சனி, 12 ஜூலை, 2025

TANSCHE - பழைய கற்காலம்

 

பழைய கற்காலம்

இது மனித வாழ்வின் தொடக்க நிலையைக் குறிக்கிறது. இயற்கையாகக் கிடைத்த பதப்படுத்தாத கற்கருவிகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய முதல் மனிதர்களின் காலத்தைக் குறிக்கிறது.  கற்கருவிகளைப் பயன்படுத்திய பிறகே மனிதன் விலங்கில் இருந்து வேறுபட்டான். மலைத்தொடரில் வேட்டையாடி வாழ்ந்து வந்த தமிழர்களே முதல் மாந்தர்கள் ஆவர்.

சான்றுகள்

அவர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் இப்போதைய தமிழகத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியிலும், கிழக்கு மலைத் தொடர்ச்சியிலும், வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டைக்கு அருகில் உள்ள கொற்றலையாற்றுச் சமவெளியிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி, குடியம் ஆகிய இடங்களிலும், நெய்வேலி, வடமதுரை, சென்னையில் உள்ள பல்லாவரம் மலை போன்ற தமிழகத்தின் பல இடங்களிலும் கிடைத்துள்ளன .

கொற்றலை ஆற்றின் கரையோரத்தில் பழைய கற்கால மக்களன் பெருமளவில் வாழ்ந்துள்ளனர். மாட்டின் நீள்வடிவமான 17 காலடித் தடயங்கள், மூன்று மீட்டர் ஆழத்தில் தடம் பதிந்த தடயங்கள் போன்றவை அகழாய்வின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கடலில் மூழ்கியதாகக் கருதப்படும் புதுச்சேரிப் பகுதியில் ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது.

குடியம் என்ற ஊருக்கு அருகில் உள்ள அள்ளிக்குழி மலைத்தொடரில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த 16 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கே கைக்கோடரிகள், இதய வடிவிலான கைக்கோடரிகள், வெட்டுக்கத்திகள், சுரண்டிகள், சிறிய வெட்டுக் கருவிகள், கூர்முனைக் கருவிகள், மரம் இழைக்கும் உளி முதலிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கருவிகளை நிலத்தைத் தோண்டவும், மரம் வெட்டவும், விலங்குகளைக் கொல்லவும், அதன் இறைச்சிகளைக் கிழிக்கவும், தோல் உரிக்கவும், மரப்பட்டைகளைச் சீவவும் பயன்படுத்தினர்.

முகத்தோற்றம்

கூர்மையான மூக்கு, உடல் முழுவதும் முடிகள், நீண்ட நகங்கள், நீளமான தலைமுடியுடன் இருந்தனர். அவர்களை உணவு சேகரிப்பவர்கள் என்றும், காட்டாண்டிகள் என்றும் கூறுவர்.

வாழ்க்கை முறை

தமிழகத்தில் மிகத் தொன்மையான காலத்தில் இவர்கள் மரப்பொந்துகளில், பாறைக் குகைகளில் பதுங்கி வாழ்ந்தனர். வேட்டையாடவும், பதுங்கி வாழவும் இவர்களுக்கு மலை துணையாக இருந்தது. ஆறுகளும், பாறைச்சுனைகளும் நீர்வளமளித்தன. இவர்கள் ஓரிடத்தில் நிலையாகத் தங்கவில்லை. ஆற்றுப்படுகைகளிலும், மரக்கிளையில் இலை, தழை, விலங்கின் தோல்கள் ஆகியவற்றைத் தொட்டிலாக்க் கட்டி அதில் தூங்கினர்.

நெருப்புப் பயன்பாடு

பழைய கற்காலத் தமிழர்கள் தொடக்கத்தில் நெருப்பின் பயன்பாட்டை அறியவில்லை.  வெயில் காலத்தில் மூங்கில்கள் உராய்ந்து நெருப்புப் பற்றிக் கொண்டது. அதைக்கண்டு அச்சம் கொண்டனர்.  பின்னர் கற்களை உரசுவதன் மூலம் நெருப்பை உருவாக்கக் கற்றுக் கொண்டனர்.  குளிரில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், விலங்குகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், இறைச்சியை வதக்கி உண்பதற்கும், தேனீயை விரட்டித் தேன் எடுக்கவும் நெருப்பைப் பயன்படுத்தினர்.

தொழில்கள்

வேட்டையாடுதல் அவர்களின் முதன்மைத் தொழிலாக  அமைந்தது. காய்கனி பறித்தல், கிழங்கெடுத்தல், தேனெடுத்தல் ஆகியவையும் கற்கால மனிதர்களின் தொழில்களாக இருந்தன.

பொழுதுபோக்கு

தொல்லியல் துறை பல்வேறு இடங்களில்  நடத்திய ஆய்வுகளில், எண்ணற்ற பாறை ஓவியங்களும், குகை ஓவியங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஓவியம் தீட்டுவது இவர்களின் பொழுதுபோக்காக இருந்தமையை அறிய முடிகின்றது.  ஆடு, மாடு, மான், பன்றி, உடும்பு, பாம்பு, மயில், கோழி, கொக்கு, அன்னம் முதலிய விலங்கினங்கள், பறவையினங்களின் உருவங்களே அதிக அளவில் ஓவியங்களாகத் தீட்டினர்.

ஆடைகளும் அணிகலன்களும்

தொடக்கத்தில் ஆடையின்றி வாழ்ந்த மக்கள், வெப்பம் குளிர் முதலிய  இயற்கையில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முற்பட்டனர். ஆகவே, இலை, தழை, மரப்பட்டை, நார் ஆகிவற்றைக் கொண்டு தங்கள் உடலை மறைத்துக் கொண்டனர். நறுந்தழைகள், மலர்கள்,  பறவைகளின் இறகுகள், வண்ணக்கற்கள் ஆகியவற்றை அணிகலன்களாகப் பயன்படுத்தினர். புலிப்பல் வடிவம் கொண்ட தாலியைச் செய்து கொண்டனர்.

தொடர்பு மொழி

தொல் தமிழர்கள் தங்கள் கருத்துகளை அடுத்தவர்களுக்குத் தெரிவிக்க முதலில் கைகளால் சில சைகைகளைக் காட்டினர். வாயால் சில ஓசைகளை எழுப்பினர். அதன் படிநிலையாக மொழி தோன்றியது. 

நம்பிக்கை

இறைவன் குறித்தோ சமயம் குறித்தோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. அச்சம் வியப்பு காரணமாக நெருப்பு, கதிரவன், நிலவு போன்றவற்றைத் தெய்வங்களாக வணங்கினர்.

சிறிய கற்காலம்

வேட்டையாடுதல் தொடர்ந்தமையால் விலங்குகளின் எண்ணிக்கைக் குறைந்தது. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறினர். பல இடங்களில் பரவி வாழ்ந்தனர். சிலர் கடற்கரைகளில் தங்கள் வாழ்விடத்தை அமைத்துக் கொண்டனர். சிறிய கற்கருவிகளுடன் நீர்நிலைகளின் அருகில் உணவு சேமிப்பவர்களாகவும், மீன் பிடிப்பவர்களாகவும், ஆடு, மாடுகளை வேட்டையாடக் கூடியவர்களாகவும், அவற்றைப் பழக்கி வளர்க்கக் கூடியவர்களாகவும் வாழ்ந்தனர். இக்காலம் தொல்பழங்காலத்தின் இரண்டாவது கட்டம் ஆகும்.

 

               



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக