விரிந்து படர்ந்த சடையின்மேல் பிறை சூடிய அந்த சிவபெருமானைத் தவிர வேறொருவருக்கும் ஆட்பட மாட்டோம்.

பாடல் – 4

ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்
கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மைஆட் கொண்ட இறை

விளக்கம்

நீண்டு உயர்ந்த திருமேனி முழுவதும் செந்நிறமும், திருமிடறு மட்டும் நீல நிறம் பெற்று எங்களை ஆட்கொண்ட இறைவனே! உம் திருவடித் தொண்டு செய்யும் அடியவர்களாகிய நாங்கள் எங்கள் துன்பத்தை எடுத்துக் கூறி முறையிட்டால் அம்முறையீட்டை உம் திருச்செவியிற் கோளாமல் போனது ஏன்? எங்களை உன் உறவாக ஏற்றுக் கொள்ளாததும் ஏன்?

பாடல் – 5

இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே
எந்தாய் எனஇரங்கும் எங்கள் மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான்.

விளக்கம்

எப்பொருளிலும் நீக்கமற நிறைந்திருப்பதால் இறைவனே எல்லா உயிர்களுக்கும் உடல், கருவி, உலகில் வாழ்வதற்கான நுகர்பொருள் ஆகியவற்றைப் படைத்தளிக்கும் வல்லமை பெற்றவன். தன்னால் தோற்றம் பெற்ற யாவற்றையும் மீண்டும் ஒடுக்கி ஆட்சி செய்பவனும் அவ்விறைவனே! எமது தந்தையே என அன்பினால் வேண்டும் எங்கள்மேல் கொடிய துன்பங்கள் வந்து வருந்தும்போது, அவற்றை அறவே நீக்கி எங்களை வாழ்விப்பவனும், முழு முதல்வனாகிய சிவபெருமானே ஆவான்.