ஜெயகாந்தன் – வாய்ச்சொற்கள்
சத்திரத்துத் திண்ணையில் கவிந்திருந்த இருளில் யாருடைய
வருகைக்காகவோ – யாருடைய காலடிச் சத்தத்தைக் கிரகிப்பதற்காகவோ – தன் காதுகளை வழி மீது
வைத்துக் காத்திருக்கிறாள் ருக்குமணி.
அந்தச் சத்திரம் ஊருக்கு வெளியே – கிராமத்தின் எல்லையில்
தலைகாட்டிவிட்டுப் பிறகு திசை மாறிச் செல்லும் – டிரங்க் ரோடின் ஓரத்தில் ரொம்ப காலம்
வாழ்ந்து இப்போது பாழடைந்து கிடக்கிறது.
பகல் நேரத்தில் அந்தச் சத்திரத்தின் அருகே இருகு்கும்
ஆலமரத்துப் பிரதேசம் மிகவும் கலகலப்பாக இருக்கும். வழிப்போக்கர்களும் பஸ் பிரயாணிகளும்
சத்திரத்துக்கு நேர் எதிரே இருக்கும் அரசங்குடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வரும் ரயில்
பிரயாணிகளும் அங்கு வந்து சாப்பிடுவதற்கும், இளநீர் குடிப்பதற்கும் வசதியாய் ஒரு டீக்கடை
உண்டு. அந்த டீக்கடையும் வெற்றிலை பாக்குக் கடையும் இரவு நேரத்தில் சத்திரத்துக்குப்
பின்னால் பர்லாங்கு தூரத்தில் உள்ள பொட்டைத் திடலில் அமைந்திருக்கும் டூரிங் டாக்கீஸ்
கொட்டகை அருகே வியாபாரம் செய்தவற்காக ஆலமரத்துப் பிரதேசத்தைக் காலி பண்ணிவிட்டுப் போய்விடும்.
பகலில் ஆலமரத்தடியில் முறுக்கு மசால்வடை விற்கும்
முனியம்மாளிடம் புகையிலை அடைத்த வாயோடு சிரித்துச் சிரித்துக் கதை பேசியவாறு கூடைகள்
முடைவதிலும் தடுக்குகள் பின்னுவதிலும் பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பாள் ருக்குமணி.
அவளருகே ஒரு கட்டுப் பனை ஓலையும், மூங்கில் கம்புகளும் இருக்கும். அநேகமாக எப்பொழுதும்
அவளைச் சுற்றி ஒரு கூட்டம் அவள் கூடை முடைவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
யாருடன் என்ன பேசிக் கொண்டிருந்தாலும் அவள் விரல்கள் ஓய்வில்லாமல் பின்னிக் கொண்டே
இருக்கும். அவள் கையிலிருக்கும் அந்தக் கத்தி.. மூங்கிலைப் பிளக்கும்போதோ, ஓலைகளைக்
கிழிக்கும்போதோ சற்றே விரல் மீது பட்டால்போதும்! இரண்டு துண்டுதான். அத்தனை கூர்மை.
ஆனால் அவள் ஒரு போதும் லேசாகக்கூட விரல்களை வெட்டிக் கொண்டதில்லை. அவளுக்கு விரலில்
கண் உண்டு. விரலில் மட்டும்தானா? செவியில், நாவில், உடலெங்கும் கண்கள்தான். ஆனால் முகத்தில்
எல்லோருக்கும் கண்கள் இருக்கின்ற இருக்க வேண்டிய இடத்தில் இமைகள் மட்டுமே..
அவள் பிறவிக் குருடு.
பத்து வருஷங்களுக்கு முன் பத்து வயதுச் சிறுமியான
ருக்குமணியை அழைத்துக் கொண்டு ஆலமரத்துச் சத்திரத்தில் குடிபுகுந்த செங்கேணி என்கிற
நெல்லிக் குப்பத்தான், தன்னைத் தவிர வேறு ஆதரவு இல்லாத ருக்குமணியின் எதிர்காலத்தைப்
பற்றி மிகவும் கவலைப்பட்டு “இந்தாம்மா ருக்கு.. நீயோ கண்ணில்லாத கொழந்தை..எனக்குப்
பிறகு ஒனக்கு யாரும் ஆதரவு கிடையாது. கண்ணே இல்லாத ஒனக்கு யாரு இருந்து என்ன பிரயோசனம்.
அவங்களுக்கு நீ சொமையாத் தான் இருப்ப. நாளைக்கி இந்தக் கிழவன் மண்டையெப் போட்டுட்டா,“ஐயா
கண்ணில்லாத கபோதிங்க”ன்னு நீ கையேந்தக்கூடாது. கஷ்டப்பட்டு இந்தத் தொழிலைக் கத்துக்க..
உசிர் உள்ளவரைக்கும் கால் வயித்துக் கஞ்சியாவது குடிக்கலாம்” என்று தினசரி புலம்பிப்
புலம்பி அவளது சின்னஞ்சிறு விரல்களுக்கு ஒரு தொழிலைப் பழக்கிக் கொடுத்திருந்தான்.
ருக்குமணிக்குப் பகலெல்லாம் ஆலமரத்தடியில் தொழில்.
டீக்கடையில் சாப்பாடு. இரவில் ஜனசந்தடி அடங்கிக் கடைகள் அனைத்தும் இடம் மாறிய பின்
சத்திரத்துக் தனிமையில் படுக்கை. இருளும் தனிமையும் தானே அவளுக்குப் பழக்கமானவை. அவளுக்குப்
பயம் தெரியாது. இருட்டில் தனியாய் இருந்தால் என்ன? இன்னொருவர் துணையுடன் இருந்தால்
என்ன? ஆனால் போன வாரத்தில் ஏதோ ஒரு நாள் இரவில் பேச்சுத் துணையாக இருந்த அவன் – கண்ணப்பன்
– அதன் பிறகு வரவே இல்லை. அதன் பிறகு அவளுக்கு இந்த இருளும் தனிமையும் பயம் தராவிட்டாலும்,
வெறுப்பைத் தந்தன.
இன்று முன்னேரத்திலேயே ஏதேதோ நினைத்துக் கொண்டே
படுத்து உறங்கிப்போன ருக்குமணி ஒரு கனவு கண்டு திடீரென்று விழித்துக் கொண்டாள்.
கனவா?
ஆமாம். பிறவிக் குருடியும் கனவு காண முடியும். தூக்கமும்
விழிப்பும் இருக்கிறதே, கண்கள் இல்லாதிருந்தும் கனவு மட்டும் இல்லாதிருக்குமா? ஆனால்
அவளது கனவுகள் ஒலி மயமானவை..சப்த ஜாலங்கள் தான். யாராருடைய குரல்கள் எல்லாமோ கேட்கும்.!
குரலும் மெய்யுணர்வும் தான்.. குரலைக் கொண்டுதான் ஆட்களைக் காணமுடியும் அவளுக்கு. தாத்தா
செங்கேணிக் கிழவன் சில சமயங்களில் கனவில் வந்து ஆதரவோடு தலையைத் தடவிக் கொண்டு கொஞ்சுவார்.
இன்றைக்கு அவள் புதுவிதமான கனவு ஒன்று கண்டாள்…
தூரத்திலிருந்து மெல்லெனப் புல்லாங்குழலின் நாதம்…கொஞ்சம்
கொஞ்சம் அருகே நெருங்கி ஒலித்தும், திடீரென விலகி மெல்லன மங்கியும், சப்த விளையாட்டு!
அந்த ஜாலம் அதிகமாகி, பிறகு மறைந்த பின் காதருகே நெருங்கி கணீரென்ற குரலில்,“ஞானக்
கண் ஒன்று இருந்திடும் போதினிலே”.. என்ற பாட்டு!
“யாருடைய குரல்“? என்று சந்தேகம் பிறக்கவே இல்லை.
ஆமாம்.. கண்ணப்பாதான் வந்திட்டியா, ஏன் நீ அன்னிக்கு
அப்புறம் வரவே இல்லை… புல்லாங்குழல் செஞ்சுட்டியா… எனக்குப் பயமா இருந்திச்சு. நீ எங்கே
வராமலே இருந்துடுவியோன்னு. இந்தக் குருடியைக் கட்டிக்கிட்டு நாம்ப எதுக்கு அழணும்னு
போயிட்டீயோன்னு நெனச்சேன்..கண்ணப்பா நீ வந்துட்டியா? என்று அவன் முகத்தை, தலையை, தோளை,
மார்பெல்லாம் தடவித் தடவி மகிழ்கிறாள்.
குருடியா..யார் குருடி? என்று கேட்டுவிட்டு மறுபடியும்
பாடுகிறான் அவன், உள்ளங்கைகளில் அவள் முகத்தை ஏந்திக் கொண்டு….
“ஆன பிருந்தாவனமும் அதோ தெரியுதே, ஆனந்தக் கண்ணன்
உருவம் அதோ தெரிவதாலே..” என்ற கண்ணப்பனின் இனிமையான குரல் அவளைச் சுற்றிலும் சூழ்ந்து
முழங்குகிறது.
“எங்கே தெரியுது? கண்ணப்பா…கண்ணப்பா.” என்று அழைக்கிறாள்.
– விழிப்பு! யாரையும் காணோம்.
தூரத்தில் டூரிங் டாக்கீஸில் பாண்டு வாத்திய இசைதான்
ஒலிக்கிறது.
“இன்னம் நேரம் ஆகலே….ஆட்டம் ஆரம்பிக்கலியே.”
“இன்னைக்காவது கண்ணப்பன் வருமா.” என்ற யோசனை, ஏக்கம்!
அதன் பிறகு அவளுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை.
அரசங்குடி ரயில்வே ஸ்டேஷனில் இரவு பத்து மணிக்குக்
கடைசிப் பாசஞ்சர் வரும். இரண்டு நிமிஷத்திற்கும் குறைவாகத்தான் நிற்கும். போகும்போது
ஷ்டேஷனில் உள்ள வெளிச்சத்தைக் கூட வாரிச் சுருட்டிக் கொண்டு போய்விடும். ஆலமரப் பொந்திலிருந்து
ஆந்தைகள் அலறும். சுடுகாட்டிலிருந்து நரிகள் ஊளையிட ஆரம்பிக்கும். சில சமயங்களில்,
டிரங்க் ரோடில், சத்திரம் அதிர்வதுபோல் பேரிரைச்சலிட்டுக் கொண்டு லாரிகள் ஓடும். டூரிங்
டாக்கீஸில் ஆட்டம் ஆரம்பிப்பதற்காகப் பாண்டு வாத்தியம் முழங்கும்.
ஒரு வாரத்துக்கு முன் இந்த இரவு நேரச் சப்தம் எதுவும்
காதில் விழாதவாறு, திடீரென்று பெருகி வந்த கோடை மழை ஒரு மணி நேரம் விளாசி நின்ற பிறகு,
சத்திரத்துக் கூரையிலிருந்தும் திண்ணையோரமாய் மண்டியிருந்த அரளிச் செடியின் இலைகளிலிருந்தும்,
சொட்டுச் சொட்டாய் நீர் முத்துக்கள் பூமியில் தேங்கி நின்ற நீர்க்குட்டத்தில் விழுந்து
எழுப்பும் ஓசையில் லயித்தவாறு புடவைத் தலைப்பால் போர்த்திக் கொண்டு அவள் உட்கார்ந்திருந்தபோது
மழையில் நனைந்து வந்த நாய் ஒன்று ஆதரவோடு அவள் காலடியில் உரசிக்கொண்டு படுத்ததும்,
மூலையில் கிடந்த மூங்கில் கம்பை எடுத்து “சீ“ “ஓடு“ என்று அடித்து விரட்டினாளே..அப்போது
அவன் வந்தான்.
கொட்டுகின்ற மழையில் நனைந்து எந்தப் பக்கம் போவது
என்று புரியாமல் எதிலும் போய் மோதிக் கொள்ளக் கூடாதே என்று ஜாக்கிரதை உணர்வோடு இரண்டு
கைகளையம் முன்னால் நீட்டி இருளைத் துழாவியவாறு மெல்லத் தடுமாறிக் கொண்டே வந்தான் அவன்.
ருக்குமணி நாயை விரட்டிய சப்தம் கேட்டு, “பாரம்மா
அது? இங்கே ஒரு சத்திரம் இருக்குதாமே இதுதானா.? என்ற கேள்வியோடு சத்திரத்துப் படிகளைப்
பாதத்தால் தடவித் தடவிப் பார்த்து மேலே ஏறி வந்தான் அவன்.
“ஆமா. இதுதான் நீ எந்த ஊரு? என்று விசாரித்தாள்
ருக்குமணி.
“எனக்கு விழுப்புரம். உம்.. ஊரென்ன ஊரு? எல்லா நம்ம
ஊருதான் டிக்கட்டில்லாம ரயில்லே வந்தேன். இங்கே புடிச்சி எறக்கி உட்டுட்டான்.. இப்ப
இதான் சொந்த ஊரு. டேசன்லே ஒரு புண்ணியவான் சொன்னாரு. இங்கே சத்திரம் இருக்குதுன்னு.
இராப் பொழுதே இங்கே கழிக்கலாமில்லே” என்று கேட்டுக் கொண்டே நனைந்திருந்த சட்டையை அவிழ்த்துப்
பிழிந்து தலையைத் துடைத்துக் கொண்டான்.
“ராப்பொழுதென்ன? நாளு பூராத்தான் இரேன். யாரு கேக்கப்போறா?
என்று ரொம்ப அசுவாரசியமாகப் புகையிலையைத் திருகி வாயிலிட்டுக் கொண்டு சுவரோரமாகச் சாய்ந்து
உட்கார்ந்தாள் ருக்குமணி.
அவன் தூணில் சாய்ந்து கொண்டு மடியிலிருந்து ஒரு
பீடியை எடுத்துப் பற்ற வைப்பதற்காகத் தீக்குச்சியை உரசினான்.
தீக்குச்சியிலிருந்து எழுந்து பீடிக்குத் தாவிய
நெருப்பின் மங்கிய வெளிச்சம். இருவரும் பார்கக் முடியாத இருவர்தம் முகத்தையும் பாரத்துவிட்டு,
ஒரு நொடிக்குள் இருளில் மறைந்தது.
புகையையே ஆதாரமாக உட்கொள்வதுபோல் வாய் நிறையப் புகையை
இழுத்து இரண்டு “தம்“ அடித்தவுடன் குளிருக்கு இதமாக இருந்தது. மூன்றாவது இழுப்புக்கு
அந்தத் துண்டுப் பீடியின் லேபிள் கரிந்து மொடமொடவென
ஒலி எழுப்பியதும் அவன் அதை அணைத்து அடுத்த வேளைக்காகத் தீப்பெட்டிக்குள் வைத்துவிட்டு,
தீப்பெட்டியில் தாளமிட்டவாறு குஷியாகப் பாட ஆரம்பித்தான்.
“ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே”.. அந்த
அமைதியான இரவில் அவன் குரல் கணீரென்று ஒலித்தது. ருக்குமணி நிமிர்ந்து உட்கார்ந்து
பாட்டைக் கேட்டாள். பாட்டும், பாடுகின்ற குரலும் அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
அவன் தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தான். பாட்டு
முடிந்ததும் தொண்டையைச் செருமினான். அந்தச் செருமலைக் கேட்டுத்தான் ருக்குமணி இந்த
உலகிற்குத் திரும்பி வந்தாள். “நீ நல்லாப் பாடுறியே.. ரொம்ப நல்லா இருந்திச்சு. இன்னொரு
பாட்டுப் பாடேன்?“ என்று கொஞ்சம் நெருங்கி வந்து உட்கார்ந்தாள்.
அவள் புகழ்ச்சி – அவள் புகழ்ந்த விதம், உணர்ச்சி
மயமாகித் தடுமாறிய குரல் – அவனுக்கு ஒரு தெம்பையும் பெருமையையும் தந்தது.
“இன்னொரு பாட்டா? உம் – கொஞ்சம் தண்ணி இருந்தா குடுக்கிறியா?
– இங்கே கிடைக்குமா?”
“தண்ணியா? அந்த மூலையிலே இருக்கு. எடுத்துக் குடியேன்
..அது சரி நீ என்ன சாதி?
படையாச்சிம்மா. எந்த மூலையில் இருக்கு தண்ணி? என்று
தரையைத் துழாவினான்.
“தோ வர்ரேன்” என்று பழகிய பழக்கத்தால் தடுமாற்றம்
சிறிதும் இல்லாமல் மூலையில் வைத்திருந்த தகர டப்பாவை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“இதோ நாங்களும் படையாச்சிதான்”.
குரல் வந்த திக்கில் இருகைகளையும் அவன் ஏந்த, அவள்
நீட்டிய தகரக் குவளை கைமாறும்போது இருவரின் விரல்களும் ஸ்பரிசித்தின.
“உம் சாதி என்ன சாதி” என்று முணுமுணுத்தான் அவன்.
“ஆமா. நீ என் டிக்கட் இல்லாம ரயில்லே வந்தே.. எந்த
ஊருக்குப் போறே” என்றாள் ருக்குமணி.
“நாலு வருசமா நா அப்படித்தான்.. ரயில்லே பாட்டுப்
பாடுவேன். சில நாளு ஒரு ரூவா கூடக் கெடைக்கும். அப்பல்லாம் விழுப்புரத்துக்கு வடக்குதான்.
தெக்கே வந்ததில்லே. அங்க இருக்கிறவங்களுக்கு என்னை நல்லாத் தெரியும். விட்டுடுவாங்க.
இவன் யாரோ ஒரு புது ஆளு எறக்கி விட்டுட்டான்.
“ஆமா ஒனக்கு ஊடு வாச பொண்டாட்டி புள்ளு ஒண்ணும்
கிடையாதா?“
அவன் அதற்குப் பதில் சொல்லாமல் சிரித்தான். வறண்ட
கைத்த சிரிப்பு. அவன் சிரித்த சிரிப்பிலிருந்து, அவன் சிரித்த தோரணையிலிருந்து,“ஒரு
வேளை ரொம்பச் சின்னப் பிள்ளையோ? இவன் கிட்ட போயி பொண்டாட்டி பிள்ளைன்னு பேசினா? என்று
நினைத்த அவளுக்கும் சிரிப்பு வந்தது. சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“ஒனக்கு என்னா வயசாச்சி”
“வயசுக்கென்ன கொறச்சல்? அது ஆகுது கழுதை வயசு?“
“நான் உன் வயசைக் கேட்டா நீ கழுதை வயசைச் சொல்றியே?
“வயசானால் போதுமா? இருவத்திரண்டு வயசாச்சு.. பெத்தவ
இல்லாம..வீடு இருந்து என்னா..வாச இருந்து என்னா? அம்மா செத்தப்பறம் சித்தாத்தாக்காரி
ஒருத்தி வந்தா…கொடுஞ் சூலி..அவளுக்கும் பிள்ளைக் குட்டின்னு ஆயிடுச்சி..அப்பாவுக்கு
நியாயாம் தெரியலை..சரி இந்த வீட்டிலே நமக்கு இன்னா இருக்குன்னு தெய்வத்தைத் துணையா
நம்பிப் பொறப்பட்டுட்டேன். வருஷம் நாலாச்சு. இன்னக்கி இங்கே இருக்கணும்னு இருக்கு.
நாளைக்கி எங்கயோ? எல்லாம் நமக்குச் சொந்த ஊருதான். எல்லாரும் நம்ம சாதிதான்.. ஒலகத்திலே
யாரை நம்பி யாரு இருக்கா? ஆனா பாரு எல்லாரையும் நம்பித்தான் எல்லாரும் இருக்காங்க”
என்று கூறிப் பெருமூச்செறிந்தான் அவன்.
“நீ ஏதாவது சாப்பிட்டியா?“
“இல்லே மடியிலே ரெண்டனா இருகு்கு..எங்கு போயி என்ன
வாங்கிச் சாப்பிடறது. இந்த வனாந்தரத்திலே?
“இந்தா.. கொஞ்சம் மல்லாக் கொட்டை இருக்கு.. தின்னுப்பிட்டு
இன்னொரு பாட்டுப் பாடு. நீ ரொம்ப நல்லாப் பாடறே” என்று கந்தல் துணியில் முடிந்து வைத்திருந்த
வேர்க்கடலையைக் கையில் கொட்டி அவன் முன் நீட்டினாள். அவன் இருளில் நீண்ட அவள் கைகைளப்
பிடித்து கடலை சிதறாமல் தன் கையில் கொட்டிக் கொண்டான்.
“சரி என்னா பாட்டு வேணும்“?
“எதனாச்சும்.”
“உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே” என்று தீப்பெட்டியில்
தாளம் தட்டியவாறு பாட ஆரம்பித்தான் அவன்
பாட்டில் லயித்திருந்த ருக்குமணியின் காலடியில்
மறுபடியும் அந்த நாய் வந்து ஒண்டியது. பாட்டுச் சத்தத்தில் தன்னை மறந்திருந்த அவள்
எரிச்சலுற்று மூங்கில் கம்பை எடுத்து வீசினாள். இந்தத் தடவை அடி நாயின் மீது விழுந்தது.
நாய் அலறிக் கொண்டே ஓடிற்று.
“அது என்னா? மூங்கில் கம்பா, எங்கே காட்டு” இருட்டில்
கையை நீட்டினான் அவன்.
“ஒனக்கு எதுக்கு இது..” என்று அவனிடம் கம்பைக் கொடுத்தாள்
ருக்குமணி.
“நல்ல மூங்கில்தான் என்று..“ மூங்கிலைத் தடவிப்
பார்த்தான்.
“என்ன செய்யறதுக்கு நல்ல மூங்கில்தான்னு சொல்றே“?
அவன் மெல்லச் சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறே?“
“ஒண்ணுமில்லே, ஒவ்வொருத்தன் கையிலேருந்தா அது ஒவ்வொண்ணுக்கு
உபயோகப்படும். குருடன் கையிலேதான் அது ஒண்ணும் ஆகறதில்லை”
அவன் தனக்காகத்தான் அப்படிச் சொல்லுகிறானோ என்று
நினைத்த ருக்குமணி,“மூங்கில்லே என்னென்ன செய்யலாம்னு நாளைக்குப் பாரு, நான் செஞ்சி
காட்றேன்” என்றாள்.
“என்ன செய்வே”
“கூடை, முறம், தடுக்கு..”
“அப்படியா எனக்குக் கூடப் புல்லாங்குழல் செய்ய வருமே”
“புல்லாங்குழலா? நீ செய்வியா, ஊதுவியா?” என்று ஆர்வத்தோடு
கேட்டாள் ருக்குமணி.
“இப்பப் பாடினேனே பாட்டு, இதெல்லாம் அப்படியே வாசிப்பேன்”
“அப்ப சரி அந்தக் கம்பைக் குடு. வேற நல்லதாப் பார்த்துத்
தரேன். நாளைக்கு நீ புல்லாங்குழல் செஞ்சி எனக்கு ஊதிக் காட்டணும். என்ன சரியா? ஏன்
மல்லாக் கொட்டையைத் தின்னாமக் குந்தி இருக்கே? இந்தா இந்தக் கம்பை வெச்சிக்க” என்று
மூங்கில் கட்டிலிருந்து நல்ல மூங்கிலாக ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்.
இந்த இரவு நேரத்தில் தன் பசியறிந்து, வேர்க்கடலையும்,
ஊன்றுகோலும் தந்த இந்தப் புண்ணியவதியை மனசிற்குள் வாழ்த்திக் கொண்டே வேர்க்கடலையைத்
தரையில் தட்டி உரித்துத் தின்றவாறு மௌனமாய்ச் சாய்ந்திருந்தான் அவன்.
சற்றுநேர மௌனத்திற்குப் பின் அவள் கேட்டாள். “ஆமா
ஒன் பேரு என்னா?”
“கண்ணப்பன். ஓம் பேரு?”
“ருக்குமணி”
“அது சரி, நீ ஒரு வயசுப் பொம்புளைதானே? யாரும் துணை
இல்லாம இந்தச் சத்திரத்திலே நீ ஏன் தனியாக் குந்தியிருக்கே?”
“நான் சின்னப் புள்ளையா இருக்கிறபோதே இங்கே வந்துட்டேன்.
எனக்கு ஒலகத்திலே இந்த ஒரு இடம் தான் பழக்கம். எங்க தாத்தா இருந்தது அப்போ.. நாலு வருசத்துக்கு
முன்னே அது செத்துப் போச்சு”.. தாத்தாவின்
நினைவு வந்தபோது அழுகையும் வந்தது. இரண்டு விம்மலில் வந்த துயரம் அடங்கியும் போயிற்று.
“எங்காவது கண்ணாலம் கட்டிகினு போனாலும் ஒனக்கு ஆத்தா
வூடு இந்தச் சத்திரம்தான்னு சொல்லு. நீயும் என்னைப்போல் அநாதைதானா?” என்றான் கண்ணப்பன்.
அவள் குரலிலிருந்து அவள் வயசைக் கணித்த கண்ணப்பன், தன் கணிப்பு சரிதானா என்று தெரிந்து
கொள்ளவே கலியாணத்தைப் பற்றிப் பேசினான்.
“நீயாவது ஆம்பளை. நான் பொம்பளை. ரெண்டு கண்ணுமில்லாத
குருடி. எனக்கு யாரு இருக்கா? யாரு இருந்தாலும் கண்ணில்லாத நான் அவங்களுக்கு ஒரு சுமைதானே?
அதனாலேதான் அனாதையாக இருக்கேன்“.
அவன் உடலெல்லாம் மின்னலைப்போல் ஓர் உணர்ச்சி விசிறிப்
பாய்ந்து அவனைத் துள்ளியெழ வைத்தது.
அவன் அதற்குப் பிறகு ஒரு வார்த்தை பேசவில்லை. அவள்
எத்தனையோ பேச்சுக் கொடுத்துங்கூட, அவன் பதில் சொல்லாதது கேட்டு “தூக்கம் வந்திடுச்சி
போலிருக்கு” என்று எண்ணி அவளும் தூங்க முயன்றாள்.
அன்று இரவு வெகு நேரம் வரை அவர்கள் இருவரும் தூங்கவும்
இல்லை. பேசவும் இல்லை.
மறுநாள் காலை தூக்கத்திலிருந்து எழுந்ததும் “கண்ணப்பா,
கண்ணப்பா” என்று கூப்பிட்டாள். பதிலில்லை. அவன் படுத்திருந்த இடத்தைத் தடவிப் பார்த்தாள்.
இடந்தான் இருந்தது. “அவன் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் கூடப் போய் விட்டானே” என்று
நினைக்கையில், ஆத்திரமும் அழுகையும் அடைத்துக் கொண்டு வந்தது. சற்று நேரம் செத்துப்
போன தாத்தாவை நினைத்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாள். சத்திரத்துக்குப் பக்கத்தில்
ஆலமரத்தடியில் ஜனசந்தடி பெருக ஆரம்பித்தது. டீக்கடையில் டீ வாங்கிக் குடித்துவிட்டு
ருக்குமணியும், தனது தொழிலில் முதல் நாள் செய்து வைத்திருந்த கிலு கிலுப்பை, விசிறி
முதலியவற்றிற்கு வர்ணம் பூசும் வேலையில் முனைந்தாள்.
நிறங்களையே பார்த்தறியாத.. அப்படியென்றால் என்னவென்றுகூடத்
தெரியாத ருக்குமணி, தான் பின்னும் கிலுகிலுப்பைகளுக்கும், தடுக்குகளுக்கும் அழகழகாக
வர்ணம் பூசுவாள். பூசப்படும் நிறங்களைப் பற்றிப் பூசிக்கொள்ளும் பொருள்களுக்கு என்ன
தெரியுமோ அதைவிடக் கொஞ்சம் அதிகமாக அவளுக்குத் தெரியும். அதாவது ருக்குமணியைப் பொறுத்தவரை
பச்சை என்றால் அது கண்ணாடிக் குப்பியில் இருப்பது. நீலம் என்பது தகர டப்பாவில் இருப்பது.
கொட்டாங்கச்சியில் இருப்பது சிவப்பு. அவ்வளவுதான்.
மனம்போன போக்காய்த் தன் மனத்திலிருக்கும் உணர்ச்சிகளை
அவற்றின் மீது கிறுக்கி மகிழ்வாள். அவற்றிற்கு அர்த்தமில்லையா என்ன? அழகாக இருப்பதாய்க்
கண்படைத்த புண்ணியவான்கள் கூறுகிறார்கள்.
அன்று கண்ணப்பன் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்ட தினம்
– அவள் சரியாகவே தனது வேலைகளைச் செய்து முடிக்கவில்லை. பக்கத்தில் உட்கார்ந்து வியாபாரம்
செய்யும் முனியம்மாளிடம் கூடச் சரியாக ஒன்றும் பேசவில்லை. அவளையறியாமல் மெல்லிய குரலில்
”உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே” என்று பாடிக் கொண்டாள். அதைக் கேட்டு முனியம்மா
அவளைக் கேலி பேசினாள். முனியம்மாவுடன் ருக்குமணியும் சேர்ந்து சிரித்தாள்.
ஆமாம். ருக்குமணிக்கு வெட்கப்படக் கூடத்தெரியாது.
அன்று பகல் பொழுதும் அவன் நினைவிலேயே நகர்ந்தது அவளுக்கு.
அந்த இரவு சம்பவத்திற்குப் பின் பகலும் இரவும் கண்ணப்பனைப்
பற்றிய நினைவுகளிலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் ருக்குமணி. மானசீகமாய் அவன் குரலையும்
பாட்டையும் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தாள். வாழ்க்கை முழுதும் அவன் பாடிக் கொண்டே இருக்க,
பக்கத்தில் உட்கார்ந்து தான் கேட்டுக் கொண்டே இருப்பதைக் காட்டிலும் உலகத்தில் வேறு
ஒரு இன்பம் இருப்பதாக அவளால் நம்ப முடியவில்லை.
ஆனால் அந்தக் கண்ணப்பன்-அவனைத்தான் காணோமே!
அவன் எப்பொழுதாவது நிச்சயம் வருவான் என்று அவளுக்குத்
தோன்றியது. அவனுக்காக அவள் காத்திருந்தாள்.
திடீரென்று கனவு கண்டு விழித்தெழுந்து, அவன் நினைவில்
சத்திரத்துத் திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கையில், டூரிங் டாக்கிஸில்
ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. டூரிங் டாக்கீஸ் பாண்டு வாத்திய ஓசையும், பழைய காலத்தில்
புகழோடு விளங்கிய கிட்டப்பாவின் சங்கீதத்தை மானபங்கப் படுத்திக் கொண்டிருந்த டீக்கடை
கிராமபோனின் கூச்சலும் அடங்கிவிட்டன.
அந்த நிசப்தமான நேரத்தில் தூரத்திலிருந்து புல்லாங்குழல்
ஓசை கேட்டது.
“அந்தப் பாட்டுத்தான்! கண்ணப்பன் வருதோ?” அவளுக்கு
உடல் முழுவதும் சந்தோஷத்தில் பதறிற்று.
குழலின் ஓசை வரவர அதிகமாகி நெருங்கி வருவதுபோல்
கேட்டது. பிறகு குழலின் நாதம் நின்று மூங்கில் கம்பொன்றின் ஓசை மட்டும் “டக் டக்” கென்று கேட்டது. சத்திரத்துப் படிகளில்
காலடிச் சப்தம் கேட்கும்போது,
“யாரது கண்ணப்பாவா? ” என்று கேட்டாள் ருக்குமணி.
“ஆமாம்”
“எங்கே இத்தினி நாளாக் காணோம்? சொல்லாமல் கூடப்
போயிட்டியேன்னு எனக்கு வருத்தமா இருந்துச்சி” என்று அவள் சொல்லும்போது அவனுக்குத் துக்கமும்
மகிழ்ச்சியும் ஏற்பட்டுத் தொண்டை அடைத்தது. பதில் பேசாமல் மௌனமாய் அன்று உட்கார்ந்திருந்த
இடத்திலேயே வந்து அமர்ந்தான்.
“இவ்வளவு நாள் எங்கே போயிருந்தே? ஏதாவது சாப்பிட்டியா?
சோறு கூட வெச்சிருக்கேன். தண்ணி ஊத்தி..வேணுமானா சாப்பிடேன்”
“இல்லே ருக்குமணி. நான் இப்பத்தான் சாப்பிட்டேன்.
அன்னக்கி அந்தப் பசி நேரத்துக்கு வேர்க்கடலை குடுத்தியே, இன்னிக்கு ஒனக்கு நான் பலகாரம்
வாங்கிக்கிட்டு வந்திருக்கேன். இந்தா.” என்று ஒரு பொட்டணத்தை அவளிடம் நீட்டினான்.
“ஒனக்கு ஏதாவது வேலை கெடச்சிருக்கா என்ன? அதான்
நல்லது. ஒரு வயசு ஆம்பளை பிச்சையெடுக்கிறதாவது! எங்கே வேலை? என்ன வேலை?”
“நீ ஒரு தொழில் செஞ்சி பொழக்கல்லே. அந்த மாதிரி
நானும் ஒரு தொழில் செய்ய ஆரம்பிச்சிட்டேன்”
“என்ன தொழில்“
“அன்னிக்கு நீ குடுத்தியே மூங்கில், அதிலே ஒரு புல்லாங்குழல்
செஞ்சேன். அதை எட்டணாவுக்கு வித்தேன். அப்புறம் ரெண்டனாவுக்கு மூங்கில் வாங்கிச் சின்னப்பிள்ளைகளுக்கு
ஊதல், புல்லாங்குழல் எல்லாம் செஞ்சி ஒரு ரூவா சம்பாதிச்சேன். அப்புறம் ஒரு பேனா கத்தி,
இரும்பு ஆணி எல்லாம் வாங்கினேன். இப்ப நல்லா ஊதல் செய்யப் பழகிக்கிட்டேன். உன்னைப்
பார்த்துத்தான் எனக்கும் புத்தி வந்தது” அவன் சொல்தைக் கேட்கக் கேட்க அவள் கைகள் அவனை
அணைத்துக் கொள்ளத் துடித்தன. அவன் அருகே நெருங்கி நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டாள்.
“நான் சொல்றதைக் கேக்கிறியா? வந்து.. எனக்கு உன்
பாட்டு, உன் குரல், நீ.. எல்லாம் ரொம்பப் புடிச்சிருக்கு. அதனாலே நீயும் நானும்…வந்து
வந்து…
ஆமாம் அவளுக்கு வெட்கப்படக் கூடத் தெரியாது. அவள்
உலகத்தையே மனிதர்களையே கண்ணால் பார்த்ததில்லை. அதனால் உலகத்தின் மனிதர்களின் பொய்யான
வெட்கமும் நாணமும் என்னவென்று கூட அவளுக்குத் தெரியாது. மனத்தால் உணர்ந்ததை வாயால்
கொட்டிக் கொண்டிருந்தாள்.
கண்ணப்பன் மௌனமாக பீடி புகைக்க ஆரம்பித்தான்.
“கண்ணப்பா, என்ன பேசாம இருக்கே? ஏதாவது பேசேன்..
பாட்டுப் பாடேன். உன் பேச்சையும், பாட்டையும் கேக்கணும்னு ஒரு வாரமா நான் காத்துக்
கெடக்கேனே.. ஆமா, கண்ணப்பா நீ சினிமா பார்த்திருக்கியா?” என்று வலுவில் ஒரு கேள்வி
கேட்டு அவனைப் பேச வைத்தாள்.
“உம் பார்த்திருக்கேன்.. அதெல்லாம் ரொம்ப நாளைக்கு
முன்னே”
“இப்பெல்லாம்?“
“சினிமாப் பார்க்க காசு வேணாமா?“
“என்கிட்டே காசு இருக்கு. வர்ரியா? நான் பாட்டு
கேட்டுக்கிட்டுக் குந்தி இருக்கேன். நீ படம் பாரு”
“படம் பார்க்க காசு மட்டும் போதுமா? கண்ணு வேணாம்?
ருக்குமணி.. நானும் உன்னை மாதிரிதான். நாலு வருசத்துக்கு முந்தி அம்மை வார்த்துக் கண்ணு
போயிடுச்சி. இவ்வளவு ஆசையா இருக்கியே.. உன் முகத்தைக் கூடப் பார்க்க முடியாத பாவி நான்.
உனக்குக் கண்ணு தெரியாதுன்னு நீ சொல்றவரைக்கும், நீ நெனச்சது போலத்தான் நானும் நெனச்சேன்.
ஆனா நாம ரெண்டு பேரும் ஒண்ணா எப்படி வாழ முடியும்? யாருக்கும் யாரும் உதவியா இருக்க
முடியாதுன்னு நெனச்சிதான் நான் சொல்லிக்காம போயிட்டேன். ஆனா உன்கிட்டே சொல்லிக்காமப்
போக மனசு இடம் கொடுக்கல்லே. விடியகாலை வண்டிக்கு நான் ஊருக்குப் போறேன். எனக்குக் கண்
இருந்தா உன்ன விட்டுட்டுப் போக மாட்டேன். என்ன பண்றது? நான் போறேன்! நீ என்னை மறந்திடு”
என்று அழுதான் கண்ணப்பன்.
அவன் வருத்தம் அவளுக்குப் புரிந்தது.
“இதுக்கா அழுறே? கண்ணில்லாட்டி என்ன? எனக்கு ஒரு
குறையும் தெரியலையே! சனங்களெல்லாம் என்னமோ கண்ணு கண்ணுன்னு பேசிக்கிறாங்களே அது நமக்கு
இல்லேன்னு சொல்றாங்களேன்னு தோணுமே ஒழிய, அதனாலே எனக்கு ஒண்ணும் கெட்டுப் போகல்லே. நீயும்
என்னை மாதிரித்தான்னா ரொம்ப சந்தோஷம்- இதுக்காகவா உன்னை நா மறந்துடணும்னு சொல்றே? ஆமா
நெசமாச் சொல்லு உனக்குத்தான் எப்பவோ கண்ணு இருந்திருக்குன்னு சொல்றியே? கண்ணுன்னா என்னான்னு
நீயாவது சொல்லேன். பாக்கறது பாக்கறதுன்னு சொல்றாங்களே அப்படின்னா என்னா ? சொல்லு?”
என்று அவன் தோள் மீது கை வைத்து அவன் முகத்தருகே நெருங்கினாள். அவன் தேகாந்தமும் சிலிர்த்தது.
“ருக்கு.. கண்ணுன்னா என்னா தெரியுமா?
கண்ணுன்னா நீதான்! நீதான் எனக்கு கண்ணு இனிமேலே..”
என்று பேசமுடியாமல் திணறினான் கண்ணப்பன்.
அவள் அவனது முகத்தை, தலையை, மார்பை, புஜங்களைத்
தடவிப் பார்த்து மகிழ்ந்தாள்.
அந்தச் சத்திரத்து இரவின் தனிமையில் இருவரும் தங்கள்
கதைகளை, ஆசைகளை ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் காதலை, இத்தனை நாள் பிரிந்திருந்த
பிரிவின் சோகங்களைப் பற்றி எல்லாம் பேசிக்கொண்டே இருந்தார்கள். பேச்சு…பேச்சு…விடியும்
வரை ஒரே பேச்சுத்தான்.
“கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள் என்ன பயனும்இல“
என்று காதலுக்கு இலக்கணம் வள்ளுவர் கூறிவிட்டால்
போதுமா?
இவர்களுக்கு? வாய்ச்சொற்கள்தான்!