சனி, 13 மே, 2023

பராபரக் கண்ணி (11 ஆம் பாடல் முதல் 40ஆம் பாடல் வரை)

 

குணங்குடி மஸ்தான் சாகிபு

பராபரக் கண்ணி

(11 ஆம் பாடல் முதல் 40ஆம் பாடல் வரை)

முதல் பத்துப் பாடல்களின் விளக்கம்

 https://arangameena.blogspot.com/2021/10/blog-post_48.html

 11. மந்திரத்துக்கு எட்டா மறைப் பொருளே மன்னுயிரே

சேர்ந்த எழு தோற்றத்தின் சித்தே பராபரமே

விளக்கம்

எந்தவிதமான மந்திரத்திற்கும் எட்டா மறைபொருளாக விளங்குபவனே! நிலை பெற்ற உயிராக இருப்பவனே! உலகத்தின் எழுவகைப் பிறவிகளிலும் நிறைந்த சித்துப் பொருளே! பராபரமே!

12. தனியேனுக்கு ஆதரவு தாரணியில் இல்லாமல்

அனியாயம் ஆவதும் உனக்கு அழகோ பராபரமே

விளக்கம்

இந்த உலகத்தில் யாருடைய ஆதவும் இல்லாமல் தனியா இருக்கின்ற நான் உன் அருளைப் பெறாமல் அநியாயமாய் அழிவது உனக்கு அழகாகுமோ! பராபரமே!

13. ஓடித் திரிந்து அலைந்து உன்பாதம் காணாமல்

வாடிக் கலங்குகிறேன் வராய் பராபரமே

விளக்கம்

எங்கெங்கோ ஓடித் திரிந்து அலைந்து உன் திருவடியைக் காணாமல் வாடுகின்றேன். நீ வந்து எனக்கு அருள் செய்ய வேண்டும். பராபரமே!

 

14. தூராதி தூரம் தொலைத்து மதி உன் பாதம்

பாராத பாவத்தாற் பயந்தேன் பராபரமே

விளக்கம்

கடக்க வேண்டிய தூரங்களை எல்லாம் கடந்து, என் அறிவினால் உன் திருவடியை நோக்காத பாவத்தினால் அச்சம் கொண்டேன். பராபரமே!

15. தேடக் கிடையாத் திரவியமே தேன் கடலே

ஈடுனக்கு உண்டோ இறையே பராபரமே

விளக்கம்

தேடியும் கிடைக்காத திரவியம் போன்றவன் நீ! உன்னை நம்பியிருக்கும் அடியவர்களுக்கு தேன் கடலாக விளங்குபவன் நீ! இவ்வுலகில் உனக்கு ஈடாக ஒருவம் இல்லை இறைவனே! பராபரமே!

16.அரிய பெரும்பொருளே அன்பாய் ஒருவார்த்தை

பரிபூரணமாய்ப் பகராய் பராபரமே

விளக்கம்

அருமையான பெரும்பரம்பொருளே! அன்போடு என்னிடம் ஒரு வார்த்தை பேசினால் மகிழ்வேன்! பராபரமே!

17.  ஐயோஎனக்கு உதவும் ஆதரவை விட்டுவிட்டுத்

தையலரைத் தேடித் தவித்தேன் பராபரமே

விளக்கம்

அந்தோ! அடியேனுக்கு உதவி செய்கின்ற உன்னை வணங்காமல், பெண்களைத் தேடிச் சென்று பரிதவித்தேன்! பராபரமே!

18. எத்திசையும் நோக்கி விசையாத் திருக் கூத்தாய்

வித்தை விளையாட்டு விளைப்பாய் பராபரமே

விளக்கம்

எந்நத் திசையைப் பார்த்தாலும் பொருந்தாத திருக்கூத்தாய் வித்தை செய்யும் விளையாட்டைச் செய்கின்றவனே! பராபரமே!

19. எப்பொழுது முன்பதத்தில் என் கருத்தே பெய்துதலுக்கு

இப்பொழுதே கைப்பிடித்தான் இறையே பராபரமே

விளக்கம்

எக்காலத்திலும் உன்னுடைய திருவடிகளில் என்னுடைய மனம் பதிவடைய இப்போதே அடியேனைக் கைப்பிடித்து அருள வேண்டும்! பராபரமே!

20. வாதுக் கடாவரும் வம்பரைப்போலே் தோஷி மனம்

ஏதுக் கடாவதியான் எளியேன் பராபரமே

விளக்கம்

துன்பம் செய்யும் தொழில்களைச் செய்கின்ற வீண் வம்புக்காரர்களைப் போல என் மனம் எதை விரும்புகிறது? எதை நாடுகின்றது எனத் தெரியவில்லை. நான் எளியவனாக இருக்கின்றேன். நீ அருள் செய்வாய்! பராபரமே!

21. கண்ணே மனோன்மணியே கண்பார்வைக்கு எட்டாத

விண்ணடங்கா வெட்ட வெளியே பராபரமே

விளக்கம்

என் கண்ணாக விளங்குபவனே! மனோன்மணியே! கண்களின் பார்வைக்கு எட்டாமல் இருக்கும் ஆகாயத்திற்கு அடங்காத வெட்ட வெளியாக நிற்பவனே! பராபரமே!

22. அடக்கவரி தாமாயி லைம் பொறியைக் கட்டிப்

படிக்கப் படிப்பெனக்குப் பகராய் பராபரமே

விளக்கம்

ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்வது என்பது மிகக் கடினம். அதனால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அறிவை எனக்கு அருள வேண்டும்! பராபரமே!

23.எத்தவங்கள் செய்தாலும் இன்பமுடன் துன்பத்தை

முத்தர் ஒருபோதும் உற்றார் பராபரமே

விளக்கம்

ஆன்மா முக்திநிலை அடைந்த முத்தர்கள் எப்படிப்பட்ட தவங்களைச் செய்தார்களானாலும் உன்னுடைய திருவடிகளை ஒருநாளும் மறக்க மாட்டார்கள். பராபரமே!

24. சொல்லுக்கு இணங்காத சூத்திரத்தைப் பார்த்திருக்கு

அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே

விளக்கம்

வார்த்தைகளுக்கு அடங்காத உம் மறைபொருளை அறிவது ஒன்றே எனக்கு இரவும் பகலும் விருப்பமாக இருக்கின்றது! பராபரமே!

25. நாற்றச் சடிலமதை நம்பார் முகத்திருக்கப்

பூத்து மலர்ந்திருக்கும் பூவே பராபரமே

விளக்கம்

நாற்றம் வீசுகின்ற உடல் நிலையற்றது. இதை உணர்ந்து உன்னை அறிந்து கொண்டால் அவர்களின் வாழ்க்கை இன்பமடையும். அப்படிப்பட்டோர் முகரக்கூடிய மலர்ந்திருக்கும் பூவாக இருக்கின்றவனே! பராபரமே!

26. சோற்றுப் பொதியைச் சுமந்தே திரிந்தலைந்தே

ஆற்றாமல் நின்று களைத்தழுதேன் பராபரமே

விளக்கம்

சோற்றை மட்டுமே விரும்புகின்ற இந்த உடலைச் சுமந்து திரிந்து அலைந்து, வாழ்வின் உண்மைப் பொருளை அறியாது களைத்து அழுதேன்! பராபரமே!

27. காற்றுத் துருத்திதனைக் கல்லா யணைந்திருக்கச்

சூத்திரமாய் நின்றாய் சுழியே பராபரமே

விளக்கம்

காற்றை உள்வாங்கிக் கொண்டு உயிர் பிழைத்திருக்கும் உடலை, கல் போன்று நிலையானது என்று எண்ணி நான் அதைச் சேர்ந்திருந்தேன். நீ அதன் உட்பொருளாக நின்றிருந்தாய்! பராபரமே!

28. கோலத் திருவடிவு கோதையர்கள் ஆசையினால்

ஆலைக் கரும்பு போலானேன் பராபரமே

விளக்கம்

பெண்களின் மீது கொண்ட ஆசையினால் அழகிய என்னுடைய வடிவானது ஆலையில் இட்ட கரும்பு போலச் சக்கையானது! பராபரமே!

29. கேளாயோ என்கவலை கேட்டிரங்கி அடிமைதனை

ஆளாயோ வையாபா லானேன் பராபரமே

விளக்கம்

நீ என்னுடைய துன்பத்தைக் கேட்க மாட்டாயா? அவ்வாறு கேட்டு மனம் இரங்கி அடிமையாகிய என்னை ஆண்டு அருள மாட்டாயா? நான் உன்பாற்பட்டவன் என்பதை உணர மாட்டாயா? பராபரமே

30. எத்தனைதான் குற்றம் எதிர்த்து அடிமை செய்தாலும்

அத்தனையும் நீ பொறுப்பது அழகே பராபரமே

விளக்கம்

நான் எவ்வளவு குற்றங்கள் செய்தாலும் அவ்வளவு குற்றங்களையும் நீ பொறுத்துக் கொள்வது அழகாகும். பராபரமே!

31. அல்லல் வியைால அறிவு கெட்டல் ஆன்மாவாய்

நெல்லும் பதரும் என நின்றேன் பராபரமே

விளக்கம்

நான் துன்பம் விளைவிக்கின்ற நல்வினை தீவினைகளால் அறிவின் கேட்டை அடைந்து ஆன்மாவாக, நல்லும் பதரும்போல நிலை கெட்டு இருந்தேன்! பராபரமே!

32. சொல்லரிய ஞானச் சுடரே ஒரு வார்த்தைச்

செல்வம் பொழிந்திட நீ செப்பாய் பராபரமே

விளக்கம்

சொல்வதற்கு அருமையான ஞான அழகாக விளங்குபவனே! ஒரு வார்த்தையால் என் செல்வம் செழிக்கும்படித் திருவருள் செய்தால் மகிழ்வேன்! பராபரமே!

33. நித்தம் உனைத் தொழா நிர்மூடனாயிருக்கும்

பித்தனாய் ஏன் காண் பிறந்தேன் பராபரமே

விளக்கம்

அனுதினமும் உன்னை வணங்காத நிர்மூடனாயிருக்கும் பித்துக் கொண்டவனாய் நான் ஏன் பிறந்தேன்! பராபரமே!

34. உற்றார்களாலும் உறவின் முறையராலும்

பெற்றார்களாலும் உனைப் பிரிந்தேன் பராபரமே

விளக்கம்

பாச பந்தத்தில் கட்டுப்பட்டு, என் சுற்றத்தார்களாலும், உறவினர்களாலும், என்னைப் பெற்றவர்களாலும் உன்னைப் பிரிந்திருந்தேன்! பராபரமே!

35. ஏழை முகம் பார்த்து எளியேனை எப்பொழுதும்

அழாமல் ஆண்டருள் என்னழகே பராபரமே

விளக்கம்

அழகின் வடிவமாக விளங்குபவனே! நீ ஏழையாகிய என்னுடைய முகத்தைப் பார்த்து அடியேனை எக்காலத்திலும் தீவினையில் அழிக்காமல் ஆண்டருள வேண்டும்! பராபரமே!

36. பாவிஉடலெடுத்துப் பாதகனாய் யான் பிறந்துஉள்

ஆவி கெடுவதுனக் கழகே பராபரமே

விளக்கம்

பாவமாகிய இந்த உடலை நான்அடைந்து உயிருக்குத் தீவினை தரும் செயல்களால் நான் மடிந்து போவது உனக்கு அழகாகுமோ? பராபரமே!

37.வாராயோ என்னிடத்தில் வந்தொருக்கால் என்றன்முகம்

பாராயோ சற்றே பகராய் பராபரமே

விளக்கம்

நீ என்னிடத்தில் எழுந்தருளி வரமாட்டாயோ? வந்து ஒருமுறை என் முகம் பார்த்து நல்வார்த்தைகளைக் கூற மாட்டாயோ? அதை நீயே சொல்லிவிடு! பராபரமே!

38. பார்க்கப் பலவிதமாய்ப் பல்லுயிருக்கு உள்ளிருந்தும்

ஆர்க்கும் தெரியால் ஆனாய் பராபரமே

விளக்கம்

இந்த உலகில் உலாவிக் கொண்டிருக்கும் பல ஆன்மாக்களுக்குள் நீயே நிறைந்திருக்கிறாய் என்ற செய்தியை யாருக்கும் தெரியாதபடி வைத்திருக்கின்றாய்! பராபரமே!

39.ஆனாலும் பொல்ல் தரும் பாவியாக உடல்

எனோ எடுத்தேன் எந்தாய் பராபரமே

விளக்கம்

என்னுடைய தந்தையாக விளங்குபவனே! பொல்லா கொடும்பாவியாக நான் ஏன் இந்த உடலைச் சார்ந்து பிறவி எடுத்தேன் என்று விளங்கவில்லை! பராபரமே!

40.கர்ப்பூர தீபக்கனல் ஒளிபோல் காட்சிதர

முப்பாழும் பாழாய் முடித்தாள் பராபரமே

விளக்கம்

கற்பூரத்தில் உண்டாகும் ஒளிபோல எனக்கு உன்னுடைய திருக்காட்சியை அருளி, ஆணவம், கன்மம், மாயை என்று சொல்லப்படுகின்ற மும்மலத்தையும் அழித்து என்னை ஆட்கொள்ள வேண்டும்! பராபரமே!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக