ஞாயிறு, 31 மார்ச், 2024

சாக்ரடீஸ்

 

சாக்ரடீஸ்

ராஜா ராணி என்ற திரைப்படம் 1956 ஆம் ஆண்டு ஏ.பீம்சிங் அவர்களின் இயக்கத்தில், கலைஞர் கருணாநிதி அவர்களால் திரைக்கதை, வசனம் எழுதப்பட்டு வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், பத்மினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கருணாநிதி அவர்களால் எழுதப்பட்ட சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் ஆகிய ஓரங்க நாடகங்கள் இடம்பெற்றுள்ளன.

கதைச் சுருக்கம்

ராஜா ராணி திரைப்படத்தில் கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரடீஸாக சிவாஜி கணேசன் நடித்துள்ளார். இந்த நாடகம் மூன்று காட்சிகளைக் கொண்டது. முதல் காட்சியில், சாக்ரடீஸ், கிரேக்க இளைஞர்களிடம் “சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! அறிவை ஆயுதமாக ஏந்துங்கள்” என்று கூறி பிரச்சாரம் செய்கின்றார். இரண்டாம் காட்சியில், அணிடஸ் மற்றும் மெலிடஸ் இருவரும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுக்கின்றனர். நீதிபதி சாக்ரடீஸிற்கு விஷம் அருந்தி உயிர்விட வேண்டும் என்று மரணதண்டனை வழங்குகின்யறார்.  மூன்றாம் காட்சியில், சாக்ரடீஸ் தன்னுடைய நண்பனையும் மனைவியையும் தேற்றி இறுதி உரை ஆற்றுகின்றார்.

முதல் காட்சி – கிரேக்க நகரத்தில் சாக்ரடீஸ் அறைகூவல்

கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரின் வீதியில், “இளைஞர்களே! உங்களையே நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். புகழ் பெற்ற கிரேக்கத்தில் இருக்கும் குறைகளை மறைப்பது புண்ணுக்கு புனுகு தடவுவது போன்றது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அறிவைத் தேடிப் பெறவேண்டும். இதற்காகத்தான் நான் உங்களை அழைக்கின்றேன். விவேகம் இல்லை என்றால் ஈட்டியோ வாளோ போதாது.  நான் தரும் அறிவாயுதமும் உங்களுக்குத் தேவை. ஏனெனில் அறிவாயுதமே உலகின் அணையாத ஜோதியாகும்” என்று இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கின்றார் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸின் இந்த உரை அரசுக்கும் ஆட்சிக்கும் அச்சத்தைக் கொடுக்கின்றது. அரசியல்வாதியான அணிடஸும் அவன் நண்பனான கவிஞன் மெலிடஸும், கிரேக்க மக்களுக்கு அறிவை வழங்கி கொண்டிருக்கும் சாக்ரடீஸ், குமுறும் எரிமலையை விட கொந்தளிக்கும் கடலை விட ஆபத்தானவன் என்று கருதி, கிரேக்க மக்கள் அறிவைப் பெறுவதற்குள் சாக்ரடீஸை அழித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து சாக்ரடீஸை கைது செய்கின்றனர்.

இரண்டாம் காட்சி-நீதிமன்ற காட்சி

நீதிமன்றத்தில் அணிடஸ் சாக்ரடீஸைப் பார்த்து, “அரசாங்கத்திற்கு விரோதமாக ஆண்டவனுக்கு விரோதமாக, சட்டத்திற்கு விரோதமாக இளைஞர்களைத் தூண்டிவிடும் இழிகுணக் கிழவன்” என்று கேலி செய்கின்றான். சாக்ரடீஸோ தலை நரைத்த அணிடஸைச் சுட்டிக் காட்டி, “கடல் நுரை போல் நரைத்துவி்ட்ட தலை எனக்கும் அணிடசுக்கும் இல்லையா சகோதரர்களே” என்று சிரிக்கின்றார். தன்னை அடக்க எண்ணிய மெலிடஸைப் பார்த்து, “என் தலையில் இருந்து சுடர்விட்டு கிளம்பும் அறிவு, உன் தலையில் இருந்து புறப்படும் அர்த்தமற்ற கற்பனை, அரசியல்வாதி அணிடஸின் தலையில் இருந்து பீறிடும் அதிகார ஆணவம், இந்த மூன்றுக்கும் இடையே நடக்கும் மும்முனைப் போராட்டத்தின் விளைவுதான் இந்த வழக்கு” என்று விளக்குகின்றார்.

உடனே மெலிடஸ், சாக்ரடீஸ் இப்படிப் பேசித்தான் கிரேக்கத்தின் வாலிபர்களை கெடுப்பதாக குற்றம் சாட்டினான். உடனே சாக்ரடீஸ், “ஒரு கிழவன் எப்படியப்பா இளைஞர்களைக் கெடுக்க முடியும்? நான் என்ன வாலிபருக்கு வலை வீசும் விலை மாதா?” என்று வாதிடுகின்றார். மேலும், “நீங்கள் எல்லோரும் இளைஞர்களுக்கு நன்மை செய்யும் போது நான் ஒருவன் எப்படி அவர்களைக் கெடுக்க முடியும்?’ என்று எதிர்வாதம் புரிகின்றார். அணிடஸ் குறுக்கிட்டு “ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்“ என்று கூற, சாக்ரடீஸ் “அதை இருண்ட வீட்டிற்கு ஒரு விளக்கு” என்றும் கூறலாமே? இளைஞர்கள் என்னைச் சுற்றி வானம்பாடிகள் போல் வட்டமிட காரணம், என்னுடைய வார்த்தை அலங்காரம் அல்ல. வளம் குறையாத கருத்துகள், தரம் குறையாத கொள்கைகள்” என்று விளக்கினார்.  இதற்கு மேல் அவரைப் பேச அனுமதிக்கக் கூடாது என்று கருதிய நீதிபதி விஷம் அருந்தும் மரண தண்டனையை சாக்ரடீஸுக்குத் தீர்ப்பளிக்கின்றார்.

மூன்றாம் காட்சி – சிறைச்சாலைக் காட்சி

முப்பது நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விஷம் அருந்தவேண்டிய நாளில் தன் மனைவி எக்ஸ்சேந்துபியிடம், “நான் வீண் வாதம் புரிந்து தொல்லைப்படுகிறேன் என்று கோபித்துக் கொண்டாயே. இப்போது பார். உன் கணவன் அகிலம் புகழும் வீரனாக, தேசம் புகழும் தியாகியாக மாறிவிட்டான். நீ மிகவும் பாக்கியசாலி. பணபலம் படைபலம் அத்தனை பலத்தையும் எதிர்த்து நின்று யாருக்குமே பணியாத பெருமையோடு கடைசியாக விழிகளை மூடப் போகும் இந்த கர்ம வீரனுக்கு நீ மனைவி. குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். அவர்கள் பெரியவர்களாக மாறியதும் நேர்மை தவறினால் நான் உங்களைத் திருத்த முயன்றது போலவே, நீங்களும் அவர்களைத் திருத்த முயலுங்கள். நேரமாகின்றது. காவலர்கள் கோபித்துக் கொள்வார்கள். சென்று வா” என்று கூறி தன் மனைவியையும், பிள்ளைகளையும் தேற்றி தன் நண்பன் கிரீடோவிடம் அவர்களை அனுப்பி வைக்குமாறு கூறுகிறார்.

பிறகு சிறைக் காவலனிடம் விஷம் அருந்தும் முறையைக் கேட்டறிகின்றார். சிறைக் காவலன், “பெரியவரே, விஷத்தை முழுவதும் குடிக்க வேண்டும். பிறகு இங்கும் அங்கும் நடந்து கொண்டே இருக்க வேண்டும். கால்கள் மரத்துப்போகும் வரையில் அப்படியே நடக்க வேண்டும். பிறகு உட்காரலாம். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு ஜில்லிட்டுக் கொண்டே வரும். பிறகு படுத்து விட வேண்டும்” என்று விவரிக்கின்றான்.

இதைக் கேட்ட சாக்ரடீஸ் “ஆனந்தமான நித்திரை. கனவு மங்கையாலும் கலைக்க முடியாத நித்திரை” என்று கூறி, காவலனிடம் விஷத்தை ஆனந்தமாகப் பெறுகிறார். நண்பன் கிரீடோ சாக்ரடீஸிடம், “நண்பா, சிறிது நேரம் பொறுத்துக் கூட சாப்பிடலாம். சிறைச்சாலையில் அதற்கு அனுமதி உண்டு” என்று கூற, சாக்ரடீஸோ, “இரண்டு நாழிகை கழித்து சாப்பிடுவதாக வைத்துக் கொள். அதற்குள் என் இதயம் வெடித்து இறந்து விட்டால் பிறகு கிரேக்க நாட்டு நீதிமன்றத்தின் தண்டனையை யார் நிறைவேற்றுவது? இந்த விஷம் அழிக்கப்போவது என்னையல்ல. இந்த உடலைத்தான்” என்று கூறினார்.

 அவரின் வார்த்தைகளைக் கேட்ட கிரீடோ சாக்ரடீஸிடம், “ஏதென்சின் எழுச்சிமிகு சிங்கமே! எனக்குக் கடைசியாக ஏதாவது சொல்” என்று கேட்க, சாக்ரடீஸ் இறுதி உரை ஆற்றுகின்றார்.  

 “உன்னையே நீ அறிய வேண்டும். எதற்கு? ஏன்? எப்படி? என்று கேள்! அப்படிக் கேட்டால்தான் இந்த சிலைவடிக்கும் சிற்பி சிந்தனைச் சிற்பியாக மாறினேன். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய். இதைத்தான் உனக்கும் இந்த உலகத்தும் சொல்ல விரும்புகிறேன்“ என்று கூறினார்.

கிரீடோ சாக்ரடீஸிடம் ”உன் பிணத்தை எப்படி அடக்கம் செய்ய வேண்டும்?” என்று கேட்க, “புதைப்பதாயிருந்தால் இந்நாட்டில் உலவும் புழுகு மூட்டைகளை என்னோடு புதைத்து மண்ணாக்கிவிடு. எரிப்பதாயிருந்தால் ஏமாற்றுக்காரர்களின் சுவடிகளையும் என்னோடு சேர்த்துச் சுட்டுச் சாம்பலாக்கி தண்ணீரில் கரைத்து விடு” என்று வீரம் பொங்கக் கூறுகின்றார். இறுதியாக, “எனதருமை ஏதென்சு நகரத்துப் பெருமக்களே! உண்மையாகவே நான் இளைஞர்களைக் கெடுப்பதாக யாராவது நம்பினால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும். வருகிறேன். வணக்கம்” என்று கூறி கூறி விஷமருந்தி மரணத்தைத் தழுவினார் சாக்ரடீஸ்.


reference : https://www.youtube.com/watch?v=sEipFRf3-8s

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக