வெள்ளி, 12 மே, 2023

நந்திக் கலம்பகம் - காயிதே மில்லத் கல்லூரி பாடம்

 

நந்திக் கலம்பகம்

1. கண்டோர் கூற்று

உரைவரம் பிகந்த உயர்புகழ்ப் பல்லவன்
அரசர் கோமான் அடுபோர் நந்தி
மாவெள் ளாற்று மேவலர்க் கடந்த
செருவே லுயர்வு பாடினன் கொல்லோ
நெருநல் துணியரைச் சுற்றிப்
பரடு திறப்பத் தன்னால் பல்கடைத்
திரிந்த பாணன் நறுந்தார் பெற்றுக்
காஅர் தளிர்த்த கானக் கொன்றையின்
புதுப்பூப் பொலன்கலன் அணிந்து
விளங்கொளி ஆனனன் இப்போது
இளங்களி யானை எருத்தமிசை யன்னே.

விளக்கம்

பாணன் ஒருவன் வீதி வழியே வந்து கொண்டிருக்கின்றான். முன்பு தன் ஆடையின் துண்டு ஒன்றை இடையிலே சுற்றிக் கொண்டவனாய், உடுத்தியிருக்கும் ஆடை அகலம் இல்லாமல் கால்கள் மறையாது வெளிப்படும்படியாக நடந்து சென்று வீடு வீடாகத் திரிந்திருந்தான். அவனைக் கண்டோர் யாவரும் வியப்படைகின்றனர். அஏனெனில், இப்போது அவன் மாலையும், பொற்கலனும் அணிந்து கொண்டு, யானையின் மேல் ஏறி, அழகான தோற்றத்துடன் வருகின்றான். இச்சிறப்பு அவனுக்கு எவ்வாறு கிடைத்திருக்கும் என்று எண்ணி முடிவில், வெள்ளாற்றங்கரையில் பகைவரை வென்ற பெருமைக்குரிய நந்தி மன்னனைப் பாடிப் இப்பரிசுகளைப் பெற்றிருப்பான் என்று வியந்து கூறுகின்றனர். இதனால் நந்திவர்மனின் கொடைச் சிறப்பு விளக்கம் பெறுகின்றது.

2. தலைவன் தன் நெஞ்சொடு கிளத்தல்

மயில்கண்டால் மயிலுக்கே வருந்தி யாங்கே
மான் கண்டால் மனைக்கே வாடி மாதர்
குயிற்கண்டாற் குயிலுக்கே குழைதி ஆகின்
கொடுஞ்சுரம்போக் கொழிநெஞ்சே! கூடாமன்னர்
எயில் கொண்டான் மல்லையங்கோன் நந்தி வேந்தன்
இகல்கொண்டார் இருங்கடம்பூர் விசும்புக்கேற்றி
அயில் கொண்டான் காவிரிநாட் டன்னப்பேடை
அதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன்.

விளக்கம்

பொருள் தேடுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிந்து செல்ல எண்ணிய தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறுகின்றான். “நெஞ்சே! பகை மன்னனின் மதிலைக் கைக்கொண்டவனும், அழகிய மல்லைக்குத் தலைவனும், கடம்பூர் மக்களைத் தேவருலகத்திற்குக் குடியேறச் செய்து வெற்றி கொண்டவனும் ஆகிய நந்திவர்மனின் காவிரி நீர் பாயும் நாட்டில் உள்ள பெண் அன்னமும் கண்டு வியக்கும்படியான மென்மையான நடை கொண்டவள் எம் தலைவி. அவளை விட்டுப் பொருள் தேடப் பிரிந்து செல்ல எண்ணுகின்றேன். ஆனால், பொருள்தேடச் செல்லும் வழியில், சுற்றித் திரியும் மயிலைக் கண்டால், அதன் சாயல் எம் தலைவியின் முகச் சாயலையும், ஓடித்திரியும் மானைக் கண்டால் அதன் கண்கள் எம் தலைவியின் கண்களையும், கூவுகின்ற குயிலைக் கண்டால், அதன் குரல் தலைவியின் குரலையும் போன்றதாக எண்ணி என் மனம் வருத்தமடையும். தலைவியை எண்ணி மனம் கலங்கினால் பொருள் தேட முடியாது. எனவே கொடும் பாலையின் வழியாகச் செல்லும் பயணத்தைத் தவிர்த்து விடு” என்று கூறுகின்றான்.

3. ஊசல்

ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்
 உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்
ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல் 

அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்
கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த
கோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்
காடவற்கு முன்தோன்றல் கைவேலைப் பாடிக்

காஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல்.

விளக்கம்

இப்பாடல் மகளிர் ஊசல் ஆடுவதைக் குறிக்கின்றது. “செவ்வரி பரந்த கண்களை உடைய இளமையான பெண்களே! நாம் ஊசல் ஆடுவோம்! மேலாடையான பட்டு அசையும்படி ஊசல் ஆடுவோம்! ஆடகம் என்னும் பொன்னால் ஆன அணிகலன்கள் ஒளிவீச ஊசல் ஆடுவோம்! அழகிய மென்மையான மலரை அணிந்த கூந்தல் அவிழ்ந்து விட ஊசல் ஆடுவோம்! தெள்ளாறு என்னும் இடத்தில் பகைவனை வென்றவனும்வ, பெரும் படையைக் கொண்டனும்வ, உலகத்தில் தோன்றி சூரியன் போன்னும், காடவர் கோனுக்குத் தமையனுமாகிய நந்தியின் கையில் உள்ள வேலாயுதத்தைப் பாடி ஊசல் ஆடுவோம்! அவன் தலைநகரமான காஞ்சிபுரத்தையும் பாடி ஊசல் ஆடுவோம் என்று மகளிர் பாடுகின்றனர்.

4. பாட்டுடைத் தலைவன் வீரச் சிறப்பு

திருவின் செம்மையும் நிலமகள் உரிமையும்
பொதுவின்றி ஆண்ட பொலம்பூண் பல்லவ!
தோள் துணை ஆக மாவெள் ளாற்று
மேவலர்க் கடந்த அண்ணால் நந்திநின்
திருவரு நெடுங்கண் சிவக்கும் ஆகின் 5
செருநர் சேரும் பதிசிவக் கும்மே
நிறங்கிளர் புருவம் துடிக்கின் நின்கழல்
இறைஞ்சா மன்னர்க் கிடந்துடிக் கும்மே
மையில் வாளுறை கழிக்கு மாகின்
அடங்கார் பெண்டிர்
பூண்முலை முத்தப் பூண்கழிக்கும்மே
கடுவாய் போல்வளை அதிர நின்னொடு
மருவா மன்னர் மனம் துடிக் கும்மே
மாமத யானை பண்ணின்
உதிர மன்னுநின் எதிர்மலைந் தோர்க்கே.

விளக்கம்

திருமகளின் செல்வமும், நிலமகளின் உரிமையும் பொதுவின்றி ஆண்ட பல்லவ மன்னனே! உன் தோளின் வலிமையால் வெள்ளாற்றங்கரையை வென்றாய்! உன் நெடுங்கண் சினத்தால் சிவக்குமெனில் பகைவரின் ஊர் நெருப்பால் அழியும்! உன் புருவம் சினத்தால் துடிக்குமெனில் உன் வீரக்கழலுக்குப் பணியாத மன்னர்களின் இதயம் துடிக்கும்! உன் உறையிலிருந்து வாள் வெளிப்படுமெனில் பகை மன்னர் மனைவிகளின் மங்கலத்தாலிகள் அழியும்.  உன்னோடு போர்புரியும் மன்னர்களின் மனம் துடிக்கும்! உன் மாமத யானைகள் போருக்கென அழகுபடுத்தப்படுமெனில் குருதி ஆறு பெருக்கெடுத்து ஓடும்.

5. மதங்கியார்

பகையின்றி பார்காக்கும் பல்லவர்கோன் செங்கோலின்
நகையும்வாண் மையும்பாடி நன்றாடும் மதங்கிக்குத்
தகையும்நுண் ணிடையதிரத் தனபாரம் அவற்றோடு
மிகையொடுங்கா முன்இக்கூத் தினைவிலக்க வேண்டாவோ.

விளக்கம்

பகைவர் இல்லாமல் பூமியைக் காப்பாற்றுகின்ற பல்லவர் கோமானது செங்கோலின் ஒளியையும், அவனது வாட்போரின் திறத்தையும் பாடி மதங்கியர் எனப்படும் நடன மாதர்கள் நடனம் ஆடுகின்றனர். அதனைக் கண்டவர்கள், “அவர்களது நடனத்தால் அவர்களின் உடல் அதிர்கின்றது. இடை அவர்களின் நடன அசைவுகளைத் தாங்காது முறிந்து விடும். அக்குற்றம் உண்டாகும் முன்பு நாம் இந்தக் கூத்தை விலக்க வேண்டும்” என்று கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக