நந்திக்கலம்பகம்
தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று நந்திக்கலம்பகம்.
இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்டது. இதுவே
கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குகிறது. நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி.9
ஆம் நூற்றாண்டு. காஞ்சி, மல்லை (மாமல்ல
புரம்), மயிலை (மயிலாப்பூர்) ஆகிய நகரங்கள் இந்நூலில்
சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளன. சிறந்த சொற்சுவை பொருட்சுவையோடு கற்பனை வளமும்
நிறைந்த இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை.
நூல் வரலாறு
நந்திவர்மனிடம்
இருந்து அரசைக் கவரும் நோக்கில் அவனது தம்பியால் ஒழுங்கு செய்யப்பட்டு அறம் பாடுதல் என்னும் முறையில்
இப்பாடல்கள் பாடப்பட்டுள்ளன. அறம் வைத்துப்பாடிய நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட
நந்திவர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறிகொடுத்துப் பாடல் முழுவதையும் கேட்க
விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால் மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை
அறிந்தும் தமிழின் மீதுள்ள தனியாத காதலால் உயிரையும் பொருட்படுத்தாது, எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் இறந்தான் என்று
கூறப்படுகிறது. 'நந்தி, கலம்பகத்தால்
மாண்ட கதை நாடறியும்' - என்னும் சோமேசர்
முதுமொழிவெண்பா என்னும் நூலின் வெண்பா வரிகள் இக்கருத்தை வலியுறுத்துகின்றது.
இதற்கேற்ப இந்நூலிலும் பல வசைக்குறிப்புகள் இடம் பெறுகின்றன. இந்நூல், மற்ற கலம்பக நூற்களைப் போலல்லாமல் வரலாற்று நூலாகவே திகழ்கின்றது. மூன்றாம் நந்திவர்மனது
அரசியல் தொடர்பான செய்திகள் நந்திக் கலம்பகத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. மேலும் மூன்றாம் நந்திவர்மனின் கொடைச்சிறப்பு,
தமிழ்ப்பற்று, சிவபெருமான் மீது கொண்ட
பக்தி, வீரம், அறிவு போன்ற
பண்புகளுடன் அறம், கொடை போன்ற பண்புகளும் நந்திக் கலம்பகத்தில்
மிகவும் போற்றப்படுகின்றன.
நூல் அமைப்பு
நந்திக்
கலம்பகத்தில் அகம், புறம், ஆகிய துறைகள் கலந்து வர
அமையப்பெற்றபோதும் அவற்றுள் அகத்திணைச் செய்திகள் பெரும்பான்மையினதாகவும்,
புறத்திணைச் செய்திகள் சிறுபான்மையினதாகவும் இடம் பெறுகின்றன. நந்திக்
கலம்பகத்தில் 144 பாடல்கள் காணப்படுகின்றன. ஆனால் அரசர்
மீது பாடப்பெறும் கலம்பகம் 90 பாடல்களுடையதாய் இருக்க
வேண்டும் என்பது நியதியாகும். எனவே, இதில் உள்ள
அதிகப்படியான 54 பாடல்கள் பிற்காலத்தில் எழுதிச்
சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்நூலில் நந்தி வர்மனின் தெள்ளாறு வெற்றியைப் பற்றி மட்டும் 16 பாடல்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. கொற்ற
வாயில் முற்றம், வெறியலூர், வெள்ளாறு,
தெள்ளாறு போன்ற பல்வேறு போர்க்களங்களைப் பற்றிக் கூறும் சிறந்த
வரலாற்று நூலாகவும் இது திகழ்கிறது.
நந்திக் கலம்பகத்தின் 61, 96, 100, 105, 110 ஆகிய பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
1.
பாட்டுடைத்
தலைவன் வீரச் சிறப்பு
திருவின் செம்மையும் நிலமகள் உரிமையும்
பொதுவின்றி ஆண்ட பொலம்பூண் பல்லவ!
தோள் துணை ஆக மாவெள் ளாற்று
மேவலர்க் கடந்த அண்ணால் நந்திநின்
திருவரு நெடுங்கண் சிவக்கும் ஆகின்
செருநர் சேரும் பதிசிவக் கும்மே
நிறங்கிளர் புருவம் துடிக்கின் நின்கழல்
இறைஞ்சா மன்னர்க் கிடந்துடிக் கும்மே
மையில் வாளுறை கழிக்கு மாகின்
அடங்கார் பெண்டிர்
பூண்முலை முத்தப் பூண்கழிக்கும்மே
கடுவாய் போல்வளை அதிர நின்னொடு
மருவா மன்னர் மனம் துடிக் கும்மே
மாமத யானை பண்ணின்
உதிர மன்னுநின் எதிர்மலைந் தோர்க்கே.
விளக்கம்
திருமகளின் செல்வமும், நிலமகளின் உரிமையும் பொதுவின்றி ஆண்ட
பல்லவ மன்னனே! உன் தோளின் வலிமையால் வெள்ளாற்றங்கரையை வென்றாய்! உன் நெடுங்கண் சினத்தால்
சிவக்குமெனில் பகைவரின் ஊர் நெருப்பால் அழியும்! உன் புருவம் சினத்தால் துடிக்குமெனில்
உன் வீரக்கழலுக்குப் பணியாத மன்னர்களின் இதயம் துடிக்கும்! உன் உறையிலிருந்து வாள்
வெளிப்படுமெனில் பகை மன்னர் மனைவிகளின் மங்கலத்தாலிகள் அழியும். உன்னோடு போர்புரியும் மன்னர்களின் மனம் துடிக்கும்!
உன் மாமத யானைகள் போருக்கென அழகுபடுத்தப்படுமெனில் குருதி ஆறு பெருக்கெடுத்து ஓடும்.
2. தலைவி
கார்ப்பருவங்கண்டு வருந்துதல்
சிவனை முழுதும் மறவாத சிந்தையான்
செயமுன் உறவு தவிராத
நந்தி யூர்க்
குவளை மலரின் மதுவாரும் வண்டுகாள்
குமிழி சுழியில்
விளையாடு தும்பியே!
அவனி மழைபெய் குளிர்காலம் வந்ததே
அவரும் அவதி சொனநாளும்
வந்ததே
கவலை பெரிது பழிகாரர் வந்திலார்
கணவர் உறவு கதையாய்
முடிந்ததே.
விளக்கம்
“சிவனை வணங்க மறவாத நந்திவர்மனின் ஊரில், குவளை மலரில் மது அருந்தும்
வண்டுகளே! நீர்க்குமிழில் விளையாடும் தும்பியே! மழை பெய்கின்ற
குளிர்காலம் வந்து விட்டது! என்னைப் பிரிந்து சென்ற தலைவன் வருவதாகக் கூறிய நாளும்
வந்து விட்டது! ஆனால் என் தலைவன் வரவில்லை.
என் கவலை பெரிதாகி விட்டது! கணவன் என்ற உறவு எனக்குக் கதையாக முடிந்துவிடுமோ” என்று
அஞ்சுகின்றாள் தலைவி.
3.
காலம்
அன்னையரும் தோழியரும் அடர்ந்துபொருங் காலம்
ஆனிபோய் ஆடிவரை
ஆவணியின் காலம்
புன்னைகளும் பிச்சிகளும் தங்களின்ம கிழ்ந்து
பொற்பவள வாய்திறந்து
பூச்சொறியும் காலம்
செந்நெல்வயற் குருகினஞ்சூழ் கச்சிவள நாடன்
தியாகியெனும் நந்திதடந்
தோள்சேராக் காலம்
என்னையவ அறமறந்து போனாரே தோழி!
இளந்தலைகண் டேநிலவு
பிளந்தெரியும் காலம்.
விளக்கம்
“அன்னையும்
தோழிகளும் என்னோடு போர் செய்யும் காலமிது! ஆனி, ஆடி மாதங்கள் சென்றுவிட ஆவணியின் காலமிது!
புன்னை, பிச்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்ற காலமிது! செந்நெல் வயல் சூழ்ந்த
நாட்டின் தலைவன் நந்தியின் தோளைச் சேர முடியாத காலமிது! என்னைப் பிரிந்து சென்ற தலைவன்
என்னை அறவே மறந்துபோய் விட்டாரோ தோழி! பிரிவினால் வருந்தும் என்னை மேலும் வருத்துகிறது
மாலை நேர நிலவு” என்று வருந்துகின்றாள் தலைவி.
4. மேகவிடுதூது
ஓடுகின்ற மேகங்காள்! ஓடாத தேரில் வெறும்
கூடு வருகுதென்று! கூறுங்கள் - நாடியே
நந்திச்சீ ராமனுடை நல்நகரில் நல்நுதலைச்
சந்திச்சீர் ஆமாகில் தான்.
விளக்கம்
வினை முடிந்து மீண்டு வந்த தலைவன் தலைவியை
எண்ணுகின்றான். வரும் வழியில் மேகங்களைக் கண்டவன் “நில்லாமல் ஓடும் மேகங்களே! இராமன்
போன்ற என் மன்னன் நந்திவர்மனின் நகரம் காஞ்சிபுரம். அந்நாட்டில் வாழ்கின்ற என் தலைவி
அழகிய நெற்றியை உடையவள். அவளைக் கண்டால் விரைந்து ஓடாத தேரில் உன்னைக் காணும் விருப்பத்துடன்
வெறும் உடம்பு ஒன்று வந்து கொண்டிருக்கின்றது என்று கூறுங்கள்” என்று வேண்டுகின்றான்.
5. கையறுநிலை
வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன்
கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன்
கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன்
தேகம்
நானும் என்கலியும் எவ்விடம் புகுவேம்
நந்தியே நந்தயா பரனே.
விளக்கம்
“அருளுடைய நந்திவர்மனே!
நீ இப்போது இறந்து விட்டாய். உன் முகத்தின் ஒளி வானத்துச் சந்திரனை அடைந்துவிட்டது.
உன் புகழ் கடலைச் சென்று சேர்ந்துவிட்டது. உன் வீரம் காட்டில் உள்ள புலியிடம் அடைக்கலமானது. உன் கொடைத்திறம் கற்பக மரத்திடம் தஞ்சமானது. திருமகள்
திருமாலிடம் சேர்ந்து விட்டாள். உன் உடல் நெருப்பிடம் சேர்ந்து விட்டது. நானும் என்னைத்
தொடர்ந்து வரும் வறுமையும் எங்கே போய் இனி வாழ்வோம்” என புலவர்கள் கையற்றுப் பாடுகின்றனர்.
அருஞ்சொற்பொருள்
திரு – திருமகள், மேலவர் – பகைவர், செருநர் - பகைவர்,
பதி – நாடு,
கடுவாய் – வெற்றிமுரசு,
தும்பி – கருவண்டு,
அவதி சொன்ன நாள் – குறித்துக் கூறிய காலம், அடர்ந்து பொருங்காலம்
– நெருங்கி வந்து எம்மை வைகின்ற
காலம், பிச்சி – சாதி மல்லிகை, குருகு இனம் – பறவை இனம், இளந்தலை
– என் எளிய நிலை, நந்தி சீராமன் – இராமபிரான்
போன்ற நந்தி மன்னன், மறிகடல் – அலைகள் மோதுகின்ற கடல், கலி – வறுமைத் துன்பம், தயாபரன்
–அருளாளன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக