ஞாயிறு, 31 மார்ச், 2024

சாக்ரடீஸ்

 

சாக்ரடீஸ்

ராஜா ராணி என்ற திரைப்படம் 1956 ஆம் ஆண்டு ஏ.பீம்சிங் அவர்களின் இயக்கத்தில், கலைஞர் கருணாநிதி அவர்களால் திரைக்கதை, வசனம் எழுதப்பட்டு வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், பத்மினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கருணாநிதி அவர்களால் எழுதப்பட்ட சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் ஆகிய ஓரங்க நாடகங்கள் இடம்பெற்றுள்ளன.

கதைச் சுருக்கம்

ராஜா ராணி திரைப்படத்தில் கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரடீஸாக சிவாஜி கணேசன் நடித்துள்ளார். இந்த நாடகம் மூன்று காட்சிகளைக் கொண்டது. முதல் காட்சியில், சாக்ரடீஸ், கிரேக்க இளைஞர்களிடம் “சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! அறிவை ஆயுதமாக ஏந்துங்கள்” என்று கூறி பிரச்சாரம் செய்கின்றார். இரண்டாம் காட்சியில், அணிடஸ் மற்றும் மெலிடஸ் இருவரும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுக்கின்றனர். நீதிபதி சாக்ரடீஸிற்கு விஷம் அருந்தி உயிர்விட வேண்டும் என்று மரணதண்டனை வழங்குகின்யறார்.  மூன்றாம் காட்சியில், சாக்ரடீஸ் தன்னுடைய நண்பனையும் மனைவியையும் தேற்றி இறுதி உரை ஆற்றுகின்றார்.

முதல் காட்சி – கிரேக்க நகரத்தில் சாக்ரடீஸ் அறைகூவல்

கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரின் வீதியில், “இளைஞர்களே! உங்களையே நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். புகழ் பெற்ற கிரேக்கத்தில் இருக்கும் குறைகளை மறைப்பது புண்ணுக்கு புனுகு தடவுவது போன்றது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அறிவைத் தேடிப் பெறவேண்டும். இதற்காகத்தான் நான் உங்களை அழைக்கின்றேன். விவேகம் இல்லை என்றால் ஈட்டியோ வாளோ போதாது.  நான் தரும் அறிவாயுதமும் உங்களுக்குத் தேவை. ஏனெனில் அறிவாயுதமே உலகின் அணையாத ஜோதியாகும்” என்று இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கின்றார் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸின் இந்த உரை அரசுக்கும் ஆட்சிக்கும் அச்சத்தைக் கொடுக்கின்றது. அரசியல்வாதியான அணிடஸும் அவன் நண்பனான கவிஞன் மெலிடஸும், கிரேக்க மக்களுக்கு அறிவை வழங்கி கொண்டிருக்கும் சாக்ரடீஸ், குமுறும் எரிமலையை விட கொந்தளிக்கும் கடலை விட ஆபத்தானவன் என்று கருதி, கிரேக்க மக்கள் அறிவைப் பெறுவதற்குள் சாக்ரடீஸை அழித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து சாக்ரடீஸை கைது செய்கின்றனர்.

இரண்டாம் காட்சி-நீதிமன்ற காட்சி

நீதிமன்றத்தில் அணிடஸ் சாக்ரடீஸைப் பார்த்து, “அரசாங்கத்திற்கு விரோதமாக ஆண்டவனுக்கு விரோதமாக, சட்டத்திற்கு விரோதமாக இளைஞர்களைத் தூண்டிவிடும் இழிகுணக் கிழவன்” என்று கேலி செய்கின்றான். சாக்ரடீஸோ தலை நரைத்த அணிடஸைச் சுட்டிக் காட்டி, “கடல் நுரை போல் நரைத்துவி்ட்ட தலை எனக்கும் அணிடசுக்கும் இல்லையா சகோதரர்களே” என்று சிரிக்கின்றார். தன்னை அடக்க எண்ணிய மெலிடஸைப் பார்த்து, “என் தலையில் இருந்து சுடர்விட்டு கிளம்பும் அறிவு, உன் தலையில் இருந்து புறப்படும் அர்த்தமற்ற கற்பனை, அரசியல்வாதி அணிடஸின் தலையில் இருந்து பீறிடும் அதிகார ஆணவம், இந்த மூன்றுக்கும் இடையே நடக்கும் மும்முனைப் போராட்டத்தின் விளைவுதான் இந்த வழக்கு” என்று விளக்குகின்றார்.

உடனே மெலிடஸ், சாக்ரடீஸ் இப்படிப் பேசித்தான் கிரேக்கத்தின் வாலிபர்களை கெடுப்பதாக குற்றம் சாட்டினான். உடனே சாக்ரடீஸ், “ஒரு கிழவன் எப்படியப்பா இளைஞர்களைக் கெடுக்க முடியும்? நான் என்ன வாலிபருக்கு வலை வீசும் விலை மாதா?” என்று வாதிடுகின்றார். மேலும், “நீங்கள் எல்லோரும் இளைஞர்களுக்கு நன்மை செய்யும் போது நான் ஒருவன் எப்படி அவர்களைக் கெடுக்க முடியும்?’ என்று எதிர்வாதம் புரிகின்றார். அணிடஸ் குறுக்கிட்டு “ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்“ என்று கூற, சாக்ரடீஸ் “அதை இருண்ட வீட்டிற்கு ஒரு விளக்கு” என்றும் கூறலாமே? இளைஞர்கள் என்னைச் சுற்றி வானம்பாடிகள் போல் வட்டமிட காரணம், என்னுடைய வார்த்தை அலங்காரம் அல்ல. வளம் குறையாத கருத்துகள், தரம் குறையாத கொள்கைகள்” என்று விளக்கினார்.  இதற்கு மேல் அவரைப் பேச அனுமதிக்கக் கூடாது என்று கருதிய நீதிபதி விஷம் அருந்தும் மரண தண்டனையை சாக்ரடீஸுக்குத் தீர்ப்பளிக்கின்றார்.

மூன்றாம் காட்சி – சிறைச்சாலைக் காட்சி

முப்பது நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விஷம் அருந்தவேண்டிய நாளில் தன் மனைவி எக்ஸ்சேந்துபியிடம், “நான் வீண் வாதம் புரிந்து தொல்லைப்படுகிறேன் என்று கோபித்துக் கொண்டாயே. இப்போது பார். உன் கணவன் அகிலம் புகழும் வீரனாக, தேசம் புகழும் தியாகியாக மாறிவிட்டான். நீ மிகவும் பாக்கியசாலி. பணபலம் படைபலம் அத்தனை பலத்தையும் எதிர்த்து நின்று யாருக்குமே பணியாத பெருமையோடு கடைசியாக விழிகளை மூடப் போகும் இந்த கர்ம வீரனுக்கு நீ மனைவி. குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். அவர்கள் பெரியவர்களாக மாறியதும் நேர்மை தவறினால் நான் உங்களைத் திருத்த முயன்றது போலவே, நீங்களும் அவர்களைத் திருத்த முயலுங்கள். நேரமாகின்றது. காவலர்கள் கோபித்துக் கொள்வார்கள். சென்று வா” என்று கூறி தன் மனைவியையும், பிள்ளைகளையும் தேற்றி தன் நண்பன் கிரீடோவிடம் அவர்களை அனுப்பி வைக்குமாறு கூறுகிறார்.

பிறகு சிறைக் காவலனிடம் விஷம் அருந்தும் முறையைக் கேட்டறிகின்றார். சிறைக் காவலன், “பெரியவரே, விஷத்தை முழுவதும் குடிக்க வேண்டும். பிறகு இங்கும் அங்கும் நடந்து கொண்டே இருக்க வேண்டும். கால்கள் மரத்துப்போகும் வரையில் அப்படியே நடக்க வேண்டும். பிறகு உட்காரலாம். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு ஜில்லிட்டுக் கொண்டே வரும். பிறகு படுத்து விட வேண்டும்” என்று விவரிக்கின்றான்.

இதைக் கேட்ட சாக்ரடீஸ் “ஆனந்தமான நித்திரை. கனவு மங்கையாலும் கலைக்க முடியாத நித்திரை” என்று கூறி, காவலனிடம் விஷத்தை ஆனந்தமாகப் பெறுகிறார். நண்பன் கிரீடோ சாக்ரடீஸிடம், “நண்பா, சிறிது நேரம் பொறுத்துக் கூட சாப்பிடலாம். சிறைச்சாலையில் அதற்கு அனுமதி உண்டு” என்று கூற, சாக்ரடீஸோ, “இரண்டு நாழிகை கழித்து சாப்பிடுவதாக வைத்துக் கொள். அதற்குள் என் இதயம் வெடித்து இறந்து விட்டால் பிறகு கிரேக்க நாட்டு நீதிமன்றத்தின் தண்டனையை யார் நிறைவேற்றுவது? இந்த விஷம் அழிக்கப்போவது என்னையல்ல. இந்த உடலைத்தான்” என்று கூறினார்.

 அவரின் வார்த்தைகளைக் கேட்ட கிரீடோ சாக்ரடீஸிடம், “ஏதென்சின் எழுச்சிமிகு சிங்கமே! எனக்குக் கடைசியாக ஏதாவது சொல்” என்று கேட்க, சாக்ரடீஸ் இறுதி உரை ஆற்றுகின்றார்.  

 “உன்னையே நீ அறிய வேண்டும். எதற்கு? ஏன்? எப்படி? என்று கேள்! அப்படிக் கேட்டால்தான் இந்த சிலைவடிக்கும் சிற்பி சிந்தனைச் சிற்பியாக மாறினேன். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய். இதைத்தான் உனக்கும் இந்த உலகத்தும் சொல்ல விரும்புகிறேன்“ என்று கூறினார்.

கிரீடோ சாக்ரடீஸிடம் ”உன் பிணத்தை எப்படி அடக்கம் செய்ய வேண்டும்?” என்று கேட்க, “புதைப்பதாயிருந்தால் இந்நாட்டில் உலவும் புழுகு மூட்டைகளை என்னோடு புதைத்து மண்ணாக்கிவிடு. எரிப்பதாயிருந்தால் ஏமாற்றுக்காரர்களின் சுவடிகளையும் என்னோடு சேர்த்துச் சுட்டுச் சாம்பலாக்கி தண்ணீரில் கரைத்து விடு” என்று வீரம் பொங்கக் கூறுகின்றார். இறுதியாக, “எனதருமை ஏதென்சு நகரத்துப் பெருமக்களே! உண்மையாகவே நான் இளைஞர்களைக் கெடுப்பதாக யாராவது நம்பினால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும். வருகிறேன். வணக்கம்” என்று கூறி கூறி விஷமருந்தி மரணத்தைத் தழுவினார் சாக்ரடீஸ்.


reference : https://www.youtube.com/watch?v=sEipFRf3-8s

வியாழன், 14 மார்ச், 2024

சமயக் காப்பியங்கள் - கம்பராமாயணம், பெரியபுராணம், தேம்பாவணி, சீறாப்புராணம்

 சமயக் காப்பியங்கள்

1. கம்பராமாயணம்

கம்பராமாயணத்தைத் தமிழில் இயற்றிய பெரும் புலவர்  கம்பர்அவரது கவிச்சிறப்பு தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாகப் போற்றப்படுகிறதுவடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தைத் தமிழில் இராமகாதையாகப் படைத்தார் கம்பர்இக்காப்பியம் கம்பநாடகம்கம்ப சித்திரம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனஇந்நூலில்பாலகாண்டம்அயோத்தியா காண்டம்ஆரணிய காண்டம்கிட்கிந்தா காண்டம்சுந்தர காண்டம்யுத்த காண்டம்  ஆகிய ஆறு காண்டங்களும், 113 படலங்களும், 10,500க்கும் மேற்பட்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

கம்பர்

கம்பர் சோழநாட்டில் திருவழுந்தூரில் பிறந்தவர்தந்தையார் பெயர் ஆதித்தன்காளியின் அருளால் கவி பாடும் ஆற்றல் பெற்றவர்இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு எனவும் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனவும் கூறப்படுகின்றதுஇவரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார்தம்மை ஆதரித்த வள்ளலைக் கம்பர் தம் காப்பியத்தில் பத்து இடங்களில் பாடியுள்ளார்இராமகாதையைத் தவிர ஏர் ஏழுபதுதிருக்கை வழக்கம்சரசுவதி அந்தாதிசடகோபர் அந்தாதி ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

2.பெரியபுராணம்

பெரிய புராணம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் என்பவரால் இயற்றப்பட்டதுசைவ சமயத்தின் பெருநூலாக இந்நூல் கருதப்படுகிறதுசுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகைநம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொடர் திருவந்தாதி ஆகியவற்றை மூல நூல்களாகக் கொண்டும்சேக்கிழார் பல ஊர்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் ஆக்கப்பட்டதுஇதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர்இந்நூல் 2 காண்டங்களையம் 13 சருக்கங்களையும், 4253 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது. 63 நாயன்மார்களின் வரலாற்றையும், 9 தொகையடியார்களின் வரலாற்றையும் கூறுகின்றதுபன்னிரு திருமுறைகளுள் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுகிறது.

சேக்கிழார்

இந்நூலை இயற்றியவர் சேக்கிழார்இவர் தொண்டை மண்டலத்தில் புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூரில் வேளாளர் மரபில்சேக்கிழார் குடியில் தோன்றிவர்இயற்பெயர் அருண்மொழித் தேவர்சோழநாட்டை ஆண்ட குலோத்துங்கச் சோழன்சேக்கிழாருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டம் கொடுத்துத் தன் அமைச்சராக்கிக் கொண்டான்இவ்வேந்தனது வேண்டுகோளுக்கிணங்கி பெரியபுராணத்தை இயற்றினார் சேக்கிழார்இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.

3.சீறாப்புராணம்

முகமது நபியின் வரலாற்றைப் பாடும் இசுலாமியக் காப்பியமாகும். இக்காப்பியத்தை இயற்றியவர் உமறுப்புலவர். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினைக் கம்பர் போன்று பாடவேண்டும் என்ற விருப்பம் கொண்டு, தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளை மீறாமல் காப்பியமாகப் படைத்தவர். சீறா என்பது சீரத் என்னும் அரபுச் சொல்லின் திரிபாகும். இது வரலாறு என்னும் பொருளை உடையது. இந்நூலில் விலாதத்துக் காண்டம், ஹிஜரத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம் என்ற மூன்று காண்டங்கள் அமைந்துள்ளன. 5027 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

உமறுப்புலவர்

இந்நூலின் ஆசிரியரான உமறுப்புலவரின் இயற்பெயர் செய்யது காதர் மரைக்காயர். வள்ளல் சீதக்காதி என்பவரால் ஆதரிக்கப்பட்டவர். உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார்.

                                        4.தேம்பாவணி 

நூல் குறிப்பு

தேம்பாவணியை இயற்றியவர் வீரமாமுனிவர். இந்நூலில் மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன.

·       தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள்.

·       தேன் + பா + அணி = தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் எனப் பொருள் கொள்வர்.

இந்நூலின் பாட்டுடைத் தலைவன் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர். இந்நூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்என்பர்.

ஆசிரியர் குறிப்பு

வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டான்டைன் ஜோசப்பெஸ்கி. கான்ஸ்டான்டைன் என்னும் இத்தாலி மொழிச் சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள். தமிழ் மீது கொண்ட பற்றால்  தம் பெயரை “தைரியநாதசாமிஎன மாற்றிக்கொண்டார். தமிழ்ச் சான்றோர் இவரை வீரமாமுனிவர் என அழைத்தனர். 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும், தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயற்கை எய்தினார்.

திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார். திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

நாமக்கல் கவிஞர் - கத்தியின்றி ரத்தமின்றி

 

நாமக்கல் கவிஞர்

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!

ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே

மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே!

குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே

எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் .

கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே

பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே .

கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி

பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட!

காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி

மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே!

விளக்கம்

   நாமக்கல் கவிஞர் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இப்பாடலில் காந்தியின் அகிம்சை நெறியில் தேசத்திற்காகப் போராட வருமாறு மக்களை அழைக்கின்றார். 

    கத்தியும் இல்லாமல் இரத்தமும் இல்லாமல் ஒரு யுத்தம் நடைபெறுகின்றது. அது இந்திய விடுதலைப் போரை முதன்மைப்படுத்துகின்றது. உண்மையான வழியில் போராடினால் வெற்றி கிடைக்கும் என்று நம்புகின்ற யாவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வாருங்கள்!.

    ஒளிந்து கொண்டு பகைவர் மீது குண்டு எறிந்து கொல்லுகின்ற விருப்பம் இல்லாத இந்தப் போராட்டத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது. பகைவர்களை அழிக்கக் குதிரைப்படை இல்லை. யானைப்படை இல்லை.  உயிர்களைக் கொல்லும் விருப்பம் இல்லை. எதிரி என்று யாரையும் எண்ணுவதில்லை. யார் மீதும் கோபம் இல்லை. அவர்களை வென்றாக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. 

    தனக்குத் துன்பத்தையே கொடுத்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது சாபம் இடுவதில்லை. பாவத்தின் செய்கைகளை நினைத்துக் கூடப் பார்ப்பது இல்லை. ஆனாலும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

    இப்படி ஒரு மாறுபட்ட போரை யாரும் கேள்விப்பட்டிருக்க முடியாது.  முன்பு நாம் செய்த ஏதோ ஒரு புண்ணியத்தால் காந்தி என்ற சாந்தம் நிறைந்த மகானை இத்தேசத்தில் நாம் பெற்றிருக்கின்றோம். அவர் காட்டுகின்ற அகிம்சையின் செம்மையான வழியில், மனிதர் எவருக்கும் தீங்கு நேராத முறையில் நடைபெறுகின்ற இந்தப் போரில் கலந்து கொள்ள அனைவரும் வாரீர் என தேச மக்களை அழைக்கின்றார் நாமக்கல் கவிஞர்.