அறிவியலும் மனித வாழ்வும்
மனிதனுடைய அன்றாட வாழ்வில் அறிவியல் பெரும் பங்காற்றி வருகின்றது. அறிவியல் தொழில்நுட்பங்கள் இல்லாமல் இன்று மனிதனால் இயங்குவது கடினம். அத்தகைய அறிவியல் மனித வாழ்வில் எவ்வாறு தோன்றியது? எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதை அறிவது அவசியம்
அறிவியல் – விளக்கம்
அறிவியல் என்ற சொல் scientia என்ற இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். தரவுகளின் அடிப்படையில் உயிர்களை, இயற்கையை, சமூகத்தை, உலகத்தைப் புரிந்து கொள்வதே அறிவியல் ஆகும். ஏன்? எதற்கு? எப்படி என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடுவது அறிவியல். அறிவியலை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை,
- இயற்கை அறிவியல் – உலகத்தை ஆராய்வது
- சமூக அறிவியல் – மக்களை, சமூகத்தை ஆராய்வது
- முறைசார் அறிவியல் – கணிதம் உள்ளிட்ட அளவைகளை ஆராய்வது.
மனித வாழ்வில் அறிவியல்
மனித வாழ்வில் அறிவியலின் தோற்றத்தை,
- தோற்றம் - விலங்குகளை வேட்டையாடி, அதன் இறைச்சியைப் பச்சையாக உண்டது.
- வளர்ச்சி - கற்களைக் கொண்டு நெருப்பினை உருவாக்கி அதன் மூலம் இறைச்சியைச் சுட்டு உண்டது
- உச்சம் – வேளாண்மை செய்யக் கற்றுக் கொண்டது
- இன்று – தொழில்நுட்பங்களை இயக்குவது
என்றவாறு விளக்கலாம். மனிதன் தான் கண்களால் கண்டவற்றை உறுதியாக நம்பத் தொடங்கும்போது அறிவியல் உருப்பெற்றதாகக் கொள்ளலாம். ஆதி மனிதன் எதையெல்லாம் நம்பத் தொடங்கினானோ அவை மெய்யியல் என்ற தன்மையில் ஆளக்கற்றுக் கொண்டான். அந்த மெய்யியலைத் தான் இன்று இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல் என்று நாம் அறிகின்றோம்.
பூதங்கள் – செவ்வியல் தனிமங்கள்
உலகம் பருப்பொருள்களால் ஆனது. பருப்பொருள்கள் இந்தியாவில் பூதங்கள்
எனவும், கிரேக்கத்தில் செவ்வியல் தனிமங்கள் எனவும் குறிக்கப்பட்டன. நீர், நிலம், நெருப்பு,
காற்று எனப் பருப்பொருள்கள் நான்கு என்றது மேற்கு உலகம். இந்நான்கோடு ஆகாயத்தையும்
சேர்த்து ஐந்து என்றது தமிழர் மெய்யியல். பிற்கால அறிவியல் தமிழரின் மெய்யியலையே ஏற்றது.
தமிழர் மெய்யியல்
தமிழர் அறிவு மரபின் பின்புலத்தில், தமிழ்ச் சூழலில், தமிழ் மொழியில்
முதன்மையாக உருவான மெய்யியல் தமிழர் மெய்யியல் அல்லது தமிழ் மெய்யியல் ஆகும். தமிழர்
மெய்யியலில், உலகத்தோற்றக் கோட்பாடு, ஐம்பூதக் கொள்கை, திணைக் கோட்பாடு, சூழலியல் பார்வை,
உயிரியல் அணுகுமுறை, அறக்கோட்பாடுகள், வாழ்வியல் விழுமியங்கள் முதலானவை குறிப்பிடத்தக்கவை.
இவை யாவும் இன்றைய நவீன அறிவியலோடு நேரடியாகவே பொருந்துகின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்கள்
பழந்தமிழர் வாழ்வியலை எடுத்துரைக்கின்றன. அவற்றில் காணப்படும் அறிவியல் பார்வையைப்
பின்வருமாறு காணலாம்.
தமிழரின் வேளாண்மை அறிவியல்
தமிழர்கள் வேளாண்மையை மிக நேர்த்தியுடன்
மேற்கொண்டவர்கள். தமிழ்நாட்டுத் தாவரங்களின்
மரபணுத் தொகுதியை ஆய்வு செய்த உயிரியல் ஆய்வாளர்கள், “சிறு தானியங்களான கேழ்வரகு,
வரகு, கம்பு, சோளம், தினை, சாமை மற்றும் பயறு வகைகளான பாசிப்பயறு, உளுந்து, அவரை ஆகியவை
தமிழ்நாட்டில்தான் முதன் முதலாகச் சாகுபடி செய்யப்பட்டு உலகிற்கு
வழங்கப்பட்டுள்ளது“ என்று உறுதி செய்துள்ளனர். நெற்பயிரும் இங்கேதான் முதன்முதலாகப்
பயிரிடப்பட்டது. அரிசி என்ற தமிழ்ச்சொல்லே உலகின் மொழிகளில் நெல் என்ற தானியத்தைக்
குறிக்கும் சொல்லாக “ரைஸ்“, “ரைஸோ” என மருவி வழங்கி வருகின்றது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதுமக்கள்
தாழியில் நெற்பயிரின் ஓவியம் காணப்படுகின்றது. பழனியில் உள்ள பொருந்தல் கிராமத்தில்
கண்டு எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இரண்டு கிலோ நெல் மணிகள் கிடைத்துள்ளன.
இதுவே உலகில் மிகத் தொன்மையான தொல்லியல் நெல் சான்று எனக் கூறப்படுகின்றது.
நிலங்களைப் பண்படுத்தி
விளைநிலமாக்குதல், மண்ணை ஆழ உழுதல், பலமுறை உழுதல், விதைகளைத் தேர்ந்தெடுத்தல்,
விதைத்தல், நீர் பாய்ச்சுதல், எரு இடுதல், அறுவடை, தானியப் பாதுகாப்பு என வேளாண்மைத்
துறை சார்ந்த செய்திகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. நிலத்தைப் பலமுறை
உழுதால் பயன் அடையலாம் என்பதை, “பலகாலும் உழுதலால் பயன்படும் நிலம் போல” என ஐங்குறுநூறு
கூறுகின்றது.
ஆடை உற்பத்தி அறிவியல்
காட்டில் திரிந்த காலத்திலேயே
பருத்தியிலும் பட்டிலும் ஆடைகள் நெய்யும் அறிவியலைக் கற்றிருந்த தமிழன், துணிகளுக்கு
வண்ணம் ஏற்றும் அறிவியலையும், உடைகளில் பலவகையான கையலங்கார வேலைப்பாடுகளைச் செய்யும்
அழகியலையும் உருவாக்கியவன். ஆடைகளையும், ஆடை வடிவமைப்பு அறிவியலையும் உலகின் பல
நாடுகளுக்கு எற்றுமதி செய்தவன். தமிழர் உருவாக்கிய துணிகளை 36 வகையான பெயர்களில்
தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. பாம்பின் தோல் போன்று, பாலாடை போன்று,
அருவியின் சாரல் போன்று, மேகம் போன்று, மூங்கிலின் தோல் போன்று தமிழர் உருவாக்கிய
துணிகளின் வகைகளைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. நெசவுத் தொழிலில் ஈடுபட்ட
பெண்கள் “பருத்திப் பெண்டிர்” (புறம் 326) எனப்பட்டனர். பருத்தி நெசவு முதன்
முதலில் இந்தியாவில்தான் செய்யப்பட்டதென்றும், அங்கிருந்தே மேலைநாடுகளுக்குப்
பரவியது என்றும் சாண் மார்ஷல் கூறுகின்றார். ஆதிச்சநல்லூர் அகழாய்வில் “பஞ்சாடை”
என்னும் கருவி கிடைத்துள்ளது. கீழடி அகழாய்வில் பழந்தமிழர் பயன்படுத்திய நெசவுக்
கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பழந்தமிழர் நெசவுத் தொழில் நுட்ப அறிவியலுக்குச்
சான்றுகளாக அமைகின்றன.
கட்டுமான அறிவியல்
இருப்பிடம் அமைத்தல் என்பது தேவை
மட்டுமல்ல. அது ஒரு வாழ்வியல். இடத்தேர்வு, சூழலியல் மேலாண்மை, வளம் என
அனைத்தையும் ஆராய்ந்து நிலைத்த குடியிருப்பை ஏற்படுத்தியது மனிதனின் மரபு அறிவு.
இம் மரபு அறிவு வளர்ச்சியே பலவகைப்பட்ட கட்டடக்கலை அறிவியல் நுட்பங்களாக
பின்னாளில் வளர்ந்தது. பழந்தமிழ்ப் பாடல்களில் தமிழர் தங்கி வாழ்ந்த இடங்கள்,
அகம், இல், இல்லம், உறையுள், உறைவிடம், குடில், குரம்பை, குறும்பு, நெடுநகர், மனை,
மாடம் எனப் பலவாறு குறிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றின் தன்மையும், வடிவமைப்பும்,
பயன்பாடும் மாறுபாடு கொண்டவை. தமிழரின் கட்டடக் கலை நுட்பமானது அடிப்படைத்
தேவைக்கான உறையுள் என்பதோடு நின்று விடாமல், எழில்மிகு அரண்மனைகள், உயர்
மாளிகைகள், எழுநிலை மாடங்கள், அகல்நெடுந்தெருக்கள், வடிவார்ந்த ஊர்கள், பெரு
நகரங்கள், பட்டினங்கள், கோட்டைகள், ஏற்றமிகு அரண்கள், நீர்நிலைகள், கலங்கரை
விளக்கங்கள், கலையரங்குகள், கோயில்கள் எனப் பரந்துபட்டவை.
நகர வடிவமைப்பு நுட்பம்
மதுரை மாநகர் தாமரை வடிவில்
அமைந்துள்ளது என பரிபாடல் கூறுகின்றது. தாமரைப்பூவின் அக இதழ்கள் மதுரைத்
தெருக்கள் என்றும், அவ்விதழ்களின் உட்புறமாக விளங்கும் மையம் பாண்டியனின் அரண்மனை
என்றும், அப்பூவில் உள்ள தாது தமிழ் மொழி பேசும் மக்கள் என்றும், அத்தாதினை
உண்ணும் வண்டு பரிசில் பெறும் புலவர்கள் என்றும் அப்பாடல் விளக்குமுரைக்கின்றது.
மேலும், இந்நகரில் பாதாள வடிநீர் வழிக்காக பூமிக்கடியில் யானைகள் நுழையும் அளவு
பெரிய புதை குழாய்கள் பதிந்திருந்ததைச் சிலப்பதிகாரம் உரைக்கின்றது.
அரண்மனை வடிவமைப்பில் அறிவியல் நுட்பம்
நெடுநல்வாடை குறிப்பிடும் அரண்மனைக்
கட்டுமான உத்தி இன்றைய நவீன யுகம் வியந்து பார்க்கக் கூடியது. சித்திரைத் திங்கள்
பத்தாம் நாள் தொடங்கி இருபதாம் நாள் வரை உள்ள நாட்களில் ஏதேனும் ஒரு நாளில், பகல்
பதினைந்து நாழிகையில் ஞாயிற்று மண்டிலம் நிலத்தின் நடுவில் இயங்கும். அவ்வாறு
இயங்கும் நாளில் இரண்டு நேரான கோல்களை நட்டு, அக்கோல்களின் நிழல் வடக்கிலோ
தெற்கிலோ சாயாமல் அந்தக் கோல்களிலேயே பதினைந்து நாழிகை அடங்கும் காலம் ஆராய்ந்து குறிக்கப்பட்டது.
அப்படி நின்ற நேரத்தில் வழிபாடுகள் செய்து அரண்மனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனை நூல்களை நன்குப் படித்துத் தேர்ந்த கட்டுமானப் பொறியாளர் மேற்கொண்டனர்
என்கிறது நெடுநல்வாடை. இந்த நிழல் இல்லா நேரம் (zero shadow time) பற்றி அறிவியல்
உலகம் இன்று வியந்து பேசுகிறது. ஆனால், தமிழன் அந்நாளில், அந்நேரத்தைத் தேர்ந்தெடுத்து
அரண்மனைக்கு அடிக்கல் நாட்டிய அறிவியலின் மர்மம் இன்றுவரை அறிய முடியாத வியப்பைத்
தருகின்றது.
மருத்துவ அறிவியல்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது
தமிழர் கண்ட முதுமொழி. மருத்துவன், அறவோன், நோய் மருங்கு அறிஞன், கற்றான்,
தீர்ப்பான் என்று மருத்துவனைப் பழந்தமிழர் பல்வேறு பெயரிட்டு அழைத்துள்ளனர்.
வள்ளுவர் தமிழரின் மருத்துவ அறிவை மருந்து என்ற அதிகாரத்தில் மிக நுட்பமாகப் பதிவு
செய்துள்ளார். நோயுற்றவன், மருத்துவன், மருந்து, மருத்துவனுக்கு உதவியாக இருந்து
பணியாற்றுபவன் என்ற நான்கு கூறுகளைக் கொண்டது மருத்துவம் என்பதை,
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச்
செல்வான்என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து
என்ற குறள் கூறுகின்றது. பழந்தமிழர்
மருத்துவ முறைகளை இயற்கை மருத்துவம், இசை மருத்துவம், அறுவை மருத்துவம், மகப்பேறு
மருத்துவம், மனவள மருத்துவம், கால்நடைகளுக்கான மருத்துவம் என வகைப்படுத்திக் காண
முடிகின்றது. சிரல் என்னும் மீன்கொத்திப் பறவை நீருக்குள் பாய்ந்து மீனைக் கொத்திக்
கொண்டு மேலே எழுவதைப் போல நீண்ட ஊசியால் உடலில் வெட்டுக் காயம்பட்ட பகுதியைத்
தைத்துள்ளனர் என்று பதிற்றுப்பத்து கூறுகின்றது.
உயிரியல் அறிவியல்
தமிழர்தம் உயிர்ப் பாகுபாடு வியப்பிற்குரியது.
தொல்காப்பியர் ஆறறிவு உயிர்களை வகைப்படுத்தியுள்ளார்.
|
அறிவு |
அறியும் ஆற்றல் |
உயிர்கள் |
|
ஓர்
அறிவு |
தொடுதல்
உணர்வு |
புல்,
மரம் |
|
2ஆம்
அறிவு |
தொடுதல்,
சுவைத்தல் |
சிப்பி,
நத்தை |
|
3ஆம்
அறிவு |
தொடுதல்,
சுவைத்தல், நுகர்தல் |
கரையான்,
எறும்பு |
|
4ஆம்
அறிவு |
தொடுதல்,
சுவைத்தல், நுகர்தல், காணல் |
நண்டு,
தும்பி |
|
5ஆம்
அறிவு |
தொடுதல்,
சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல் |
பறவை,
விலங்கு |
|
6ஆம்
அறிவு |
தொடுதல்,
சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல் |
மனிதன் |
இந்த வகைப்பாடு உலகின் வேறு எந்த
மொழியிலும் காணக்கிடைக்காத சிறப்பாகும். இதன்வழி தாவரங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும்,
அவற்றின் இயல்புகளையும் அறிந்து தன் வாழ்வை அமைத்துக் கொண்டவன் தமிழன் என்பதை
அறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக