சனி, 12 ஜூலை, 2025

TANSCHE - புதிய கற்காலம்

 

புதிய கற்காலம்

காலம் செல்லச் செல்ல மனிதனின் தேவைகள் பெருகியதால், தங்கள் வசதிக்கேற்பக் கருவிகளிலும், கருவிகளைப் பயன்படுத்தும் முறைகளிலும் மாற்றம் ஏற்பட்டது. பழைய கற்காலத்தில் வழக்கில் இருந்த கரடுமுரடான கற்கருவிகளை விடுத்து, நன்றாக தேய்த்து வழவழப்பாகவும் கூர்மையாகவும் மெருகேற்றிக் கற்கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்தக் காலமே புதிய கற்காலம் என அழைக்கப்படுகின்றது.

வாழ்க்கை முறை

புதிய கற்கால மனிதர்கள் காடுகளைக் கட்டுப்படுத்தினர். வேளாண்மை செய்யக் கற்றுக் கொண்டனர். படகுகள் கட்டிக் கடலில் ஓட்டினர். நெருப்பு மூட்டக் கற்றுக் கொண்டது இவர்களின் தனிச்சிறப்பாகும். சிக்கி முக்கிக் கற்களைத் தட்டியும், மரத்தைக் கடைந்தும் நெருப்பு மூட்டினர். கடற்கரையிலும், நீர் நிலைக்கு அருகிலும் வாழ்ந்தவர்கள் சமவெளிக்குப் பரவினர். நாடோடி வாழ்க்கையை விட்டு பொருளாதார வாழ்க்கையை நோக்கி முன்னேறினர். நீர்ப்பாசனம், வேளாண்மைத் தொழில், நிலையான ஊர்கள் அமைத்தல், கால்நடைகளை வளர்த்தல் எனப் பல புதுமைகள் இக்காலத்தில் தோன்றின.

மனித உருவம்

புதிய கற்கால மனிதர்களின் கடுமையான முகத்தோற்றம் மாறி மென்மைத் தன்மை தோன்றியது. நீண்ட தாடியும், நீண்ட தலைமுடியும் பெற்றிருந்தனர். 

வாழ்ந்த இடங்கள்

புதிய கற்கால மனிதர்களின் குடியிருப்புகள் வடஆற்காடு மாவட்டங்களிலும், சேலம், கிருஷ்ணகிரி, பையம்பள்ளி, புதுக்கோட்டை, பழனிமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தகடூர், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. பனையகுளம், பக்கல்வாடி, முல்லைக்காடு, கடத்தூர்,  மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் அவர்கள் வாழ்ந்த சுவடுகள் இன்றும் காணப்படுகின்றன. இவர்கள் குறிஞ்சி நிலத்தில் மட்டும் இல்லாமல் முல்லை நிலத்திலும் வாழ்ந்தனர்.  அவர்கள் வாழ்ந்த குமரிமலைத் தொடர் தற்போது மேற்கு தொடர்ச்சி மலை,  கிழக்கு தொடர்ச்சி மலை என அழைக்கப்படுகிறது.

கருவிகள்

புதிய கற்காலத்தில் கருவிகளின் வடிவங்கள் மாறின. கைப்பிடிகள் தோன்றின

  • எலும்புக் கருவிகளும், கைக்கோடரிகளும், சில கல் கருவிகளும், இருபக்கக் கோடரிகளும் அதிக அளவில் பயன்படுத்தியுள்ளனர்.
  • அழகிய உளிகள், உலக்கைகள், சம்மட்டிகள், கொத்தும் கருவிகள் போன்ற வகைவகையான கருவிகளைப் படைத்தனர்.
  • தானியங்களை உடைக்க, அரைக்க, அம்மிக் கற்களையும், குழவிகளையும், கல் சட்டிகளையும் பயன்படுத்தினர்.
  • நிலத்தைத் தோண்டுவதற்குக் கைக்கோடரிகளையும், கலப்பைகளையும், வேட்டையாடுவதற்குக் கவண், வில், மான்கொம்பு, மாட்டுக்கொம்பு ஆகியவற்றை போர்க் கருவிகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.

வெட்டுக் கருவிகளும், கொத்துக் கருவிகளும் பழங்கள், கிழங்குகள், மீன், இறைச்சி முதலியவற்றை உண்ணப் பயன்பட்டன. தட்டுகள், கெண்டிப்பாத்திரங்கள், உருவச் சிலைகளும், முதுமக்கள் தாழிகளும் அவர்களுடைய அரும்படைப்புகளாகும்.

வேளாண்மை

  • கால்நடைகளைப் பயன்படுத்தி வேளாண்மை செய்யப் பழகாத நிலையில் கற்கோடரி கொண்டு நிலத்தைக் கொத்திக்கொத்தியே வேளாண்மை செய்தனர். இதற்குக் “கொத்துக் காட்டு வேளாண்மை” என்று பெயர். 
  • காடுகளை மேய்ச்சல் நிலங்களாக மாற்றினர்குறுங்காடு, பெருங்காடுகளைத் தீயிட்டு அழித்து வேளாண்மைக்காக நிலத்தைப் பயன்படுத்தினர். அதனால் இதற்குக் கொல்லை என்று பெயர். இதனை “ காட்டெரிப்பு வேளாண்மை” என்றும் கூறுவர்.
  • பருவ மாற்றத்துக்குத் தக்கபடி ஒருமுறை கிழங்குகளையம், மறுமுறை வேறு வகைப் பயிர்களையும் விளைவித்தனர். இதற்குப் “பயிர் மாற்று வேளாண்மை” என்று பெயர்.

பிற தொழில்கள்

  • மரத்தாலும், கல்லாலும் ஆன பொருட்கள் செய்தனர்.
  • விலங்குகளின் தோல்களைப் பதப்படுத்தித் தோல் ஆடைகள் செய்தனர்.
  • கால்நடை வளர்த்தல், பயிரிடுதல் போன்ற தொழில்களைச் செய்தனர்.
  • மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஆடு, மாடு, கோழி, எருமை போன்ற கால்நடைகளைத் தங்கள் வாழ்விடங்களில் இருக்கும்படி பழக்கினர்.
  • கால்நடைகளின்வழி பால், தயிர்,  நெய், இறைச்சி ஆகிய உணவு வகைகளைப் பெற்றனர்.

இருப்பிடங்கள்

புதிய கற்கால தமிழர்கள் பயிர்த்தொழில் செய்ய அறிந்து கொண்டதால் கால்நடைகளை வளர்ப்பதற்காகவும், தானியங்களை விளைவிப்பதற்காகவும், அவற்றை காப்பாற்றுவதற்காகவும் நிலையாக ஓர் இடத்தில் தங்க வேண்டிய தேவை உருவானது. அதன் அடிப்படையில் சிறிய மலைகள் அல்லது மலையின் அடிவாரத்தில் வீடுகளை அமைத்து வாழ்ந்தனர். மக்கள் தொகை பெருகப் பெருக வீடுகள் பெருகின. இப்படி சேர்ந்த இடம் ஓர் ஊர் ஆகியது. இவ்வாறு பல ஊர்கள் தோன்றின.

மரக்கம்புகளை நட்டு அதன் மேல் புல்லால் கூரை வேய்ந்தனர். வீட்டின் சுற்றுச் சுவரை மண்ணாலும், மண் சேறு பூசியும் மெழுகிக் கொண்டனர்.  தரையில் தட்டைக் கற்களைப் பதித்துக் கொண்டனர். வீட்டுக் கூரையின் உச்சியில் மழைநீர் விழுவதைத் தடுக்க மண்குடத்தைக் கவிழ்த்துக் கொண்டனர். இவ்வாறு வீடுகளைக் கட்டத் தெரிந்த காலமே கட்டடக் கலையின் தோற்றம் என்று கூறலாம்.

வீட்டுத் துணைவன்

நாய் அவர்களுடைய வேட்டைத் துணைவனானது. வெள்ளாடு, செம்மறி, பசு, எருமை ஆகியவை அவர்களுடைய வீட்டுத் துணைவர்களாயின.

உணவுகள்

காய்கனிகள், தேன் ஆகிய இயற்கை உணவுகளையும், ஆடு, மாடு, மான், முயல் கோழி உடும்பு போன்றவற்றின் இறைச்சியையும், வரகு தினை போன்ற தானியங்களையும், அவரை துவரை போன்ற பயிர்களையும், கொள்ளு, வரகு பச்சைப்பயிறு ஆகிய தானியங்களையும் உணவாக உண்டனர்.

உடைகள்

மர உரி போன்ற நார் ஆடையையும், ஆட்டு மயிர்க் கம்பளியையும் முதலில் கை பின்னலாக நெய்து உடுத்திக் கொண்டனர். உறங்குவதற்கு ஓலைப் பாயையும், மூங்கில் பாயையும் முடைந்து கொண்டனர். வேட்டையாடிய விலங்கின் தோலை நன்கு பதப்படுத்தித் தங்களுக்குத் தேவையான தோல் ஆடைகளை உடுத்தினர்.

அணிகலன்கள்

நுண்ணிய கல்மணிகளையும் சங்கு மற்றும் எலும்பால் ஆன வளையல்களையும் கழுத்தணிகளையும் அணிந்தனர். வேட்டையின்போது கைப்பற்றிய புலியின் நகம் பல் போன்றவற்றையும் அணிகலன்களாக அணிந்தனர். ஆற்றின் கூழாங்கற்களைக் கொண்டு கோலிகள், தாயத்துகள் செய்யப்பட்டன.

பொழுதுபோக்கு

வீட்டுச் சுவற்றின் மேல் வேட்டை நிகழ்ச்சிகளையும், நாட்டியக் காட்சிகளையும் ஓவியங்களாகத் தீட்டினர்.

பழக்க வழக்கங்கள்

சந்தனக் குழம்பாலும், வண்ணச் சாந்தாலும், ஆண், பெண் இருபாலரும் மேனி முழுவதும் பல்வேறு ஓவியங்களை வரைந்து கொண்டனர். நிலையாக இருக்கும் வண்ணம் பச்சைக் குத்திக் கொள்வதும் வழக்கமாக இருந்துள்ளது.

நம்பிக்கைகள்

வேளாண்மை செய்ய மழை இன்றியமையாதது என்பதால் மழையைத் தெய்வமாக வணங்கினர். இறந்தவர்கள் மீண்டும் வேறு உயிர் பெறுவதாக நம்பி இறந்தவர்களை வழிபட்டனர்.

இறந்தவர்களைப் புதைத்தல்

புதிய கற்கால மனிதர்களின் அரும் படைப்புகளுள் ஒன்று முதுமக்கள் தாழி. இறந்தவர்களைத் தாழிகளில் வைத்துப் புதைத்தனர். இறந்தவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் சேர்த்துப் புதைக்கப்பட்டன.

தொடர்பு மொழி

பழைய கற்கால மனிதர்கள் இயற்கை மொழியால் ஒருவர்க்கொருவர் தொடர்பு கொண்டனர். புதிய கற்கால மனிதர்கள் செயற்கை மொழி நிலைக்கு வளர்ச்சி பெற்றனர். பழைய கற்காலத் தமிழர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்வதற்காகத் தோன்றிய சுட்டு ஒலிகள் புதிய கற்காலத்தில் தனித் தனிச் சொற்களாக வளர்ச்சி பெற்றிருந்தன. செயற்கை மொழியானது,

  • அசைநிலை (, உள், பல், யா உண்),
  • புணர்நிலை (பெரு + மகன் = பெருமகன்),
  • கொளுவு நிலை (வரு + உத்து + வி = வருத்துவி),
  • பகுசொல் நிலை (பெம்மான் - பெருமகன் - பிரான்)

என்ற நிலைகளைப் புதிய கற்காலம் முடியும் முன்னரே கண்டறிந்துள்ளனர்.

புதிய கற்காலத்தின் முடிவில்

புதிய கற்காலத்தின் முடிவில் உலோகங்களும், செம்பால் ஆன கருவிகளும் கண்டு பிடிக்கப்பட்டன. வேளாண்மைப் பொருளாதாரம் வாணிபப் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறியது. பண்டங்களின் உற்பத்திப் பெருக்கம், பண்டங்களை மாற்றும் வழக்கம் ஆகியவை வாணிபத்தை விரிவடையச் செய்தன. ஆற்றுப்படுகை நகர நாகரிகத்தை மனித சமூகம் கண்டது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக