வியாழன், 12 செப்டம்பர், 2024

பண்டைத் தமிழரின் அயல்நாட்டு வாணிகத் தொடர்புகள்

 

பண்டைத் தமிழரின் அயல்நாட்டு வாணிகத் தொடர்புகள்

          தமிழகம் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்ட நாடு. தமிழர்கள் உழைத்து வாழ்ந்தவர்கள். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மூதுரைக்கு ஏற்ப கடல் கடந்து தங்கள் உழைப்பைப் பதிவு செய்தவர்கள். எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, சீனம் உள்ளிட்ட பல நாடுகளுடன் தமிழர்கள் வாணிகத்தொடர்பு கொண்டிருந்தனர். அத்தொடர்பை வெளிநாட்டவர் குறிப்புகளும், சங்க இலக்கியங்களும் உணர்த்துகின்றன.

கடல் பயண ஊர்திகள்

சங்க இலக்கியத்தில் மரம், ஓடம், அம்பி, நாவாய், நீரணி மாடம், வங்கம் முதலிய கடற்பயண ஊர்திகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவை விரிவான வாணிகத்தையும், அயல்நாட்டவருடன் தமிழர்கள் கொண்டிருந்த தொடர்பையும் விளக்கிக் காட்டுகின்றன.

தமிழகமும் பாபிலோனியாவும்

பாபிலோனியாவில் நிப்பூர் என்ற இடத்தில் முரஷூ என்பவர் நடத்திய காசு வணிகத்தில் கணக்குப் பதியப்பட்ட களிமண்ணேடுகள் சிலவற்றில் பாபிலோனியர் தமிழக வணிகருடன் கொண்டிருந்த பற்று வரவுகள் குறிக்கப்பட்டுள்ளன. அதே காலத்தில் தமிழ் வணிகர்கள் பாபிலோன் நகரத்தில் குடியேறி அங்கேயே தங்கித் தம் தொழிலை நடத்தியதற்கும் இவ்வேடுகள் சான்று பகர்கின்றன.

தமிழகமும் எகிப்தும்

          தமிழகத்திற்கும் எகிப்து நாட்டுக்கும் இடையே ஏற்பட்டடிருந்த வாணிகத் தொடர்பு மிகப் பழமையானதாகும். “டபிள்யூ.எச்.ஸ்காபி என்பவர், “பாரசீக வளைகுடாவின் வடபால் இந்நாடுகள் ஒன்றோடொன்று பண்டமாற்றுச் செய்து கொண்டனஎன்று தம்முடைய எரித்திரியக் கடலின் பெரிப்ளுஸ் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மஸ்லின் துணி, ஏலம், இலவங்கம் போன்ற நறுமணப் பொருட்கள் மரக்கலங்களில் ஏற்றிச் சென்று ஏடன் வளைகுடாவுக்கு இருபுறம் உள்ள துறைமுகங்களில் இறக்கினர். அரேபியர் அச்சரக்குகளை அவ்விடங்களில் இருந்து தம் வசம் ஏற்றுக் கொண்டு எகிப்துக்கு எடுத்துச் சென்றனர். எகிப்திய நாடு தொடர்பான சான்றுகள் திருநெல்வேலி மாவட்டத்தில் கிடைத்துள்ளன.

தென்னிந்தியாவும் சுமேரியாவும்

தென்னிந்தியாவுக்கும் சுமேரியாவுக்கும் இடையில் கி.மு.நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாணிகப் போக்குவரத்து நடைபெற்று வந்ததாக சேன் என்பார் தம் ஹிப்பர்ட் சொற்பொழிவுகளில் குறிப்பிட்டுள்ளார். மோசஸ் கி.மு.1490இல் எழுப்பிய ஆலயத்திற்கு இலவங்க மரத்தைப் பயன்படுத்தியுள்ளார். இது தென்னகத்தில் கிடைக்கக்கூடிய மரமாகும். இதனால் சுமேரியாவுக்கும் தமிழகத்திற்கும் இருந்த வாணிபத் தொடர்பு விளக்கம் பெறுகின்றது.

தென்னிந்தியாவும் மடகாஸ்கரும்

தென்னிந்தியர் பலர் வாணிகத்தின் பொருட்டு மடகாஸ்கர் சென்று குடியேறினர். தம்முடைய முன்னோர் தென்னிந்தியாவில் மங்களுரில் இருந்து குடிபெயர்ந்து மடகாஸ்கருக்கு வந்து தங்கிவிட்டார்கள் என்று அந்நாட்டு மக்கள் கூறிக் கொள்கின்றனர்.

தமிழர்களும் கிரேக்கர்களும்

கி.மு ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரேக்கர்கள் தமிழகத்துடன் வாணிகத்தில் இறங்கினர். இதன் மூலம் பல தமிழ்ச்சொற்கள் கிரேக்க மொழியில் கலந்தன. சான்றாக, அரிசி என்ற தமிழ்ச்சொல் கிரேக்க மொழியில் அரிஸா என்று வழங்கப்படுகின்றது. கருவா என்னும் தமிழ்ச்சொல் கார்ப்பியன் என்றும், இஞ்சி வேர் சின்ஞிபேராஸ் என்றும் உருமாற்றம் அடைந்தன. இந்நாடுகள் ஒன்றையொன்று கடல் வாணிகத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழர்களும் ரோமாபுரி மக்களும்

          தமிழகத்து நறுமணப் பொருள்களின் சுவையும், ஏனைய ஏற்றுமதிப் பண்டங்களின் பெருமையையும் கிரேக்கர்களின் மூலமே ரோமாபுரி மக்கள் அறிந்து கொண்டனர். புதுச்சேரிக்கு அண்மையில் உள்ள அரிக்கமேடு என்னும் இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் ஏராளமான ரோமாபுரி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பழந்தமிழகத்துடன் ரோமாபுரி மேற்கொண்டிருந்த கடல் வாணிகத்தின் விரிவை இந்நாணயங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ரோமாபுரி ஆசிரியர்கள் எழுதிய நூல்களின் வாயிலாக தமிழகத்தின் துறைமுகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகின்றது. ரோமாபுரி பேரரசின் ஆட்சி முடிவுற்ற பின் ரோமரின் வாணிகம் தமிழகத்தில் மட்டுமின்றி மசூலிப் பட்டினத்திலும், ஒரிஸ்ஸா கடற்கரையிலும் பரவலாயிற்று. வாணிகம் விரிவடைய விரிவடைய தமிழ்நாட்டிலேயே ரோமாபுரியினர் குடியேறத் தொடங்கினர். அவர்களின் குடியிருப்புகள் மதுரை, கரூர், பழனி முதலிய இடங்களில் இருந்தன.அவர்கள் வழங்கி வந்த பொன், வெள்ளி நாணயங்களும், செப்புக் காசுகளும் இப்போது புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. மதுரையில் ரோம நாணய அச்சுச்சாலை ஒன்று நடைபெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது. இந்தியாவில் கிட்ட்டிய 68 வகை ரோமானியர் நாணயங்களில் பெரும்பகுதியும் தமிழகத்தில் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

          நல்லெண்ணெய், பனைவெல்லம், மிளகு, உணவு தானியங்கள், தேன், உயர்ந்த துணி வகைகள், மர வகைகள், தந்தங்களாலான பொருட்கள், மரச் சாமான்கள், பறவைக்கூடுகள், மயில், கிளி போன்ற பறவைகள், மாடு, குரங்கு, யானை, புலி போன்ற விலங்குகள் ஏற்றுமதிப்பொருட்களாயின. உயர்ரக மது, ஈயம், தகரம், கலைப்பொருட்கள், ஜாடிகள், குதிரைகள் இறக்குமதிப் பொருட்களாயின. தமிழகத்துக் கருங்காலி மரங்கள் ரோமாபுரியில் பெருமளவில் விற்பனையானது. பாரசீக வளைக்குடாத் துறைமுகங்களில் தமிழகத்துத் தேக்கு மரங்களைக் கொண்டு கப்பல்கள் கட்டியுள்ளனர்.

          ரோமாபுரியினரின் வாணிகம் ஓங்கி நின்றபோது அரிக்கமேடு என்னும் இடத்தில் அவர்களுடைய பண்டகசாலை ஒன்றும் விற்பனை சாலை ஒன்றும் நடைபெற்று வந்தன. ரோமாபுரியில் இறக்குமதியான சரக்குகளின் அளவு ஆண்டுதோறும் ஏறிக்கொண்டே போனதால் ரோமாபுரித் தங்கம் தமிழரின் கைக்கு மாறிக்கொண்டே வந்தது.

தமிழகமும் சீனமும்

சீனத்துடன் தமிழகம் மேற்கொண்டிருந்த வாணிகத்தொடர்பானது மிகவும் பழமையானது. தமிழகத்துப் பண்டங்கள் கி.மு.ஏழாம் நூற்றாண்டிலேயே சீனத்தில் இறக்குமதியாயின என்று அந்நாட்டு வரலாறுகள் அறிவிக்கின்றன. சீனத்துப் பட்டாடைகளையும், சருக்கரையையும் தமிழகம் ஏற்றுக் கொண்டது. இதனால் இன்றளவும் பட்டுக்குச் சீனம் என்றும், சருக்கரைக்குச் சீனி என்றும் பெயர் வழங்கி வருகின்றது. சீனக்கண்ணாடி, சீனக்கற்பூரம், சீனக் கருவா, சீனக் களிமண், சீனக் குடை, சீனச்சட்டி, சீனர் சரக்கு, சீனச் சுக்கான், சீனச் சுண்ணம், சீனத்து முத்து, சீன நெல், சீனப்பட்டாடை, சீனப்பரணி, சீனப் பருத்தி, சீன மல்லிகை, சீன மிளகு, சீனாக் கற்கண்டு என்னும் சொற்கள் இன்றளவும் தமிழ்மொழியில் பயின்று வருகின்றன. சீனர் குடியிருப்பு ஒன்று கேரளத்தில் இருந்தது. இவர்கள் பிற்காலத்தில் நாகப்பட்டினத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.

தமிழகமும் ஐரோப்பிய நாடுகளும்

தமிழகத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குப் பலவகையான பண்டங்கள் ஏற்றுமதியாயின. புலி, சிறுத்தை, யானை, குரங்கு, மயில், கிளி, வேட்டை நாய்கள் ஆகியவற்றைத் தமிழகம் ஏற்றுமதி செய்தது. தமிழகத்து வேட்டை நாய்கள், தரத்தில் மேலானவை என அயல்நாடுகளில் மிகவும் பாராட்டப் பெற்றன. யானைகளும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

தமிழகமும் பிற அயல்நாடுகளும்

அயல்நாட்டினர் சில பாம்பு இனங்களையும் தமிழகத்தில் கொள்முதல் செய்தனர். இந்தியாவிலிருந்து இறக்குமதியான ஒன்பதடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்றை எகிப்தில் கண்டதாக ஸ்டிராபோ எழுதியுள்ளார். சேரநாட்டுத் துறைமுகங்களின் வாயிலாக இப்பாம்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.

மேலைநாட்டினர் தமிழகத்தில் வாணிகம் செய்த பண்டங்களில் மிகவும் விலை உயர்ந்தவை யானைத் தந்தங்களும் முத்துக்களுமே ஆகும். தமிழகம் ஏற்றுமதி செய்த சரக்குகளில் இலவங்கம், இஞ்சி, மிளகு, ஏலம், அரிசி, நுண்வகைக் கலிங்கங்கள், தேக்கு, கருங்காலி, சந்தனம் ஆகியவை மிகவும் முக்கியமானவை.

பிலிப்பைன் தீவுகளில் அண்மையில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் இரும்புக் காலப் புதைப்பொருள்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கத்திகள், கோடாரிகள், ஈட்டிகள் போன்ற கருவிகள் அனைத்தையும் கி.மு.முதலாம் ஆயிரம் ஆண்டில் தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்த கருவிகளைப் பெரிதும் ஒத்துள்ளன. சீனம், சாவகம் போன்ற கீழை நாடுகளுடன் மேற்கொண்டிருந்த வாணிகத் தொடர்பின் பழமையை இச்சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன.

தென் இந்தியாவும் வடஇந்தியாவும்

தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும் இடையே கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே மிகப் பெரிய அளவுக்கு வாணிகம் நடைபெற்று வந்தது. பாண்டி நாட்டில் உருவாக்கப்பட்ட முத்து, மதுரையில் நெய்யப்பட்ட ஆடைகள், தமிழகத்துப் பல்வகைப் பண்டங்கள் ஆகியன வடநாட்டுக்குக் வங்கக்கடல் வழியாக சென்றன.  

முடிவுரை

தமிழகம் அயல்நாடுகளுடன் மேற்கொண்டிருந்த வாணிக உறவானது தமிழரின் நாகரிகம், பண்பாடு, கலை ஆகியவற்றின் வளர்ச்சிக்குக் கைகொடுத்தது.

 -------------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.