திருஆசிரியம் – நம்மாழ்வார்
பாடல்
1
செக்கர்மா
முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதிசூடி அஞ்சுடர் மதியம் பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம்
கடலோன் கைமிசைக் கண் வளர்வதுபோல்
பீதகவாடை முடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்
பச்சை மேனி மிகப் பகைப்ப
நச்சு வினைக்கவர்தலை அரவினமளி ஏறி
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை உந்தி தனிப் பெரு நாயக!
மூவுலகளந்த சேவடியோயே!
விளக்கம்
மேகங்களை இடுப்பில் கட்டி, சூரியனைத் தலையிலே வைத்துக்கொண்டு, சந்திரனை
அணிந்து, நட்சத்திரங்களாகிய பல ஒளிபிழம்புகளைக் கொண்டுள்ள, பவளம் போன்று ஒளிவிடும்
பச்சை நிறத்தில் இருக்கும் மரகத மலை ஒன்று உள்ளது. அந்த மலை, வருணனுடைய கைகளின் மேலே
படுத்துக் கொண்டிருப்பதுபோல் உள்ளது. பல்வேறு ஆபரணங்களை அணிந்து, உதடுகளும், திருக்கண்களும்
சிவந்திருக்கும்படியாக, திருமேனியில் பச்சை நிறம் ஒளிவிடும்படியாக, எதிரிகளை அழிப்பதில்
நச்சுத் தன்மை வாய்ந்த செயல்களையுடையவனாக, கவிழ்ந்திருக்கும் தலைகளை உடையவனுமான ஆதிசேஷன்
என்கின்ற பாம்பின் படுக்கையில் ஏறிப் படுத்திருப்பவனாக, அலை வீசும் திருப்பாற்கடலின்
நடுவே உலகத்தைக் காப்பதற்கான உணர்வுடன் யோகநித்திரையில் படுத்துள்ளான் எம் பெருமானாகிய
திருமால். அந்த எம்பெருமான் சிவன், பிரம்மா, இந்திரன் முதலான தேவர்களுடைய கூட்டம் கைகூப்பி
வணங்கும்படி படுத்திருக்கின்றான். அவன் ஒப்பற்றவன், எல்லோரையும் விடப் பெரியவன்! மூன்று
உலகங்களையும் அளந்த திருவடிகளை உடையவன்!
பாடல் 2
உலகுபடைத்துண்ட
எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவார்
உயிருருகி உக்க, நேரிய காதல்
அன்பிலின்பீன் தேறல் அமுத
வெள்ளத் தானாம் சிறப்புவிட்டு ஒருபொருட்கு
அசைவோர் அசைக, திருவொடு மருவிய
இயற்கை, மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?
விளக்கம்
அனைத்து உலகங்களையும் படைத்து, பின்பு ஊழிக்காலத்தின்போது அவற்றை விழுங்கியவன்
எம்பெருமான். அவனுடைய திருவடிகளாகிய தாமரைப் பூவை அணிவதற்காக என் ஆன்மா உருகி விழுகின்றது.
அவன் மீதான பக்தியின் உருவில் இருக்கும் அன்பென்ன, பக்தியினால் ஏற்படும் இனிமை என்ன,
இவைகளிலுள்ள இனிமையின் உயர்ந்த நிலையான அமுதக் கடலில் மூழ்கியிருக்கும்படியான மேன்மையை
விட்டு அல்லல்படுபவர்கள் அலையட்டும். செல்வத்துடன் கூடிய தன்மையொடும், அழியாத மிகுந்த
வலிமையொடும், மூன்று உலகங்களுடனும் கூட மேலான வீடுபேற்றைப் பெற்றாலும், தெளிந்த ஞானத்தையுடைய
பெரியோர்களுடைய எண்ணம் இவைகளைப் பெற நினைப்பதில்லை. மாறாக, எம்பெருமானின் அன்பினை எதிர்பார்த்து
நிற்பர்.
பாடல் 3
குறிப்பில்
கொண்டு நெறிப்பட, உலகம்
மூன்றுடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய்பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகிச் சுடர் விளங்ககலத்து
வரைபுரை திரைபொரு பெருவரை வெருவர,
உருமுரல் ஒலிமலி நளிர்கடல் படவர
வரசு உடல் தடவரை சுழற்றிய, தனிமாத்
தெய்வத்தடியவர்க்கினிநாம் ஆளாகவே
இசையும் கொல், ஊழிதோறூழி ஓவாதே
விளக்கம்
மூன்று உலகங்களையும்
நல்வழியில் செலுத்துபவன். அவ்வுலகங்களில் உள்ளவர்கள் அனைவரும் ஒரு நிலையில் இருந்து
வணங்கக்கூடிய தகுதி கொண்டவன். வேதத்தில் பரமனாகக் காட்டப்பட்டதின் மூலம் புகழையுடையவன்.
தன் ஆணையை மிக நன்றாக செயல்படுத்துபவன். பிரம்மா, உருத்திரன், இந்திரன் ஆகிய தேவர்களைக்
காட்டிலும் உயர்ந்தவன். ஆபரணங்களின் ஒளியையுடைய திருமார்பையுடையவனாய் இருப்பவன் எம்பெருமான்.
மலை போன்ற உயரமான அலைகள் மோதுகின்ற குளிர்ந்த கடலை, மிகப்பெரிய மந்திர மலையில் சுற்றிக்
கடைந்த எம்பெருமானை அடைய வேண்டுமெனில் அவன் மீது அன்பும் பக்தியும் கொண்ட அடியவர்களுக்கே
அப்பேறு கிடைக்கும்.
பாடல் 4
ஊழிதோறூழி ஓவாது
வாழிய!
என்று யாம் தொழ இசையும் கொல்,
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும் பாழ் காலத்து, இரும் பொருட்கு
எல்லாம் அரும்பெறல் தனி வித்து, ஒருதான்
ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
ஈன்று, முக்கண் ஈசனோடு தேவுபல
நுதலி மூவுலகம் விளைத்த உந்தி,
மாயக் கடவுள் மாமுதல் அடியே
விளக்கம்
அனைத்து உலகங்களும், அனைத்து விலங்குகளும் வணங்கத்தக்கவன். உலகம் அழிந்திருந்த
காலத்தில், கணக்கிலடங்காத உயிரினங்களுக்கெல்லாம் பெறுவதற்கு அரியவனாய் இருந்தவன். அந்நிலையில்
இவ்வுலகில் சிறந்த தேவதையான பிரம்மாவையும், மூன்று கண்களையுடைய உருத்திரனையும், பல
தேவதைகளையும் படைத்து, அவர்களுக்குண்டான பணிகளுக்கு ஆற்றலைக் கொடுத்து, மூன்று உலகங்களையும்
படைத்தஎம்பெருமானின் திருவடிகளை, ஊழிதோறும் இடைவிடாமல் “வாழி” என்று நாம் தொழும் பாக்யம்
கிடைக்க வேண்டும்.
பாடல் 5
மாமுதல்
அடிப் போது ஒன்று கவிழ்த்தலர்த்தி,
மண் முழுதும் அகப்படுத்து, ஒண் சுடர் அடிப்போது
ஒன்று விண் செலீஇ, நான்முகப் புத்தேள்
நாடு வியந்துவப்ப, வானவர் முறை முறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு
மலர்க் கண்ணோடு கனிவாய் உடையது
மாய், இருநாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன,
கற்பகக் காவு பற்பல வன்ன,
முடி தோள் ஆயிரம் தழைத்த,
நெடியோய்க்கு அல்லதும் அடியதோ உலகே
விளக்கம்
உன்னுடைய திருவடியாகிற ஒரு பூவைக் கவிழ்த்துப் பரப்பி பூமி முழுவதையும்
கைக்கொண்டாய். அழகிய ஒளிமிகுந்த பூவைப் போன்ற மற்றொரு திருவடியை பிரம்மாவின் உலகமானது
அதிசயப்பட்டு மகிழும்படி செய்தாய். தாமரைப்பூக்கள் நிறைந்த காடு மலர்ந்தது போல் இருக்கும்
திருக்கண்களோடு கூட, சிவந்த திருப்பவளத்தை (உதடுகளை) உடையதாய், பரந்த ஆயிரம் சூரியர்கள்
உதித்தாற்போல் இருக்கிற பல கிரீடங்களையும், கற்பகச் சோலை போலிருக்கிற ஆயிரம் திருத்தோள்களையும்
உடையவனாய், எல்லாரையும்விட உயர்ந்தவனாய் விளங்குகிற எம்பெருமானுக்கு இவ்வுலகம் அடிமையாகும்.
பாடல் 6
ஓ
ஒ உலகினதியல்வே, ஈன்றோளிருக்க
மணை நீராட்டிப், படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து, தேர்ந்து உலகளிக்கும் முதற்பெரும்
கடவுள் நிற்பப் புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது
புல்லறிவாண்மை பொருந்தக்காட்டிக்,
கொல்வன முதலா அல்லன முயலும்,
இனைய செய்கை இன்பு துன்பு அளித்
தொன்மா மாயப் பிறவியுள் நீங்காப்
பன்மா மாயத்து அழுந்துமா நளிர்ந்தே
விளக்கம்
எம் பெருமானாகிய நாராயணன், இந்தப் பூமியை உண்டாக்கி, வராக அவதார காலத்தில்
பூமியைப் பிரளயத்திலிருந்து காப்பாற்ற,ப அதை அமுது செய்து, மீண்டும் வெளியே உமிழ்ந்தான். பின்பு வாமன அவதாரத்தில் பூமியை அளந்து, அதற்கு
மேல் இவ்வுலகை எப்படிக் காப்பாற்றுவது என்று சிந்தை செய்கின்றவன். அவனை விட்டு வேறு
தெய்வங்களை ஆதரிப்பது என்பது, பெற்ற தாயிருக்க அவளைவிட்டு ஒரு பலகையை நீராட்டுவது போலிருக்கிறது.
பாடல் 7
நளிர்மதிச்
சடையனும் நான்முகக் கடவுளும்,
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா,
யாவகை உலகமும் யாவரும் அகப்பட,
நிலம் நீர் தீ கால் சுடர் இருவிசும்பும்,
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க,
ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓராலிலை சேர்ந்த எம்
பெருமா மாயனை அல்லது,
ஒரு மா தெய்வம் மற்று
உடையமோ யாமே
விளக்கம்
குளிர்ந்த சந்திரனைத் தலையில் வைத்திருக்கும் உருத்திரனையும், படைப்புக்
கடவுளான பிரம்மாவையும், தேவர்களின் தலைவனான இந்திரனையும், அனைத்து உலகங்களையும், பூமி,
நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும், உலகில் உள்ள அனைத்துப் பொருள்களையும்,
தன் திருவயிற்றிலே மறைத்து வைத்துக் கொண்டு, ஓர் ஆல் இலையின் மேல் படுத்திருக்கின்ற,
அளவிட முடியாதவனாக இருக்கின்ற திருமாலைத் தவிர, வேறு பெரிய ஒரு இறைவன் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக