கல்வியும் கலைகளும்
வரலாற்றுக்கு முந்தைய பண்டைத் தமிழர் கல்வி கற்றமைக்கும்,
கற்பித்தமைக்கும் சான்றுகள் இல்லை என்றாலும், குகையில் வரைந்துள்ள ஓவியங்கள் அவர்களின்
பட்டறிவை பறை சாற்றுகின்றன. படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்த காலத்தில் கல்வியின்
பயனை மக்கள் அறிந்து கொண்டனர். பாமர மக்களும் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்குக்
கீழடி அகழாய்வில் கிடைத்த எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் சான்றுரைக்கின்றன.
திருக்குறளும் கல்வியும்
சங்ககாலத் தமிழர்கள் கல்வியின் சிறப்பை நன்கு அறிந்திருந்தனர். திருக்குறளில் கல்வி
குறித்துப் பேசுகின்ற நான்கு அதிகாரங்கள் உள்ளன. கல்வியைக் குற்றமின்றி கற்க வேண்டும். கற்றபடி நடக்க வேண்டும். கல்வி ஒன்று அழியாத செல்வம். கல்வியை விட கேள்வியே மேம்பட்டது. யார்
எது கூறினாலும் அதன் உண்மைப் பொருளை அறிவதே நல்லறிவு என்று வலியுறுத்துகின்றார் திருவள்ளுவர்.
சங்க காலத்தில் கல்வி
கல்வி பயிலும் உரிமை தனிப்பட்டவர்களின் உரிமையாக இல்லாமல், எந்தக் குலத்தைச் சார்ந்தவர்களும், செல்வர்களும், மன்னரும், எளிய குடிமக்களும், அவர்களில் ஆண்களும், பெண்களும் கல்வியைத் தேடிப் பயின்றுள்ளனர். திருமணமான பின்பும் இளைஞர்கள் தங்கள் மனைவியை விட்டுப் பிரிந்து கல்வி கற்றனர் என்பதை, “ஓதல் பகையே தூது இவை பிரிவே” என தொல்காப்பியம் கூறுகின்றது. இளமையிலேயே கல்விப் பயிற்சி தொடங்கிடுகின்றது என்பதை “இளமையில் கல்” என்ற தொடர் விளக்குகின்றது. அந்த அளவிற்குக் கல்விக்குச் சிறப்பிடம் கொடுத்துள்ளனர் தமிழர்.
கல்வியில் தந்தையின் கடமை
அறிஞர் அவையின் வரிசையில் அமரச் செய்வதும், சான்றோன் ஆக்குவதும் தந்தையின்
கடமை எனப்பட்டது. அதுவே தமிழரின் சிறந்த அறமாகப் போற்றப்பட்டது.
கல்வி கற்பிக்கப்பட்டதன் நிலை
சாதி, இனம் உள்ளிட்ட எந்த வேறுபாடும் கல்விக்குரிய தகுதியாக இல்லை.
ஆசிரியரிடம் அடக்கமாகவும், அன்பாகவும் கல்வி கற்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் பள்ளிகள்
நடைபெற்றதாகத் தகவல் இல்லை என்றாலும், ஊர்தோறும் மன்றங்களில் நூலகம் அமைக்கப்பட்டு,
அங்கு சுவடிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆசிரியரிடம் சென்று மாணவர்கள் கல்வி
கற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
கணக்காயர், குலபதி
கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் கணக்காயர் எனக் கூறப்பட்டனர். “கணக்காயர் இல்லாத ஊரும் நன்மை பயத்தல் இல” என்று திரிகடுகம் கூறுகின்றது. பதினாயிரம் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தவர்களுக்குக் குலபதி என்ற பட்டம் கொடுத்துள்ளனர்.
பள்ளிகளும் ஆசிரியர்களும்
கல்வி பயிற்றும் இடம் பள்ளி எனப்பட்டது. ஆசிரியரின் வீடுகளும், திண்ணைகளும், ஊரின் பொது இடங்களும் பள்ளிகளாகச் செயல்பட்டன. மாணவர்கள் ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதினர். ஓலைகளைச் சேர்த்துக் கட்டிய சுவடி ஏட்டுச் சுவடி எனப்பட்டது. கல்வி கற்பதற்கு வயது வரம்பு இல்லை.
பல துறைகளில் புலமை சான்ற அறிஞர்கள், போலி ஆசிரியரை
வரவழைத்து, அவர்களுடன் சொற்போர் புரிந்து, தோல்வியுறச் செய்து நல்லறிவு புகட்டுவது
அக்கால வழக்கமாக இருந்த்து. இதன் மூலம் கல்வியின் தரத்தை நன்கறிந்து கொள்ள முடிகின்றது.
அத்தகைய திறமையுள்ள நேர்மையான ஆசிரியர்களிடம், பொருள் கொடுத்தும் தொண்டுகள் புரிந்தும் மக்கள் கல்வி பயின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களால் நன்கு மதிக்கப்பட்டனர். சமூகத்தில் ஆசிரியர்கள் மிக உயர்வான நிலையில் மதிக்கப்பட்டனர்.
கற்ற பாடங்கள்
மாணவர்கள் தொல்காப்பியம், காக்கைப்பாடினியம் ஆகிய இலக்கண நூல்களைப் பயின்றனர். ஏரம்பம் என்ற கணித நூலைக் கற்றுள்ளனர். எண்ணும் எழுத்தும் அவர்களுடைய பாடங்களாக இருந்தன. எண் என்று கூறப்படுகின்ற கணித அறிவு போற்றத்தக்கதாக இருந்ததது. ஒன்று முதல் கோடி வரை எண்களை அறிந்திருந்தனர். அதோடு எண்ணிலடங்காத பேரெண்களைக் குறிக்க தாமரை, ஆம்பல், வெள்ளம் என்னும் சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். நாழி, தூணி, காணி, முந்திரி, இம்மி என்னும் அளவுகள் சார்ந்த நீட்டல் அளவை, முகத்தல் அளவை சார்ந்த கணிதம் அறியப்பட்டிருந்தது. மிக நுண்ணிய நீட்டல் அளவைக்கு “தேர்த்துகள்” என்று பெயர். மிகப் பெரிய எண்ணுக்கு “வெள்ளம்” என்பது பெயர்.
வானியல், மருத்துவம், இசை, ஓவியம், நாட்டியம், சிற்பம் முதலிய கல்வியும் சிறந்திருந்தன. கோள்கள், அவற்றின் செயல்கள், திங்களின் இயக்கம், விண்மீன்களின் இயக்கம் ஆகிய வானியல் அறிவு பரந்துபட்டு இருந்தது. பூமியில் இருந்து கொண்டே கோள்கள் மற்றும் ஞாயிறு, திங்கள், விண்மீன்கள்
ஆகியவற்றை ஆராய்ந்ததால் பூமி நிலையாக இருப்பதாகவும், மற்றவை அனைத்தும் பூமியை மையமிட்டுச்
சுற்றி வருவதாகவும் கருதினர். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் குறித்த அவர்களின் கணிப்புகள்
மிகச் சரியாக இருந்தமை வியப்பிற்குரியது. சோதிடம் குறித்த தெளிவு அக்கால மக்களிடையே இருந்துள்ளது. வானவியல் புலவர்கள் “கணிகர்” என்று அழைக்கப்பட்டனர்.
கல்வியின் பயன்
கல்வி அறிவை வளர்ப்பதற்கும், ஒழுக்கத்தை வளர்ப்பதற்கும் பயன்பட்டது. செல்வத்தை விட கல்விக்கே உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. கல்வி என்பது பண்பாட்டை வளர்க்கின்ற, வீடுபேறு அளிக்கின்ற மருந்து என்றே அம்மக்கள் கருதினர். சாதி வேறுபாட்டைக் களையக் கூடிய கருவி என்றும் கருதினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக