சனி, 12 ஜூலை, 2025

TANSCHE - உலோகக்காலம்

 

பெருங்கற்காலம்  (உலோகக்காலம்)

புதிய கற்காலத்தின் இறுதியில் பெருங்கற்காலம் தோன்றியது. இக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இறந்தவர்களுடைய புதைகுழிகளின் மேல் பெரிய கற்களைக் கொண்டு நினைவுச் சின்னங்களைக் கட்டினர். இவை பெருங்கற்படை சின்னங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை அமைக்க பெருங்கற்களைப் பயன்படுத்தியதால் பெருங்கற்காலம் என்று அழைக்கப்படுகின்றது.

இக்காலத்தில் தமிழர்கள் தங்கள் பட்டறிவால் உலோகங்களைக் கண்டுபிடித்தனர். கற்கருவிகளைப் பயன்படுத்தியதைவிட பொன், செம்பு, வெண்கலம், இரும்பு ஆகிய உலோகங்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டனர். எனவே இக்காலத்தை உலோகக் காலம் என்றும் இரும்புக் காலம் என்றும் குறிப்பிடுவர்.

பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த இடங்கள்

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அமிர்தமங்கலம், கொற்கை, திருக்கம் புலியூர், உறையூர், அரிக்கமேடு, கொடுமணல், வல்லம் என நூற்றுக்கணக்கான பெருங்கற்காலத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முகத்தோற்றம்

பெருங்கற்காலத் தமிழர்கள் இன்றைய மனிதர்களைப்போல முகத்தோற்றம் அடைந்தனர். தலைமுடியைச் சீரமைத்துத் தங்களை அழகுப்படுத்திக் கொண்டனர்.

வாழ்க்கை முறை

பஞ்சைக் கொண்டு தறி நெசவு செய்து ஆடையை உருவாக்கினர். பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிந்து கொண்டனர்.

தங்கத்தைக் கண்டெடுத்தல்

உலகின் பிற மனிதர்கள் செம்பை அறிவதற்கு முன்பு தொல்தமிழர்கள் தங்கத்தைக் கண்டுபிடித்தனர். பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட செம்பு, வெண்கலம், இரும்பு ஆகியவற்றை வேறுபடுத்த செம்பொன், வெண்பொன், இரும்பொன் என்று அவை அழைக்கப்பட்டன. சிறிய தகட்டைப் போன்று மெல்லிய அளவிலான தங்கத்தைக் களிமண்ணின் மீது இணைத்து அணிகலன்களாகப் பயன்படுத்தியமையை தொல்லியல் அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆதிச்சநல்லூரில் தங்கத்தினால் ஆன 19 மகுடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செம்பு கண்டெடுத்தல்

தங்கத்தை அறிந்த மக்கள் அதன் தொடர்ச்சியாகச் செம்பையும் கண்டுபிடித்து அதில் பல கருவிகளை உருவாக்கினர். உளி, சுத்தி, ஆணி, அம்பு, வாள் போன்றவை செம்பினால் செய்யப்பட்டன.

வெண்கலம் அறிதல்

எட்டு பங்கு செம்பும் ஒரு பங்கு தங்கமும் கலந்த கலப்பு உலோகம் வெண்கலம் எனப்பட்டது. இவ்வாறு ஒரு உலோகத்தோடு இன்னொரு உலோகத்தைக் கலக்கும் அறிவியல் தொழில்நுட்பம் இந்த உலோகக் காலத்தில் நிகழ்ந்தது. கிண்ணம், குடம், வட்டில் முதலிய கலங்களும், மாட விளக்கு, குத்து விளக்கு, பாவை விளக்கு போன்றவையும், வாள், கரண்டி முதலிய கருவிகளும் வெண்கலத்தால் செய்யப்பட்டன. ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் வெண்கலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சாடிகள், வட்ட வடிவ கிண்ணங்கள், மூடிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இரும்பு அறிதல்

மண்ணால் ஆகிய கலங்கள் வனைவதற்குத் தகுதியான மண்ணைத் தேடியபோது அவர்கள் இரும்பைக் கண்டு பிடித்தனர். இரும்பின் தன்மை எல்லாவகைக் கருவிகளுக்கும் ஏற்றதாக இருந்ததால் இதன் பயன்பாடு அதிகரித்தது.  இதனைக் கரும்பொன் என்றும் கூறுவர். போர்க்கருவிகளான அம்பு முனைகள், வாள், கத்தி, கோடரி ஆகிய பொருட்கள் இரும்பினால் செய்யப்பட்டன. வேளாண்மைக் கருவிகளான கொழு, மண்வெட்டி, களைக் கொட்டும் கடப்பாறை போன்ற பொருட்களையும் செய்து பயன்படுத்தினர். களிமண் உலையில் இட்டு இரும்பை உருக்கினர். இதற்கு கருங்காலி மரத்தின் கரியைப் பயன்படுத்தினர். ஆதிச்சநல்லூரில் இரும்பினால் செய்யப்பட்ட அரிவாள்கள், மண்வெட்டிகள், கோடரிகள், அம்புகள், வாள்கள், ஈட்டிகள் கிடைத்துள்ளன.

களிமண்ணால் பானை, சட்டி செய்தல்

மண் சேறாக மாறியதையும், கதிரவனின் வெப்பத்தால் சேறு காய்ந்து கெட்டித் தன்மை அடைந்ததையும், அது தீயில் பட்டவுடன் இறுகிக் கடினமான ஓடு போன்று மாறியதையும் கண்டு வியந்த தமிழன், தன் வெறும் கைகளால் மட்கலங்களைச் செய்யத் தொடங்கினான். அது ஒழுங்கற்றதாக இருந்தது. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதன் மேல் மட்கலத்தினை உருவாக்கினான். தான் செய்த மட்கலங்களுக்குத் தனித்த அடையாளம் காணக் குறியீடுகள் இட்டுக் கொண்டான். இதற்குக்குயவர் குறியீடுஎன்று பெயர். இதனைப் பயன்படுத்துவோரும் தங்கள் குறிகளைப் பாத்திரத்தில் இட்டனர். இதற்குஉடைமைக் குறிஎன்று பெயரிட்டனர். பிற்காலத்தில் எழுத்து வடிவங்களுக்கு இதுவே காரணமாக அமைந்தது.

சான்றுகள்

குன்றுகளின் அடிவாரங்களில் பெருங்கற்காலச் சின்னங்கள் காணப்படுகின்றன. சக்கரத்தால் செய்யப்பட்ட பானைகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன. அப்புக்கல்லு, மல்லப்பாடி, குட்டூர் மலை, மோதூர் முதலிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் கைகளால் செய்த பானைகள் குறித்து அறிய முடிகின்றது. சீர்காழிக்கு அருகில் உள்ள எடமணல் மேலப்பாளையம் என்ற ஊரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.

மருதநிலப் பயன்பாடு

பெருங்கற்காலத்தில் பஃறுளியாறு, குமரியாறு போன்ற ஆறுகளால் குமரிக்கண்ட காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்பட்டன.  இதனால் வயலும் வயல் சார்ந்த இடங்கள் தோன்றின. மழை நீரைத் தேக்கி வைக்க ஏரி, குளங்கள் அமைத்தனர்.  தமிழர்கள் தாங்கள் வாழும் இடங்களிலேயே நீர் வளத்தைப் பெருக்கக் கிணறுகளை வெட்டியது அவர்களின் தனித்தன்மையாகும். இதனால் வேளாண்மை பெருகியது. செந்நெல், வெண்நெல், மஞ்சள் ஆகியவற்றைப் பெருமளவு விளைவித்தனர். குறிஞ்சி, முல்லைக்கு அடுத்தபடியாக நீர்வளமும் நில வளமும் மிகுந்த மருத நிலத்தில் தமிழர்கள் பரவி வாழ்ந்தனர்.

நெய்தல் நிலப் பயன்பாடு

நெய்தல் நிலக் குடியிருப்புப் பகுதிகள் பட்டினம், பாக்கம் எனப்பட்டன. அங்கு வாழ்ந்த மக்களைப் பரதவர் என அழைத்தனர். அவர்கள் கட்டுமரம், திமில், படகு முதலிய கலங்களைக் கடலில் செலுத்தி ஆழ்கடலில் மீன் பிடித்தும், உப்பு விளைவித்தும், முத்துக் குளித்தும், பவழப் பாறைகளில் இருந்து பவழம் கொண்டு வந்தும் தம் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டனர். இப் பொருள்களை பிற நிலத்திற்கு எடுத்துச் சென்று பண்டம் மாற்றிக் கொண்டனர். இதனால் கடல் வாணிகமும், நீர்வழிப் பயண வாணிகமும் உருவானது.

இருப்பிடம்

உயர்ந்த மண் எழுப்பிப் பெருவீடு கட்டிக் கூரை வேய்ந்து கொண்டனர். குன்றுகளில் இருந்து கற்களைக் கொண்டு வந்து சுண்ணாம்பு கலந்த மண் பூசி, கல் வீடு கட்டிக் கொண்டனர். பெரிய வீடு கட்ட விரும்பியவர்கள் செங்கல்லால் வீடு எழுப்பிச் சுண்ணாம்பைக் கொண்டு காரை பூசி, சுட்ட ஓடுகளினால் கூரை வேய்ந்து கொண்டனர்.  சொருகு ஓடு என்னும் இன்னொரு வகை ஓடுகளைக் கொண்டும் கூரை அமைத்துக் கொண்டனர்.

தொழில்கள்

வேட்டையாடுதல், காய்கனி பறித்தல், ஆடு மாடுகளை மேய்த்தல், வேளாண்மை செய்தல், மீன் பிடித்தல், உப்பு விளைத்தல், படகுகள், மரக்கலன்கள் செய்தல் முதலிய தொழில்களைச் செய்தனர். தங்கம், வெண்கலம் போன்றவற்றின் கண்டுபிடிப்பால் அணிகலன்கள் செய்வதும் கைத்தொழிலாக மாறியது. இரும்பு, செம்பு போன்றவற்றாலான பொருட்கள் செய்யும் தொழில்களும் தொடங்கப்பட்டன. தறிநெசவுத் தொழில், மட்கலன்கள் செய்யும் தொழில்களும் பெருகின.

கல் பதுக்கைகள்

இறந்தோர் உடலைப் பதுக்கி மறைத்துப் புதைத்து வைத்ததால் அவை பதுக்கைகள் எனப்பட்டன. மல்லசத்திரம், தருமபுரி, கோட்டமங்கலம் ஆகிய இடங்களில் கல் பதுக்கைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை, கல் திட்டை, கல் குவை, கல் வட்டம், கல் அறை என்ற பெயர்களாலும் குறிப்பிடுகின்றனர். பதுக்கைகள் பெருகி புதர் மண்டியதால் அதனை அடையாளம் காண அவற்றின் அருகில் செங்குத்தான கற்களை நிறுத்தினர். இதற்கு நெடுகல் என்று பெயர்.

கல் திட்டை

கல் திட்டை என்பது ஈமக்குழியை ஒட்டிய நான்கு பக்கங்களில் பெரும் கற்பாறைகள் செங்குத்தாக நிறுத்தப்பட்டு அவற்றின் மேல் புறத்தில் பெரிய கற்பலகையால் மூடப்பட்டதாகும். இவை நாளடைவில் கல்லறை என அழைக்கப்பட்டன. வேட்டை மாந்தர்கள் புதைக்கப்பட்ட கல் திட்டைகள் மல்லச் சத்திரத்தில் காணப்படுகின்றன. பாண்டவன் திட்டு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல் திட்டை தமிழகப் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களில் குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கல்திட்டையின் மூடுகல் 80 டன் எடை கொண்டது. மலையனூர்த் திட்டு, ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஏராளமான கல் திட்டைகள் உள்ளன.

தொடர்பு மொழி

ஐந்து திணைகளிலும் தமிழ்ச்சொற்கள் பலவும் புதிதாகத் தோன்றின. மொழி வளர்ச்சியின் பயனாக எண்வகை வேற்றுமைகளும், பல வகைச் சொற்றொடர் அமைப்புகளும் தோன்றியிருக்க வேண்டும். சில குறியீடுகளை வரிவடிவமாக (எழுத்தாக) பயன்படுத்தத் தொடங்கினர்.  அவை தமிழ் வடிவங்களைப் போன்று இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளன. காலப்போக்கில் இக்குறியீடுகள் தமிழ் மொழிக்குரிய எழுத்துகளாக வளர்ச்சி பெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக