சமயக் காப்பியங்கள்
1. கம்பராமாயணம்
கம்பராமாயணத்தைத் தமிழில் இயற்றிய பெரும் புலவர் கம்பர். அவரது கவிச்சிறப்பு தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாகப் போற்றப்படுகிறது. வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தைத் தமிழில் இராமகாதையாகப் படைத்தார் கம்பர். இக்காப்பியம் கம்பநாடகம், கம்ப சித்திரம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. இந்நூலில், பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்களும், 113 படலங்களும், 10,500க்கும் மேற்பட்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
கம்பர்
கம்பர் சோழநாட்டில் திருவழுந்தூரில் பிறந்தவர். தந்தையார் பெயர் ஆதித்தன். காளியின் அருளால் கவி பாடும் ஆற்றல் பெற்றவர். இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு எனவும் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனவும் கூறப்படுகின்றது. இவரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார். தம்மை ஆதரித்த வள்ளலைக் கம்பர் தம் காப்பியத்தில் பத்து இடங்களில் பாடியுள்ளார். இராமகாதையைத் தவிர ஏர் ஏழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
2.பெரியபுராணம்
பெரிய புராணம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் என்பவரால் இயற்றப்பட்டது. சைவ சமயத்தின் பெருநூலாக இந்நூல் கருதப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொடர் திருவந்தாதி ஆகியவற்றை மூல நூல்களாகக் கொண்டும், சேக்கிழார் பல ஊர்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் ஆக்கப்பட்டது. இதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர். இந்நூல் 2 காண்டங்களையம் 13 சருக்கங்களையும், 4253 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது. 63 நாயன்மார்களின் வரலாற்றையும், 9 தொகையடியார்களின் வரலாற்றையும் கூறுகின்றது. பன்னிரு திருமுறைகளுள் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுகிறது.
சேக்கிழார்
இந்நூலை இயற்றியவர் சேக்கிழார். இவர் தொண்டை மண்டலத்தில் புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூரில் வேளாளர் மரபில், சேக்கிழார் குடியில் தோன்றிவர். இயற்பெயர் அருண்மொழித் தேவர். சோழநாட்டை ஆண்ட குலோத்துங்கச் சோழன், சேக்கிழாருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டம் கொடுத்துத் தன் அமைச்சராக்கிக் கொண்டான். இவ்வேந்தனது வேண்டுகோளுக்கிணங்கி பெரியபுராணத்தை இயற்றினார் சேக்கிழார். இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.
3.சீறாப்புராணம்
முகமது நபியின் வரலாற்றைப் பாடும் இசுலாமியக் காப்பியமாகும். இக்காப்பியத்தை இயற்றியவர் உமறுப்புலவர். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினைக் கம்பர் போன்று பாடவேண்டும் என்ற விருப்பம் கொண்டு, தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளை மீறாமல் காப்பியமாகப் படைத்தவர். சீறா என்பது சீரத் என்னும் அரபுச் சொல்லின் திரிபாகும். இது வரலாறு என்னும் பொருளை உடையது. இந்நூலில் விலாதத்துக் காண்டம், ஹிஜரத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம் என்ற மூன்று காண்டங்கள் அமைந்துள்ளன. 5027 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
உமறுப்புலவர்
இந்நூலின் ஆசிரியரான உமறுப்புலவரின் இயற்பெயர் செய்யது காதர் மரைக்காயர். வள்ளல் சீதக்காதி என்பவரால் ஆதரிக்கப்பட்டவர். உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார்.
4.தேம்பாவணி
நூல் குறிப்பு
தேம்பாவணியை இயற்றியவர் வீரமாமுனிவர். இந்நூலில் மூன்று காண்டங்கள்,
முப்பத்தாறு படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன.
·
தேம்பா + அணி = தேம்பாவணி.
வாடாத மாலை எனப் பொருள்.
·
தேன் + பா + அணி =
தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் எனப் பொருள் கொள்வர்.
இந்நூலின் பாட்டுடைத் தலைவன் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை
மாமுனிவர். இந்நூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்பர்.
ஆசிரியர் குறிப்பு
வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டான்டைன் ஜோசப்பெஸ்கி. கான்ஸ்டான்டைன்
என்னும் இத்தாலி மொழிச் சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள். தமிழ் மீது கொண்ட பற்றால்
தம் பெயரை “தைரியநாதசாமி”
என மாற்றிக்கொண்டார். தமிழ்ச் சான்றோர் இவரை வீரமாமுனிவர் என அழைத்தனர்.
1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும், தமிழ்ப்பணியும்
புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயற்கை எய்தினார்.
திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம்,
பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம்,
சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார். திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால்
இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக