பிள்ளைச் சிறு விண்ணப்பம்
வள்ளலார்
திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்"
என்று பாடியவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை
வலியுறுத்தியவர். இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள மருதூரில் 5.10.1823இல் கருணீகர்
குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரை,
அருளாசிரியர், இதழாசிரியர்,
இறையன்பர், உரையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர்,
பண்பாளர் என்றெல்லாம் அழைப்பர்.
எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே
என்பதைக் குறிக்கும் வண்ணம் அனைத்துச் சமய
நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவுநெறி விளங்க சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை
அமைத்தார். மக்களின்
பசித்துயர் போக்க சத்திய தரும சாலையையும் நிறுவினார்.
இராமலிங்க அடிகளாரின் கொள்கைகள்
1.
இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
2.
எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
3.
எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
4.எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே.
அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
5. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின்
பெயரால் பலி இடுதலும் கூடாது.
6. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு
கருதாது உணவளித்தல் வேண்டும்.
7.
புலால் உணவு உண்ணக்கூடாது.
8.
கடவுள் ஒருவரே. அவர்
அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
9.
சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
10. மத வெறி கூடாது.
பதிப்பித்த நூல்கள்
1.
சின்மய தீபிகை
2.
ஒழிவிலொடுக்கம்
3.
தொண்டைமண்டல சதகம்
இயற்றிய உரைநடைகள்
1.
மனுமுறைகண்ட வாசகம்
2.
ஜீவகாருண்ய ஒழுக்கம்
திருவருட்பா
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின்
திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாகப்
பகுக்கப்பட்டு உள்ளது.
திருவருட்பாவின் ஆறாம் திருமுறையில் அமைந்துள்ள
பிள்ளைச் சிறு விண்ணப்பம் என்ற பகுதியில் இருந்து ஐந்து பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
பிள்ளைச் சிறு விண்ணப்பம்
வள்ளல்
பெருமான் இறைவனிடம் வேண்டிய வரங்களை விண்ணப்பங்கள் என்றுரைக்கின்றார். பிள்ளைப் பருவத்தில் தன்
உள்ளத்தில் எழுந்த விருப்பங்கள் சிலவற்றை எடுத்துரைத்து இறைவனை வேண்டுகின்றார். தான்
செய்த குற்றங்களைப் பொறுத்தருள வேண்டுவது, இறைவன் தம்மை வெறுத்துவிடக்கூடாது என்று
விரும்புவது, பொய்ம்மையை வெறுப்பது, மாந்தர் அனைவரையும் அன்பால் போற்றி வாழ்வது, புலை,
கொலை தவிர்க்கும் அருள் வேட்கையை விரும்புவது, சமரச ஞான சுத்த சன்மார்க்க நெறியை விளக்குவது,
பிறவித் துன்பமற வரம் பெற விழைவது உள்ளிட்ட பல விண்ணப்பங்கள் இப்பகுதியில் ஓதப்படுகின்றன.
உயிர்களின் இடர் களைவதே இவ்விண்ணப்பங்களின் அடிநாதமாக விளங்குகின்றது.
பாடல் - 1
தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்
தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங்
கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மைஅப் பாஇனிஆற்றேன்.
விளக்கம்
தன் மகன்
ஒரு தவறு செய்தால் தந்தை அவனை அடித்துக் கண்டிக்கும்போது, தாய் அவரைத் தடுத்துத்
தன் மகனை அணைத்துக் கொள்வாள். தாய் அடித்தால் தந்தை தன்னோடு சேர்த்து அணைத்துக்
கொள்வார். அம்மையும் அப்பனுமாகிய எம் பெருமானே! எனக்குத் தாயும் தந்தையும் நீயே
ஆதலால் இதுவரை உலகியல் துன்பங்களால் என்னை அடித்தது போதும். இனி பொறுக்க முடியாது.
ஆகவே, உன் அருளால் என்னைக் காப்பாற்ற வேண்டும்.
பாடல் - 2
பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம்
பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே
மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர்எண்குணத்தவ நீ தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும்நன் கறிவாய்
அறிந்தும்என்றனைநீ முனிவதென் முனிவு தீர்ந்தருளே
விளக்கம்
அம்பலத்தில்
திருநடனம் புரியும் அருளரசனே! என்னைப் பெற்ற அருள் வள்ளலே! தம் பிள்ளைகளின்
குணங்களைப் பெற்றோரைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை. அதுபோல என் குணங்கள்
அனைத்தையும் அறிந்தவன் நீ! அறிந்திருந்தும் என்னை வெறுப்பது ஏன்? வெறுப்பகன்று
என்னை ஆட்கொள்க.
பாடல் - 3
வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரியச்
சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற தந்தைதாய் மகன்விருப் பாலே
இம்மதிச்சிறியேன் விழைந்ததொன்றிலைநீ என்றனைவிழைவிக்க விழைந்தேன்
செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
விளக்கம்
தீய
பண்புடைய தன் மகன் பிறருக்குக் கொடிய செயல் செய்ய விரும்பினால், மகன் மீது உள்ள
பாசத்தால் அவனைப் பெற்றவர்கள் அவன் புரியும் கொடுஞ்செயலுக்கு
உடன்படுகின்றனர். சிறியவனாகிய நான்
குற்றமொன்றும் செய்யவில்லை. என் மனதில் உன் மீது அன்பு உண்டாகச் செய்தமையால் நான்
உன்பால் அன்பு கொண்டேன். அறிஞர்கள் மதிக்கும் திருநெறியினையே கடைபிடிக்கின்றேன்.
இவை அனைத்தும் உன் திருவுள்ளம் அறியும்.
பாடல்
- 4
பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன்
அதில்ஓர் புல்முனை ஆயினும் பிறர்க்கு
நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால்
நண்ணிய கருணையால் பலவே
கைபிழை யாமை கருதுகின் றேன்நின்
கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ
திருவுளம் அறியுமே எந்தாய்.
விளக்கம்
என்
தந்தையாகிய சிவபெருமானே! பொய் கூறுதல், புறம் உரைத்தல், இன்னா மொழிதல் முதலான
குற்றங்கள் பலவற்றை உடையவனாயினும், அவற்றுள் புல்லின் நுனியளவும் பிறர்க்கு
வருத்தம் உண்டாகச் செய்யும் குற்றத்தை நான் வாயால் உரைப்பதில்லை. பிறர் மீது கொண்ட
அருளுணர்வால் அவர்களுக்குச் சிறு பிழைகள் செய்ய நினைத்ததில்லை! உன்னுடைய
திருவடியின் மீது ஆர்வம் கொண்டதைத் தவிர வேறு ஒரு பிழையும் செய்ததில்லை. என்னுடைய
இந்த நிலைமையை நீ நன்கு அறிவாய்!
பாடல் - 5
அப்பணி முடிய என் அப்பனே மன்றில் ஆனந்த நடம்புரி அரசே
இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட்
டிந்தநாள் வரையும்என் தனக்கே
எப்பணி இட்டாய் அப்பணி அலதென் இச்சையால் புரிந்ததொன் றிலையே
செப்புவ தென்நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே
எந்தாய்.
விளக்கம்
கங்கையைத் தன் சடை முடியின் மீது சூடிய எம் தந்தையே! ஆனந்த நடனம் புரியும்
அருளரசனே! எனக்கு நல்லறிவு தோன்றிய நாள் முதல் இந்நாள் வரை நான் எத்தகைய பணி செய்ய
வேண்டும் என நீ ஏற்பாடு செய்தாயோ, அதைச் செய்வதன்றி வேறு எதுவும் செய்தது இல்லை.
நான் செய்வது அனைத்தும் உன் திருவுள்ளம் நன்கு அறியும்.
திருவருட்பா
பதிலளிநீக்கு