திங்கள், 22 மே, 2023

இழந்தவர்கள் - அப்துல் ரகுமான்

 

இழந்தவர்கள் - அப்துல் ரகுமான்

ஓடிக் கொண்டிருப்பவனே! நில்

எங்கே ஓடுகிறாய்?

எதற்காக ஓடுகிறாய்?

வாழ்க்கையைப் பிடிக்க ஓடினாய்

ஆனால் உன் கண் மூடிய ஓட்டத்தில்

அதைப் பார்க்காமலே ஓடுகிறாய்

நில் கவனி

உன்னிலிருந்தே ஓடுகிறாய்

உன்னை விட்டு ஓடுகிறாய்

குளிர்காயச்

சுள்ளி பொறுக்கத் தொடங்கினாய்

சுள்ளி பொறுக்குவதிலேயே

உன் ஆயுள்

செலவாகிக் கொண்டிருக்கிறது

நீ குளிர் காய்வதே இல்லை

வாழ்க்கை ஒரு திருவிழா

நீயோ அதைக் கொண்டாடுவதே இல்லை

கூட்டத்தில்

தொலைந்து போகிறாய்

ஒவ்வொரு வைகறையும்

உனக்காகவே

தங்கத் தட்டில்

பரிசுகளைக் கொண்டு வருகிறது

நீயோ பெற்றுக் கொள்வதே இல்லை.

ஒவ்வோர் இரவும்

உனக்காகவே

நட்சத்திரப் பூச்சூடி

ரகசிய அழகுகளோடு வருகிறது

நீயோ தழுவிக் கொண்டதே இல்லை

பூர்ணிமை

இரவுக் கிண்ணத்தில்

உனக்காகவே வழிய வழிய

மது நிரப்புகிறது

நீயோ அருந்துவதே இல்லை

ஒவ்வொரு பூவும்

உன் முத்தத்திற்கான இதழாகவே

மலர்கிறது

நீயோ முத்தமிட்டதே இல்லை.

மேகங்களில் கிரணங்கள்

உனக்காக ஏழு வர்ணங்களில்

காதல் கடிதம் எழுதுகின்றன

நீயோ படிப்பதே இல்லை.

உன்னைச் சுற்றிலும் சௌந்தர்ய தேவதை

காதலோடு புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்

நீயோ பார்ப்பதே இல்லை

உன் மனைவியின் கொலுசில்

உன் குழந்தையின் சிரிப்பில்

உன் அண்டை வீட்டுக்காரனின்

கை அசைப்பில்

தெருவில் போகின்ற அந்நியனின்

திரும்பிப் பார்த்தலில்

வாழ்க்கையின் சங்கீதம் ஒலிக்கிறது

நீயோ கேட்பதே இல்லை.

தறி நாடாவைப் போல

இங்கும் அங்கும் அலைகிறாய்

ஆனால்

நீ எதையும் நெய்வதில்லை.

ரசவாதக் கல்லைத்

தேடி அலைகிறாய்

நீதான் அந்தக் கல் என்பதை

நீ அறியவில்லை.

கடிகார முள்ளாய்

சுற்றிக் கொண்டே இருப்பவனே

வாழ்க்கை என்பது

வட்டிமடிப்பதல்ல என்பதை

எப்போது உணரப் போகிறாய்?

நீ அர்த்த ஜீவனுள்ள

எழுத்துக்களால் ஆனவன்

ஆனால் நீயோ

வெறும் எண்ணாகிவிடுகிறாய்.

நீ முத்துக்கள் நிறைந்த சமுத்திரம்

ஆனால் நீயோ

கிளிஞ்சல் பொறுக்க

அலைந்து கொண்டிருக்கிறாய்.

நீ வயிற்றிலிருந்துதான் வந்தாய்

ஆனால் நீ

வயிற்றில் இல்லை.

வயிற்றில் விழுந்து கிடப்பவனே

மேல் இதயத்திற்கு ஏறு

அங்கே

உனக்கான ராஜாங்கம்

காத்திருக்கிறது.

இழந்தவர்கள் - அப்துல் ரகுமான்

கவிதையின் விளக்கம்:

இன்றைய அறிவியல் உலகில் நாம் நம் வாழ்க்கையை இயந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால் நடைமுறை வாழ்க்கையில் எத்தகைய இன்பங்களை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் தம் ‘இழந்தவர்கள்என்ற கவிதை மூலம் விளக்குகின்றார்.

  • குளிர் காய சுள்ளி பொறுக்கத் தொடங்கிய நாம், வெறும் சுள்ளி பொறுக்குவதில் மட்டுமே கவனத்தைச் செலுத்துவதால் குளிர் காய்வதே இல்லை.
  • வாழ்க்கை என்ற திருவிழாவைக் கொண்டாட நாம் விரும்புவதே இல்லை. மாறாக, திருவிழாவின் கூட்டத்தில் தொலைந்து போகவே விரும்புகின்றோம்.
  • ஒவ்வொரு நாளும் விடியல் நமக்குத் தங்கத் தட்டில் பரிசுகளைக் கொண்டு தருகின்றது. ஆனால் நாம் அதைப் பெற்று கொள்வதே இல்லை.
  • விண்மீண்கள் நமக்காகவே இரவில் பூச்சூடி வருகின்றன. ஆனால் நம் அதன் அழகினைக் கவனிப்பதே இல்லை.
  • பௌர்ணமி நாளில் முழுநிலவின் இனிமையினை நாம் ரசிப்பதே இல்லை.
  • ஒவ்வொரு பூவும் நம் முத்தத்திற்காகவே விரிகின்றன. நாமோ முத்தமிட்டதே இல்லை.
  • மேகங்கள் ஏழு வண்ணங்களில் வானவில்லாய் வளைந்து காதல் கடிதம் தீட்டுகின்றன. நாம் அதைப் படிப்பதே இல்லை.
  • மனைவியின் கொலுசில் ஏற்படும் ஒலியில், குழந்தையின் சிரிப்பில், பக்கத்து வீட்டுக்காரரின் கை அசைப்பில், தெருவில் போகின்ற அந்நியர் திரும்பிப் பார்க்கையில் என நம் வாழ்க்கையைச் சுற்றிலும் சங்கீதம் ஒலிக்கின்றது. நாம்தான் அதைக் கேட்பதேயில்லை.
  • தறியில் ஓடும் நாடாவைப் போல் நாமும் ஓடுகின்றோம். ஆனால் எதையும் நெய்வதில்லை.
  • மண்ணைப் பொன்னாக்கும் ரசவாதக் கல்லைத் தேடி அலைகின்றோம். ஆனால் நாம்தான் அந்தக் கல் என்பதை நாம் அறிவதே இல்லை.
  • கடிகார முள்ளைப் போன்று சுற்றிக் கொண்டே இருக்கின்றோம். வாழ்க்கை வெறும் வட்டமடிப்பது இல்லை என்பதை நாம் உணர்வதே இல்லை.
  • நாம் உயிர் எழுத்துக்களால் உருவானவர்கள். ஆனால் வெறும் எண்ணிக்கையாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
  • நாம் முத்துக்கள் நிறைந்த கடலைப் போன்றவர்கள். ஆனால் சிப்பிகளைத் தேடுவதிலேயே அலைந்து கொண்டிருக்கின்றோம்.
  • நாம் அனைவரும் வயிற்றிலிருந்து தான் வந்தோம். ஆனால், வயிற்றினால் உண்டாகும் பசியினையும், அதை நிறைவேற்றுவதற்காக பணம் சம்பாதிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றோம்.
  • இதயம் என்ற ஒன்று நமக்கு உண்டு. அதில் அன்பும் கருணையும் கலந்திருக்கின்றது. அதுதான் நம் வாழ்க்கையை ராஜ வாழ்க்கையாக மாற்றும் திறவுகோல் என்பதை உணர வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் இனிமையை நாம் அனுபவிக்க முடியும் என்று கவிஞர் மிக அழகாக வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்குகின்றார்.

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக