கலைகள்
பண்டையத் தமிழகத்தில் ஓவியம், இசை, கூத்து, நாடகம், கட்டிடம் ஆகிய கலைகள்
மிக உயர்ந்த நிலையை எட்டியிருந்தன. அவற்றைப் பின்வருமாறு காணலாம்.
ஓவியக்கலை
ஓவியக்கலை மனிதர்களின் தொன்மையான கலை. தொல்பழங்காலத்து மக்கள் இயற்கைப் பொருட்களில் இருந்து உருவாக்கிய வண்ணக் குழம்புகளில் பல நிறங்களில் தீட்டிய ஓவியங்கள் இன்றளவும் பாறைக் குகைளில் நிலைத்திருப்பது வியப்புக்குரியதாகும். இவர்கள் துவக்கி வைத்த ஓவியக்கலை சங்க காலத்திலும் தொடர்ந்தது.
ஓவியம் புனையா ஓவியம், புனைந்த ஓவியம் என இருவகைப்படும். ஓவியம் தீட்ட நினைப்போர் கற்பனை செய்த உருவத்தை முதலில் கோடுகளால் வரைவர். இது புனையா ஓவியம் எனப்படும். பின்னர் வண்ணக்குழம்பு பயன்படுத்தி வண்ணக்கோடு வரைவர். இதனை புனைந்த ஓவியம் என்பர்.
ஓவியக் கலைஞர்கள் கண்ணுள் வினைஞர் என்றும், ஓவமாக்கள் என்றும் கூறப்பட்டனர். சங்ககாலத்தில் ஓவியத்திற்கு ஓவம், ஓவு என்ற சொற்களை வழங்கினர். ஓவியங்கள் சுவர்களில் மட்டுமின்றி துணிகளிலும் வரையப்பட்டன. சிலப்பதிகாரத்தில் ஓவிய விதானம் பேசப்படுகின்றது. பெரிய மாளிகை வீடுகளின் சுவர்களில் வெள்ளி போன்ற சுதையினைப் பூசி வண்ண ஓவியங்களை வரைந்தனர். பூம்புகார் நகரத்து மாட மாளிகைகளில் அழகிய ஓவியங்கள் இருந்தன என்பதைப் பட்டினப்பாலை காட்டுகின்றது. பண்டைய அரண்மனைகளில் சித்திரம் தீட்டப்பட்ட பகுதிக்குச் சித்திர மாடம் என்று பெயர்.
சங்காலத்தில் ஓவியச் செந்நூல் ஒன்று இருந்ததாக மணிமேகலை குறிப்பிடுகின்றது. நிலைத்து நின்ற பொருளையும், இயங்கி வந்த பொருளையும் எவ்வாறு வண்ணத்தால் தீட்டுவது என்பதை இந்நூல் விளக்கியதாகக் கூறப்படுகின்றது.
கூத்துக்கலை (நாட்டியக்கலை)
தமிழர் போற்றி வளர்த்த கலைகளில் கூத்தும் ஒன்று. இது இசைக்கலையோடு இணைந்து வளர்ந்த கலை. இக்கலை ஆடவர் பெண்டிர் இருசாரார்க்கும் பொதுவானது. விழாக்களின்போது கூத்தர்கள் மக்களைத் தம் ஆடல் பாடல்களால் மகிழ்வித்தனர். மக்களும் மன்னர்களும் கூத்தர்களைப் பேணினர். பரதவர், குறவர் போன்ற சங்க மக்கள் பொழுதுபோக்கின்போது ஆடினர். இவர்களைத்தவிர, இக்கலையைத் தம் வாழ்விற்குக் கருவியாகக் கொண்ட தனி இனத்தவர் இருந்தனர். அவர்கள் கூத்தர், பொருநர், விறலியர், கோடியர் எனப் பலவாறு பெயர் பெற்றனர். இவர்கள் மன்னர்கள் முன்பு ஆடி, தங்கள் கலை ஆற்றலை வெளிக்காட்டிப் பரிசில்கள் பெற்றனர். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடல் இசை, கூத்து என்னும் கலைகள் பற்றிய செய்திகளை விரிவாகக் கூறுகின்றது. அக்காலத்தில் வள்ளிக்கூத்து, குரவைக் கூத்து, கழைக்கூத்து,
வெறியாட்டு, துணங்கைக்கூத்து, வாள்அமலை முதலிய கூத்துகள் வழக்கத்தில் இருந்தன.
கூத்து நூல்கள்
சங்க இலக்கியத்தில் கூத்துநூல்கள் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. ஆனால் கூத்து நூல்கள் இருந்தன என்பதை உரையாசிரியர்கள் மூலம் அறியலாம். யாப்பருங்கல உரையின் வழியாக, செயிற்றியம், சயந்தம், பொய்கையார் நூல் ஆகிய நூல்களை அறிய முடிகின்றது. விளக்கத்தார் கூத்து, செயன்முறை, மதிவாணர் நாடகத் தமிழ் என்ற நூல்களும் அறியப்படுகின்றன.
சிலம்பும் கூத்தும்
சிலப்பதிகாரத்தில் கூத்துக் கலையின் சிறப்பினை நன்கறியலாம். நாட்டியங்களிலும் கூத்துக்களிலும் அரங்கங்களை அமைக்கும் இலக்கணத்தைப் பற்றியும், கூத்தாடுவோரின் மெய்ப்பாடுகள் பற்றியும் அடியார்க்கு நல்லார் விரிவாக விளக்குகின்றார். மாதவி ஆடிய பதினொரு ஆடல் வகை பற்றி சிலப்பதிகாரம் கூறுகின்றது. அவை, அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல், துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை என்பனவாகும். இவற்றும் முதல் ஆறும் நின்று ஆடுபவை. பின்னவை ஐந்தும் வீழ்ந்து ஆடுபவை. இவை அனைத்தும் புராணக் கதைத் தொடர்பானவை.
கூத்தின் வகை
கூத்துகளில் பலவகை உண்டு. இவற்றுள் மன்னர்க்கு மட்டும் உரிய கூத்துகள் வேத்தியல் என்றும், மற்றவர்க்கு உரியவை பொதுவியல் என்றும் அறியப்பட்டன. நடனமாடுவோர்க்கு “தலைக்கோல்” என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
சிற்பக்கலை
பண்டைக்காலம் தொட்டே வளர்ந்துள்ள கவின் கலைகளுள் ஒன்று சிற்பக்கலை. பல்லவர் காலத்திற்கு முன்பு பெரும்பாலும் மண் உருவங்களும், சுதை உருவங்களும் செய்யப்பட்டன. கோயில் கட்டுவதற்குக் கருங்கல் பயன்படுத்தப்பட்ட பிறகுதான் சிற்பம் நிலைபேறடைந்த கலையாக உருவானது.
சிற்பங்களின் பிரிவுகள்
சிற்பங்களை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,
- தெய்வ உருவங்கள் – தெய்வங்களின் உருவங்களைச் செதுக்குதல்
- இயற்கை உருவங்கள் – விலங்கு, பறவை, மனிதன் உள்ளிடவை
- கற்பனை உருவங்கள் – இருதலைப்பறவை, காமதேனு, உள்ளிட்டவை.
- படிமை உருவங்கள் – மன்னர் முதலியோர்க்கு எடுத்த உருவச் சிலைகள் என்பனவாகும்.
சங்ககாலச் சிற்பங்கள்
சங்க காலத் தமிழர்கள் மண்ணாலும், மரத்தாலும், தந்தத்தாலும் அழகிய சிற்பங்களை உருவாக்கினர். மண்ணால் உருவங்கள் செய்கின்ற கலைஞர்களை மண்ணீட்டாளர் என்றனர். வீடுகளில் தச்சர்கள் அழகிய உருவங்களை உத்தரக் கற்பலகையில் அமைத்தனர். மண்ணாலான சிற்பங்களைப் போலவே சுதைச் சிற்பங்களும் நன்கு வளர்ச்சியுற்றிருந்தன. சங்க காலத்தில் இறந்த வீரர்களுக்குக் கல்லில் உருவம் செதுக்கி வழிபட்டனர். கண்ணகி உருவச் சிலை அமைக்கப்பட்டதைச் சிலம்பு கூறுகின்றது. தமிழ்நாட்டுச் சிற்பிகள் கோயில்களையும், கல் உலோகச் சிற்பங்களையும் செய்வதற்குரிய விதிகளைக் கூறும் நூல்களைக் கையாண்டுள்ளனர். சங்க காலத்தில் மனை நூல் இருந்தமையை நெடுநல்வாடை கூறுகின்றது.
இசைக்கலை
அனைத்து உயிர்களையும் இசைக்கச் செய்வதால் இசை
எனப் பெயர் பெற்றது. தொல்காப்பியர் காலத்திலேயே இசையையும் கூத்தையும் துணையாகக் கொண்டு வாழ்வு நடத்திய கலைத்துறையினர் தனிப்பிரிவாக இயங்கினர் என்பதை ஆற்றுப்படை இலக்கணத்தின் வழியாக அறியலாம். சங்க இலக்கியத்தில் இசைக்கருவிகள், பண்கள், இசைவாணர்கள் பற்றிய எண்ணற்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன.
சங்ககாலத்தில் இசை
சங்க காலத்தில் திணைதோறும் தனித்தனிப் பண்கள்
அமைந்திருந்தன.
திணை |
பண் |
தோல் கருவி |
நரம்புக்கருவி |
குறிஞ்சி |
குறிஞ்சிப்பண் |
தொண்டகப்பறை |
குறிஞ்சியாழ் |
முல்லை |
சாதாரிப்பண் |
ஏறுகோட்பறை |
முல்லையாழ் |
மருதம் |
மருதப்பண் |
நெல்லரிகிணை |
மருதயாழ் |
நெய்தல் |
இரங்கற்பண் |
மீன்கோட்பறை |
விளரியாழ் |
பாலை |
பஞ்சுரப்பண் |
துடி |
பாலையாழ் |
சங்க காலத்தில் அன்றாட வாழ்வோடு இசையை இணைத்தவர்கள் பாணர்களாவர்.
அவர்கள் ஊர் ஊராகச் சென்று தங்கள் இசைத்திறமைகளைக் காட்டி மக்களை மகிழ்வித்தனர்.
மன்னர்களும் வள்ளல்களும் இவர்களைப் பெரிதும் பாராட்டிப் பரிசளித்துள்ளனர். பாணர்கள் வள்ளல்களாலும் மன்னர்களாலும் ஆதரிக்கப்பட்டுள்ளனர். தலைமக்களிடையே தூதுவர்களாக விளங்கினர். பெரு நகரங்களில் பாணர் சேரிகள் இருந்தன. பிற்காலத்தில் பாணப்பேறு எனப்பட்டது.
சங்க காலத்து இசைக்கருவிகள்
பண்டைய இசைக்கருவிகளில் தலையானது யாழ் ஆகும். யாழ் இரண்டு வகைப்படும். அவை, சீறியாழ் (அளவில் சிறியது), பேரியாழ் (அளவில் பெரியது) என்பனவாகும். இஃது 21 நரம்புகளைக் கொண்டது. பச்சை, செறிதுளை, போர்வை, கவைக்கடை, நரம்பு, கோடு, திவவு என்பன யாழின் உறுப்புகளாகும். பரிபாடலில் குழல் வகைகளின் விளக்கத்தைக் காணலாம். ஐந்து துளைகள் கொண்ட குழல் ஐம்புழை என்றும், ஏழு துளைகள் கொண்ட குழல் ஏழ்துளை என்றும் கூறப்பட்டுள்ளது.
இசைக்கருவிகளின் வகைகள்
பொதுவாக இசைக்கருவிகளை,
- தோற்கருவி – முழவு, முரசு, பதலை, துடி
- துளைக்கருவி – குழல், கோடு, தூம்பு
- நரம்புக் கருவி – யாழ்
- கஞ்சக் கருவி – பாண்டில் (இது உலோகத்தகடு) எனப்பகுத்துக் காண்பர்.
இசைக்கல்வெட்டுகள்
இசை தொடர்பான பழமையான கல்வெட்டுகள் ஈரோட்டை அடுத்துள்ள நாகமலை ஆண்டிப்பாறையில் காணக்கிடைக்கின்றன. இவை கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை எனக் கணிக்கப்பட்டுள்ளன.
இசை நூல்கள்
இறையனார் களவியல் உரை என்ற நூலானது, முதுநாரை, முதுகுருகு என்னும் நூல்கள் முதற்சங்க காலத்தில் வழங்கியதாகக் குறிப்பிடுகின்றது. பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இசை நுணுக்கம், இந்திரகாளிம் முதலிய நூல்கள் குறித்து அடியார்க்கு நல்லார் கூறுகின்றார். அரும்பத உரையாசிரியர் மூலமாக பதினாறு படலம் என்னும் நூலையும், யாப்பருங்கல விருத்தி உரையின் வாயிலாக, வாய்ப்பியம் என்னும் நூலையும் அறிய முடிகின்றது. குலோத்துங்கன் இசை நூல் என்பது குலோத்துங்கச் சோழனால் இயற்றப்பட்டது. விபுலானந்தரின் யாழ்நூலும், ஆபிரகாம் பண்டிதரின் கர்ணாமிர்த சாகரமும், வரகுண பாண்டியனின் பாணர்கைவழியும் குறிப்பிடத்தக்கவையாகும்.
சிலம்பும் இசையும்
சிலப்பதிகாரத்தைத் தமிழ்க்கலைக் களஞ்சியம் என்று கூறலாம். இதன் அரங்கேற்றுக் காதையும், அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையும் தமிழிசையின் பல்வேறு சிறப்புகளை அறிய உதவுகின்றன. இசையாசிரியன், தண்ணுமையாசிரியன் முதலியோரின் இலக்கணங்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. இசையை ஏழிசை என்பர். குரல், துத்தம், கைக்கிளை, இளி, உழை, விளரி, தாரம் என அவை குறிக்கப்படும். இன்று அவை சப்தசுரங்கள் எனப்படுகின்றன.
கட்டிடக்கலை
ஓர் இனத்தின் நாகரிகச் செழுமையினை எடுத்துக்கட்டும் சின்னங்களில் ஒன்று கட்டிடக்கலையாகும். தமிழக மக்களின் கட்டிடக் கலை ஆர்வமானது பல்வேறு காலங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்று உயர்ந்துள்ளது. அவை மக்களின் அழகியல் உணர்வினை வெளிப்படுத்துகின்றன.
சங்க காலத்தில்….
சங்க காலத்தில் தெய்வங்களுக்கு எழுப்பப்பட்ட கோயில்கள் மண், செங்கல், மரம், உலோகம் ஆகியவற்றால் ஆனவை.
“சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டம்” என்று அவை குறிக்கப் பெறுகின்றன. இறைவன் வீற்றிருக்கும் இடத்திற்கும், மன்னன் வீற்றிருக்கும் இடத்திற்கும் கோயில் என்றே பெயர் வழங்கப்பட்டுள்ளது. அக்கோயில்களைக் கட்டுகின்ற கலை வல்லுநர்கள் “நூலறிப் புலவர்கள்” எனப்பட்டனர்.
இந்நூலறிப் புலவர்கள் நாள், திசை ஆகியவற்றைக் குறித்து, அவற்றில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி அமைக்கப்பட்டன என்பதையும், அரண்மனையின் அந்தப்புரச் சுவர்கள் உயர்ந்தவையாக, அழகிய வேலைப்பாடு கொண்டவையாக, அவற்றின் மீது செஞ்சாந்து கொண்டு பூங்கொடிகள் எழுதப்பட்டதாக அமைந்திருந்தன என்பதையும் நெடுநல்வாடையின் வரிகள் காட்டுகின்றன.
சிலப்பதிகார காலத்தில் அரசனின் அரண்மனைச் சோதிடன், கட்டிடத்தொழில் நிபுணர் ஆகியோருடன் சிற்பக்கலை அறிஞரும் சென்று கண்ணகிக்குக் கோயில் அமைத்தனர் என்பதைச் சிலப்பதிகாரம் காட்டுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் பொன்மண்டபம் அமைக்கப்பட்டு இருந்தது. அம்மண்டபம் மகத நாட்டு பொற்கொல்லராலும், அவந்தி நாட்டுக் கொல்லராலும், யவன நாட்டுக் கொல்லராலும், யவன நாட்டுத் தச்சராலும், தமிழகத்துக் கட்டட வல்லுநராலும் அமைக்கப்பட்டது. மண்டபத்தூண்கள் பவளத்தால் இழைக்கப்பட்டன.
மதுரை மாநரகம் தாமரை மலர் வடிவத்தில் அமைந்தது என்று பரிபாடல் கூறுகின்றது. கோவிலை நடுநாயகமாக வைத்து அதைச் சுற்றியுள்ள தெருக்கள் ஏறத்தாழ வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்தன.
முடிவு
பண்டைய தமிழக மக்கள் கலை ஆர்வம் மிக்கவர்களாக இருந்தனர் என்பதை இச்செய்திகள்
காட்டுகின்றன. அவர்கள் காலத்தில் தொடங்கிய கலைகள் பிற்கால பல்லவ, சோழ, பாண்டிய, நாயக்கர் காலத்தில் வேரூன்றின. பல்வேறு
மாற்றங்களைப் பெற்று மக்களின் கலைத் திறனைப் பறை சாற்றின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக