நாமக்கல் கவிஞர்
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!
ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே
மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே!
குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே
எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் .
கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே
பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே .
கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட!
காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே!
விளக்கம்
நாமக்கல் கவிஞர் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இப்பாடலில் காந்தியின் அகிம்சை நெறியில் தேசத்திற்காகப் போராட வருமாறு மக்களை அழைக்கின்றார்.
கத்தியும் இல்லாமல் இரத்தமும் இல்லாமல் ஒரு யுத்தம் நடைபெறுகின்றது. அது இந்திய விடுதலைப் போரை முதன்மைப்படுத்துகின்றது. உண்மையான வழியில் போராடினால் வெற்றி கிடைக்கும் என்று நம்புகின்ற யாவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வாருங்கள்!.
ஒளிந்து கொண்டு பகைவர் மீது குண்டு எறிந்து கொல்லுகின்ற விருப்பம் இல்லாத இந்தப் போராட்டத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது. பகைவர்களை அழிக்கக் குதிரைப்படை இல்லை. யானைப்படை இல்லை. உயிர்களைக் கொல்லும் விருப்பம் இல்லை. எதிரி என்று யாரையும் எண்ணுவதில்லை. யார் மீதும் கோபம் இல்லை. அவர்களை வென்றாக வேண்டும் என்ற ஆசையும் இல்லை.
தனக்குத் துன்பத்தையே கொடுத்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது சாபம் இடுவதில்லை. பாவத்தின் செய்கைகளை நினைத்துக் கூடப் பார்ப்பது இல்லை. ஆனாலும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இப்படி ஒரு மாறுபட்ட போரை யாரும் கேள்விப்பட்டிருக்க முடியாது. முன்பு நாம் செய்த ஏதோ ஒரு புண்ணியத்தால் காந்தி
என்ற சாந்தம் நிறைந்த மகானை இத்தேசத்தில் நாம் பெற்றிருக்கின்றோம். அவர் காட்டுகின்ற
அகிம்சையின் செம்மையான வழியில், மனிதர் எவருக்கும் தீங்கு நேராத முறையில் நடைபெறுகின்ற
இந்தப் போரில் கலந்து கொள்ள அனைவரும் வாரீர் என தேச மக்களை அழைக்கின்றார் நாமக்கல்
கவிஞர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக