தமிழ் வளர்த்த
சங்கம்
பண்டைத் தமிழகத்தில் தமிழ்ப் புலவர்கள் ஒன்றுகூடி முச்சங்கங்கள் அமைத்துத்
தமிழ் வளர்த்தனர். எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்
ஆகிய சங்க இலக்கியங்கள் கடைச் சங்க காலத்தில் எழுந்தவையாகும். பொதுவாக சங்கம் என்ற
சொல் கடைச் சங்கத்தையே குறித்து நிற்கின்றது. கூடல், அவை,
மன்றம் ஆகியவை சங்கத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொற்களாகும்.
தமிழ்ச்சங்கம் வளர்த்த இடமாகக் கருதப்படும் மதுரை நகரம் “கூடல்” என்று
அழைக்கப்படுகின்றது. தமிழ்ச்சங்கத்தைப் பற்றிய குறிப்புகள் இறையனார் களவியல்
உரையில் காணப்படுகின்றது. சங்கங்கள் இருந்தமையைப் பல்வேறு இலக்கியங்களும்
சான்றுரைக்கின்றன.
முதற் சங்கம்
கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் முதற்சங்கமாகும். இச்சங்கத்தை
நிறுவிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற
பாண்டிய மன்னன் ஈறாக 89அரசர்கள் 4440 ஆண்டுகள்
இச்சங்கத்தை நடத்தியதாக இறையனார்களவியல் உரை கூறுகிறது. இச்சங்கத்தில் சிவபெருமான்,
அகத்தியர், முருகன், முரஞ்சியூர்
முடிநாகராயர், நிதியின் கிழவன் உள்ளிட்ட 4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்து செய்யுள் இயற்றியுள்ளனர். அவர்களால் அகத்தியம்,
பரிபாடல், முதுநாரை, முதுகுருகு,
களரியாவிரை போன்ற நூல்கள் பாடப்பட்டன.
இடைச்சங்கம்
தென்மதுரையைக்
கடல் கொண்ட பிறகு கபாடபுரத்தில் தொடங்கப் பெற்ற இடைச்சங்கம் 3700 ஆண்டுக்
காலம் நடைபெற்றது. வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னனால் தொடங்கப் பெற்ற
இச்சங்கம் முடத்திருமாறன் முடிய 59 மன்னர்களால் நடத்தப்
பெற்றது. இச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழியார்
வெள்ளூர்க் காப்பியனார், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கீரந்தை
முதலிய 3700 புலவர்கள் செய்யுள்களை இயற்றியுள்ளனர்.
இவர்களால் பாடப்பெற்றவை தொல்காப்பியம், மாபுராணம், பூத புராணம், இசை நுணுக்கும், கலி,
குருகு, வெண்டாளி, வியாழ
மாலை, அகவல் போன்ற நூல்களாகும்.
கடைச் சங்கம்
கபாடபுரமும்
கடலால் அழிந்த பிறகு தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது. இரண்டாம்
சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து
பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது.
இச்சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால்
நடத்தப் பெற்றது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. இச்சங்கத்தில்
சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார்,
பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன்,
மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதன்
இளநாகனார், நக்கீரனார் என 449 புலவர்கள்
பாடியுள்ளனர். இதில் எழுதப்பட்ட நூல்கள் நெடுநல்வாடை, அகநானூறு,
குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு,
ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல், கூத்து,
வரி, சிற்றிசை போன்றவை ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக