சனி, 13 நவம்பர், 2021

சித்தர் இலக்கியம்

 

சித்தர் இலக்கியம்

மனிதர்களிடம் காணப்படாத வியக்கத்தக்க ஆற்றல் கொண்டவர்களைச் சித்தர்கள் என்று அழைக்கின்றனர். இவர்கள் மெய்ஞ்ஞானம் நிரம்பியவர்கள். மருத்துவம், மந்திரம், இரசவாதம் தெரிந்தவர்கள். இறப்பை வென்றவர்கள். கூடுவிட்டுக் கூடு பாயும் வல்லமை மிக்கவர்கள். யோகமும், ஞானமும் பற்றிப் பல பாடல்களைப் பாடியவர்கள். இவர்களின் பாடல்கள் ஆழமான பொருள் கொண்டவை.

சித்தர்கள் பலர் இருப்பினும் வழக்கில் பதினெண்சித்தர்கள் என்று கூறப்படும் மரபு காணப்படுகின்றது.

1.அகத்தியர் 2.இடைக்காடர் 3.உரோமமுனி  4.கருவூரார்   5.காகபுண்டர் 6.கொங்கணர் 7.கோரக்கர் 8.சட்டைமுனி 9.மச்சமுனி 10.போகர் 11.திருமூலர் 12.நந்தி 13. புண்ணாக்கீசர்   14. தேரையர் 15. யூகிமுனி 16.  காலாங்கி நாதர் 17.புலத்தியர் 18. தன்வந்திரி

ஆகியோர் பதினெண் சித்தர்கள் ஆவர். இவர்களை வகைப்படுத்துவதில் அறிஞர்களுக்கிடையே பல வேறுபாடுகள் உண்டு. அறிஞர் இரா.மாணிக்காவசகம் அவர்கள்,

1.நந்தி 2.அகத்தியர் 3.திருமூலர் 4.புண்ணாக்கீசர்  5.புலத்தியர் 6. பூனைக்கண்ணர் 7.இடைக்காடர் 8.போகர் 9.புலிப்பாணி 10.கருவூரார் 11.கொங்கணர் 12.காலங்கி   13.அழுகண்ணர் 1 4.அகப்பேயர் 15.பாம்பாட்டி 16.தேரையர் 17.குதம்பை 18.சட்டைச்சித்தர்  

என பதினெண்சித்தர்களை வகைப்படுத்தியுள்ளார். சித்தர்களின் பட்டியலில், கடுவெளிச் சித்தர், அகப்பேய்ச்சித்தர், சிவவாக்கியர், பட்டினத்தடிகள், திருவள்ளுவர், சண்டேசர் ஆகியோரும் இடம் பெறுகின்றனர். இவர்களுள் சில சித்தர்களைக் குறித்துப் பின்வருமாறு காணலாம்.

திருமூலர்

இவர் சித்தர் தத்துவத்தின் மூலமுதல்வர். இவர் பாடிய திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் சித்தர் இலக்கியங்களில் முதன்மையான நூலாகக் கருதப்படுகின்றது. இவர் 3000 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்றும், அரச மரத்தடியில் யோகத்தில் இருந்தார் என்றும், ஆண்டுக்கு ஒருமுறை கண்விழித்து ஒவ்வோர் ஆண்டும் ஒரு பாடலாக இயற்றி 3000 பாடல்கள் இயற்றினார் என்றும் கூறப்படுகின்றது. இத்திருமந்திரம் நிலையாமை உண்மைகளை வலியுறுத்துகின்றது. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்பன போன்ற புகழ் பெற்ற தொடர்கள் இந்நூலில் இடம்பெற்றவையே.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவம் என்று ஆரும் அறிகிலார்

அன்பே சிவம் என்று ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்தி ருந்தாரே

என்பன போன்ற பாடல்கள் இறைத்தத்துவத்தை உணர்த்துகின்றன.

சிவவாக்கியர்

இவர் 10ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராகக் கருதப்படுகின்றார். நமசிவாய எனும் ஐந்தெழுத்தின் தத்துவத்தை மிக எளிமையான பாடல்களில் மக்களுக்கு உணர்த்தியவர் இவரே.

                        ஆன அஞ்செழுத்துகளே அண்டமும் அகண்டமும்

ஆன அஞ்செழுத்துகளே ஆதியான மூவரும்

ஆன அஞ்செழுத்துகளே அகாரமும் மகாரமும்

ஆன அஞ்செழுத்துகளே அடங்கலாவல் உற்றவே

என அஞ்செழுத்துகளின் பெருமையைப் பாடுகின்றார். உருவ வழிபாட்டைக் கடிந்து பல பாடல்கள் இயற்றியுள்ளார்.

அகப்பேய்ச் சித்தர்

            அலைபாயும் மனத்தின் இயல்பை பேய்க்கு உவமை காட்டிப் பாடியதால் இவர் அகப்பேய்ச்சித்தர் என அழைக்கப்படுகின்றார். தான் என்னும் அகங்கார உணர்வைக் கண்டு கிள்ளி எறிந்து விட்டால் மனம் அமைதியாகும் என்பதை, “நஞ்சுண்ண வேண்டாவே அகப்பேய்” என்று பாடியுள்ளார்.

பாம்பாட்டிச் சித்தர்

            பாண்டிய நாட்டில் பிறந்தவர். பாம்பாகிய குண்டலினி சக்தியை இவர் எழுப்பியதால் இப்பெயர் பெற்றார் என்பர். மனிதனின் நிலையாமையை இடித்துரைத்துப் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.

ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே

உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே

வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம்

வறையோட்டுக்கும் ஆகாதென்று ஆடுபாம்பே        

என்று மனித உடலை மண்பாண்டத்தின் ஓட்டிற்கு உவமை கூறுகின்றார்.

அழுகுணிச்சித்தர்

இவரது பாடல்கள் இரக்க உணர்வினைத் தூண்டும் பாங்கில் அமைந்தமையால் அழுகுணிச்சித்தர் என்று அழைக்கின்றனர். சொல்லியழுதால் குறை தீரும் என்பது இவரது கொள்கை.

பையூரிலே இருந்து பாழூரிலே பிறந்து

மெய்யூரிலே போவதற்கு வேதாந்த வீடறியேன்

என்று பாடுகின்றார்.

இடைக்காட்டுச் சித்தர்

காட்டில் ஆடு மாடு மேய்க்கும் இடையர்கள் பாடுவது போன்று இவரது பாடல்கள் அமைந்துள்ளமையால் இடைக்காட்டுச் சித்தர் எனப்படுகின்றார்.

மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே – முத்தி

வாய்த்தது என்று எண்ணேடா தாண்டவக்கோனே

என்பன போன்று பல பாடல்களைப் பாடியுள்ளார். நெஞ்சோடு கிளத்தல், அறிவோடு கிளத்தல், குயிலோடு கிளத்தல் போன்ற பல நிலைகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.

குதம்பபைச் சித்தர்

குதம்பை என்பது காதணி. குதம்பை எனும் காதணி அணிந்த மகளிரை விளித்துக் குதம்பாய் என்று இவர் தம் பாடல்களைப் பாடியுள்ளதால் குதம்பைச் சித்தர் எனப்படுகின்றார். மெய்ப்பொருள் ஒன்றே கைப்பொருள்”, “கற்றவர்க்கு எத்திசைச் சென்றாலும் புகழுண்டுஎன்பன போன்ற கருத்துகளைக் கூறியுள்ளார்.

மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்பவர்க்குத்

தேங்காய்ப் பால் ஏதுக்கடி – குதம்பாய்

என்றவாறு தத்துவக் கருத்துகளை உள்ளடக்கியதாகப் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

கடுவெளிச்சித்தர்

கடு என்பதற்கு பெரிய என்று பொருள். கடுவெளி என்பது பரந்த வெளி. பரந்த வெளியாகிய மனதை நோக்கி, அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. ஆகையால் கடுவெளிச்சித்தர் என்று அழைக்கப்படுகின்றார்.

நல்வழிதனை நாடு – எந்த

நாளும் பரமனை நந்தியே தேடு

என்ற பாடலில் ஐம்புலன்களுக்கு அடிமையாகக் கூடாது என்று அறிவுறுத்துகின்றார்.

போகர்

இவர் போகர் ஏழாயிரம், நிகண்டு, பதினேழாயிரம், சூத்திரம் எழுநூறு, போகர் திருமந்திரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவரை அதிசயிக்கத்தக்க ஆற்றல்கள் நிறைந்தவர் என்று கூறுகின்றனர்.

சட்டைமுனி

இவர் போகரின் மாணவர். சட்டைமுனி ஞானம், சடாட்சரக் கோவை, கலம்பகம் நூறு, ஞானநூறு, வாதநிகண்டு ஆகிய நூல்களைப் பாடியுள்ளார்.

கொங்கணச் சித்தர்

இவர் பெண்களைச் சக்தியின் வடிவமாகக் கண்டவர். தாய்த் தெய்வ வழிபாட்டைப் பெரிதும் போற்றியவர்.

கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற

கற்பை யளித்தவரே வாழ்க

என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடியவர்.

பட்டினத்தார்

இவர் பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்தவர். அனைத்தையும் துறந்து ஞானியானவர். இளமை, செல்வம் ஆகியவை நிலையில்லாதவை என்று பாடியவர். பல சித்து விளையாட்டுகளைச் செய்தவர். சிதம்பரம், திருச்செங்ககோடு திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய இடங்களுக்குச் சென்று இறுதியில் திருவொற்றியூரில் சமாதியானவர்.

பத்திரகிரியார்

இவர் பட்டினத்தாரின் சீடர். பத்திரிகிரியார் புலம்பல் என்ற பெயரில் இவர் பாடியுள்ள பாடல்கள் உலக துன்த்தை வெறுத்து வீட்டுலக இன்பத்தை அடைவதற்கான வழிகளைக் காட்டுகின்றன.

சித்தர்களின் இலக்கியம் பிற்காலத்தில் தாயுமானவர், இராமலிங்க அடிகளார், பாரதியார் போன்றோர் தங்கள் கருத்துகளை எளிய வடிவில் மக்களுக்கு வழங்குவதற்கு அடிப்படையாக அமைந்தது. தமிழ் இலக்கிய உலகில் சித்தர் இலக்கியம் ஒரு புதிய நெறியை வகுத்துத் தந்துள்ளது எனலாம்.

நன்றி - தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் சி.சேதுராமன் 

செவ்வாய், 19 அக்டோபர், 2021

முத்தொள்ளாயிரம்

 

முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம் (மூன்று + தொள்ளாயிரம்)  என்பது  தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. முத்தொள்ளாயிரம் சேரசோழபாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் 2,700 பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. ஆனாலும், முத்தொள்ளாயிரம் தொகுப்பில் மூவேந்தர்களைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் முன்னூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களே இருந்தன என பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் 1943 ஆம் ஆண்டில் வசந்தம் என்ற இதழில் எழுதியுள்ளார். பல்லாண்டுகளுக்கு முன்னர் புறத்திரட்டு  என்னும் நூலின் ஆசிரியர் அந்நூலில் நூற்றொன்பது பாக்களை மட்டும் தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்திரண்டும், சோழனைப் பற்றி இருபத்தொன்பதும், பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும் சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும். இவையே முத்தொள்ளாயிரம் என்ற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. மூவேந்தரையும் வாழ்த்தும் மரபு  சிலப்பதிகாரத்தில்  காணப்படுகிறது.  இந்த நூல் இந்த மரபினைப் பின்பற்றியுள்ளது.

இந்நூலில் இருந்து மூவேந்தர்களைப் பற்றி ஒன்பது பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.


பாண்டியன்

புகழ்

பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல்

நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் சாரல்

மலைபடுப யானை வயமாறன் கூர்வேல்

தலைபடுப தார்வேந்தர் மார்பு

விளக்கம்

பாண்டியனின் நிலத்தில் செம்பொன் விளைகின்றது. ஊர்தோறும் முத்தமிழ் பாடப்படுகின்றது. கடல்நீரில் முத்துக்களும் வெண்சங்குகளும் நிறைந்திருக்கின்றன. மலைச்சாரல் முழுவதும் யானைக்கூட்டங்கள் பெருகியிருக்கின்றன. அத்தகு வளமுடைய நாட்டை எதிர்த்து வரும் பகை மன்னர்களின் மார்புகளைப் பாண்டியனுடைய வேல் பிளந்து விடும்.

திறை

நேமிநிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்

காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால்

ஏம்மணிப்பூண் இமையார் திருந்தடி

பூமி மிதியாப் பொருள்

விளக்கம்

ஆணைச் சக்கரம் கொண்டு ஒரே வெண்கொற்றக் குடையால் இந்நிலவுலகம் முழுவதையும் ஆள்பவன் பாண்டியன். கண் இமைக்கும் இயல்பில்லாத தேவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக மணிப்பூண் அணிந்து இருப்பர். அவர்கள் பாண்டியனுடைய ஆணைக்கு அடிபணிய நேரிடுமோ என்று பூமியில் கால் வைக்க அஞ்சுகின்றனர். தேவர்களே அஞ்சுகின்ற ஆளுமை கொண்ட பாண்டியனுக்குச் சிற்றரசர்கள் திறை செலுத்தாவிடில் அவர்களுடைய வாழ்வு அழிந்து விடும்.

கைக்கிளை

கார்நறு நீலம் கடியகத்து வைகலும்

நீர்நிலை நின்ற தவம்கொலோ கூர்நுனைவேல்

வண்டிருக்க நக்கதார் யாமான் வழுதியால்

கொண்டிருக்கப் பெற்ற குணம்

விளக்கம்

குவளை மலர் நாள்தோறும் குளத்தில் நின்று தவம் செய்தது. அந்தத் தவத்தின் பயனால் பாண்டியனின் மார்பில் மாலையாகும் பேறு பெற்றது. கூர்மையான வேல் போன்ற வாயைக் கொண்டிருக்கும் வண்டுகள் அம்மாலையை மொய்த்துக் கொண்டிருக்கின்றன. நாமும் அதுபோல் தவம் செய்திருப்பின் பாண்டியனின் மார்பை அடைந்திருக்கலாமோ என்று பாண்டியன் மீது ஒருதலையாகக் காதல் கொண்ட பெண் புலம்புகின்றாள்.

சோழன்

யானைமறம்

கொடிமதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர்

முடிஇடறித் தேய்ந்த நகமும் பிடி முன்பு

பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே

கல்லார்தோள் கிள்ளி களிறு

விளக்கம்

கல், மலை போன்ற தோற்றம் கொண்டவன் சோழன். அவனுடைய ஆண் யானை பகைவரின் கோட்டையைப் பாய்ந்து இடித்ததால் அதன் தந்தங்களின் நுனி முறிந்து போயிற்று. பகை மன்னர்களின் தலைமுடியை (கீரிடம்) இடறியதால் அதன் கால் நகங்கள் தேய்ந்து போயின. அழகிழந்த தன் தோற்றத்தைத் தன் பெண் யானைக்குக் காட்டுவதற்கு நாணம் கொண்டு புறங்கடையிலேயே நின்று விட்டது. இப்படிப்பட்ட வீரம் பொருந்திய யானைகளைத் தன் படை பலமாகக் கொண்டவன் சோழன்.

களம்

முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய்யாகத்

தடித்த குடல்திரியா மாட்டி எடுத்து எடுத்துப்

பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன்

சேஎய் பொருத களம்

விளக்கம்

போரில் உயிரிழந்த பகை வீரர்களின் மண்டையோட்டினை அகலாகவும், சிதறி விழுந்த மூளைகளை நெய்யாகவும், பகை மன்னர்களின் குடலைத் திரியாகவும் அமைத்துப் பேய்கள் விளக்கு ஏற்றி வைத்துப் பிணங்களைத் தின்னுகின்றன. இவ்வாறு காட்சியளிக்கின்றது சோழன் போர் செய்த களம்.

கொடை

அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் நாவலர்

மந்தரம்போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை

இலங்குவுல் கிள்ளி இரேவதி நாள் என்னோ

சிலம்பிதன் கூடிழந்த வாறு

விளக்கம்

ரேவதி சந்திரனோடு கூடியிருக்கும் நல்ல நாளில் சோழனுக்குப் பிறந்தநாள் வருகின்றது. அவனை வாழ்த்தப் பரிசிலர்கள் வருகின்றனர். அந்தணர்கள் சோழனிடமிருந்து ஆவையும், பொன்னையும் பரிசாகப் பெற்றார்கள். நாவன்மை மிக்க புலவர்கள் மந்தரம் போன்ற யானைகைளைப் பரிசாகப் பெற்றனர். மனிதர்கள் அனைவரும் பரிசு பெற்று மகிழ்ந்திருந்த அந்த நாள், மன்னனின் அரண்மனையில் வாழும் சிலந்தி பூச்சிகளுக்கு மட்டும் துன்ப நாளாக அமைந்து விட்டது. மன்னனின் பிறந்தநாளுக்காக அரண்மனைகள் தூய்மைப்படுத்தப்பட்டதால் தன் கூடுகளை இழந்த நிலையை எண்ணி வருத்தம் கொண்டன.

சேரன்

புகழ்

வானிற்கு வையகம் வென்றது வானத்து

மீனிற்கு அனையார் மறமன்னர் வானத்து

மீன்சேர் மதியனையான் விண்உயர் கொல்லியர்

கோன்சேரன் கோதை என்பான்

விளக்கம்

சேர மன்னன் ஆள்கின்ற நிலப்பகுதி வானளவை ஒத்தது. அவனுக்குக் கீழ் அடங்கியிருக்கும் சிற்றரசர்கள் வானத்தில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கையை ஒத்தவர்கள். அவர்களை ஆளுகின்ற சேர மன்னன் வானத்தில் உள்ள சந்திரனைப் போன்றவன். அவன் வானளவுக்கு உயர்ந்து நிற்கும் கொல்லி மலைக்குத் தலைவன்.

நாடு

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்அவிழ

வெள்ளம் தீப்பட்டது எனவெரீஇப் புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வையுடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு

விளக்கம்

சேற்று நிலத்தில் ஆம்பல் மலர்கள் மலர்ந்தன. அவை சிகப்பு நிறத்தில் மலர்வதைக் கண்ட பறவையினங்கள் நீர் தீப்பிடித்து விட்டது என்று அஞ்சித் தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளால் அணைத்துக் கொண்டன. இப்படிப்பட்ட நாட்டிற்குத் தலைவனாக இருக்கின்றான் சேரன்.

கைக்கிளை

ஏற்று ஊர்தியானும் இகல்வெம்போர் வானவனும்

ஆற்றலும் ஆள்வினையம் ஒத்து ஒன்றின் ஒவ்வாரே

கூற்றக் கணிச்சியோன் கண்மூன்று இரண்டேயாம்

ஆற்றல்சால் வானவன் கண்.

விளக்கம்

காளை மாட்டை ஊர்தியாகக் கொண்டவன் சிவன். போர் வண்மை கொண்ட வானவன் சேரன். இருவரும் ஆற்றலாலும், ஆள்கின்ற திறத்தாலும் ஒத்துக் காணப்படுகின்றனர். என்றாலும் ஒன்றில் மட்டும் வேறுபடுகின்றனர். அவ்வேற்றுமை யாதெனில், சேரனுக்குக் கண் இரண்டு. சிவனுக்குக் கண் மூன்று. 

அருஞ்சொற்பொருள்

நேமி நிமிர்தோள் நிலவு தார் - பூமிமையத் தாங்கும் தோள்களில் விளங்குகின்ற வெற்றி மாலை, ஏம்ம் – பொன், அமையார் – தேவர், நீலம் – குவளை, வாமான் – தாவுகின்ற குதிரை, வண்டிருக்க நக்கதார் – வண்டுகள் வந்து இருப்பதனாலேயே மலர்ந்ந மலர்களால் கட்டிய மாலை, கல் – மலை, தடித்த – திரண்ட, செம்பியன் – சோழன், வென்றது – ஒத்தது, அள்ளல் – சேறு, பழனம் – நீர்ப்பொய்கை, அரக்காம்பல் – செவ்வாம்பல், ஏற்றூர்தியான் – காளை ஊர்தியுடைய சிவபெருமான், வானவன் – சேரன், கூற்றக் கணிச்சியோன் – காலனைப் போலக் கொலை செய்யும் மழுப்புடைய சிவபெருமான்.

 

வேதநாயகம் பிள்ளை - பெண்மதிமாலை

பெண்மதிமாலை

 வேதநாயகம் பிள்ளை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை (அக்டோபர் 111826 - சூலை 211889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். இவரின் பெற்றோர் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மரி அம்மையார். தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் ஆங்கிலம்தமிழ் மொழிக்கல்வியை திருச்சிராப்பள்ளியை சேர்ந்த தியாகராச பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார். தமது 25ஆம் வயதில் 1851ல் காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற மங்கையைத் திருமணம் செய்தார்.

இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் 1856இல் தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். மாயவரத்தின் நகர் மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.   கி.பி 1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக 1862ல் வெளியிட்டார். மேலும் 1862, 1863 ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார். இவ்வாறு தீர்ப்புகளை முதன் முதலில் மொழி பெயர்த்த தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளை ஆவார்.

வேதநாயகம் பிள்ளை ஆக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில:

·      சித்தாந்த சங்கிரகம் (நூல்) - உயர்நிலை ஆங்கில சட்டங்களை தமிழில் செய்த நூல்

·  பெண்மதி மாலை (நூல்) - பெண்களுக்கு ஏற்ற அற முறைகளைப் பாட்டுக்களாலும் உரைநடையாலும் கூறும் நூல்.

· செய்யுள் நூல்கள் - திருவருள் அந்தாதி (நூல்)திருவருள் மாலை (நூல்)தேவமாதர் அந்தாதி (நூல்)

· பிரதாப முதலியார் சரித்திரம் புகழ் பெற்ற கற்பனைக்கதை, தமிழ் புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

·        ''சர்வ சமய சமரசக் கீர்த்தனை (நூல்) ஏறத்தாழ 200 இசைப்பாடல்கள்.

·        சுகுண சுந்தரி (நூல்) புதினம்

·        சத்திய வேத கீர்த்தனை (நூல்)

·        பொம்மைக் கலியாணம் (நூல்)பெரியநாயகியம்மன் (நூல்) என்னும் நூல்களும் மற்றும் பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்.

இவர் இயற்றிய பெண்மதி மாலை நூலில் மாதா பிதா வணக்கம் என்ற தலைப்பில் உள்ள பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

பாடல்

1.    மாதா பிதாவை வணங்கு – நாளும்

ஆதாரமாகவே யவர்சொல்லுக்கிணங்கு

2.    தந்தை தாய் சாபம் பொல்லாது – அவர்

சிந்தை நொந்தால் மக்கள் செல்வம் நில்லாது

3.    மாதா பிதாவுக்குத் துரோகம் – செய்யும்

பாதகரைச் சுற்றும் பாவம் அநேகம்

4.    பெற்றவர் நேசத்தைத் தேடு அவர்

குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொண்டாடு

5.    தாய்தந்தைக் குதவாத பிள்ளை – தனது

ஆயுசும் வாழ்வு மடியோடே கொள்ளை

6.    கட்டியுனை ளாக்க தாமே முன்பு

பட்டபாடுகள் சொல்லப் பாரதமாமே

7.    உள்தாய் தந்தைக்குத் தீங்கு செய்யும்

பிள்ளையைத் தன்பிள்ளை யேபழிவாங்கும்

8.    கடலைப் போல்மாதா சகாயம் – அதற்கு

உடல்செருப்பாத் தைத்துப் போடுதல் ஞாயம்

மதியிது மதியிது பெண்ணே – புண்ணிய

வதியல்லவோ நல்ல மகராசி கண்ணே.

விளக்கம்

பெண் மதி மாலை என்ற நூல் அக்காலப் பெண்களுக்குப் பல அறிவுரைகளை வழங்குகின்றது. கணவன் நல்வார்த்தையைத் தட்டாது, மாமிமேல் வன்மம் காட்டாதே, தலையணை மந்திரம் தீது என்பன போன்ற கருத்துக்கள் வலியுறுத்தப்டுகின்றன. பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதும் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளது. இந்நூலில் அவற்றுள் தாய் தந்தை வணக்கம் என்ற பகுதியில், தாயையும் தந்தையையும் எவ்வாறு போற்ற வேண்டும் என்பது குறித்த பாடல்களே நமக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

1.மதியுள்ள பெண்ணே! பெற்ற தாயையும் தந்தையையும் எப்போதும் வணங்க வேண்டும். அவர்களின் சொற்களுக்கு நாள்தோறும் அடிபணிந்து செயல்பட வேண்டும்.

2. அவர்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்பட்டு, அவர்களின் சாபத்தைப் பெறக் கூடாது. பெற்றோர்களின் மனம் நோகும்படிச் செயல்படும் பிள்ளைகளின் செல்வங்கள் நிலைபெறாமல் அழிந்து விடும்.

3. தாய்க்கும் தந்தைக்கும் துரோகம் செய்யும் பிள்ளைகளுக்கு வாழ்நாள் முழுவதும் பாவங்கள் தொடரும்.

4. பெற்றவர்கள் செய்யும் தவறுகளை நீக்கிவிட்டு அவர்களின் நற்குணத்தைக் கொண்டாட வேண்டும். அவர்களின் உள்ளத்தில் மறைந்திருக்கும் நேசத்தைத் தேட வேண்டும்.

5.தாய்க்கும் தந்தைக்கும் உதவாத பிள்ளை வாழ்நாள் முழுவதும் குற்றம் செய்தவனாகவே கருதப்படுவான். அதனால் அவன் ஆயுட்காலமும் குறைந்துபோகும்.

6. சமூகத்தில் தன் பிள்ளைகளை உயர்ந்த நிலைக்கு உயர்த்த பெற்றோர் செய்யும் தியாகங்களையும், துன்பங்களையும் கூற முற்பட்டால் ஒரு பாரதமே எழுதிவிடலாம்.

7.பெற்றோர்க்குத் தீங்கு செய்யும் பிள்ளைகளை, அவர்களின் பிள்ளைகளே பழி வாங்குவர்.

8.தாயின் அரவணைப்பும், அவர்களின் சேவையும் கடலைப்போல பரந்தது. அதனை உணர்ந்து நம் தாயின் காலுக்குத் நம் உடம்பை செருப்பாகத் தைத்துப் போடுதலே நாம் அவர்களுக்குச் செய்யும் கடமையாகும் என்று அறிவுரை கூறுகின்றார் ஆசிரியர்.