தொல்தமிழர்
உலகம் கடல் நீரால் சூழப்பட்டது. உலகின் உள்ளே தங்கிவிட்ட வாயுக்கள் அழுத்தம் தாங்க
முடியாமல் வெடித்து எரிமலையாக வெளிவந்தது. அவற்றினின்று
வெளிவந்த குழம்புகள் தண்ணீரால் இறுகி பாறைகளும், மலைகளும்,
நிலமும் உருவாயின. நிலப்பகுதி பல
கண்டங்களாகப் பிரிந்து இருக்காமல், ஒரே நிலப்பகுதியாக இருந்தது. அதனைப் பங்கேயா என்று
அழைத்தனர். பங்கேயாவில் உள்ள புதைவடிவ மண் நம்
தமிழகத்திலும் காணப்படுகின்றது. எனவே உலகில் நிலம்
தோன்றிய காலத்திலிருந்தே தமிழக நிலப்பகுதி இருந்துள்ளது என்பதை உணரலாம்.
குமரிக்கண்டம்
சில கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நிலப்பகுதியாக விளங்கிய பங்கேயா இரண்டாக
உடைந்தது. அது வடக்கு தெற்கு என இரண்டு கண்டங்களாகப் பிரிந்தது. வடக்குப் பகுதி “இலாராசியா” என்றும் தெற்குப் பகுதியை “கோண்டுவானா” என்றும் அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தக்
கோண்டுவானா கண்டம் பிளவுபட்ட பின்னர் பழந்தமிழ்நாடு தனியாகவும், ஏனைய நாடுகள் தனியாகவும் பிரிந்தன. அவ்வாறு
பிரிந்த நிலப்பகுதியே இலெமூரியா (குமரிக்கண்டம்) என்று அழைக்கப்படுகின்றது. இலெமூர் என்ற பாலுட்டிகள்
வாழ்ந்த நிலப்பகுதியாக இருந்தமையால் அதன் பெயரிலேயே இக்கண்டம் அழைக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் இதனைக் குமரி என்று அழைத்தனர். குமரி நிலத்தின் தென்பகுதியில் பரவியிருந்த மலைத்தொடரின் பெயர் குமரி மலை
என்றும், அந்நிலத்தின் வடபகுதியில் ஓடிய ஆறு குமரி ஆறு
என்றும் வழங்கப்பட்டது.
முதல்
உயிரினத் தோற்றம்
குமரிக்கண்டம் உயிர்கள் தோன்றுவதற்குத்
தேவையான தட்ப வெப்ப நிலைகளைக் கொண்டிருந்தது. அக்கண்டத்தில்
கார்பன் கூட்டுப் பொருட்கள் மிகுதியாக இருந்தமையால் உலகின் முதல் உயிரினமான நீலப்
பச்சைப் பாசி தோன்றியது. இவை பல கோடி ஆண்டுகளுக்குப் பின் மாற்றம் அடைந்து
நீர்வாழ் செடிகளாக மாறின. இவை கார்பன் டை ஆக்ஸைடை
உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளிவிடத் தொடங்கின. அதனால் ஓசோன் மண்டலம் உருவானது. இந்த
ஓசோன் மண்டலம் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து உலகைக் காப்பாற்றி பல்வேறு
உயிரனங்கள் தோன்றக் காரணமாக அமைந்தது. பிறகு குமரிக்கண்டத்தில்
ஊர்வன, பறப்பன, நடப்பன
உள்ளிட்ட உயிர்கள் தோன்றின. டைனோசர் என்ற உயிரினம் தோன்றி அதில் இருந்து பல
பறவையினங்கள் தோன்றின. பல கோடி ஆண்டுகளுக்குப் பின் பின்னர் மாந்தக் குரங்கினம் தோன்றியது. அவற்றின்
பரிணாம வளர்ச்சியே மனிதன் ஆவான் என உயிரியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
தொல்
தமிழர்கள்
முதற்கால மாந்தர்கள் காட்டு விலங்கை ஒத்தவர்களாகவும், நாகரிகம் தெரியாதவர்களாகவும்
இருந்தனர். தங்கள் வாழ்க்கைக்கு இயற்கையை நம்பி
இருந்தமையால் அவர்களுக்கு ஏற்ற இயற்கைப் பெருவள நாடாக இருந்தது குமரிக் கண்டமே
ஆகும். எனவே, குமரிக்கண்டத்தில்
வாழ்ந்த முன்னோர்களே முதல் மாந்தர்கள் எனில் தமிழினமே உலகின் முதல் மனித இனம்
என்றும், அவர்கள் பேசிய மொழியே முதன் மொழி எனில் தமிழே
முதல் மொழி என்றும் அறியமுடிகின்றது.
ஆகவே, முதல் மாந்தனாகிய தொல் தமிழரின் வரலாற்றைக் கால
அடிப்படையில் வரலாற்றுக்கு
முந்தைய காலம், வரலாற்றுக் காலம் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிப்பர்.
I. வரலாற்றுக்கு முந்தைய காலம்
எழுத்துச் சான்றுகள் தோன்றுவதற்கு முந்தைய காலத்தை வரலாற்றுக்கு முந்தைய காலம்
அல்லது தொல் பழங்காலம் என்பர். இக்காலம் புதைபொருள் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டன. அக்காலத்தில் மக்கள் விட்டுச் சென்ற கற்கள், பானை
ஓடுகள் மற்றும் உலோகத்தால் ஆன கருவிகள், ஓவியங்கள், எலும்புகள் முதலியவை கிடைத்துள்ளன. அவற்றின்
வழியாக வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறிய முடிகின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மக்களுடைய நிற அமைதி, தலை வடிவம், முடி, உடல்
அமைப்பு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் நிரதர்கள், முதல்நிலை
ஆத்திரேலியர்கள், திராவிடர்கள், ஆரியர்கள் என்ற இனப்பாகுபாட்டை மக்கள் இன
ஆய்வாளர்கள் காட்டியுள்ளனர். இதனடிப்படையில் மக்கள் இன
வரலாற்றை மூன்று பிரிவுகளாக வகுத்துள்ளனர். அவை,
பழைய கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம்
எனப்படும் உலோகக்காலம் என்பனவாகும்.
II. வரலாற்றுக் காலம்
எழுத்துச் சான்றுகள் தோன்றிய பின்பான காலத்தை
வரலாற்றுக் காலம் எனலாம். வரலாற்றை
அறிய, புதைபொருள் சான்றுகள், கலைச்சின்னங்கள்,
சாசனங்களும் பட்டயங்களும், மொழியில் ஆய்வு,
இலக்கியம், ஐரோப்பியக் கம்பெனியாரின் ஆவணங்கள்,
பாதிரிமார் கடிதங்கள், கிழக்கிந்தியக் கம்பெனி
ஆவணங்கள் ஆகிய சான்றுகள் உதவுகின்றன. அவற்றின் மூலம்
அக்காலத்தில் வாழ்ந்த மக்களினத்தின் வாழ்க்கை முறை, சமூக
முறை, பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம், நம்பிக்கை, மொழி ஆகியவற்றை அறிய முடிகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக