செவ்வாய், 19 அக்டோபர், 2021

திருமூலர் - திருமந்திரம்

 

திருமந்திரம்

திருமூலர்

திருமூலர் 63 நாயன்மார்களுள்  ஒருவரும்பதினெண் சித்தர்களுள்  ஒருவரும் ஆவார். எல்லாம் வல்ல பரம் பொருளாகிய இறைவருளால் பல ஆயிரம் ஆண்டுகள் யோக நிலையில் இருந்து தவம் செய்தவர். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். இவர் இயற்றிய திருமந்திரத்தைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.  இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களில் (இயல்கள்) மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.  'மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளதுஎன்ற திருமூலரின் வாக்கினாலேயே இதனை அறியலாம். 

வேறு பெயர்கள்:

திருமந்திர மாலைமூவாயிரந்தமிழ் என்பன திருமந்திரத்தின் வேறு பெயர்கள் ஆகும்.

நூல் பெருமை:

இந்நூல் பண்டைய இந்திய சித்தர்களின் அரிய கண்டுபிடிப்புகளையும், வாழ்வியல் உண்மைகளையும் விளக்குகிறது. வேதம்ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. இறைவனைத் துதி செய்வதோடு நில்லாமல் பதிபசுபாசம் என்பனவற்றின் இணைப்பையும்உயர்ந்த முறையில் வாழ்வாங்கு வாழ உதவும் நல்முறைகளையும் விளக்குகிறது. பண்டைய பாரத சித்தர்கள் கூறிய மனித வளர்ச்சிக்கு உகந்த யோகம் தியானம், குண்டலினி யோகம், மருத்துவம், நல் ஒழுக்கம் போன்றவற்றை விளக்கும் அரிய நூலாகவும் திகழ்கிறது. தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவன் அன்பு வடிவானவன் என்னும் அரிய உண்மையினை கூறும் திருமூலரின் இத்திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகும். உடலை வருத்தித்தான் ஞானத்தை அடையவேண்டும் என்ற கருத்தை மறுத்த அவர்பலவீனமான உடலை வைத்துக்கொண்டு வலிமையான ஞானத்தை அடைய முடியாது என்பதையும் உறுதிப்படக் கூறியுள்ளார்.

வேறு நூல்கள்

  • திருமூலர் அறுநூற்றொன்று
  • திருமூலர் வைத்தியம்,
  • திருமூலர்ஞானம்
  • திருமூலர் வழலைச் சூத்திரம்,
  • திருமூலர் பல திரட்டு
  • திருமூலர் வாதம் இருபத்தொன்று 

போன்ற மேலும் பல அரிய நூல்களையும் எழுதியுள்ளர். உடல் சார்ந்த தத்துவக் கோட்பாட்டை நமது ஆன்மீக மரபில் அழுத்தமாகப் பதிய வைத்தவர் திருமூலர்தான். 

திருமந்திரத்தின் முதல் தந்திரத்தில் அன்புடைமை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள 270, 271, 274, 275, 285 ஆகிய பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

 

அன்புடைமை

பாடல் - 1

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 270.

விளக்கம்

அன்பு என்று அழைக்கப்படுகின்ற உணர்வு, சிவன் என்று அழைக்கப்படுகின்ற இறைவன் இரண்டும் வேறு வேறு என்று கூறுபவர்கள் உண்மை ஞானம் அறியாதவர்கள். ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிர்கள் மீதும் செலுத்தப்படுகின்ற எதிர்ப்பார்ப்பில்லாத தூய்மையான அன்புதான் சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவனது திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும் தூய்மையான அன்புதான் சிவம் என்பதை அறிந்து உணர்ந்தபின், அந்த அறிவு ஞானமே தூய்மையான அன்பு சிவமாக அவருடைய உள்ளத்தில் அமர்ந்து இருப்பார்.


பாடல்  - 2

பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே. 271

விளக்கம்

பொன்னைக் காட்டிலும் ஒளி வீசுகின்ற புலித்தோலை ஆடையாக உடுத்தியிருப்பவன் சிவபெருமான். வானில் மின்னுகின்ற பிறைச் சந்திரனைத் தன் சடை முடியில் சூடியிருப்பவன். சுடுகாட்டில் எஞ்சியிருக்கும் சூடான சாம்பலைப் பொடி போல திருமேனி எங்கும் பூசிக் கொள்பவன். அநதச் சாம்பலின் பொடி மீது திருநடனம் ஆடுகின்றவன். அப்படிப்பட்ட இறைவனிடம் நான் கொண்டுள்ள அன்பும், இறைவன் என் மீது கொண்டுள்ள அன்பும் இரண்டறக் கலந்துள்ளது.


பாடல்  - 3

என்அன்பு ருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன்பு உருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன்பு உருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்அன்பு எனக்கே தலைநின்ற வாறே. 274

விளக்கம்

உள்ளம் உருக இறைவனைப் போற்றி வழிபடுங்கள். உடலை விட்டு உயிர் பிரியும் முன்பே அனைத்து உயிர்களின் மீதும் அன்பை செலுத்தி, அதன் மூலம் இறைவனைத் தேடுங்கள். அப்படிச் செய்தால், உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பும் தனது அளவில்லாத பெருங்கருணையைக் கொடுத்து இறைவன் நம்மோடு  இருப்பார்.


பாடல் - 4

தான்ஒரு காலம் சயம்பு என்று ஏத்தினும்
வான் ஒரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேன் ஒரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
தான் ஒரு வண்ணம்என் அன்பில்நின் றானே

விளக்கம்

தானே சுயமாகத் தோன்றியவன். தம்மை அன்போடு வணங்கி வாழ்ந்த உயிர்கள் இறந்து விண்ணுலகம் செல்லும் காலம் வரை அவர்களோடு வழித்துணையாக வருபவன். கொன்றை மலர்களைத் தன் இடப்பாகத்தில் மாலையாக அணிந்திருப்பவன். அப்படிப்பட்ட சிவபெருமான் பேரன்பின் உருவமாக என்னுடன் கலந்து நிற்கின்றான்.


பாடல் - 5

கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரி உரி யான்தன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வான்அடி
கண்டேன் கழல்அது என் அன்பினுள் யானே. 285.

விளக்கம்

கொன்றை மலர்களைச் சூடியிருக்கின்றவனின் திருவடிகளை நான் கண்டு கொண்டேன். அறியாமையாகிய யானையைக் கதறும்படி பிளந்து அதன் தோலை உரித்துப் போர்வையாகத் தன் மேல் போர்த்திக் கொண்டனின் அழகிய கழல்களை நான் கண்டு கொண்டேன். தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் இறைவனின் திருடிகளை நான் கண்டு கொண்டேன். இறைவன் மீது நான் கொண்ட பேரன்பால் அழகிய கழல்களை அணிந்து அன்பு உருவமாக நிற்கின்ற சிவனின் திருமேனியை நான் கண்டு கொண்டேன்.

 

https://kvnthirumoolar.com/topics/thirumandhiram/first-tantra/first-tantra-19-shiva-knows-those-who-love-others/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக