நாட்டுப்புறப்பாடல்
பஞ்சம்
தாது வருடப் பஞ்சத்திலே
- ஓ சாமியே
தாய் வேறே பிள்ளைவேறே
- ஓ சாமியே
அறுபது வருசம் போயி - ஓ சாமியே
அடுத்தாப்போலே தாதுதானே
- ஓ சாமியே
தைப்பொங்கல் காலத்திலே
- ஓ சாமியே
தயிருக்கும் பஞ்சம் வந்ததே
- ஓ சாமியே
மாசி மாதத் துவக்கத்திலே
- ஓ சாமியே
மாடுகளும் பட்டினியே
- ஓ சாமியே
பங்குனிக் கடைசியிலே
- ஓ சாமியே
பால் மாடெல்லாம் செத்துப்
போச்சே - ஓ சாமியே
சித்திரை மாதத் துவக்கத்திலே
- ஓ சாமியே
சீரெல்லாம் குலைந்து
போச்சே - ஓ சாமியே
வைகாசி மாதத்திலேதான் - ஓ சாமியே
வயிறு எல்லாம் ஒட்டிப்போச்சே - ஓ சாமியே
ஆனி மாதத் துவக்கத்திலே - ஓ சாமியே
ஆணும் பெண்ணும் அலறலாச்சே
- ஓ சாமியே
ஆடி மாதத் துவக்கத்திலே - ஓ சாமியே
ஆளுக்கெல்லாம் ஆட்டமாச்சே - ஓ சாமியே
ஆவணி மாசத் துவக்கத்திலே - ஓ சாமியே
ஆட்டம் நின்று ஓட்டமாச்சே - ஓ சாமியே
புரட்டாசிக் கடைசியிலே - ஓ சாமியே
புரண்டுதே உலகம் பூரா - ஓ சாமியே
ஐப்பசித் துவக்கத்திலே - ஓ சாமியே
அழுகையுண் சீருந்தானே - ஓ சாமியே
கார்த்திகைக் கடையிலே - ஓ சாமியே
கண்ட இடம் எல்லாம் பிணம் - ஓ சாமியே
மாகாராணி புண்ணியத்திலே - ஓ சாமியே
மார்கழிப் பஞ்சம் நின்றதே -
ஓ சாமியே
காட்டுப் பக்கம் நூறு
பிணம் - ஓ சாமியே
வீட்டுப் பக்கம் நூறு
பிணம் - ஓ சாமியே
ரோட்டுப் பக்கம் நூறு
பிணம் - ஓ சாமியே
மேட்டுப் பக்கம் நூறு
பிணம் - ஓசாமியே
ஆற்றிலேயும் தண்ணியில்லை - ஓ சாமியே
கிணற்றில் பார்த்தால்
உப்புத் தண்ணி - ஓசாமியே
கிழடு கட்டை குடிக்குந்
தண்ணி - ஓ சாமியே
தவறினது கோடி சனம் - ஓ சாமியே
கஞ்சியில்லா மேதவித்து - ஓ சாமியே
கஞ்சித் தொட்டி போட்டார்களே - ஓ சாமியே
அன்புடனே சலுக்கார்தானே - ஓ சாமியே
காலம்பர கோடி சனம் - ஓ சாமியே
கஞ்சி குடித்துக் களையாத்துச்சே - ஓ சாமியே
பொழுது சாயக் கோடி சனம் - ஓ சாமியே
பொழைச்சுதே உசிர் தப்பித்து - ஓ சாமியே
கஞ்சிக்குக் கடிச்சிக்கிற - ஓ சாமியே
காணத் துவையல் கொடுத்தாங்களே - ஓ சாமியே
பாடல் விளக்கம்:
நாட்டிற்கு
இன்றியமையாத தேவை மழை. மழை பொழியாவிட்டால் ஆறு குளங்கள் வறண்டு விடும். அதனால் விளைச்சல்
குறையும். நாட்டில் பஞ்சம் ஏற்படும். நம் நாட்டில் தாது வருடத்தில் ஏற்பட்ட பஞ்சம்
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்பஞ்ச காலத்தில் நாட்டில் நடைபெற்ற கொடிய நிகழ்வுகளை
இந்நாட்டுப்புறப்பாடல் தெளிவாகக் காட்டுகின்றது.
இப்பாடலில்
தமிழ் மாதங்களின் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு, அம்மாதங்களில் ஏற்பட்ட பஞ்சத்தின்
கொடுமைகள் விளக்கப்பட்டிருப்பது இப்பாடலின் தனிச்சிறப்பாகும்.
- தை மாதத்தில் தயிருக்குப் பஞ்சம் வந்தது.
- மாசி மாதத் துவக்கத்தில் மாடுகள் பட்டினி கிடந்தன.
- பங்குனி மாதத்தில் பட்டினியால் பசு மாடுகள் இறந்தன.
- சித்திரை மாதத்தில் நகரத்தின் அழகும், புகழும் அழிந்து போனது.
- வைகாசி மாதத்தில் உணவு இல்லாமல் மக்களின் வயிறுகள் காய்ந்து போனது.
- ஆனி மாதத்தில் ஆண்களும் பெண்களும் பசியால் அலறினார்கள்.
- ஆடி மாதத்தில் பசியின் கொடுமையால் மனிதர்களின் உடலெல்லாம் நடுங்கியது.
- ஆவணி மாதத்தில் நடுக்கம் நின்று மக்கள் அங்குமிங்கும் பசியால் ஓடினார்கள்.
- புரட்டாசி மாதத்தில் மக்களுக்கு உலகமே தலை கீழாகப் போயிற்று.
- ஐப்பசி மாதத்தில் எல்லா இடங்களிலும் அழுகைக் குரல் ஒலித்தது.
- கார்த்திகை மாதத்தில் பார்க்கின்ற இடங்களில் எல்லாம் பிணங்கள் கிடந்தன.
- இறைவனின் அருளால் மார்கழி மாதம் பஞ்சம் தீர்ந்தது.
காட்டில்,
வீட்டில், ரோட்டில், மேட்டில் என காணும் இடங்களில் எல்லாம் நூறு நூறு பிணங்கள் தென்பட்டன.
கிணற்றுத் தண்ணீரும் உப்புத் தண்ணீராய் மாறியது. அத்தண்ணீரை வயதானவர்கள் மட்டும் குடித்தனர்.
கோடி மக்கள் மடிந்தனர். கஞ்சிக்கு வழியில்லாமல் தவித்தனர். பஞ்சத்தின் கொடுமையை அறிந்த
அரசாங்கம் கஞ்சித் தொட்டியை வைத்து மக்களின் பசியை ஆற்ற முயற்சி செய்தது. கஞ்சியோடு
துவையலையும் கொடுத்தது. காலையும் மாலையும் கஞ்சி குடித்து மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்
கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக