புதன், 10 மே, 2023

திருஞானசம்பந்தர் திருப்பதிகம் - திருவீழிமிழலை

 

திருஞானசம்பந்தர் திருப்பதிகம் - திருவீழிமிழலை

 பாடல் எண் : 1

அரைஆர் விரிகோ வணஆடை

நரைஆர் விடையூர்தி நயந்தான்

விரையார் பொழில்வீ ழிம்மிழலை

உரையால் உணர்வார் உயர்வாரே.

விளக்கம்

இடையிற் கட்டிய விரிந்த கோவண ஆடையையும்வெண்மை நிறம் பொருந்திய இடப வாகனத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபெருமான் உறைகின்றமணம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்ட திருவீழிமிழலையின் புகழை நூல்களால் உணர்கின்றவர் உயர்வை அடைவார்கள்.

பாடல் எண் : 2

புனைதல் புரிபுன் சடைதன்மேல்

கனைதல் ஒருகங் கைகரந்தான்

வினையில் லவர்வீ ழிம்மிழலை

நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே.

விளக்கம்

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவந்த சடைமுடி மீது கங்கை நதியை மறைத்து வைத்துள்ள சிவபெருமான் உறைகின்றதீவினை இல்லாத மக்கள் வாழ்கின்ற திருவீழிமிழலையை நினையாதவர் நெஞ்சம் என்றும் மகிழ்ச்சியடைவதில்லை.

பாடல் எண் : 3

அழவல் லவர்ஆ டியும்பாடி

எழவல் லவர்எந் தைஅடிமேல்

விழவல் லவர்வீ ழிம்மிழலை

தொழவல் லவர்நல் லவர்தொண்டே.

விளக்கம்

அழவல்லவர்ஆடியும் பாடியும் எழவல்லவர் ஆகிய எம் தந்தை சிவபெருமான் திருவடிமேல் விழ வல்லவருமான அடியவர்கள் நிறைந்துள்ள திருவீழிமிழலையைத் தொழவல்லவரே நல்லவர் ஆவர். அவர் செய்யும் தொண்டே நல்ல தொண்டாகும்.

பாடல் எண் : 4

உரவம் புரிபுன் சடைதன்மேல்

அரவம் அரையார்த்த அழகன்

விரவும் பொழில்வீ ழிம்மிழலை

பரவும் அடியார் அடியாரே.

விளக்கம்

சிவந்த சடைமுடியின் இடையில்பாம்பை அணிந்துள்ள சிவபிரான் எழுந்தருளியபொழில்கள் சூழ்ந்துள்ள திருவீழிமிழலையைப் பரவித் துதிக்கும் அடியவரே அடியவராவர்.

பாடல் எண் : 5

கரிதா கியநஞ்சு அணிகண்டன்

வரிதா கியவண்டு அறைகொன்றை

விரிதார் பொழில்வீ ழிம்மிழலை

உரிதா நினைவார் உயர்வாரே.

விளக்கம்

நஞ்சினை உண்டு அதனை அணிகலனாகத் தன் தொண்டையில் நிறுத்திய நீலகண்டன் எழுந்தருளிய வண்டுகள் ஒலி செய்யும் கொன்றை மரங்களில் மலரும் மலர்களால் நிறைந்த சோலைகளால் சூழப்பெற்ற திருவீழிமிழலையைத் தமக்கு உரிய தலமாகக் கருதுவோர் சிறந்த அடியவராவர்.

பாடல் எண் : 6

சடையார் பிறையான் சரிபூதப்

படையான் கொடிமே லதொர்பைங்கண்

விடையான் உறைவீ ழிம்மிழலை

அடைவார் அடியா ரவர்தாமே.

விளக்கம்

சடையின் இடையில் பிறைமதியை சூடியவனும் பூதப்படைகளை உடையவனும், இடப வாகனத்தை உடையவனுமாகிய சிவபெருமான் உறைகின்ற திருவீழிமிழலையை அடைபவர்கள் சிறந்த அடியவர்கள் ஆவர்.

பாடல் எண் : 7

செறிஆர் கழலும் சிலம்புஆர்க்க

நெறிஆர் குழலா ளொடுநின்றான்

வெறிஆர் பொழில்வீ ழிம்மிழலை

அறிவார் அவலம் அறியாரே.

விளக்கம்

கால்களிற் செறிந்த கழல்சிலம்பு ஆகிய அணிகள் ஆர்ப்பரிக்க, சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு நின்று அருள் புரிகின்ற சிவபெருமான் எழுந்தருளிய, மணம் கமழும் பொழில்களால் சூழப் பெற்ற திருவீழிமிழலையைத் தியானிப்பவர்களுக்குத் துன்பம் ஏற்படுவதில்லை.

பாடல் எண் : 8

உளையா வலிஒல்க அரக்கன்

வளையா விரல்ஊன் றியமைந்தன்

விளைஆர் வயல்வீ ழிம்மிழலை

அளையா வருவார் அடியாரே.

விளக்கம்

கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின வலிமை கெடுமாறு தன் காலை வளைத்து விரலால் ஊன்றிய வலிமை வாய்ந்த சிவபெருமான் எழுந்தருளியவிளைச்சல் மிகுந்த வயல்களை உடைய திருவீழிமிழலையை சிந்தையால் நிறைத்து வருகை புரிபவர் சிறந்த அடியவராவர்.

பாடல் எண் : 9

மருள்செய்து இருவர் மயலாக

அருள்செய் தவன்ஆர்அழலாகி

வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை

தெருள்செய் தவர்தீ வினைதேய்வே.

விளக்கம்

திருமால் பிரமன் ஆகிய இருவரும் அஞ்ஞானத்தினால் அடிமுடிகாணாது மயங்க தீ வடிவமாக வெளிப்பட்டு நின்று, அவர்களுக்கு அருள் செய்த சிவபெருமான் எழுந்தருளிய திருவீழிமிழலையைச் சிறந்த தலம் என்று தெளிந்தவர்களுக்குத் தீவினைகள் அகலும்.

பாடல் எண் : 10

துளங்கும் நெறியார் அவர்தொன்மை

வளங்கொள் ளன்மின்,புல் அமண்தேரை

விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை

உளங்கொள் பவர்தம் வினைஓய்வே.

விளக்கம்

 தடுமாற்றமுறும் கொள்கைகளை மேற்கொண்டுள்ள அமணர் தேரர் ஆகியோரின் சமயத் தொன்மைச் சிறப்பைக் கருதாமல், பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையை நினைப்பவர்களின் தீவினைகள் நீங்கிவிடும்.

பாடல் எண் : 11

நளிர்கா ழியுள்ஞா னசம்பந்தன்

குளிர்ஆர் சடையான் அடிகூற

மிளிர்ஆர் பொழில்வீ ழிம்மிழலை

கிளர்பா டல்வல்லார்க்கு இலைகேடே.

விளக்கம்

காழி என்னும் ஊரில் தோன்றிய திருஞானசம்பந்தன், சடைமுடியை உடைய சிவபெருமானின் திருவடிப் பெருமைகளைக் கூறத் தொடங்கி, பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையின் புகழ்கூறும் இப்பதிகப் பாடல்களை ஓதுபவர்களுக்குத் துன்பம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக