முக்கூடற்பள்ளு
இப்பகுதி மூத்த பள்ளியும் இளைய பள்ளியும் தாங்கள் வழிபடு தெய்வத்தை முன்னிறுத்தி ஒருவரை
ஒருவர் பழித்து ஏசுவதை விவரிக்கின்றது. மூத்த பள்ளி திருமாலை வழிபடுபவள். இளைய பள்ளி
சிவனை வழிபடுபவள்.
பாடல்
சாதிப்பது உனக்குவரும் மருதூப்பள்ளி- நரிதான்
பரியாய்ச்சா தித்தான்உங்கள் சம்புவல் லோடி
பேதிக்கச்சா திக்கவாராய் முக்கூடற்பள்ளி- கல்லைப்
பெண்ணாகச்சா தித்தானுங்கள் கண்ண னல்லோடி. 161
விளக்கம்
“சாதிக்கின்ற தந்திரம் எல்லாம் உனக்குத் தான் வரும் மருதூர்ப்பள்ளி! நரிகளைப் பரிகளாக
மாற்றிச் சாதித்தவன் உங்கள் சிவபெருமான் அல்லவா?” (மாணிக்க வாசகருக்காக நரியைப்
பரி ஆக்கியது) என்று மூத்தவள் கூறுகின்றாள். அதற்கு இளையவள், “கல்லையும் பெண்ணாகச்
சாதித்தவன் உங்கள் கண்ணன் அல்லவா?” (கல்லாய்க் கிடந்த அகலிகையை இராமன் பெண்ணாக மாற்றியது)
என்று கேட்கின்றாள்.
பாடல்
மங்கையொரு பங்கிருக்க யோகியென்றுதான்-கையில்
மழுவேந்தி நின்றானுங்கள் மத்த னல்லோடி
கொங்கைதனில் நாச்சியாரைச் சங்கையில்லாமற்-பண்டு
கூடிநெய்யிற் கையிட்டானுங் கொண்ட லல்லோடி. 162
விளக்கம்
“மங்கை ஒருத்தித் தன் ஒரு பாகத்திலே இருக்க, தான் யோகி என்று சொல்லிக் கையில்
மழுவை ஏந்தி நிற்பவன் உங்கள் ஊமத்தை மாலை அணிந்த சிவபெருமான் அல்லவா” என்று மூத்தவள்
கேட்கின்றாள். அதற்கு இளையவள் “நாச்சியாருடன் உடலும் உயிருமாகக் கலந்து விட்டு, கொஞ்சமும்
வெட்கமில்லாமல் முன்னொரு காலத்தில் மனம் துணிந்து நெய்யிலே கையிட்டவன் உங்கள் மேக வண்ணனாகிய
திருமால் அல்லவா” என்று கேட்கின்றாள்.
பாடல்
காமனை மருகனென்று எண்ணிப்பாராமற்-காய்ந்து
கண்ணிலேறு பட்டானுங்கள் கர்த்தனல் லோடி
மாமனென்று பாராமல்முன் கஞ்சனைக்கொன்றே-கண்கள்
மாறாதேபூப் பட்டானுங்கள் மாயனல் லோடி.163
விளக்கம்
“மன்மதனைத் தன் மருமகன் என்று கூட எண்ணிப் பார்க்காமல் முதலில் கோபித்துக் கொண்டு,
கண்ணிலே நெருப்பைக் காட்டியவன் உங்கள் சிவன் தானே?” என்று மூத்தவள் கூற, “மாமனெ்றும்
பாராமல் முன்னாளில் கம்சனைக் கொன்றே கண்களின் என்றும் மாறாத பூ விழப் பெற்றவன் மாயவனாகிய
உங்கள் கண்ணன் தானே” என்று இளையவள் சாடுகின்றாள்.
பாடல்
மாதொருத்திக் காசைப்பட்டுப் பொன்னின் மயமாம்-பனி
மலையேறிப் போனானுங்கள் மத்த னல்லோடி
காதலித்துத் தம்பியுடன் சீதை பொருட்டால்-அன்று
கடலேறிப் போனானுங்கள் கண்ண னல்லோடி. 164
விளக்கம்
“பெண் ஒருத்திக்கு ஆசைப்பட்டு பொன்னின் மயமான பனிமலை ஏறிப் போனவன் உங்கள் சிவபெருமான்”
என்று மூத்தவள் கூற, “காதல் கொண்டு தம்பியோடு சீதை கொருட்டாக அந்நாளில் கடல் கடந்து
போனவன் உங்கள் இராமன்” என்று இளையவள் ஏசுகின்றாள்.
பாடல்
தான்பசுப்போல் நின்றுகன்றைத் தேர்க்காலில்
விட்டே-சோழன்
தன்மகனைக் கொன்றானுங்கள் தாணு வல்லோடி
வான்பழிக்கு ளாய்த்தவசி போல மறைந்தே-நின்று
வாலியைக் கொன்றானுங்கள் மாய னல்லோடி. 165
விளக்கம்
“தான் பசு போல நின்று கொண்டு தன் கன்றைத் தேர்க்காலில் விழ விட்டு, அதனால் சோழ
மன்னனின் மகனைக் கொன்றவன் உங்கள் சிவனே” என்று மூத்தவள் கூறுகின்றாள். அதற்கு இளையவள்,
“பரிய பழிக்கு உள்ளாகித் தவவலிமையுடைவன் போல மறைந்து நின்று வாலியைக் கொன்றவன் உங்கள்
திருமால்” என்று கூறுகின்றாள்.
பாடல்
வலிய வழக்குப்பேசிச் சுந்தரன் வாயால்-அன்று
வையக்கேட்டு நின்றானுங்கள் ஐய னல்லோடி
புலிபோல் எழுந்துசிசு பாலன்வையவே-ஏழை
போலநின்றான் உங்கள்நெடு நீல னல்லோடி. 166
விளக்கம்
“சுந்தரர் திருமணத்தில் வலிய வந்து வழக்குப் பேசிச் சென்று அன்று அவன் வாயால்
திட்டுவதைக் கேட்டு நின்றவன் சிவபெருமான்” என்று மூத்தவள் கூற, ”சிசுபாலன் புலி போல
எழுந்து திட்டவே, (உருக்குமணியை மணந்தபோது கண்ணனை சிசுபாலன் திட்டடினான்) சபை நடுவில்
ஏழைபோல ஒடுங்கி நின்றவன் திருமால்” என்று இளையவள் கூறுகின்றாள்.
பாடல்
அடியனும் நாயனுமாய்க் கோவிற் புறகே-தொண்டன்
அன்றுதள்ளப் போனானுங்கள் ஆதியல் லோடி
முடியுஞ் சூடாமலேகை கேசிதள்ளவே-காட்டில்
முன்புதள்ளிப் போனானுங்கள் மூர்த்தியல் லோடி. 167
விளக்கம்
“அடியவனாகிய சுந்தரரும், நாயகனாகிய சிவபிரானும் தன் மனக்கோவிலுக்கு அப்பால்
இருவரையும் தொண்டனாகிய விறன்மிண்டன் தள்ளிவிட, அதன்படி போக நுர்ந்தவன் சிவபெருமான்“
என்று மூத்தவள் கூற, “முடியும் சூடாமல் கைகேயி தள்ளிவிட, காட்டில் நெடுந்தொலைவு போய்
வாடிக் கிடந்தவன் திருமால்” என்று இளையவள் கூறுகின்றாள்.
பாடல்
சுற்றிக்கட்ட
நாலுமுழந் துண்டு மில்லாமல்-புலித்
தோலைஉடுத்தா னுங்கள் சோதி யல்லோடி
கற்றைச்சடை கட்டிமர வுரியுஞ் சேலைதான்-பண்டு
கட்டிக்கொண்டான் உங்கள்சங்குக் கைய னல்லோடி.168
விளக்கம்
“இடுப்பிலே சுற்றிக் கட்டுவதற்கு
ஒரு நான்கு முழத்துண்டு கூடக் கிடைக்காமல் புலித்தோலை எடுத்து உடுத்தியிருப்பவன் உங்கள்
சிவன்” என்று மூத்தவள் கூற, “கற்றையாகச் சடையைக் கட்டி, மரவுரியை இடுப்பிலே
கட்டிக் கொண்டவன் சங்கைக் கையில் கொண்ட உங்கள் திருமால்” என்று இளையவள் கூறுகின்றாள்.
(சிவன் தாருகாவனத்து முனிவர் ஏவிய புலியைக் கொன்று அதன் தோலை உடுத்தமையையும்,
இராமன் மரவுரி தரித்துக் கானகம் சென்றதையும் குறிப்பிடுகின்றனர்)
பாடல்
நாட்டுக்குள் இரந்தும்பசிக் காற்றமாட்டாமல்-வாரி
நஞ்சையெல்லாம் உண்டானுங்கள் நாதனல் லோடி
மாட்டுப்பிற கேதிரிந்துஞ் சோற்றுக்கில்லாமல்-வெறும்
மண்ணையுண்டான் உங்கள்முகில் வண்ணனல் லோடி.169
விளக்கம்
“ஊருக்குள்ளே பிச்சை எடுத்துத் திரிந்தும், பசி ஆற்றமாட்டாதவனாகக் கடல் நஞ்சைஎடுத்து
உண்டவன் சிவபெருமான்” என்று மூத்தவள் கூற, “மாட்டு மந்தைக்குப் பின் திரிந்துங்கூட
சோற்றுக்கு வழியில்லாமல் வெறும் மண்ணைத் தின்றவன் உங்கள் மேகவண்ணன்” என்று ஏசுகின்றாள்
இளையவள்.
பாடல்
ஏறவொரு வாகனமும் இல்லாமையினால்-மாட்டில்
ஏறியே திரிந்தானுங்கள் ஈசனல் லோடி
வீறுசொன்ன தென்னமாடு தானுமில்லாமல்-பட்சி
மீதிலேறிக் கொண்டானுங்கள் கீதனல் லோடி.170
விளக்கம்
“ஏறிச் செல்வதற்குத்
தகுந்த வாகனம் இல்லாமல் மாட்டின் மேல் ஏறிக்கொண்டு திரிபவன் உங்கள் ஈசனே” என்று
மூத்தவள் கூற, “அந்த மாடு கூட இல்லாமல் போனதால்தான் பறவை (கருடன்) மீது ஏறிக் கொண்டானோ
உங்கள் மாயவன்” என்று கேலி பேசுகின்றாள் இளையவள்.
பாடல்
பெருமாள் அடியானுக்குப் பெண்டிருந்துமே-எங்கள்
பெருமாளை நீ பழித்துப் பேசலா மோடி
திருமால் அடிமையென்றாய் சாலப்பசித்தால்-ஆருந்
தின்னாததுண் டோசினத்தால் சொல்லாத துண்டோ?171
விளக்கம்
இருவருடைய ஆத்திரமும் இவ்வாறு பேசி பேசி சிறிது அடங்கிக் கொண்டே வந்தது. அவர்கள்
பேச்சில் இருவரும் ஒத்துப்போகும் எண்ணமும் பிறந்தது. அதனால், “மிக நன்றாகச் சொன்னாய்
மருதூர்ப்பள்ளி! போ! போ! என்னதான் கோபப்ட்டாலும் சீர் அழியச் சொல்லலாமா?” என்று மூத்தவள்
கேட்க, “எனக்குக் கோபம் வராதோ முக்கூடற்பள்ளி! முதலில் திட்டியவரை வாழ்த்தியவர் இதுவரை
எவராவது இந்த உலகில் உண்டோ?” என்று கூறுகின்றாள் இளையவள்.
பாடல்
தீராண்மைநன் றாகச்சொன்னாய்
மருதூர்ப்பள்ளி-போபோ
சினத்தாலுஞ் சீரழியச்
சொல்லலா
மோடி
வாராதோ எனக்குக்கோபம்
முக்கூடற்பள்ளி-முந்த
வைதவரை வாழ்த்தினவர்
வையகத்
துண்டோ.172
விளக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக