செவ்வாய், 19 அக்டோபர், 2021

அருணகிரிநாதர் - விநாயகர்துதி

 

விநாயகர்துதி

அருணகிரிநாதர்

அருணகிரிநாதர்,  தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் திருவெங்கட்டார், முத்தம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். இவர் முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்றவர்.  தமிழ் மொழிவடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவரது பாடல்கள் சிக்கலான சந்த நயத்திற்கும், தாள அமைப்பிற்கும் பெயர் பெற்றவை. அருணகிரிநாதர்தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன.

அருணகிரிநாதர் எழுதிய "திருப்புகழ்"  தேவாரத்திற்கு  இணையாகவும், "கந்தர் லங்காரம்"  திருவாசகத்திற்கு  இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி"  திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.

அருணகிரிநாதரின் நூல்கள்

·       கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)

·       கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)

·       கந்தரனுபூதி (52 பாடல்கள்)

·       திருப்புகழ் (1307 பாடல்கள்)

·       திருவகுப்பு (25 பாடல்கள்)

·       சேவல் விருத்தம் (11 பாடல்கள்)

·       மயில் விருத்தம் (11 பாடல்கள்)

·       வேல் விருத்தம் (11 பாடல்கள்)

·       திருவெழுகூற்றிருக்கை

அவற்றுள் திருப்புகழ் நூலில் விநாயகர் துதி என்ற தலைப்பில் அமைந்த பாடல் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் துதி

நினது திருவடி சத்திம யிற்கொடி

     நினைவு கருதிடு புத்திகொ டுத்திட

          நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்

நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்

     நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி

          நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்

மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு

     மகர சலநிதி வைத்தது திக்கர

          வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக

மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு

     வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு

          வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே

தெனன தெனதென தெத்தென னப்பல

     சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்

          திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை

செரும உதரநி ரப்புசெ ருக்குடல்

     நிரைய அரவநி றைத்தக ளத்திடை

          திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே

எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்

     துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட

          டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட

     இரண பயிரவி சுற்றுந டித்திட

          எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.

விளக்கம்

தெனன தெனதென தெத்தென என்றவாறு ஒலி செய்யும் சிறிய ஈக்கள் பல மொய்க்கும் ரத்த நீர், திரண்டுள்ள சதைகள், பித்தம் நிறைந்த மாமிசக் குடல்கள், சிதறிய மூளைத் திசுக்கள், பிளந்த வயிற்றில் நிறைந்துள்ள ஈரல்கள், பெருங்குடல்கள் இவைகளோடு வரிசையாக ஒலிக்கும் ஒலிகள் நிறைந்த போர்க் களத்தில் திமித திமிதிமி என்று ஒலிக்கும் மத்தளம், இடக்கை என்னும் வாத்தியம் செகசே சே என ஒலிக்கவும், துகு துகு துத்தென்ற ஓசையுடன் ஊது குழலும் உடுக்கைப் பறைகளும் இடி என மிக ஒத்து முழங்க, டிமுட டிமு டிமு டிட்டிம் என மேள வகைகள் ஓசைகள் எழுப்ப, ஒன்றோடொன்று பகைத்த பேய்கள் கைப்பறைகளைக் கொட்ட, ரண பைரவி என்னும் தேவதைகள் சுற்றிக் கூத்தாட, எதிர்த்து வந்து அசுரர்களைப் பலி இட்டு அழித்த முருகப் பெருமானே உன்னை வணங்குகின்றேன்.

 உன்னுடைய திருவடியையும், வேல், மயில், சேவல் ஆகியவற்றையும் நினைவில் கொண்டு தியானிக்கும் அறிவை நான் எப்போதும் பெறுவதற்காக, விநாயகனை வணங்குகின்றேன். நிரம்பச் செய்யப்பட்ட அமுது, மூன்று வகையான பழங்கள், அப்பம், புதிய பால், தேன், நீண்டு வளைந்த முறுக்கு, கரும்பு, லட்டு, நிறமும் ஒளியும் உள்ள அரிசி, பருப்பு, எள், பொரி, இனிய வாழைப்பழ வகைகள், இளநீர் ஆகிய நிவேதனப் பொருட்களை மிக விருப்பத்துடன் தொட்டு உண்ணுகின்ற திருக்கரத்தையும், கடலைத் தொட்டு உண்ட தும்பிக்கையையும் உடைய, யானை முகத்து ஒற்றைக் கொம்பனாகிய கணபதியை வலம் வந்து,  அவருக்கென்றே பொருந்திய மலர் கொண்டு வழிபட்டு, துதிப்பதற்குரிய சொற்களைக் கொண்டு துதித்து, தூக்கிய கைகளால் காதைப் பிடித்து, தோப்புக்கரணம் போட்டு, சிரசில் குட்டி, அந்த விநாயகருடைய தாமரை போன்ற, சிலம்பு அணிந்த அழகிய பாதங்களில் அர்ச்சனை செய்வதை நான் ஒருபோதும் மறப்பதில்லை.

இப்பாடலின்வழி அறியலாகும் புராண வரலாறு

மகர சலநிதி வைத்தது.......

திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது மத்தாகிய மந்தர மலை அழுந்த, திருமால் அதை ஆமை உருவெடுத்து முதுகில் தாங்கினார். அதனால் இறுமாப்புற்று அவர் கடலைக் கலக்க, சிவபெருமான் ஏவலால் விநாயகர் அந்த ஆமையை அடக்கி, தமது துதிக்கையால் பொங்கிய கடல் நீர் முழுவதையும் குடித்தார்.

வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு....

ஒருமுறை அகத்திய முனிவர் தவம் செய்த போது, விநாயகர் காக்கை உருவில் வந்து அவரது கமண்டலத்தை விளையாட்டாக கவிழ்த்துவிட, காவிரி நதி பிறந்தது. தவம் கலைந்த அகத்தியர் பார்க்க, விநாயகர் அந்தணச் சிறுவனாய் ஓடினார். கோபத்தில் அகத்தியர் விநாயகரின் காதைத் திருகி, தலையில் குட்ட முயன்றபோது, ஐங்கரனாய் உருமாறியதும், முநிவர் குட்ட ஓங்கிய கரங்களால் தம்மையே குட்டிக் கொள்ள, விநாயகர் தடுத்தார். தம் சன்னிதியில் தோப்புக்கரணம் செய்து சிரத்தில் குட்டிக் கொள்பவர்களின் அறிவு நலம் பெருக வரம் அளித்தார்.

 

http://www.kaumaram.com/thiru/nnt0004_u.html

http://kuganarul.blogspot.com/2018/05/blog-post_29.html

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக