திணை வாழ்வியல்
தமிழகத்தின் வரலாற்றுக் காலம் என்று சங்ககாலத்தைக் குறிப்பிடலாம். இக்காலத்தில்
தமிழரின் நாகரிகம் முழு வளர்ச்சி பெற்றிருந்தது. சேரர்,
சோழர், பாண்டியர் என முப்பெரும் மன்னர்கள்
ஆட்சி செய்தனர். பாண்டியரின் தலைநகரம் மதுரை. சேரசர்களின் தலைநகரம் வஞ்சி. சோழர்களின் தலைநகரம்
காவிரிப்பூம்பட்டினம் (புகார், பூம்புகார்).
தமிழ் மொழி பேசியோர் தமிழர் என்று அறியப்பட்டனர். தமிழ்நாடு,
தமிழ்மொழி, தமிழர் இனம் என இம்மூன்றும்
தமிழரின் நாகரிகத்தின் அடிப்படைத் தத்துவமாக விளங்குகின்றது. இதனை சங்க இலக்கியங்கள் விளக்குகின்றன. சங்க
இலக்கியங்களின்வழி தமிழரின் பண்பாட்டையும், வரலாற்றையும்
அறிந்து கொள்ள முடியும்.
ஐந்திணை
வாழ்வியல்
தாம் வாழும் நிலத்திற்கு ஏற்ப மக்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும்
நாகரிகமும் அமையும் என்பது தமிழரின் தலைசிறந்த கொள்கை. சங்க கால மக்கள் ஐந்திணைகளின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை
வடிவமைத்துக் கொண்டனர். இடமும் காலமும் அத்திணைகளுக்குரிய முதற்பொருளாகவும்,
நிலத்தைச் சுற்றியுள்ள இயற்கைப் பொருட்களைக் கருப்பொருளாகவும்,
தங்கள் வாழ்க்கையின் அமைப்பைக் கூறும் செய்திகளை உரிப்பொருளாகவும்
வகுத்துக் கொண்டனர்.
நிலங்களுக்குக் குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல் என்று பெயரிட்டுள்ளனர். இவை நானிலம் எனப்பட்டன. இதில் பாலை என்பது இயற்கை வளம் சிதைந்த குறிஞ்சியையும், முல்லையையும் குறிக்கின்றது. இதில் நீர்வளம்
குன்றினால் நிலங்களின் இயற்கை வளம் பிரிந்து போகும். அதனால்
இதன் உரிப்பொருள் பிரிதல் என வகுக்கப்பட்டது.
ஐந்திணைகளுக்குரிய
முதற்பொருள்
நிலமும் பொழுதும் முதற்பொருளாகும். நிலம் ஐவகையாகப் பிரிக்கப்பட்டது போல
பொழுதும் சிறுபொழுது, பெரும்பொழுது என இரண்டு வகையாகப்
பிரிக்கப்பட்டது.
சிறுபொழுதுகள் – ஒரு நாளின் ஆறு
பகுதிகள் - காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை.
பெரும்பொழுதுகள் – ஓர்
ஆண்டின் ஆறு பகுதிகள் - கார், கூதிர் (குளிர்), முன்பனி, பின்பனி,
இளவேனில், முதுவேனில்
கருப்பொருள்கள்
சங்க கால மக்கள் கருப்பொருட்களை 13 வகையாகப் பிரித்துள்ளனர். அவை,
தெய்வம், மக்கள், உணவு,
விலங்கு, பூ, மரம்,
பறவை, ஊர், நீர்,
பறை, யாழ், பண், தொழில் ஆகியனவாகும்.
உரிப்பொருள்
மக்கள் உழைத்துப் பொருளீட்டுவர். காதலிப்பர், மணந்து
கொள்வர், இல்லறம் ஏற்று இன்பம் துய்ப்பர். இவ் ஒழுக்கங்களுக்கு உரிப்பொருள் என்று பெயர்.
அகம்
- புறம்
ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் கண்டு, காதலித்து,
மணந்து, இல்லறம் நடத்துவதை அகம் என்றும்,
அன்றாட வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, போர் வாழ்க்கை ஆகியவற்றில் ஈடுபடுவதை புறம் என்றும் பொருள் இலக்கணம்
கூறுகின்றது. இவை அனைத்தும் இயற்கையுடன் இணைந்த தமிழரின்
பண்பாடாகும். இதுவே திணைக்கோட்பாடு என்றும், திணை வாழ்வியல் என்றும் கூறப்படுகின்றது. இதனை,
- களவு வாழ்க்கை
- கற்பு வாழ்க்கை
- உணவு
- அணிகலன்
- வாணிகம்
- விளையாட்டு
என ஆறு நிலைகளில் ஆராய்ந்து அறியலாம்.
1.களவு
வாழ்க்கை
ஒத்த தன்மைகள் கொண்ட ஒருவனும் ஒருத்தியும் தமக்குள் காதல் கொண்டு இன்புறும் ஒழுக்கத்தினை அகம் என்றனர். பிற வாழ்வியல் கூறுகளைப் புறம் என்றனர். அகத்தில் காதல் மலர்கின்றது. புறத்தில் வீரம் சிறக்கின்றது. ஆண், பெண் விருப்பத்தினால் அகத்திணை உண்டாகின்றது. மண், பொன், பசி, பொருள் ஆசையால் புறத்திணை உண்டாகின்றது. இவ் இரண்டின் அடிப்படையிலேயே இலக்கியமும் தோன்றின.
அகப்பொருள் இலக்கணத்தில் காதலனைத் தலைவன் என்றும், காதலியைத் தலைவி என்றும் அழைப்பது மரபு. அகத்திணை காதல் வாழ்க்கை களவு, கற்பு என இருவகைப் படுத்தப்பட்டுள்ளது. யாரும் அறியாத வகையில் ஒரு பெண்ணும், ஆணும் காதல் கொள்வது களவு என்று கூறப்படுகின்றது. இவர்களுடைய திருமணம் எந்த இடையூறும் இன்றி நடைபெற காதலனின் தோழனும்,
காதலியின் தோழியும் துணை நிற்பர்.
மடலேறுதலும் உடன்போக்கும்
தலைவியின் பெற்றோர் தலைவியைத் தனக்கு மணம் செய்து கொடுக்காதபோது தலைவன்,
பனங்கருக்கினால் குதிரை ஒன்றை
செய்து அதன்மேல் அவன் ஏறி அமர்ந்து தன் காதலியின் வடிவம் தீட்டிய கொடி ஒன்றைத் தன் கையில் ஏந்திக் கொள்வான். இந்த ஊர்தியைத் தெருத்தெருவாக இழுத்துச் செல்லும்போது உடலில் குருதி வெளிப்பட, பெண்ணின் பெற்றோர் அவனுக்கே அப்பெண்ணை மணம் முடித்துக் கொடுப்பர். இந்நிலையை மடலேறுதல் என்று குறிக்கின்றனர். பெண்கள் மடலேறும் வழக்கம் இல்லை. பிற்காலத்தில் திருமங்கையாழ்வார் தலைவி ஒருத்தி பிரிவாற்றாமையால் மடலேறியதாகப் புதுமையாகப் பாடியுள்ளார்.
பெற்றோருக்குத் தெரிந்த பின்பு, தங்கள் காதல் நிறைவேறாதோ என்ற அச்சத்தில் தலைவனும் தலைவியும் உடன்போக்கில் ஈடுபடுகின்றனர். அவர்களின் உறுதியைக் கண்டு பெற்றோர் திருமணம் முடித்து வைப்பதும் உண்டு. களவு ஒழுக்கம் இரண்டு மாத காலத்துக்கு மேல் நீடிக்கக்கூடாது என்பது
இலக்கணம் கூறும் செய்தி ஆகும்.
2.கற்பு வாழ்க்கை – திருமண நிகழ்வு
அகத்திணையுள் திருமண வாழ்க்கை கற்பு எனப்படுகின்றது. தலைவன் தலைவி இருவரின் பெற்றோர்களும் திருமணத்திற்கு உடன்பட்டு, நல்ல நாளில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்வர்.
தீயகோள்கள் விலகி சந்திரனும் ரோகிணியும் கூடியிருக்கும் நாளில் விடியற்காலையில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடைபெறும் நாளில் வீடுகளில் புதுமணல் பரப்பி, மணப்பந்தல் அமைக்கப்பட்டு, மாலைகள் தொங்க விடப்பட்டன.
குழந்தைகளைப் பெற்றெடுத்த மகளிர் நால்வர் தண்ணீரில் நெல்லையும், மலர்களையும் இட்டு மங்கல நீரால் மணமக்களை நீராட்டினர். இச்சடங்கு வதுவை நன்மணம் என்று குறிக்கப் பெறுகின்றது.
“கற்பினின்று வழுவாது பெருமையுடைய மனைக்கிழத்தி ஆகுக” என்று அம்மகளிர் வாழ்த்தினர். பெற்றோர் “பெரிய ஓர் இடத்துக்குக் கிழத்தி ஆவாய்” என்று வாழ்த்துவர்.
உளுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த உணவை விருந்தினர்க்குப் பரிமாறினர். இறைச்சியும் நெய்யும் கூட்டி ஆக்கிய வெண்சோற்றையும் வழங்கினர்.
திருமணம் நடைபெறும் முன்னர் கடவுள் வழிபாடு நடைபெற்றது. மணமுழவு முழங்கியது.
வெண்மையான நூலில் வாகை இலைகளையும், அறுகம்புல் கிழங்குகளையும் கோர்த்த மாலையை மணமகள் அணிந்து கொள்வாள்.
தாலி கட்டும் வழக்கம் சங்ககாலத்தில் இல்லை. சிலப்பதிகாரத்திலும் தாலி கட்டும் சடங்கு குறிப்பிடவில்லை. மாறாக, பெண்கள் தாங்கள் திருமணமானவர்கள் என்பதைத் தெரிவிக்க மங்கல அணி ஒன்று அணிந்திருக்க வேண்டும் என்று தெரிகின்றது.
திருமணநாள் அன்று மணமக்கள் மணவறையில் கூட்டப்பெற்றனர்.
திருமணவிழாவில் புரோகிதர் ஒருவர் அமர்ந்து மணவினைகள் புரிந்ததாகச் செய்திகள் இல்லை.
பரத்தையர் காரணமாக வந்த ஊடல்
பழந்தமிழர் பெண்ணின் கற்பைப் போற்றினர். ஆண்களுக்கு அத்தகைய கட்டுப்பாடு இல்லை. மருதநிலம் பரத்தையர் பற்றிக்கூறிக்னறது. தலைவன் பரத்தையர் பிரிவில் ஈடுபடுவான் என்றும், அப்பிரிவில் தலைவி ஊடியிருப்பாள் என்றும், தோழி, பாங்கன், பாணன், பாடினி, கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் ஆகிய அனைவரும் தலைவியின் ஊடலைத் தீர்க்க உரிமை உள்ளவர்கள் என்றும் அகப்பொருள் இலக்கணங்கள் கூறுகின்றன.
பிரிவு
திருமணமான பிறகு கணவன் தன் மனைவியைக் கல்வி கற்பதன் பொருட்டோ, பொருள் தேடுதற் பொருட்டோ பிரிவதுண்டு. கல்விக்காக ஏற்படும் பிரிவு மூன்றாடுகளுக்கு மேல் நீடிக்கக்கூடாது. மன்னனுடைய கடமைகைளை நிறைவேற்றும் பொருட்டுத் தன் மனைவியை விட்டுப் பிரிந்தால் அப்பிரிவு ஓராண்டுக்கு மேல் நீடிக்கக்கூடாது. கல்வி கற்கவும், பொருளீட்டவும், மன்னனுக்காகத் தூது செல்லவும் கணவன் பிரியும்போது மனைவி அவனுடன் செல்லும் வழக்கம் இல்லை.
மக்கட்பேறு
இல்லறத்தின் சிறப்பு நன்மக்கட்பேறு. குழந்தையைப் பெறுவது தாயின் கடமை என்றும், அக்குழந்தைக்குக் கல்வியறிவைக் கொடுத்து சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர்த்துவது தந்தையின் கடமை என்றும் புறநானூறு கூறுகின்றது.
கைம்மை நோன்பு
கணவனை இழந்த பெண் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்த்து.கைம்மை நோன்பு நோற்கும் வழக்கமும் பெண்கள் மேற்கொண்டு இருந்தனர். கைம்பெண்கள் நெய் உண்பதில்லை. தண்ணீர் சோற்றைப் பிழிந்து, அதில் அரைத்த எள்ளையும், புளியையும் கூட்டி வெந்த வேளைக் கீரையுடன் உண்பர். வெறுந்தரையில் படுப்பர். தலையை மழித்துக் கொள்வர். இவை தமிழ்நாட்டில் குடியேறிய ஆரியர்களால் பரவிய பழக்கம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
3.பண்டைத் தமிழரின் உணவுப் பழக்கம்
இனக்குழு வாழ்க்கை முறையைப் பின்பற்றிய காலத்தில் உணவுத் தேடலே முதன்மை என்பதால் கிழங்கு, காய், பழம், முதலியன உணவாகப் பயன்பட்டன. வேட்டையாடிய விலங்குகளைப் பச்சையாகவும், காட்டுத் தீயில் வெந்த விலங்குகளையும்
உணவாகப் பயன்படுத்தினர்.
அரிசியும் காய்கறிகளும்
- பண்டைத் தமிழர்கள் அரிசிச் சோற்றை சிறப்பு உணவாகக் கொண்டனர். புழுங்கலரிசி பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அரிசியை உரலிலிட்டு அதை வெளுக்கத் தீட்டியே உலையில் சமைத்தனர் (புறம்.399).
- வரகு, சாமை முதலிய சிறுதானிய அரிசி வகைகளும் பயன்பாட்டில் இருந்துள்ளன.
- சோற்றோடு காய்கறி வகைகளையும்
சமைத்து உண்பர். கடுகு தாளித்து காய்கறிகளைச் சமைத்தனர். மிளகு, உப்பு, புளி உணவில் சேர்க்கப்பட்டது.
- மாங்கனியைப் பிழிந்து சாறு எடுத்து அதைப் புளிக்க வைத்து, அதைப் பிழிந்து பயன்படுத்துவதும் உண்டு. இவை அன்றி கலாபழப்புளி, தொடரி புளி, நாவற்பழப் புளி ஆகியவையும் பயன்படுத்தப்பட்டன.
- மாதுளங்காயை அரிந்து அதனுடன் மிளகின் பொடியைக் கலந்து கறிவேப்பிலை கூட்டி, பசு வெண்ணையில் அதைப் பொரிப்பார்க்ள. வடுமாங்காய் ஊறுகாய் அக்காலத்திலேயே உண்டு. பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, சேம்பிலைக்கறி, வள்ளிக்கிழங்கு, சுட்ட பனங்கிழங்கு ஆகியவற்றையும் பண்டைய தமிழர் உண்டனர்.
- பழஞ்சோற்றை மக்கள் விரும்பி உண்டனர். அரிசி, கொள்ளுப்பருப்பு, பயற்றம் பருப்பு ஆகியவற்றைப் பாலில் கூட்டிக் கஞ்சி காய்ச்சிக் குடித்தனர். புளிக்க வைத்த மாவைக் கரைத்து புளிங்கூழ் ஆக்கிக் குடித்தனர். பல பணியாரங்கள் செய்யப்பட்டன.
- வேடர்கள் புளிச்சோறை விரும்பி உண்டமையைப் பொருநராற்றுப்படை (107) கூறுகின்றது. புளியங்காய், நெல்லிக்காய்
ஆகியவற்றை ஊறவைத்த காடியைப் பெரிதும் விரும்பினர்.
- பாலை தோய்த்து வெண்ணெய் திரட்டும் வழக்கம் அந்நாளிலேயே உண்டு. வெண்ணெயைப் பதமாகக் காய்ச்சி நெய் எடுத்து சோற்றில் வார்த்து உண்டனர்.
இறைச்சி உணவு
பண்டைத் தமிழகத்தில் ஊன் உண்ணும் வழக்கம் பரவியிருந்தது. வெள்ளாடு, செம்மறியாடு, மான், முயல், ஆமை, மீன் வகைகள், நண்டு, ஈயல், கோழி, காட்டுக்கோழி, காடை, உடும்பு முதலியவற்றின் இறைச்சியைத் தனியாகவோ, பாலும் அரிசியும் கூட்டியோ சமைத்தனர். இறைச்சியை நெய்யில் பொரித்த வழக்கம் காணப்படுகின்றது. புளித்த மோரில் ஈயலை ஊறப்போட்டுப் புளிங்கறி சமைப்பதுண்டு. நெல்லை இடித்து ஆண்பன்றிக்குத் தீனியாகக் கொடுத்து அதைக் கொழுக்க வைப்பர். அதைப் பெண்பன்றியுடன் சேரவிடாமல் தனியாகக் குழிகளில் விட்டு வளர்த்துப் பிறகு அதைக் கொன்று அதன் ஊனைச் சமைத்துத் தின்றனர். பழந்தமிழர் ஊனை உப்புக்கண்டம் போட்டுப் பயன்படுத்தி உள்ளனர். ஊன் துண்டங்களை இரும்புக் கம்பிகளில் கோர்த்து நெருப்பில் வாட்டி உண்டனர்.
கள்ளுணவு
மன்னர், பாணர், புலவர், கூத்தர், பொருநர், விறலியர் அனைவருமே கள்ளுண்டு மகிழ்ந்தமையை ஆற்றுப்படை நூல்கள் காட்டுகின்றன. இயற்கையாகக் கிடைத்த பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள் ஆகியவற்றையும், அரிசி, புளித்த சோற்றுக்காடி முதலியவற்றைக் காய்ச்சி இறக்கிய மதுவையும், யவனர்கள் கப்பலில் கொண்டு வந்த தேறலையும் அவர்கள் விருப்பத்துடன் குடித்தனர். மதுவகைகளைக் கண்ணாடிக் குப்பிகளிலும், மூங்கிற் குழாய்களிலும் நிரப்பி நெடுநாள் மண்ணில் புதைத்தனர். அத்தகைய மது வகைகளின் வெறி மிகவும் கடுமையாக இருக்கும். கள்ளுக்கு இன்சுவையும் நறுமணத்தையும் ஊட்டுவர். கள்ளுண்டவர்கள் புளிச் சுவைக்காக, களாப்பழம், துடரிப்பழம், நாவற்பழம் முதலிய பழங்களைப் பறித்து உண்டனர். கள் உண்பதால் தீமை
விளையம் என்பதைக் கருத்தில் கொண்டே அறநூல்கள் கள் உண்ணுவதை வன்மையாகக் கண்டிக்கின்றன.
4. பண்டைத் தமிழரின் அணிகலன்கள்
பண்டைத் தமிழகத்தில் மக்கள் பல்வேறு அணிகலன்களால் தம்மை அழகுபடுத்திக் கொண்டனர். ஆண்களும் பெண்களுக்கு இணையாக அணிகலன்கள் அணிந்திருந்தமையை இலக்கியச் செய்திகள் கூறுகின்றன. யவனர் ஏற்றி வந்து இறக்கிய பொன்னும், மன்னர் பகைவரிடமிருந்து கவர்ந்த பொன்னும், நாட்டில் மண்ணைத் தோண்டி அரித்து எடுத்த பொன்னும் மலிந்து கிடந்தன. முத்தும், பவளமும், இரதமணி வகைகளும், தங்க அணிகளும், வெள்ளி அணிகளும், சங்கு அணிகளும் புழக்கத்தில் இருந்தன. கை தேர்ந்த கம்மியர்கள் இவ்வணிகளைச் செய்தனர்.
மகளிர் அணிகலன்களின் வகைகள்
கால்விரல் மோதிரம், பரியகம், நூபுரம், அரியகம், பாடகம், சதங்கை, குறங்குசெறி, முத்துவடம், முப்பத்திரண்டு வடத்தாலான முத்துமேகலை, மாணிக்கமும் முத்தும் இழைத்த தோள்வளையல்கள், மாணிக்கமும் வயிரமும் அழுத்திய சூடகம், செம்பொன்வளை, நவமணி வளை, சங்கவளை, பவழவளை, வாளை மீனைப் போன்று இயற்றப்பட்ட மாணிக்க மோதிரம் ஆகிய அணிகலன்களைப் பெண்கள் அணிந்திருந்தனர் என்பதை சிலப்பதிகாரம் காட்டுகின்றது.
இவை தவிர, மோசை என்னும் மரகதக் கடைசெறி, கழுத்திலணியும் வீரச் சங்கிலி, நேர்ச்சங்கிலி, பொன்ஞாண், அரிநெல்லிக்காய் மணிமாலை, இந்திர நீலத்திடையே வயிரம் இழைத்த குதம்பை என்னும் காதணி, வலம்புரிச் சங்கு, பூரப்பாளை, தென்பல்லி, வடபல்லி ஆகிய அணிகலன்களையும் பெண்கள் அணிந்துள்ளனர். பெண்மக்கள் தம் காதுகளைத் தொங்கத் தொங்க வளர்க்கும்போது அணிந்து கொள்ளும் காதணிக்குக் குதம்பை என்றும், வளர்ந்த காதில் அணியும் காதணிக்குக் கடிப்பிணை என்றும் பெயர். நெல்லைத் தின்ன வந்த கோழிகளின்மேல் பெண்கள் தம் குழைகளைக் கழற்றி எறிவார்களாம். அக்காலத்தில் குழைகள் அவ்வளவு மலிந்திருந்தன என்பதைப் பட்டினப்பாலையின் வரிகள் (20 – 25) கூறுகின்றன.
கைவளைகளில் சிலவகை முத்தால் இழைக்கப்பட்டன. பெண்கள் கால்விரல்களில் மோதிரம் அணியும் பழக்கம் இருந்துள்ளது.
பெண்கள் அணிந்த சிலம்புகளுள் முத்தையும் மாணிக்கத்தையும் பரல்களாக இடுவது வழக்கம்.
பெண்கள் இடையில் அணிந்த பட்டிகை ஐந்து வகைப்படும். அவை, மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிசிகை என்பனவாகும்.
பெண்களின் தலைக்கோலம்
தலைக்கோலம் செய்துகொள்ளுவதில் பழந்தமிழ்ப் பெண்கள் அளவு கடந்த விருப்பதைக் காட்டி வந்தனர். அக்காலத்தில் ஒப்பனைக் கலை வியப்பூட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்திருந்தது. கறுத்து, நீண்டு நெளிந்த கூந்தலையே மிகவும் விரும்பி வளர்த்தனர் என்பதைப் புறநானூறு 147ஆம் பாடல் குறிப்பிடுகின்றது. கொண்டை, குழல், பனிச்சை, சுருள், முடி என ஐந்து வகையாகத் தலைக்கோலம் செய்து கொண்டனர். கூந்தலில் பலவகையான மலர்களைச் சூட்டிக் கொள்வர். பெண்கள் ஒப்பனைக்கு நூறுவகைப் பூக்கள் பயன்பட்டன என்பதைக் குறிஞ்சிப்பாட்டு கூறுகின்றது. மகரவாய், வகிர் என்ற தலையணிகளையும், மாணிக்கமாலையுடன் வெண்ணூலில் கோத்த மலர்களையும் பெண்மக்கள் அணிந்திருந்தனர்.
மகளிர் தம் கூந்தலுக்கு அகிற்புகை ஊட்டியுள்ளனர். கூந்தலைக் கைவிரல்களால் கோதி உலர்த்தி, அதை இரு தொகுதியாக வகிர்ந்து பின்னவிட்டுக் கொண்டனர். கண்ணாடியைத் துடைத்துப் பெண்கள் அதில் தம் ஒப்பனையைக் கண்ணுற்று மகிழ்ந்தனர். இக்காலத்தைப் போன்றே பழங்காலத்திலும் தமிழ்ப்பெண்கள் தம் கூந்தலுக்குக் களிமண் தேய்த்து முழுகும் வழக்கம் இருந்து வந்தது.
பெண்கள் கண்ணுக்கு மைதீட்டிக் கொண்டனர். மைதீட்டும் குச்சிக்குக் கோல் என்று பெயர். எப்போதும் மைதீட்டப் பெற்றிருந்தனவாதலின் பெண்கள் கண்ணை “உண்கன்“ என்று கூறுவதுண்டு.
ஆண்களின் அணிகலன்கள்
ஆண்மக்கள் மதாணி, முத்துமாலை, வெள்ளிக்கம்பியில் கோத்த பொற்றாமரை மலர்கள், கைவளையல்கள் ஆகிய அணிகலன்களை அணிந்திருந்தனர். ஆடவர் தலைமுடி வளர்த்திருந்தனர். அதைச் சுருட்டிப் பின்புறம் முடித்திருந்தனர். நெற்றிக்குமேல் குடுமி சிறிது களையப்பட்டிருக்கும். தலையில் பூச்சூடிக் கொள்வது வழக்கம். தலையில் சூடும் பூமாலைக்குக் கண்ணி என்று பெயர். குண்டலம் ஆண்களின் முக்கிய அணியாக இருந்துள்ளது.
குழந்தை அணிகலன்கள்
குழந்தைகளின் நெற்றியில் சுட்டியும், பிறையும், மூவடம் கோர்த்த பொன் சங்கிலியும் பூட்டியுள்ளனர். கழுத்தில் ஐம்படைத் தாலியும், புலிப்பல் தாலியும் அணி செய்தன. குழந்தைகளின் விரல்களில் சுறாமீனைப் போன்றும் இடபத்தைப் போன்றும் இலச்சினைகள் பொருத்தப்பட்ட மோதிரங்கள் பூட்டினர். மணிகள் உள்ளிட்ட சதங்ககைள், பொன் இரட்டைச் சரிகள் கால்களிலும், மணியும் பவழமும் கோத்த அரைஞாண் இடையிலும் அணிவிக்கப்பட்டிருந்தன. சதங்கைகளின் பூட்டு வாய்கள் தேரையின் வாய்போல் அமைக்கப்பட்டன என்று கலித்தொகைப் பாடல்கள் 84,85,86 தெரிவிக்கின்றன.
5.பண்டைத் தமிழரின் வாணிகம்
பழந்தமிழர் வாணிகத்தில்
சிறந்து விளங்கினர் என்பதற்கு பல்வேறு சான்றுகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன.
அயல்நாட்டு வரலாற்று குறிப்புகளும் இதற்குச் சான்றுரைக்கின்றன. தமிழ்நாட்டில் உற்பத்தி
செய்யப்பட்ட பொருட்கள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. உழவும் வாணிகமுமே அடிப்படைத்
தொழில்களாக விளங்கின.
வாணிகம் செய்த புலவர்கள்
கூளவாணிகன், சீத்தலைச்
சாத்தனார், பண்ட வாணிகன், இளந்தேவனார், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், இளம்பொன்
வாணிகனார், கணியன் பூங்குன்றனார், பெருஞ்சாத்தன், மதுரைத் தமிழ்க்கூத்தனார் உள்ளிட்ட
பல புலவர்கள் வாணிகம் செய்தனர் என்பதை அவர்தம் பெயர்களின் மூலமாக அறிய முடிகின்றது.
தமிழ்நாட்டினரும் அயல் நாட்டினரும்
தமிழ்நாட்டுக் கைவினைஞர்களுடன் அயல்நாட்டுத் தொழிலாளர்களும் இணைந்து பல கைவினைப் பொருட்களை உருவாக்கினர். மகத நாட்டு இரத்தின வேலைக்காரர்கள், மராட்டியக் கம்மியர், அவந்தி நாட்டுக் கொல்லர்கள், யவன நாட்டின் தச்சர்கள் ஆகியோர் தமிழ்நாட்டுக் கம்மியருடன் கூடி கண்கவரும் பொருட்களைப் படைத்தனர் என்பதை மணிமேலை குறிப்பிடுகின்றது. கோசல நாட்டு ஓவியர்களும், வத்தவ நாட்டு வண்ணக் கம்மர்களும் தமிழகத்தில் பிழைக்க வந்தனர்.
சிறந்த வாணிகம்
உடை வாணிகம், ஓலை வாணிகம், கூல வாணிகம், பொன் வாணிகம் ஆகியவை சிறப்பான வாணிகங்களாகப் போற்றப்பட்டன.
பண்டமாற்று வாணிகம்
பண்டமாற்று முறையிலே வாணிகம் நடைபெற்றது. தேன், நெய், கிழங்கு ஆகிய பண்டங்கள் மீன், நறவு ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டன. கரும்பு, அவல் ஆகியவை மானின் இறைச்சிக்கும், கள்ளுக்கும் மாறின. நெய்யை விற்று எருமை வாங்கினர். உப்புக்கு நெல் மாற்றப்பட்டது. பச்சைப் பயறுக்கு ஈடாக கெடிறு என்னும் மீன் மாற்றப்பட்டது. பண்ட மாற்று முறையில்
“குறி எதிர்ப்பு“ என்ற ஒரு முறை வழங்கி வந்தது. பண்டமாற்று முறையில் குறிப்பிட்ட பண்டத்தைக் கடனாகக் கொண்டு ஒரு காலத்திற்குப் பிறகு அதைத் திருப்பிக் கொடுக்கும் வழக்கமே குறி எதிர்ப்பு ஆகும்.
வணிக மக்களின் பண்பு
வணிகர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடித் தம் பண்டங்களை பல ஊர்களுக்கு விற்பனை செய்ய எடுத்துச் செல்வர். இக்குழுக்களுக்கு வாணிகச் சாத்துகள் என்று பெயர். கள்வர்களுக்கு அஞ்சி அவர்கள் கூட்டமாகச் செல்வர். வணிகச் சாத்துகள் கழுதையின் மேல் மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்லும்போது அவற்றுக்குச் சுங்கம் செலுத்தினர்.
கீழைக் கடற்கரையிலிருந்து மதுரைக்குக் கப்பலில் அகில் முதலிய நறுமணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. குதிரைகளை மரக்கலங்களில் ஏற்றி வந்த யவனர்கள் அதே மரக்கலங்களில பொன் அணிகலன்களையும், புளி கருப்பட்டி சேர்ந்து பிசைந்த தீம்புளி என்ற பண்டத்தையும் (தீம்புளிப் பாகல்), மீனையும், உப்பையும், தத்தம் நாட்டுக்கு ஏற்றிச் செல்வர்.
தங்கக்காசுகள்
அயல்நாட்டு வாணிகத்தில் தங்க நாணயங்கள் வழக்கில் இருந்தன. கணம் என்றொரு பொற்காசு சங்க காலத்தில் இருந்தது. மன்னர்கள் புலவர்களுக்குப் பொற்காசுகளைப் பரிசுகளாகக் கொடுத்தனர். பெண்கள் பொற்காசுகளை மாலையாகக் கோர்த்து அணிந்து கொண்டனர். அக்காலத்தில் இரும்புக்கும் பொன் என்று பெயர் வழங்கப்பட்டது.
அளவைகள்
வாணிகத்தில் பலவகையான அளவைகள் வழங்கி வந்தன. எடுத்தல் அளவை சிலவற்றுக்குக் கழங்கு, கழற்சிக்காய் என்று பெயர். எண் என்னும் சொல் எண்ணையும் கணிதத்தையும் குறித்தது. இலட்சம் என்ற பேரெண்ணையும்
நூறாயிரம் என்றே குறிப்பிட்டனர். நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை, நீட்டல் அளவை ஆகியவற்றுக்கும் சங்க இலக்கியத்தில் சொற்கள் காணப்படுகின்றன.
உழவுத்தொழில்
சங்க இலக்கியங்களில்
நீர் மேலாண்மை, நில மேலாண்மை குறித்த செய்திகள்,
தமிழகத்து மக்கள் உழவுத்தொழிலில் சிறந்து விளங்கியமையைக் காட்டுகின்றது. ஒரு பெண் யானை
படுக்கும் அளவுள்ள இடத்தில் ஏழு ஆண் யானைகளுக்கு அளிக்கப்படும் தீனி அளவு நெல் விளையும்
செழுமையுடைய சோழ நாட்டைக் குறித்துப் புலவர்கள் பாடியுள்ளனர். நெல், கரம்பு, தென்னை,
வாழை, மஞ்சள், இஞ்சி, பருத்தி ஆகியவை தமிழகம் எங்கும் விளைந்தன.
6. பழந்தமிழரின் விளையாட்டுகள்
பழந்தமிழர் வேட்டைப் பயிற்சியையே விளையாட்டாக அமைத்துக் கொண்டனர். தொல் குடி விளையாட்டுகளில் வில் எறியும் போட்டியம், வேல் எறியும் போட்டியும் முதன்மையானதாக இருந்துள்ளன. வளைத்தடி வீசி விளையாடுவதும் போட்டியாகக் கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தைகள் விளையாட்டு
- குழந்தைகள் மணல் வீடு கட்டி விளையாடினர்.
- முச்சக்கரத் தேர் ஓட்டினர்.
- பொம்மை வைத்தாடுதல், மடுவில் குதித்து மூழ்கி மண் எடுத்து விளையாடுதல் போன்ற விளையாட்டுகளை விளையாடினர்.
- குழந்தைகளுக்கு அம்புலி காட்டி விளையாடுவதுமுண்டு.
- பவழப் பலகைமேல் இரு யானைப் பொம்மைகள் ஒன்று மற்றொன்றைக் குத்துவதைப்போலச் செதுக்கப் பொருத்தி வைத்து விளையாடினர் என்பதைக் குறுந்தொகை 61ஆவது பாடல் காட்டுகின்றது.
சிறுவர் விளையாட்டு
சிறுவர்கள் நீர் மடுவில் துடும் எனக் குதித்து மூழ்கி மண்ணை எடுத்து வந்து கரை மேல் நின்ற சிறுமியருக்கு வியப்பூட்டி மகிழ்வர்.
சாதாரண மக்களின் விளையாட்டு
கட்டங்கள் அமைத்து, வட்டாடுவதையும், கால் பந்தாட்டத்தையும் சாதாரண மக்கள் விளையாடினர். ஆடவரும் பெண்டிரும் ஆறுகளிலும் குளங்களிலும் புனலாடி மகிழ்ந்துள்ளனர்.
ஆண்களின் விளையாட்டுகள்
- இளைஞர்கள் ஏறு தழுவி விளையாடியுள்ளனர்.
- ஆண்கள் வாள் பயிற்சி, சிலம்பப் பயிற்சி, மல்யுத்தப் பயிற்சி போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவதோடு சடுகுடு விளையாடும் பழக்கமும் இருந்துள்ளது.
- விலங்குகளைக் கருவியாகக் கொண்டு நடத்தப்படும் போட்டிகளான கடாப்போர், கோழிப்போர், ஏறுதழுவல் ஆகிய விளையாட்டுகள் ஆண்களின் விளையாட்டில் முக்கியத்துவம் பெற்றன.
- மன்னர்களுக்கு வேட்டையாடுதல் பொழுதுபோக்காக இருந்துள்ளது.
- நாட்டுப்புறங்களில் உறியடித்தலை ஒரு விளையாட்டாக விளையாடியுள்ளனர்.
பெண்களின் விளையாட்டுகள்
- பந்துகளைக் கொண்டு கழங்காடுதல் பெண்களின் விளையாட்டாகும்.
- பாவைகளை வைத்தாடும் ஓரை என்ற விளையாட்டு முக்கியப் பொழுது போக்காகும்.
- மணற்பாவை வனைந்து விளையாடினர். இது வண்டலிழைத்தல் எனப்பட்டது.
- தண்ணீரில் பாய்ந்து நீராடி விளையாடுவதுண்டு.
- அம்மானை, ஊசல் ஆகியனவும் பெண்களின் விளையாட்டுகளாகும்.
- விளையாடும்போது வரிப்பாட்டு பாடுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக