ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

குகப்படலம் - கம்பராமாயணம்

 

கம்பராமாயணம்

அயோத்தியா காண்டம் - குகப்படலம்

இராமனது வரலாற்றைக் கூறும் கம்பராமாயணம் எனும் நூல் கம்பரால் இயற்றப்பட்டது. வடமொழியில் வால்மீகி இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்டது. இது ஒரு வழி நூலாக இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச்சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர், தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார்.

கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய "உத்திர காண்டம்" என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய "ஒட்டக்கூத்தர்" இயற்றினார் என்பர்.

கம்பராமாயணத்தின் குகப்படலம் இங்கே பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

 குகப்படலம்

வனம் புகுந்த இராமன் குகனைத் தோழமை கொண்ட செய்தியை உணர்த்தும் பகுதியை விவரிப்பதே குகப்படலம் ஆகும்.

குகனின் அறிமுகம்

ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு

நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான்,

தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்,

காயும் வில்லினன், கல் திரள் தோளினான். 1

விளக்கம்

இராமன் முனிவர்கள் தந்த விருந்தை அருந்தியிருந்தபொழுது, குகன் என்னும் பெயரை உடையவன் அங்கு வந்தான். அந்தக் குகன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன். தூய்மையான கங்கையின் துறையில் பழங்காலம் தொட்டு ஓடங்களைச் செலுத்தும் உரிமை பெற்றவன். பகைவர்களைக் கொல்லும் வில்லை உடையவன். மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்.

துடியன், நாயினன், தோற் செருப்பு ஆர்த்த பேர்-

அடியன், அல் செறிந்தன்ன நிறத்தினான்,

நெடிய தானை நெருங்கலின், நீர் முகில்

இடியினோடு எழுந்தாலன்ன ஈட்டினான். 2

விளக்கம்

அந்தக் குகன் துடி என்னும் பறையை உடையவன். வேட்டைக்குத் துணை செய்யும் நாய்களை உடையவன். தோலினால் தைக்கப்பட்ட செருப்பை அணிந்த பெரிய கால்களை உடையவன். இருள் நெருங்கி நிறைந்ததைப் போன்ற நிறத்தை உடையவன். அவனது பெரிய சேனை அவனைச் சூழ்ந்திருப்பதால் நீர் கொண்டு கார் மேகம் இடியோடு கூடித் திரண்டு வந்ததைப் போன்ற தன்மை உடையவன்.

கொம்பு துத்தரி கோடு அதிர் பேரிகை

பம்பை பம்பு படையினன், பல்லவத்து

அம்பன், அம்பிக்கு நாதன், அழி கவுள்

தும்பி ஈட்டம் புரை கிளை சுற்றத்தான். 3

விளக்கம்

ஊதுகொம்பு, துந்துபி என்னும் பறை, சங்கு, முழங்கும் பேரிகை, பம்பை என்னும் பறை ஆகிய இசைக்கருவிகள் நிறைந்துள்ள படையை உடையவன். இலை வடிவமான அம்புகளை உடையவன். ஓடங்களுக்குத் தலைவன். யானைக் கூட்டத்தைப் போன்று பெரிய சுற்றத்தார்களை உடையவன்.

காழம் இட்ட குறங்கினன், கங்கையின்

ஆழம் இட்ட நெடுமையினான், அரை

தாழ விட்ட செந் தோலன், தயங்குறச்

சூழ விட்ட தொடு புலி வாலினான். 4

விளக்கம்

காழகம் (அரைக்கால் சட்டை) என்னும் ஆடை அணிந்தவன். கங்கை ஆற்றின் ஆழத்தைக் கண்டறிந்த பெருமையை உடையவன். இடுப்பிலிருந்து தொங்கவிட்ட செந்நிறத் தோலை உடையவன். இடுப்பைச் சுற்றிக் கட்டிய, ஓன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட புலி வாலை உடையவன்.

பல் தொடுத்தன்ன பல் சூழ் கவடியன்,

கல் தொடுத்தன்ன போலும் கழலினான்,

அல் தொடுத்தன்ன குஞ்சியன், ஆளியின்

நெற்றொடு ஒத்து நெரிந்த புருவத்தான். 5

விளக்கம்

பற்களைத் தொடுத்தது போன்ற பல அணிகலன்களைப் பூண்டவன். வீரக்கழலை அணிந்தவன். தலை மயிரில் நெற்கதிர்களைச் செருகிக் கொண்டவன். சினம் வெளிப்பட மேலேறி வளைந்த புருவத்தை உடையவன்.

பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி

வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன்,

கண் அகன் தட மார்பு எனும் கல்லினன்,

எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான். 6

விளக்கம்

பனை மரம் போன்று நீண்டு வளர்ந்துள்ள கைகளை உடையவன். பாறை போன்ற மார்பினை உடையவன். எண்ணெய் பூசப்பட்ட இருளைப் போன்ற கருநிற உடம்பை உடையவன்.

கச்சொடு ஆர்த்த கறைக் கதிர் வாளினன்,

நச்சு அராவின் நடுக்குறு நோக்கினன்,

பிச்சாரம் அன்ன பேச்சினன், இந்திரன்

வச்சிராயுதம் போலும் மருங்கினான். 7

விளக்கம்

தன் இடுப்பில் குருதிக் கறை படிந்த வாளை உடையவன். நஞ்சை உடைய நாகமும் கண்டு நடுங்குகின்ற கொடிய பார்வையை உடையவன். பைத்தியக்காரர் போல் தொடர்பில்லாத பேச்சை உடையவன். இந்திரனின் வச்சிராயுதம் போன்று உறுதியான இடையை உடையவன்.

ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்

நாற்றம் மேய நகை இல் முகத்தினான்,

சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்,

கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான். 8

விளக்கம்

விலங்குகளின் இறைச்சியையும், மீனையும் உண்ட புலால் நாற்றம் பொருந்திய வாயை உடையவன். சிரிப்பு என்பது சிறிதும் இல்லாத முகத்தினை உடையவன். கோபம் இல்லாதபோதும் கனல் கக்குமாறு பார்ப்பவன். யமனும் அஞ்சும்படி அதிர்ந்து ஒலிக்கின்ற குரலை உடையவன்.

சிருங்கிபேரம் எனத் திரைக் கங்கையின்

மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன்,

ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன், -

இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான். 9

விளக்கம்

சிருங்கி பேரம் என்று சொல்லப்படும் பேரலைகள் பெற்ற கங்கை ஆற்றின் அருகில் அமைந்த நகரத்தில் வாழ்பவன். அப்படிப்பட்ட குகன் முனிவர் இருப்பிடத்தில் தங்கியுள்ள இராமனைக் காண்பதற்காகத் தேனையும் மீனையும் காணிக்கையாக எடுத்துக் கொண்டு வந்தான்

இராமனின் தவச்சாலையை குகன் சேர்தல்

சுற்றம் அப் புறம் நிற்க, சுடு கணை

வில் துறந்து, அரை வீக்கிய வாள் ஒழித்து,

அற்றம் நீத்த மனத்தினன், அன்பினன்,

நல் தவப் பள்ளி வாயிலை நண்ணினான். 10

விளக்கம்

பொய்மை நீங்கிய மனத்தையும், இராமனிடம் அன்பு கொள்ளும் குணத்தையும் உடைய குகன் தன்னுடைய சுற்றத்தார் தூரத்தே நிற்க, அம்பையும், வில்லையும், வாளையும் நீக்கிவிட்டு, இராமன் தங்கியிருந்த தவச்சாலையின் வாயிலை அடைந்தான்.

குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்

கூவா முன்னம், இளையோன் குறுகி, 'நீ

ஆவான் யார்?' என, அன்பின் இறைஞ்சினான்;

'தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;

நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்' என்றான். 11

விளக்கம்

வாயிலை அடைந்த குகன் தன் வருகையை உணர்த்தக் கூவிக் குரல் கொடுத்தான். முதலில் தம்பி இலக்குமணன் அவனை அணுகி, “நீ யார்?” என்று வினவினான். குகன் அவனை அன்போடு வணங்கி, “ஐயனே! நாய் போன்ற அடியவனாகிய நான் ஓடங்களைச் செலுத்தும் வேடன் ஆவேன். தங்கள் திருவடிகளைத் தொழ வந்தேன்” என்று கூறினான்.

குகனின் வரவை இலக்குவன் இராமனுக்கு அறிவித்தல்

'நிற்றி ஈண்டு' என்று, புக்கு நெடியவன் - தொழுது, தம்பி,

'கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன், நிமிர்ந்த கூட்டச்

சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்;

எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் ஒருவன்' என்றான். 12

விளக்கம்

இலக்குமணன் “நீ இங்கேயே இரு” என்று குகனிடம் கூறிவிட்டு, தவச் சாலைக்குள் சென்று தன் தமையன் இராமனைத் தொழுது, “அரசே! தூய உள்ளம் பெற்றுள்ளவனும், தாயைக் காட்டிலும் மிக நல்லவனும், அலை மோதும் கங்கையில் செல்லும் ஓடங்களுக்குத் தலைவனுமான குகன் என்னும் ஒருவன் உன்னைக் காண்பதற்காக, பெருந்திரளாகத் தன் சுற்றத்தாருடன் வந்துள்ளான்” என்று தெரிவித்தான்.

இராமனைக் கண்டு வணங்கிய குகன்

அண்ணலும் விரும்பி, 'என்பால் அழைத்தி நீ அவனை' என்ன,

பண்ணவன், 'வருக' என்ன, பரிவினன் விரைவில் புக்கான்;

கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன்; இருண்ட குஞ்சி

மண் உறப் பணிந்து, மேனி வளைத்து, வாய் புதைத்து நின்றான். 13

விளக்கம்

இராமனும் மனமுவந்து, “நீ அந்தக் குகனை என்னிடம் அழைத்து வா” என்று கூறினான். இலக்குமணனும் குகனை நோக்கி, “உள்ளே வா” என்றான். அதைக் கேட்ட குகன் விரைவாக உள்ளே சென்று, இராமனைத் தன் கண்ணினால் கண்டு களிப்படைந்தான். தன் கருமை நிற முடிகள் தரையில் படுமாறு அவனை வணங்கி எழுந்து, உடல் வளைத்து, வாயினைத் தன் கைகளால் பொத்திப் பணிவோடு  நின்றான்.

குகன் தன் கையுறைப் பொருளை அறிவித்தல்

'இருத்தி ஈண்டு' என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த

அருத்தியன், 'தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்

திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திரு உளம்?' என்ன, வீரன்

விருத்த மாதவரை நோக்கி முறுவலன், விளம்பலுற்றான்: 14

விளக்கம்

“இங்கே அமர்க” என்று குகனிடம் இராமன் கூறினான். ஆனால் குகன் அமரவில்லை. இராமனிடம் அளவு கடந்த அன்பை உடைய அந்தக் குகன், இராமனை நோக்கி, “தங்கள் உணவாக அமையும்படி தேனையும், மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய எண்ணம் யாதோ?” என்று கேட்டான். இராமன் முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டு, பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்.

குகனது அன்பை இராமன் பாராட்டுதல்

'அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்

தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?

பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும்

உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?' என்றான். 15

விளக்கம்

“மனம் மகிழும்படி உள்ளத்திலே உண்டான அன்பின் தூண்டுதலால் பக்தி ஏற்பட அருமையாகக் கொண்டு வரப்பட்ட இத்தேனும் மீனும் அமிழதத்தைக் காட்டிலும் சிறந்தவை அல்லவா? நீ கொண்டு வந்தவை எவையாயினும் சரி, அவை அன்போடு பொருந்தியவை என்றால் தூய்மையானவையே! அவை எம்மைப் போன்றவர்கள் ஏற்கத் தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்” என்று குகனிடம் கூறினான் இராமன்.

விடியலில் நாவாய் கொண்டு வர குகனிடம் இராமன் கூறல்

சிங்க ஏறு அனைய வீரன், பின்னரும் செப்புவான், 'யாம்

இங்கு உறைந்து, எறி நீர்க் கங்கை ஏறுதும் நாளை; யாணர்ப்

பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து, இனிது உன் ஊரில்

தங்கி, நீ நாவாயோடும் சாருதி விடியல்' என்றான். 16

விளக்கம்

ஆண் சிங்கம் போன்ற இராமன் “நாம் இன்று இத்தவச்சாலையில் தங்கி நாளை கங்கையைக் கடப்போம். எனவே நீ உன் சுற்றத்தாரோடு இங்கிருந்து சென்று, உன்னுடைய நகரத்தில் உவகையோடு தங்கிவிட்டு, விடியற்காலை நாங்கள் செல்வதற்குரிய ஓடத்துடன் இங்கே வருக” என்று கூறினான்.

குகனது வேண்டுகோள்

கார் குலாம் நிறத்தான் கூற, காதலன் உணர்த்துவான்,

பார் குலாம் செல்வ! நின்னை, இங்ஙனம் பார்த்த கண்ணை

ஈர்கிலாக் கள்வனேன் யான், இன்னலின் இருக்கை நோக்கித்

தீர்கிலேன்; ஆனது, ஐய! செய்குவென் அடிமை' என்றான். 17

விளக்கம்

இராமன் இவ்வாறு கூறியதும், குகன் “இவ்வுலகம் முழுவதையும் உனக்குரிய செல்வமாகக் கொண்டவனே! உன்னை இந்தத் தவவேடத்தில் பார்த்த என் கண்களைப் பறித்து எறியாத கள்ளன் நான். இந்தத் துன்பத்தோடு உன்னைப் பிரிந்து எனது இருப்பிடத்தை நோக்கிச் செல்ல மாட்டேன். ஐயனே! இங்கிருந்து என்னாலான அடிமைத் தொழிலை உனக்குச் செய்கிறேன்” என்று கூறினான்.

குகனின் வேண்டுகோளை இராமன் ஏற்றல்

கோதை வில் குரிசில், அன்னான் கூறிய கொள்கை கேட்டான்;

சீதையை நோக்கி, தம்பி திருமுகம் நோக்கி, 'தீராக்

காதலன் ஆகும்' என்று, கருணையின் மலர்ந்த கண்ணன்,

'யாதினும் இனிய நண்ப! இருத்தி ஈண்டு, எம்மொடு' என்றான். 18

விளக்கம்

மாலை சூட்டப்பட்ட வில்லை உடைய இராமன், குகன் கூறிய கருத்தைக் கேட்டான். உடனே சீதையின் முகத்தை நோக்கி, இலக்குமணனின் திருமுகத்தை நோக்கி, அவர்கள் மனமும் குகனின் அன்பை ஏற்றுக் கொள்வதை அறிந்து, “இவன் நம்மிடம் நீங்காத அன்புடையவன் ஆவான்” என்று கூறி கருணையினால் மலர்ந்த கண்கள் உடையவனாகி, “இனிமையான நண்பனே! நீ விரும்பியவாறு இன்று என்னோடு தங்கியிரு” என்று குகனிடம் கூறினான்.

அடிதொழுது உவகை தூண்ட அழைத்தனன், ஆழி அன்ன

துடியுடைச் சேனை வெள்ளம், பள்ளியைச் சுற்ற ஏவி,

வடி சிலை பிடித்து, வாளும் வீக்கி, வாய் அம்பு பற்றி,

இடியுடை மேகம் என்ன இரைத்து அவண் காத்து நின்றான். 19

விளக்கம்

இராமன் இன்று எம்மொடு தங்குக என்று சொல்லக் கேட்ட குகன், இராமன்  திருவடிகளை வணங்கி, மகிழ்ச்சி மிக, கடலை ஒத்த துடிப்பறையோடு கூடிய தனது சேனைப் பெருக்கை அழைத்து, அவர்கள் தங்கியுள்ள தவச்சாலையைச் சுற்றிப் பாதுகாக்கக் கட்டளையிட்டு, தானும் கட்டமைந்த வில்லைப் பிடித்து, வாளையும் அரைக்கச்சிலே கட்டி, கூரிய அம்மைப்பிடித்து, இடியோடு கூடிய மழை மேகம் போல உரத்த சத்தம்இட்டு, அத்தவச்சாலையில் அம்மூவரையும் காவல்செய்து  நின்றான்.

இராமன் நகர் நீங்கிய காரணம் அறிந்து குகன் வருத்துதல்

'திரு நகர் தீர்ந்த வண்ணம், மானவ! தெரித்தி' என்ன,

பருவரல் தம்பி கூற, பரிந்தவன் பையுள் எய்தி,

இரு கண் நீர் அருவி சோர, குகனும் ஆண்டு இருந்தான், 'என்னே!

பெரு நிலக் கிழத்தி நோற்றும், பெற்றிலள் போலும்' என்னா. 20

விளக்கம்

“மனு குலத்தில் வந்த மன்னனே! நீ அழகிய அயோத்தி நகரை விட்டு இங்கு வந்த காரணத்தைத் தெரிவிப்பாயாக” என்று குகன் கேட்டான். இலக்குமணன், இராமனுக்கு நேர்ந்த துன்பத்தைச் சொல்ல அதைக் கேட்டு இரங்கியவனான குகன் மிக்க துன்பமுற்று, “பூமி தேவி தவம் செய்தவளாக இருந்தும், அத்தவத்தின் பயனை முழுவதும் பெறவில்லை போலும். இதென்ன வியப்பு” என்று கூறி இரண்டு கண்களும் அருவி போலக் கண்ணீர் சொரிய அங்கே இருந்தான்.

கதிரவன் மறைதல்

விரி இருட் பகையை ஓட்டி, திசைகளை வென்று, மேல் நின்று,

ஒரு தனித் திகிரி உந்தி, உயர் புகழ் நிறுவி, நாளும்

இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து, அருள்புரிந்து வீந்த

செரு வலி வீரன் என்னச் செங் கதிர்ச் செல்வன் சென்றான். 21

விளக்கம்

இருள் போன்ற பகையைத் தொலைத்து, திசைகளை வென்று, அனைவர்க்கும் மேலாக விளங்கி, தனது ஒப்பற்ற ஆணைச் சக்கரத்தைச் செலுத்தி, உயர்ந்த புகழை நிலைக்கச் செய்து, உலகத்தில் உள்ள அனைவர் உள்ளத்திலும் இடம் பெற்று கருணை காட்டி, பின் இறந்து போன வலிமை பெற்ற மாவீரனான தசரதனைப் போல செந்நிறக் கதிர்களைப் பெற்ற சூரியன் மறைந்தான்.

இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் காவல் இருத்தல்

மாலைவாய் நியமம் செய்து மரபுளி இயற்றி, வைகல்,

வேலைவாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல்

மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர்; வரி வில் ஏந்திக்

காலைவாய் அளவும், தம்பி இமைப்பிலன், காத்து நின்றான். 22

விளக்கம்

         மாலை வேலையில் செய்ய வேண்டிய கடமைகளைச் செப்பமான முறையில் செய்து, அங்கு தங்கிய இராமனும், பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்ற சீதையும் பரந்த பூமியில் பரப்பப்பட்ட படுக்கையில் படுத்தனர். இலக்குமணன் வில்லை ஏந்திக் கொண்டு விடியற்காலை தோன்றும் வரையிலும், கண்ணையும் இமைக்காமல் விழிப்போடு காத்து நின்றான்.

இராம இலக்குவரை நோக்கி குகன் இரவு முழுதும் கண்ணீர் வழிய நிற்றல்

தும்பியின் குழாத்தின் சுற்றும் சுற்றத்தன், தொடுத்த வில்லன்,

வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன், விழித்த கண்ணன்

தம்பி நின்றானை நோக்கி, தலைமகன் தன்மை நோக்கி,

அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான். 23

விளக்கம்

யானைக் கூட்டத்தைப் போலத் தன்னைச் சுற்றியிருக்கும் சுற்றத்தாரை உடையவனும், அம்பு தொடுக்கப்பட்ட வில்லை உடையவனும், வெம்மை ஏறிக் கொதித்து நிலைகுலையும் மனத்தை உடையவனும், இமைக்காமல் விழித்திருக்கும் கண்களை உடையவனும், ஓடங்களுக்குத் தலைவனுமான குகன், கண் இமைக்காது நின்ற இலக்குமணனைப் பாரத்தும், இராமன் நாணற் புல்லிலே படுத்திருக்கும் நிலையைப் பார்த்தும், கண்ணீர் அருவியைச் சொரியும் மலை போன்று நின்றான்.

கதிரவன் தோன்றலும் தாமரை மலர்தலும்

துறக்கமே முதல ஆய தூயன யாவையேனும்

மறக்குமா நினையல் அம்மா!- வரம்பு இல தோற்றும் மாக்கள்

இறக்குமாறு இது என்பான்போல் முன்னை நாள் இறந்தான், பின் நாள்,

பிறக்குமாறு இது என்பான்போல் பிறந்தனன்-பிறவா வெய்யோன். 24

விளக்கம்

உலகத்து உயிர்களைப் போலப் பிறத்தல் என்பதைப் பெறாதவனான சூரியன் அளவற்ற பிறப்புகளை உடைய உயிர்கள் யாவும் இறக்கும் முறை இதுதான் என்று உலகத்தாருக்குக் காட்டுகின்றவனைப் போல முந்திய நாள் மாலையில் மறைந்தான். அடுத்த நாள் காலையில் இறந்த உயிர்கள் மீண்டும் பிறக்கும் முறை இதுதான் என்று காட்டுகின்றவனைப் போல உதித்தான். ஆதலால் சொர்க்கம் முதலான சிறந்த உலகங்கள் எவையாயினும், அவற்றை மறந்து விடும் வழியை (வீடுபேறு) நினைப்பீராக.

செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை, தேரில் தோன்றும்

வெஞ் சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த; வேறு ஓர்

அஞ்சன நாயிறு அன்ன ஐயனை நோக்கி, செய்ய

வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே. 25

விளக்கம்

சேற்றில் தோன்றும் செந்தாமரை மலர்கள் சூரியனது தோற்றத்தைக் கண்டனவாய், செக்கச் செவேல் என்று மலர்ந்தன. அச்சூரியனைக் காட்டிலும் வேறான ஒரு கருஞ்சூரியனைப் போன்ற இராமனைக் கண்டு, சீதையின் ஒளி பொருந்திய முகம் என்னும் தாமரையும் மலர்ந்தது.

குகனை நாவாய் கொணருமாறு இராமன் பணித்தல்

நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி, நாமத்

தோள் முதற்கு அமைந்த வில்லான், மறையவர் தொடரப் போனான்,

ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி, 'ஐய!

கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவின்' என்றான். 26

விளக்கம்

பகைவருக்கு அச்சம் தரும் தோளில் வில்லை உடைய இராமன், விடியற்காலையில் செய்ய வேண்டிய கடமைகளை விருப்பத்தோடு செய்து முடித்து, முனிவர்கள் தன்னைப் பின் தொடர்ந்து வர அங்கிருந்து புறப்பட்டான். குகனை நோக்கி, “ஐயனே! எம்மைக் கொண்டு செல்வதற்குரிய ஒடத்தை விரைவாகக் கொண்டு வருக” என்று கூறினான்.

இராமனை தன் இருப்பிடத்தில் தங்க குகன் வேண்டுதல்

ஏவிய மொழிகேளா, இழி புனல் பொழி கண்ணான்,

ஆவியும் உலைகின்றான், அடி இணை பிரிகல்லான்,

காவியின் மலர், காயா, கடல், மழை, அனையானைத்

தேவியொடு அடி தாழா, சிந்தனை உரை செய்வான்: 27

விளக்கம்

இராமன் இட்ட கட்டளையைக் கேட்ட குகன், கண்ணீரைப் பொழியும் கண்களையுடைவனாக, உயிர் வாடுகின்றவனாய், இராமனின் திருவடிகளைப் பிரிய விரும்பாதவனாய், சீதையோடு இராமனின் திருவடி வணங்கித் தனது எண்ணத்தைச் சொல்லலானான்.

'பொய்ம் முறை இலரால்; எம் புகல் இடம் வனமேயால்;

கொய்ம் முறை உறு தாராய்! குறைவிலெம்; வலியேமால்;

செய்ம் முறை குற்றேவல் செய்குதும்; அடியோமை

இம் முறை உறவு என்னா இனிது இரு நெடிது, எம் ஊர்; 28

விளக்கம்

“ஒழுங்காகத் தொடுக்கப்பட்ட மாலை அணிந்தவனே! நாங்கள் பொய் வாழ்க்கை பெறாதவர்கள். நாங்கள் வாழும் இடம் காடே ஆகும். நாங்கள் குறையற்றவர்கள். வலிமை பெற்றவர்கள். செய்ய வேண்டிய முறைப்படி நீங்கள் சொல்லும் வேலைகளைச் செய்வோம். எங்களை உங்கள் உறவினராகக் கருதி, எங்கள் ஊரில் நெடுங்காலம் இனிதாகத் தங்கி இருப்பாயாக”

'தேன் உள; திணை உண்டால்; தேவரும் நுகர்தற்கு ஆம்

ஊன் உள; துணை நாயேம் உயிர் உள; விளையாடக்

கான் உள; புனல் ஆடக் கங்கையும் உளது அன்றோ?

நான் உளதனையும் நீ இனிது இரு; நட, எம்பால்; 29

விளக்கம்

“எம்மிடம் தேன் உள்ளது. தினையும் உள்ளது. அவை தேவர்களும் விரும்பி உண்பதற்கு உரியவையாகும். மாமிசமும் இங்கு உள்ளது. உமக்குத் துணையாக நாய் போல் அடிமைப்பட்டவராகிய எங்கள் உயிர்கள் உள்ளன. விளையாடுவதற்குக் காடு இருக்கிறது. நீராடுவதற்குக் கங்கை இருக்கிறது. நான் உயிரோடு உள்ளவரை நீ இங்கேயே இனிதாக இருப்பாயாக. இப்போதே எம்மோடு வருக”

'தோல் உள, துகில்போலும்; சுவை உள; தொடர் மஞ்சம்

போல் உள பரண்; வைகும் புரை உள; கடிது ஓடும்

கால் உள; சிலை பூணும் கை உள; கலி வானின்-

மேல் உள பொருளேனும், விரைவொடு கொணர்வேமால்; 30

விளக்கம்

உடுத்திக் கொள்ள மெல்லிய ஆடை போன்ற தோல்கள் உள்ளன. உண்பதற்குச் சுவையான உணவு வகைகள் உள்ளன. தொங்கவிடப்பட்ட பரண்கள் உள்ளன. தங்குவதற்குச் சிறுகுடிசைகள் உள்ளன. விரைந்து செல்ல கால்கள் உள்ளன. வில்லைப் பிடித்துப் போரிடக் கைகள் உள்ளன. நீ விரும்பும் பொருள் ஒலிக்கும் வானத்தின் மீதுள்ள பொருளாக இருந்தாலும் விரைவாகக் கொண்டு வந்து கொடுப்போம்.

'ஐ-இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர், ஆணை

செய்குநர், சிலை வேடர்-தேவரின் வலியாரால்;

உய்குதும் அடியேம்-எம் குடிலிடை, ஒரு நாள், நீ

வைகுதி எனின் - மேல் ஓர் வாழ்வு இலை பிறிது' என்றான். 31

விளக்கம்

“எனக்குப் பணிசெய்வோராகிய வில்லை ஏந்திய வேடர்கள் ஐந்நூறாயிரம் பேர் உள்ளனர். அவர்கள் தேவர்களைக் காட்டிலும் வலிமை பெற்றவர்கள். எங்கள் குடியிருப்பில் நீ ஒரே ஓரு நாள் தங்கினாய் என்றாலும் நாங்கள் கடைத்தேறுவாம். அதைக் காட்டிலும் வேறான ஒரு சிறப்பு எங்களுக்கு இல்லை” என்றான் குகன்.

மீண்டும் வருகையில் குகனிடம் வருவதாக இராமன் இயம்பல்

அண்ணலும் அது கேளா, அகம் நிறை அருள் மிக்கான்,

வெண் நிற நகைசெய்தான்; 'வீர! நின்னுழை யாம் அப்

புண்ணிய நதி ஆடிப் புனிதரை வழிபாடு உற்று

எண்ணிய சில நாளில் குறுகுதும் இனிது' என்றான். 32

விளக்கம்

குகனது வேண்டுகோளைக் கேட்ட இராமனும் அவனிடம் கொண்ட மனக் கருணை அதிகமாக வெண்ணிறப் பற்கள் தோன்றச் சிரித்தான். “வீரனே! நாங்கள் அந்தப் புண்ணிய நதிகளில் நீராடி, ஆங்காங்கு உள்ள முனிவரை வழிபாடு செய்து நாங்கள் வனவாசம் செய்ய வேண்டிய சில நாட்கள் முடிந்ததும் உன்னிடம் இனிதாக வந்து சேருவோம்” என்று கூறினான்.

குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல்

சிந்தனை உணர்கிற்பான் சென்றனன், விரைவோடும்;

தந்தனன் நெடு நாவாய்; தாமரை நயனத்தான்

அந்தணர்தமை எல்லாம், 'அருளுதிர் விடை' என்னா,

இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா. 33

விளக்கம்

இராமனின் கருத்தை அறிந்த குகன் விரைவாகச் சென்று பெரிய படகு ஒன்றைக் கொண்டு வந்தான். தாமரை மலர் போலும் கண்களை உடைய இராமன், அங்கிருந்த முனிவர்களான அந்தணர்கள் அனைவரிடமும் விடை தருக என்று கூறிக் கொண்டு பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியைப் பெற்ற சீதையோடும் இலக்குமணனோடும் அப்படகில் இனிதாக ஏறினான்.

'விடு, நனி கடிது' என்றான்; மெய் உயிர் அனையானும்,

முடுகினன், நெடு நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்;

கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்

இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார். 34

விளக்கம்

ஆற்றிலே படகை விரைவகச் செலுத்து என்றான் இராமன். அந்த இராமனுக்கு உண்மையான உயிர் போன்றவனான குகனும், மடங்கும் அலைகளை உடைய கங்கை ஆற்றிலே செலுத்திய பெரிய படகு விசையாகவும், இள அன்னம் நடப்பதைப்போல அழகாகவும் சென்றது. கூரையில் நின்றவர்களான முனிவர்கள் இராமனைப் பிரிந்த துயரத்தால் நெருப்பிலே பட்ட மெழுகைப் போல மனம் உருகினார்கள்.

பால் உடை மொழியாளும், பகலவன் அனையானும்,

சேலுடை நெடு நல் நீர் சிந்தினர், விளையாட;

தோலுடை நிமிர் கோலின் துழவிட, எழு நாவாய்,

காலுடை நெடு ஞெண்டின், சென்றது கடிது அம்மா! 35

விளக்கம்

பாலைப் போன்ற இனிய மொழி பேசும் சீதையும், சூரியனைப் போன்ற இராமனும், சேல் மீன்கள் வாழும் கங்கையின் புனித நீரை அள்ளி எடுத்து, ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருக்க, நீண்ட கோலினால் நீரைத் துழாவிச் செலுத்தப்பட்ட அந்தப் பெரிய படகு, பல கால்களை உடைய பெரிய தண்டு போல விரைவாகச் சென்றது.

சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை,

காந்து இன மணி மின்ன, கடி கமழ் கமலத்தின்

சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால்,

ஏந்தினள்; ஒரு தானே ஏற்றினள்; இனிது அப்பால். 36

விளக்கம்

சந்தனத்தை அணிந்துள்ள மணற்குன்றுகளாகிய பெரிய கொங்கைகளை உடைய சிறந்த கங்காதேவி, ஒளி வீசும் மாணிக்க மணிகள் மின்னுவதால், நறுமணம் வீசும் தாமரை மலரைப் போலச் செந்நிறவொளி பரவப் பெற்ற தெள்ளிய அலைகள் என்னும் நீண்ட கைகளால், தான் ஒருத்தியே அப்படகை ஏந்தி அக்கரையில் சேர்ந்தனள்.

இராமன் குகனிடம் சித்திரகூடம் செல்லும் வழி பற்றி வினவுதல்

அத் திசை உற்று, ஐயன், அன்பனை முகம் நோக்கி,

'சித்திர கூடத்தின் செல் நெறி பகர்' என்ன,

பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா,

'உத்தம! அடி நாயேன், ஓதுவது உளது' என்றான். 37

விளக்கம்

கங்கையின் மறு கரையை அடைந்த இராமன் தன்னிடம் அன்பு கொண்ட குகனை நோக்கி, “சித்திரக் கூடத்துக்குச் செல்லும் வழியைச் சொல்லுக” என்று கேட்டான். குகன் இராமனின் திருவடிகளை வணங்கி, “உத்தமனே! நான் உங்களிடம் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது” என்றான்.

'நெறி, இடு நெறி வல்லேன்; நேடினென், வழுவாமல்,

நறியன கனி காயும், நறவு, இவை தர வல்லேன்;

உறைவிடம் அமைவிப்பேன்; ஒரு நொடி வரை உம்மைப்

பிறிகிலென், உடன் ஏகப் பெறுகுவென் எனின் நாயேன்; 38

விளக்கம்

“நான் உங்களுடன் வரும் பேறு பெறுவாயேயானால், நேர் வழியையும், அதில் குறுக்கிடும் பல கிளை வழிகளையும், அறியும் வல்லமை உடைய நான் தக்கபடி வழிகாட்டுவேன். பழுது நேராமல் நல்லனவாகிய காய்களையும், கனிகளையும் தேனையும் தேடிக் கொண்டு வந்து கொடுப்பேன். ஆங்காங்கே தங்குவதற்குத் தகுந்த குடில் அமைத்துக் கொடுப்பேன். ஒரு நொடிப் பொழுதும் உம்மைப் பிரிய மாட்டேன்” என்று குகன் கூறினான்.

'தீயன வகை யாவும் திசை திசை செல நூறி,

தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன்;

மேயின பொருள் நாடித் தருகுவென்; வினை முற்றும்

ஏயின செய வல்லேன்; இருளினும் நெறி செல்வேன்; 39

விளக்கம்

“தீய விலங்குகளின் வகைகளை, நீங்கள் தங்கும் இடத்தைச் சூழ்ந்த எல்லாத் திசைகளிலும் நெருங்க விடாமல் சென்று அவற்றை அழித்து, தூயவனாகிய மான் மயில் போன்றவை வாழும் காட்டிடத்தை ஆராய்ந்து கண்டுபிடித்துக் காட்டும் வல்லமை பெற்றுள்ளேன். நீங்கள் விரும்பிய பொருளைத் தேடிக் காண்டு வந்து கொடுப்பேன். நீங்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவேன். இரவிலும் வழி அறிந்து நடப்பேன்” என்று குகன் கூறினான்.

'கல்லுவென் மலை; மேலும் கவலையின் முதல் யாவும்;

செல்லுவென் நெறி தூரம்; செறி புனல் தர வல்லேன்;

வில் இனம் உளென்; ஒன்றும் வெருவலென்; இருபோதும்-

மல்லினும் உயர் தோளாய்!- மலர் அடி பிரியேனால்; 40

விளக்கம்

மற்போரிலும் சிறப்புப் பெற்ற தோள்களை உடையவனே! செல்லும் இடம் மலைப் பகுதியானாலும் அங்கே கவலைக் கிழங்கு முதலியவற்றைத் தோண்டி எடுத்துத் தருவேன். வெகு தொலைவில் உள்ள வழியிலும் சென்று அங்குள்ள நீரைக் கொண்டு வந்து கொடுப்பேன். பலவகையான வில்லைப் பெற்றுள்ளேன். எதற்கும் அஞ்ச மாட்டேன். உங்களுடைய மலர் போன்ற திருவடியை ஒரு போதும் பிரிய மாட்டேன்” என்று குகன் கூறினான்.

திரு உளம் எனின், மற்று என் சேனையும் உடனே கொண்டு,

ஒருவலென் ஒரு போதும் உறைகுவென்; உளர் ஆனார்

மருவலர் எனின், முன்னே மாள்குவென்; வசை இல்லேன்;

பொரு அரு மணி மார்பா! போதுவென், உடன்' என்றான். 41

விளக்கம்

“ஒப்பற்ற மார்பை உடையவனே! தாங்கள் சம்மதித்தால் எனது படையை உடன் அழைத்துக் கொண்டு ஒரு பொழுதும் உங்களைப் பிரியாது உங்களுடன் இருப்பேன். என்னால் வெல்ல முடியாத பகைவர்கள் வந்தாலும் உங்களுக்குத் தீங்கு நேரும் முன் நான் இறந்து போவேன். எந்தப் பழியும் பெறாதவனாகிய நான் உம்மோடு வருவேன்” என்று குகன் கூறினான்.

குகனை அவன் இனத்தாருடன் இருக்க இராமன் பணித்தல்

அன்னவன் உரை கேளா, அமலனும் உரைநேர்வான்;

'என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்; இந்

நன்னுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம்

உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்.' 42

விளக்கம்

குகன் கூறிவற்றைக் கேட்ட இராமன் “நீ எனது உயிர் போன்றவன். என் தம்பி இலக்குமணன் உனக்குத் தம்பி. அழகிய நெற்றியைப் பெற்ற இச்சீதை உனக்கு உறவினள். குளிர்ந்த கடலால் சூழப்பட்ட இந்நாடு முழுவதும் உன்னுடையது” என்றான்.

'துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்

பின்பு உளது; "இடை, மன்னும் பிரிவு உளது" என, உன்னேல்;

முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா

அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; 43

விளக்கம்

“துன்பம் உண்டு என்றால் சுகமும் உண்டு. இப்போது இணைந்திருப்பதற்கும், வனவாசத்திற்குப் பின் இணைந்திருக்கப் போவதற்கும் இடைப்பட்டதான பிரிவு என்னும் துன்பம் உள்ளதே என்று எண்ணாதே. உன்னைக் கண்டு தோழமை கொள்வதற்கு முன்னே உடன் பிறந்தவர்களாக நாங்கள் நால்வர் இருந்தோம். இப்போது எல்லையற்ற அன்புடைய உடன்பிறந்தார்களாகிய நாம் ஐவர் ஆகிவிட்மோம்” என்றான் இராமன்.

'படர் உற உளன், உம்பி, கான் உறை பகல் எல்லாம்;

இடர் உறு பகை யா? போய், யான் என உரியாய் நீ;

சுடர் உறு வடி வேலாய்! சொல் முறை கடவேன் யான்;

வட திசை வரும் அந் நாள், நின்னுழை வருகின்றேன். 44

விளக்கம்

ஒளி வீசும் கூரிய வேலை உடையவனே! நான் காட்டில் வாழும் காலமெல்லாம் உன் தம்பியாகிய இலக்குமணன் என்னுடன் இருக்கப் போகிறான். எனவே துன்புறுத்தும் வகைகள் எவை? ஒன்றும் இல்லை. உன் இருப்பிடத்திற்குச் சென்று நான் இருந்து மக்களைக் காப்பது போலக் காப்பதற்கு உரியவன் நீ! வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்ப வடக்கு நோக்கி வரும் அந்த நாளில் உன்னிடம் உறுதியாக வருவேன். நான் சொன்ன சொல்லைத் தவற மாட்டேன்”

'அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன், உம்பி;

இங்கு உள கிளை காவற்கு யார் உளர்? உரைசெய்யாய்;

உன் கிளை எனது அன்றோ? உறு துயர் உறல் ஆமோ?

என் கிளை இது கா, என் ஏவலின் இனிது' என்றான். 45      

விளக்கம்

உன் தம்பியாகிய பரதன் அயோத்தியில் உள்ள சுற்றத்தாரைக் காப்பதற்கு ஏற்ற தகுதியோடு இருக்கிறான். நீ என்னுடன் வந்து விட்டால் இங்குள்ள சுற்றத்தாரைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள். நீயே சொல். உன் சுற்றத்தார் என் சுற்றத்தார் அல்லவா? அதனால் அவர்கள் தம்மைக் காப்பாற்றுவார் இல்லாமல் மிகுந்த துன்பத்தை அடைதல் தகுமா? இங்குள்ள என் சுற்றத்தாரை என் கட்டளையை ஏற்று இனிதாகக் காப்பாயாக” என்றான் இராமன்

குகன் விடைபெறுதலும், மூவரும் காட்டிற்குள் செல்லுதலும்

பணி மொழி கடவாதான், பருவரல் இகவாதான்,

பிணி உடையவன் என்னும் பிரிவினன், விடைகொண்டான்;

அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும்

திணி மரம், நிறை கானில் சேணுறு நெறி சென்றார். 46

விளக்கம்

இராமன் இட்ட கட்டளையை மீறாதவனும் அவனைப் பிரிவதால் உண்டான துன்பத்திலிருந்து நீங்காதவனும் நோய் கொண்டவன் என்று பிறர் நினைக்குமாறு பிரிவுத் துன்பத்தை உடையவனுமான குகன் இராமனிடம் விடை பெற்றுக் கொண்டான். பின்பு இராமனும் இலக்குமணனும் அழகிய ஆபரணங்களை அணிந்த மயிலைப் போன்ற சீதையோடு அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டில் நெடுந்தூரம் செல்வதற்குரிய வழியிலே நடந்து சென்றார்கள்.

வெள்ளி, 21 ஜனவரி, 2022

வளன் செனித்த படலம் - தேம்பாவணி

 

தேம்பாவணி

வளன் செனித்த படலம்

நூல் குறிப்பு

தேம்பாவணியை இயற்றியவர் வீரமாமுனிவர். இந்நூலில் மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன. தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள். தேன் + பா + அணி = தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் எனப் பொருள் கொள்வர். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர். இந்நூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்என்பர்.

ஆசிரியர் குறிப்பு

வீரமாமுனிவரின் இயற் பெயர் கான்ஸ்டான் ஜோசப்பெஸ்கி. கான்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள். இவர் தம் பெயரை “தைரியநாதசாமிஎன மாற்றிக்கொண்டார். தமிழ்ச் சான்றோர் இவரை வீரமாமுனிவர் என அழைத்தனர். 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயற்கை எய்தினார்.

திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார். திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

வளன் செனித்த படலம்:

காப்பியத் தலைவனான வளன் என்னும் சூசை மாமுனிவர், தாவீது மன்னனின் அரச மரபில் தோன்றிய வரலாற்றைக் கூறுவதே வளன் செனித்த படலம் ஆகும். யோசேப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் அப்பெயரை வளன் என்று தமிழ்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வளங்களை வளரச் செய்பவன் என்னும் பொருளுடைய எபிரேய மொழியில் சூசை என்னும் பெயர் வழங்கி வருகிறது. அதன் நேரிய மொழிபெயர்ப்பு தமிழில் வளன் என்பதாகும்.

கதை சுருக்கம்:

யூதேயா நாட்டு மன்னன் சவுல். பிலித்தையர் என்பார் திருமறையைப் பழித்தும் கடவுளை இகழ்ந்தும் வந்தனர். அரக்கன் கோலியாத் இஸ்ரேல் மக்களை இகழ்ந்து, அவர்களுள் ஒருவனை போருக்கு அழைத்தான். தாவீதன் என்னும் சிறுவன் அவனிடம் போர் புரிந்து அவனைக் கொன்றான்.

வளன் செனித்த படலம்

தாவீது மன்னன் சிறப்பு

அன்ன மா திரு நகர் அகத்து, உடற்கு உயிர்

என்ன, மா தாவிதன் இனிதில் வீற்றிருந்து,

ஒன்னலார் வெரு உற உவந்து பாவலர்

சொன்ன பா நிகரும் மேல் துளங்கினான் அரோ. (1)

பெருமை வாய்ந்த எருசலேம் திரு நகரத்தில், உடலுக்கு உயிர் போல, தாவிது மன்னன் மகிழ்ச்சியோடு அரசு வீற்றிருந்தான். பகைவர் அச்சங்கொள்ள, பாவலர் புகழ்ந்து சொன்ன பாடலின் நிகருக்கும் மேலாக விளங்கினான்.

அருளொடு வீங்கிய அகத்தினான்; துளி

மருளொடு வீங்கிய மழைக் கையான்; மலர்ச்

சுருளொடு வீங்கிய தொடையல் மார்பினான்;

பொருளொடு வீங்கிய பொறைப் புயத்தினான். (2)

அவன் உயிர்களிடம் கருணை நிறைந்த நெஞ்சம் படைத்தவன்; மழைபோல் கொடுக்கும் வள்ளல் தன்மை உடையவன்; மலர்களால் அணிந்த மார்பு கொண்டவன்; பொன் அணிகலன்களால் நிறைந்த மலை போல் திரண்ட புயங்களை உடையவன்.

ஒளி தவழ் அசனியை உமிழ்ந்த வில்லினான்;

அளி தவழ் நிழல் செயும் அருட் குடையினான்;

வெளி தவழ் நவ மணி விழுங்கும் தேரினான்;

களி தவழ் மதம் பொழி களிற்றின் ஆண்மையான். (3)

அவன் மின்னலின் ஒளி தவழும் இடியை, அம்பாகப் பொழிந்த வில்லை உடையவன்; கருணை தவழும் நிழலைக் குடிகளுக்கு வழங்கும் அருள் என்னும் குடையை உடையவன்; வெளிச்சம் தவழும் ஒன்பது வகை மணிகள் பதித்த தேரை உடையவன்; மதம் பொழியும் ஆண் யானை போன்ற வீரம் படைத்தவன்.

மொய் முனர் பின்று இலா முரண் கொடு ஏறு எனா,

மெய் முனர் பொய் எனா வெருவு ஒன்னார் இவன்

கை முனர் நிற்கு இலா கலங்கிப் போற்றும், போர்

செய் முனர் செயம் செயும் சிங்க வாகையான். (4)

போர் முகத்தில் புறமுதுகிட்டு ஓடாத வலிமை கொண்டவன். பகைவர் இவன் கை வன்மைக்குமுன் நிற்க இயலாது கலங்கித் தவிக்கும் வல்லமை கொண்டவன். 

வேல் செயும் போரினால் வெலப்படான்; தனைச்

சால் செயும் தவத்தினால் வென்ற தன்மையான்;

சேல் செயும் புணரி சூழ் செகத்தில் நின்று, ஒளி

மேல் செயும் வானவர் விழைந்த பான்மையான். (5)

அவன் வேல்கொண்டு செய்யும் போரினால் எவராலும் வெல்லப் படாதவன்;  தவத்தினால் தன்னையே வென்ற தன்மை உடையவன்; மீன்களைக் கொண்ட கடலால் சூழப்பட்ட மண்ணுலகில்தான் இருப்பினும், மேலே ஒளியைப் பொழியும் வானவரும் விரும்பத்தக்க தன்மை உடையவன்.

நீதி நல் முறை எலாம் நிறைந்த நீண் தவம்,

ஆதி தன் மறை இவை அனைத்தும் மேல் படர்

கோது இல் நன் உதவி செய் கொழு கொம்பு ஆகி, வான்

ஏது இல் நல் முறை இவண் இசைந்த மாட்சியான். (6)

நல்ல நீதி முறையெல்லாம் நிறைந்த நீண்ட தவமும், ஆதிக் கடவுளின் வேதமும் ஆகிய இவை அனைத்தும் பெற்று, உதவியை நாடிவருவோர்க்கு கொழு கொம்பு போன்றவன். வானகத்திற்கு உரிய குறையற்ற நன்முறைகளெல்லாம் இவ்வுலகில் அடைந்து கொண்ட மாட்சிமை உடையவன்.

கோல் நலம் கோடு இலா நிறுவிக் கூர்த்தலால்,

நூல் நலம் பொருள் நலம் அறத்தின் நுண் நலம்

தேன் நலம் இனிதினில் திளைந்து, நாடு எலாம்

மீன் நலம் பயின்ற வான் வியப்ப வாழ்ந்ததே. (7)

நீதி தவறாது செங்கோலின் நலம் வழுவாத முறையில் ஆட்சி செய்பவன்.  நூலால் ஆகும் கல்வி நலமும், செல்வத்தின் நலமும், அறத்தின் நலமும், தேன் போன்ற இன்ப நலமும் இனிது நிறைந்தவன். விண்மீன்களின் நலம் நிறைந்த வானுலகமும் வியக்குமாறு நாடெல்லாம் வாழ்ந்தவன்.

பகை செய்வார்க்கு இடி என, படிந்து போற்றிய

தகை செய்வார்க்கு அமுது என நாமத் தன்மையான்,

நகை செய்வார்க்கு, இளவலாய், நடத்தும் வேல் இலான்,

மிகை செய்வான்; ஆண்மையை விளம்பல நன்று அரோ. (8)

தன்னோடு பகை கொள்பவருக்கு இடி போலவும், தன் கால்களில் விழுந்து துதித்து மேன்மை செய்பவருக்கு அமுது போலவும், அச்சந்தரும் தன்மை உடையவன் அத்தாவிதன் சிறுவனாய் இருந்த காலத்தில் தன்னை இகழ்ந்தவர்களுக்கு, வேல் முதலிய படைக்கருவிகள் இல்லாமலேயே தன் ஆற்றலால் துன்பம் செய்தவன்; இத்தகையவனின் வீரத்தை எடுத்துக் கூறுதல் நன்றாம்.

தாவீதின் இளமைப் பருவம் - சவூல் அரசனைப் பீலித்தேயர் எதிர்த்தல்

மறை வழங்கிய வளம் கொள் நாட்டு இடை சவூல் ஆண்ட

முறை வழங்கிய கால், மறை பகைத்தனர், முகில் நின்று

உறை வழங்கிய ஒப்பு எனச் சர மழை வழங்கி,

பொறை வழங்கிய பிலித்தையர், போர் செய எதிர்த்தார். (9)

சூதேய நாட்டில் சவூல் என்ற மன்னன் ஆண்ட போது, மலைகளில் வாழ்ந்த பிலித்தையர் வேதத்தைப் பகைத்தவராய், மேகம் நின்று மழை பொழிந்ததற்கு ஒப்பாக அம்பு மழை பொழிந்து, போர் செய்யுமாறு எதிர்த்து வந்தனர்.

பீலித்தேயருள் இராக்கதன்

வேலியால் கது விடாத் திரு நகர் எலாம் நடுங்க,

மாலியால் கதிர் வகுத்த வாள் ஏந்தினர் நாப்பண்,

ஆலியால் கரிந்து அகல் முகில் உருக்கொடு வேய்ந்த

கோலியாற்று எனும் கொடியது ஓர் இராக்கதன் எதிர்த்தான். (10)

மதிலின் சிறப்பால் பகைவர் நுழைய விடாத எருசலேம் திருநகர் முழுவதும் நடுங்குமாறு, சூரிய ஒளியால் கதிர் பரப்பிய வாளை ஏந்தி நின்ற பிலித்தையர் நடுவே, மழை நீரினால் கருநிறம் பெற்றுப் பெருத்த மேகத்தைப் போன்ற உருவத்தைக் கொண்டு தோன்றிய கோலியாற்று என்னும் கொடிய ஓர் அரக்கனும் எதிர்த்து நின்றான்.

கோலியாற்றின் தோற்றம்

துளி சிறைச் செயும் முகில் புகும் இரு மலை சுமந்த

ஒளி சிறைச் செயும் ஒரு கரும் பருவதம் என்னா

வெளி சிறைச் செயும் வியன் இரு புயத்து மேல் சிரமே,

களி சிறைச் செயும் கதம் கொடு வெரு உறத் தோன்றும். (11)

 ஒளியை மூடி மறைக்கும் ஒரு கரியமலை என்று சொல்லத்தக்க வகையில், வான வெளியை மூடி மறைக்கும் பெரிய இரு புயங்களுக்கு மேல் அமைந்துள்ள தலையோடு, பார்ப்போர் களிப்பையெல்லாம் அடக்கக் கூடிய சினத்தைக் காட்டிக் கொண்டு அச்சம் விளைவிக்கும் வகையில் தோன்றினான் கோலியாற்று.

நீண்ட வாள் புடை நெருங்கியே, படர் கரு முகில் போல்,

மாண்ட தோள் வியன் வட்டமே பொறுத்து, வெஞ் சுடரைத்

தூண்டல் ஆம் எனச் சுளித்த நீள் ஈட்டி கை தாங்கி,

கீண்டு அளாவு அழல் விழிவழி கிளர்ப்ப விட்டு எதிர்ந்தான். (12)

நெடிய வாளை இடையின் ஒரு பக்கம் நெருங்கத் தொங்கவிட்டு,  தோள்மீது பரந்த கேடயத்தைத் தாங்கி, நீண்ட ஈட்டியைக் கையில் கொண்டு போரை எதிர் கொண்டான்.

கோலியாற்றின் கோபவுரை

பெருக்கு வீங்கிய பெரும் புனல் அலை சுருட்டு அன்ன,

எருக்கு வீங்கிய இழிவு உகு நெஞ்சு இடை அடங்காச்

செருக்கு வீங்கிய இராக்கதன் எரி எழச் சினந்து,

தருக்கு வீங்கிய சல உரை இடி என இடிப்பான். (13)

 நெஞ்சில் அடங்காத அகந்தை பெருகிய அரக்கன் தீப்பொறி பறக்கச் சினந்து, ஆங்காரம் பொங்கிய கோப மொழிகளை இடிபோல் முழங்கி இடித்துக் காட்டிச் சொன்னான்.

''கூர்த்த போர் செயக் கூடினர்க்கு ஒருவன் வந்து எய்தி,

சீர்த்த நான் அவன் சிறந்த போர் தனித் தனித் தாக்க,

தோர்த்த பாங்கினர் தொழும்பர் என்று ஆகுவர்,'' என்னா,

ஆர்த்த ஓகையான் நகைத்து, இகழ்வு அறைந்துஅறைந்து அழைப்பான். (14)

“உங்களுள் ஒருவன் இங்கு வந்து என்னுடன் போரிட வேண்டும். சிறப்புள்ள நானும் அவனும் தனித்தனி நின்று தாக்க வேண்டும், என்னுடன் போரிட்டுத் தோற்றவன், வென்றவனுக்கு அடிமைகள் என்று ஆகக்கடவர்,'' என்று அறைகூவி அழைத்தான்.

கண்டவர் மருட்சி

பெரிய குன்றமோ? பேய் அதோ? பூதமோ? ஏதோ?

உரியது ஒன்று இலா உருவினைக் கண்டு உளி வெருவி,

கரிய விண் இடி கதத்த மின் கொடு விடுத்து அன்ன

அரிய கோலியாற்று அறைந்த சொல் கேட்டனர் மருண்டார். (15)

அவ்வுருவம் ஒரு பெரிய மலையோ? பேயோ? பூதமோ? வேறு யாதோ? என்றவாறு அவ்வுருவத்தை இசுரவேலர் கண்டு அஞ்சினர்; கோலியாற்று அறைகூவிய சொல்லைக் கேட்டு மயங்கினர்.

கோலியாற்றின் அகந்தை நகைப்பு

நல் நெடும் படை நடுக்கு உறீஇ வெருவிய தன்மை

நல் நெடுங் குவடு ஒத்தனன் செருக்கு எழுக் கடுத்து,

பல் நெடும் பகல் பரமனைப் பகைப்பவும், இகழ்ந்த

சொல் நெடும் பகை தொடர்ந்தனன் எவரையும் நகைப்பான். (16)

இசுரவேலர் படை நடுக்கங் கொண்டு அஞ்சிய தன்மையைக் கண்டு, செருக்குற்று, அவர்கள் தொழும் ஆண்டவனைப் பகைத்தான்; 

சவூல் அரசன் அறிக்கை

தாங்குவார் இலா, சாற்றிய உரைகள் கேட்டு எவரும்

நீங்குவார் என, நிருபனும் அயரு தன் நெஞ்சிற்கு

ஏங்குவான்: ''எவன் எதிர்ந்த அவ் அரக்கனை வென்றால்,

ஆங்கு நான் அவற்கு என் மகள் அளிக்குவேன்'' என்பான். (17)

அவனைத் தடுப்பவர் எவருமே இல்லாமல், அவன் சொல்லிய வீர உரைகளைக் கேட்டு எவருமே நீங்கி விடுவாரென்று கண்டு, மன்னனும் அயர்ந்து தன் நெஞ்சத்தில் ஏக்கம் கொள்வான்: ''எவனேனும் எதிர்கொண்டு வந்து அவ்வரக்கனை வெல்வானாயின், அப்பொழுதே நான் அவனுக்கு என் மகளை மணமுடித்துக் கொடுப்பேன்'' என்பான்.

வீர இளைஞன் தாவீதன்

இன்னவாய்ப் பகல் நாற்பதும் இரிந்த பின், அண்ணர்

முன்னர் மூவரே முரண்செயப்போயினர், அவரைத்

துன்ன ஆசையால் தொடர்ந்து இள தாவிதன் எய்தி,

அன்ன யாவையும் அஞ்சினர் அறைதலும் கேட்டான். (18)

இவ்வாறாக நாற்பது நாட்களும் கடந்து சென்றபின், இளமை வாய்ந்த தாவிதன், தன் தமையன்மார் மூவர் போர் செய்யப் போயிருந்தமையால், அவர்களைக் காண ஆசையால் தொடர்ந்து அங்கு வந்து சேர்ந்து, அங்கு நடந்த யாவற்றையும் அவர்கள் அச்சத்தோடு சொல்லவும் கேட்டான்.

தாவீதன் இசுரவேலரிடம் வீரமொழி விளம்பல்

கேட்ட வாசகம் கிளர் திற நெஞ்சு இடத்து எரியை

ஈட்டல் ஆம் என எழுந்து, ''உளம் நினைந்தவை ஆக்கிக்

காட்ட, வாய்மையின் கடந்த, வல் கடவுளை நகைப்ப

வேட்ட லால், விளி விழுங்கிய கயவன் ஆர்?'' என்றான். (19)

அவ்வார்த்தையைக் கேட்ட தாவிதன் கொதித்து எழுந்து, ''சொல்லுக்கு அடங்காத தன்மையுடைய தன் உள்ளம் நினைந்தவற்றை அவ்வாறே ஆக்கிக்காட்ட வல்ல கடவுளை இகழ்ந்து பேச விரும்பியதன் மூலம், சாவையே விழுங்கிய அத்தீயவன் யார்?'' என்றான்.

''கை வயத்தினால், கருத்து இடத்து உடலின் ஊங்கு ஓங்கும்

பொய் வயத்தினான் புகைந்த சொற்கு அஞ்சுவது என்னோ?

மெய் வயத்தினால் விழை செயம் ஆவதோ? கடவுள்

செய் வயத்தினால், சிறுவன் நான் வெல்லுவேன்'' என்றான். (20)

பொய்யான வலிமையைக் கொண்டுள்ள ஒருவன் சினத்தினால் புகைந்து பேசிய சொல்லுக்கு அஞ்சுவது ஏனோ? உடலின் வலிமையினால் மட்டும் ஒருவனுக்கு விரும்பிய வெற்றி கிட்டுவதோ? கடவுள் தரும் வலிமையினால் சிறுவனாகிய நானுமே அவனை வெல்லுவேன்'' என்றான்.

சவூல் அரசன் வினாவும், தாவீதன் விடையும்

என்றது அண்ணல் கேட்டு, ''இவன்தனைக் கொணர்மின்'' என்று இசைப்ப,

சென்ற அன்ன நல் சேடனை நோக்கலும், ''நீயோ

போன்ற உன்னினாய்? பொருப்பினைப் பெயர்த்து எறிந்து, உவமை

வென்ற திண்மையான் வெகுளி முன் நீ எவன்!'' என்றான். (21)

என்று தாவிதன் சொல்லியதை அரசன் கேள்வியுற்று, ''இவனை உடனே அழைத்துக் கொண்டு வாருங்கள்'' என்றான்; அதன்படி சென்ற அந்த நல்ல சிறுவனைக் கண்டதும், ''நீ இறக்க எண்ணினாயோ?  அவ்வரக்கனின் சீற்றத்திற்குமுன் நீ எம்மாத்திரம்!'' என்றான்.

ஏந்தல் ஈர் அடி இறைஞ்சிய இளவலும் அறைவான்:

''காய்ந்தது ஓர் பகை கடுத்த தன் பவம் செயின், மீட்டு

வேய்ந்தது ஓர் படை வேண்டுமோ? கடவுளைப் பகைத்து,

வாய்ந்த ஆண்மையை மறுத்தனை எவன் வெல்லான், ஐயா?'' (22)

அரசனது இரண்டு அடிகளையும் வணங்கிய சிறுவனாகிய தாவிதன், ''ஒருவனுக்குத் தன் பாவமே  ஒரு பகையாக அமைந்து விடும், அதுவே கொல்லும் படை ஆகவும் ஆகிவிடும். அதுவல்லாது, புறத்தேயிருந்து வேறொரு படையும் வேண்டுமோ? ஐயா, கடவுளைப் பகைத்து, அவனுக்கு இயல்பாக அமைந்துள்ள ஆண்மையை மறுத்த ஒருவனை எவன்தான் வெல்ல மாட்டான்?” என்று கூறினான்.

''திறம் கடுத்த கொல் சிங்கமும் உளியமும் பாய்ந்து,

மறம் கருத்து அதிர் வல்லியத்து இனங்களும் எதிர்ந்து,

கறங்கு அடுத்த கால், கழுத்தினை முருக்கி நான் கொன்றேன்.

அறம் கெடுத்தவன் அவற்றினும் வலியனோ?'' என்றான். (23)

         ''வலிமையோடு சினந்து கொல்லும் சிங்கமும் கரடியும் பாய்ந்து வந்தும், கொடுமையோடு சினந்து முழங்கும் புலியினங்களும் எதிர்கொண்டு வந்தும், காற்றாடி போல் சுழன்று என்னை எதிர்த்தபோது, அவற்றின் கழுத்தை நெரித்து நான் கொன்றேன். அறத்தைக் கெடுத்தவனாகிய இவ்வரக்கன் அவற்றைக் காட்டிலும் வலியவனோ?'' என்றான்.

அரிய ஆண்மையை அதிசயித்து அரசன், ''நன்று'' என்னா,

விரி அளாவு ஒளி வேலொடு தனதுபல் கருவி

உரிய போர் செய ஒருங்கு தந்தனன். ''அவற்றொடு'' தான்,

''திரிய வாய் முறை தெரிகிலேன்'' என மறுத்து அகன்றான். (24)

அரசன் அவனது அரிய வீரத்தை அறிந்து வியப்புற்று ''நல்லது'' என்று இசைந்து, உரிய போருக்கு உதவவென்று விரிந்து பரவும் ஒளி பொருந்திய தனது வேலோடு வேறு பல கருவிகளையும் ஒருங்கே கொடுத்தான். தாவிதனோ, ''அவற்றோடு நடந்து செல்ல அமைந்த முறையை நான் அறிகிலேன்'' என்று மறுத்து விட்டு அகன்றான்.

தாவீதன் போருக்குப் புறப்படுதல்

தெரிந்த வாய்ந்த ஐஞ் சிலையொடு கவண் எடுத்து, எவரும்

இரிந்த பாலனை நோக்கி உள் அதிசயித்து இரங்க,

விரிந்த ஆசையால் வேதியர் ஆசியைக் கூற,

பிரிந்த கால் ஒலி பெருக ஆங்கு அனைவரும் ஆர்த்தார். (25)

தானே தெரிந்தெடுத்த வாய்ப்பான ஐந்து கற்களோடு கவணையும் கையில் எடுத்துக் கொண்டு சென்றான். அங்கிருந்து நீங்கிய சிறுவனை நோக்கி யாவரும் மனத்துள் வியந்து இரங்கினர்; குருக்கள் யாவரும் வெற்றியின் ஆசையால் ஆசி மொழிகளைக் கூறினர்; தன் பக்கத்துப் படையணியை விட்டுத் தாவிதன் தனியே பிரிந்து சென்ற போது அங்கு இசுரவேலர் அனைவரும் ஒலி பெருக ஆரவாரம் செய்தனர்.

கோலியாற்றின் கோபமொழி

ஆர்த்த ஓதை கேட்டு, அரக்கன், இன்று அமர்க்கு எதிர் வருகப்

பார்த்த பாலனைப் பழித்து எழுந்து, யாவரும் அஞ்சக்

கூர்த்த வேலொடு குறுக வந்து, அகல் கரு முகிலின்

பேர்த்த கோடை நாள் பேர் இடி என உரை செய்தான்: (26)

இசுரவேலர் ஆரவாரித்த ஓசையை அரக்கனாகிய கோலியாற்று கேட்டு, தன்னோடு போர் செய்ய எதிர்த்து வந்த சிறுவனைப் பழித்த வண்ணம் எழுந்து, யாவரும் அஞ்சுமாறு கூர்மையான வேலோடு அணுகி வந்து,  பேரிடி போல முழங்கிச் சொல்லலானான்:

"நீ, அடா, எதிர் நிற்பதோ? மதம் பொழி கரி மேல்

நாய், அடா, வினை நடத்துமோ? கதம் கொடு நானே

வாய், அடா, பிளந்து உயிர்ப்பு இட மறுகி நீ நுண் தூள்

ஆய், அடா, உலகு அப்புறத்து ஏகுவாய்!" என்றான். (27)

‘அடே! நீ என் எதிரே நிற்கவுங் கூடுமோ? நாய் நின்று, மதம் பொழியும் யானையை எதிர்த்துப் போர்வினை நடத்துமோ! அடே! சினங்கொண்டு நான் வாய் திறந்து மூச்சு விடவும்! நீ சுழன்று, நுண்ணிய தூளாய்ப் பொடிந்து, இவ்வுலகிற்கு அப்புறமுள்ள மறுவுலகிற்கே சென்று விடுவாய், அடா!" என்றான்.

தாவீதன் மறுமொழி

"வெல் வை வேல் செயும் மிடல் அது உன் மிடல், அட! நானோ

எல்வை ஆதரவு இயற்று எதிர் இலாத் திறக் கடவுள்

வல் கையோடு உனை மாய்த்து, உடல் புட்கு இரை ஆக

ஒல் செய்வேன்" எனா, உடை கவண் சுழற்றினன் இளையோன். (28)

சிறுவனாகிய தாவிதன் அவனை நோக்கி, "வெல்லும் தன்மையுள்ள கூர்மையான வேல் தரும் வலிமையாகிய அது ஒன்றே உன் வலிமை! நானோ தக்க சமயத்தில் ஆதரவு தரும் ஒப்பில்லா வல்லமை கொண்ட கடவுளின் வலிய கையின் துணை கொண்டு உன்னைக் கொன்று, உன் உடலை விரைவில் பறவைகளுக்கு இரையாகுமாறு செய்வேன்" என்று சொல்லிக்கொண்டே, தன் கையிலுள்ள கவணைச் சுழற்றினான்.

கோலியாற்றின் வீழ்ச்சி

கல்லை ஏற்றலும், கவணினைச் சுழற்றலும், அக்கல்

ஒல்லை ஓட்டலும் ஒருவரும் காண்கிலர்; இடிக்கும்

செல்லை ஒத்து அன சிலை நுதல் பாய்தலும், அன்னான்

எல்லை பாய்ந்து இருள் இரிந்து என வீழ்தலும்கண்டார். (29)

தாவிதன் கல்லைக் கவணில் ஏற்றியதையும், கவணைச் சுழற்றியதையும், அக்கல்லை விரைவில் அரக்கன் மீது செலுத்தியதையும் ஒருவருமே கண்டுகொள்ளவில்லை. இடிக்கும் மேகம் போன்று அந்தக்கல் அவன் நெற்றியில் பாய்ந்ததையும், பகலவன் பாய்ந்து வர இருள் நீங்கியதுபோல் அவன் விழுந்ததையும் மட்டுமே எல்லோரும் கண்டனர்.

இறைவனைப் பழித்த இராக்கதன் தலை

கடை யுகத்தினில் கரு முகில் உருமொடு விழும் போல்,

படை முகத்தினில் பார்பதைத்து அஞ்ச வீழ்ந்தனன் தன்

புடை அகத்தினில் புணர்ந்த வாள் உருவி, "என் தெய்வம்

உடை உரத்தினை உணர்மின்!" என்று இருஞ்சிரம் கொய்தான். (30)

யுக முடிவில் கரு மேகம் இடியோடு விழுவது போல், நிலம் பதைத்து அஞ்சுமாறு போர்க்களத்தில் வீழ்ந்த அவ்வரக்கனது இடையின் ஒரு பக்கம் பொருந்தியிருந்த வாளைத் தாவிதன் உருவி, பிலித்தையரை நோக்கி, "என் இறைவன் கொண்டுள்ள வல்லமையை இதன்மூலம் உணர்ந்து கொள்ளுங்கள்!" என்று கூறி, அவனது பெரிய தலையைக் கொய்தான்.

கூன் நெடும் பிறை குழைந்த வாய் நிரைநிரை தோன்ற,

ஊன் நெடுந்திரை ஒழுக, ஆங்கு அனைவரும் கூச,

நீல் நெடும் பொறை நிகர் தலை தூக்கினான், ஒன்னார்

மால் நெடும் படை மருண்டு உளைந்து உளம் முறிந்து ஓட. (31)

அங்கு நின்ற இசுரவேலர், பிலித்தையர் அனைவரும் கண்டு, கூசவும், பகைவர்தம் பெருமை கொண்ட நெடும் படை மயங்கி நொந்து மனம் முறித்து ஓடவும், அவன் ஊனினின்று நெடிய திரை போல் குருதி ஒழுகவும், கரிய நெடிய மலை போன்ற தலையைத்  தாவிதன் தூக்கிக் காட்டினான்.

தாவீதன் அரசனாதல்

கார் முகத்து அசனி கூசக் கடுத்த அவ் அரக்கன் வென்ற

சீர் முகத்து இளவல், பின்னர் திறத்த தன் நாம வேலால்

போர் முகத்து எதிர் ஒன்று இல்லான், பொழி மறை பழித்த யாரும்

பார் முகத்து அதற்கு எஞ்ஞான்றும் பரிந்திட வகை செய்தானே. (32)

 சினந்து வந்த அவ்வரக்கனைக் கொன்று வென்ற சிறப்பைக் கொண்டுள்ள அச் சிறுவன், பிற்காலத்தில் திறம் படைத்த, அச்சம் தரும் தன் வேலால் போர்க் களத்தில் தனக்கு நிகர் ஒன்றும் இல்லாதவனாய் விளங்கி, நலமெல்லாம் பொழியும் திருமறையை முன் பழித்த யாவரும் உலகத்தில் அதற்கு எந்நாளும் அன்பு செலுத்த வகை செய்தான்.

கொய்த வாள் முடி திரண்ட குப்பைகள் ஏறி, வெய்யில்

செய்த வாள் முடியைச் சூடி, சிறந்த ஆசனத்தில் ஓங்கி,

பெய்தவான் ஒளியோடு ஆய்ந்த பெருந் தயை பிலிற்றும்செங்கோல்

எய்த வான் இறையோன் ஆண்மை எய்தியே, அரசன்ஆனான்.(33)

வானுலக ஆண்டவன் தந்த வல்லமையைத் தாவிதன் அடைந்து, தன் வாள் கொய்த பகைவரின் தலைகள் திரண்ட குவியலைக் காலால் மிதித்து ஏறி, ஒளியைச் செய்த வாளை இடையிலும் முடியைத் தலையிலும் அணிந்து, சிறந்த அரியணையில் உயர்ந்து வீற்றிருந்து அரசன் ஆனான்.

நூல் நகத் துளங்கி, கேள்வி நுண் அறிவாளர் ஒவ்வா,

வானகத்து ஒதுங்கி வாழும் வரும் பொருள் காட்டும் காட்சி,

கானகத்து ஒதுங்கி வைகும் கடித் தவத்தோடும் இன்ன

கோன் அகத்து இலங்கி, அங்கண் குடி என வதிந்த தாம் ஆல். (34)

நூலறிவை இகழுமாறு விளங்கி, கேள்வியால் அடைந்த நுண்ணறிவு படைத்தவரும் ஒவ்வாத வகையில், வானுலகத்திற்கே உரியதாய் அமைந்த எதிர்காலப் பொருளை முன்னரே காட்டும் தெய்வக் காட்சி, இந்த மன்னனிடத்து விளங்கிற்று. இவை அவனுக்குக் குடிகள்போல அவன்பால் தங்கியிருந்தன.

சூழ்ந்த பொன் முடியும் கோலும் துறந்து போய் அரிய கானில்

வாழ்ந்த ஒண் தவம் செய் மன்னர் வழங்கினும், அதனைக் கூட்டி

ஆழ்ந்த பல் மணியின் வீங்கும் ஆசனத்து இருக்கக் சேர்த்தல்

தாழ்ந்த பண்பு ஒழித்த இன்ன தரும கோன் அரிதின் செய்தான். (35)

சூடிய பொன் முடியும் செங்கோலும் துறந்து, அரிய காட்டில் வாழ்ந்து சிறந்த தவம் செய்த மன்னரும் இருந்தனர். ஆயினும், இந்த நீதி மன்னன் பல மணிகள் பதிந்த அரியணையில் இருந்து தாழ்ந்த குணங்களையெல்லாம் ஒழித்தான்.

வேலொடு மாற்றார் வெள்ளம் வென்று வென்று அடக்கி, தன்னை

நூலொடு வெல்ல ஐந்து துன்புலன் அடக்கிக் காத்து,

கோலொடு வழாமை நீதிக் கொழுந்து சேர் கொழுகொம்பு ஆனான்,

சூலொடு வழங்கும் மாரித் துளி பழித்து அருளும் கையான். (36)

 இரவலர்க்கு அருளோடு கொடுக்கும் கையை உடையவனாகிய தாவிதன், தனது வேலின் ஆற்றலால் பகைவர் வெள்ளத்தை வென்று வென்று அடக்கி, நூலறிவோடு பொருந்தத் தன்னை வெல்லுமாறு நுண்ணிய ஐம்புலன்களையும் அடக்கிக் காத்து, செங்கோல் முறையினின்று வழுவாமையால் நீதி என்னும் படர் கொடியின் கொழுந்து சேர்ந்து  தழைப்பதற்கான கொழுகொழும்பு போல் ஆனான்.

மன் அருந் தயையால் பாரில் வழங்கிய சீர்த்தி அல்லால்,

இன் அருங் குணங்கள் தம்மால் இறையவற்கு உகந்த கோமான்,

முன் அருந் தவத்தோர் கொண்ட முறைதவிர் வரங்கள் எய்தி,

துன் அரும் உயர் வீடு உள்ளோர் துணை எனப் புவியில் வாழ்ந்தான். (37)

இனிய அரிய குணங்களின் சிறப்பால் ஆண்டவனுக்கு உகந்த மன்னனாகிய தாவிதன், அரிய தவமுடையோர் கொண்ட அளவு முறைக்கு அடங்காத வரங்களும் அடைந்து, அடைவதற்கு அரிய உயர்ந்த மோட்ச வீட்டில் உள்ளவர்களுக்கு நிகராகவும் இவ்வுலகில் வாழ்ந்தான். 

ஆயினான் நடந்த தன்மை ஆண்டகை உவப்பில் ஓர் நாள்

"வீயினால் நிகர்ந்த எச்சம் இடை முறை பலவும் போய் ஓர்

சேயினால் நயப்பச் செய்வேன், சிறந்த மூஉலகில் அன்னான்

வாயினால் நவிலாக் கோன்மை வரம் பெற அளிப்பேன்" என்றான். (38)

இவ்வாறெல்லாம் அமைந்த அவன் வாழ்க்கை நடத்திய தன்மையால் ஆண்டவன் மகிழ்ச்சியோடு ஒரு நாள் அவனுக்குத் தோன்றி, "மலரை ஒத்த உன் சந்ததி இடையே பல தலைமுறை கழிந்தபின் ஒரு மகனால் மகிழச் செய்வேன். சிறந்த மூன்று உலகங்களிலும் வாயினால் சொல்ல இயலாத ஆட்சியுரிமையை அவன் பெற வரம் அளிப்பேன்" என்றார்.

வாக்குறுதியின் வழித் தோன்றல்

தந்த இவ் வரம் இன்னான் தன் சந்ததி முறையில் சேய் ஆய்

வந்த தற்பரனால் ஆய வளப்பம் என்றாலும், என்ற

இந்த நல் முறையால், மைந்தன் இயல்பொடு தேவன் என்பான்

அந்தரம் முதல் யாண்டும் ஆள்வதும் அரிய பாலோ? (39)

கடவுள் தாவிதனுக்குத் தந்த இந்த வரம் இவனது சந்ததி முறையில் மகனாய் வந்த ஆண்டவனால் ஆகிய நிறைவேற்றம் என்று சொல்லலாம்.  

கோன்மையால் உயர்ந்த தாவின் கோத்திரத்து உதிக்கும் தெய்வ

மேன்மையால் ஒருவன் அன்றி, விபுலையில் பிறக்கும் மாக்கட்

பான்மையில் உயிர்த்த மைந்தன் பாரொடு வானும் ஆள,

நான்மையால் வழுவாச் செங்கோல் நல்க உள்ளினன் ஆம் நாதன். (40)

ஆட்சி முறையால் உயர்ந்த தாவிதனின் குடியில் தோன்றும் தெய்வ மேன்மையால் அமைந்த ஒருவனுமன்றி, உலகில் இயல்பாகப் பிறக்கும் மக்கள் தன்மை மட்டும் கொண்டு தோன்றிய மகன் ஒருவனும் மண்ணுலகத்தோடு வானுலகத்தையும் ஆளுமாறு, நால்வகைக் குற்றங்களாலும் வழுவாத செங்கோல் அவனுக்குக் கொடுக்கவும் ஆண்டவன் நினைத்தான் ஆகும்.

உள்ளினது எல்லாம் உள்ளும் உறுதியால் ஆக்கும் வல்லோன்,

எள்ளினது எல்லாம் நீக்கும் இயல்போடு, தாவிதன் தன்

வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ உலகம் ஆள

நள்ளின வளம் கொள் ஆசை நயத்தொடு தெரிந்திட்டானே. (41)

நினைத்தலின் உறுதியால் நினைத்ததெல்லாம் ஆக்கும் வல்லமை கொண்ட ஆண்டவன், இகழத்தக்கதெல்லாம் நீக்கும் தன் இயல்புக்கு  ஏற்றவாறு, தாவிதனின் வளமான குல முறையில் மகனாய் வந்து மூன்று உலகங்களையும் ஆளுமாறு, செறிந்த வரங்களின் வளம் கொண்ட சூசையை இன்பத்தோடு தெரிந்து கொண்டான்.

ஏற்றிய முறையோடு, எந்தை, இயன்ற தன் வலிமைகாட்ட

போற்றிய வரம் கொடு எங்கும் பொருநனாய்த் தெரிந்த சூசை,

சாற்றிய கோத்திரத்தின் தலைமுறை வழுவாதேனும்,

மாற்றிய திரு ஒன்று இன்றி வறுமையான் பிறக்கச் செய்தான் (42)

எம் தந்தையாகிய ஆண்டவன், உயர்த்திய தன்மைக்கு ஏற்பப் போற்றத் தக்க வரங்களைக் கொண்டு எவ்வுலகிற்கும் அரசனாகத் தெரிந்து கொண்ட சூசை, முன் கூறிய தாவிதனின் குடித் தலைமுறையில் வழுவாது பிறந்தானெனினும், தன்னிடம் பொருந்தியுள்ள வலிமையை உலகிற்குக் காட்டுமாறு, பரம்பரையாய்க் கைம்மாறி வரவேண்டிய செல்வம் ஒன்றுமே இல்லாத வறுமையாளனாய் அவனைப் பிறக்கச் செய்தான்.

பொய்ப் படும் உலக வாழ்வின் பொருட்டு இலாமிடிமையோடு,

கைப் படும் உழைப்பில் உண்டி காண வந்து உதித்த இல்லான்,

மெய்ப்படும் அறத்தின் ஆண்மை விளங்கிய முறையின், பின்னர்

ஐப் படும் விசும்பொடு எங்கும் அரசனாய் வணங்கச் செய்தான். (43)

பொய்யான உலக வாழ்க்கையை முன்னிட்டு வேண்டிய பொருள் இல்லாத வறுமையோடு, தன் கையால் செய்யும் உழைப்பின் மூலமே உணவு தேடும் தன்மையாய் வந்து தோன்றிய வறியவனாகிய சூசையை, உண்மையான புண்ணியத்தின் வீரம் அவனிடம் விளங்கிய அடிப்படையில், அழகு பொருந்திய வானுகத்தோடு எவ்வுலகும் அரசனாய் அவனை வணங்குமாறு அவ்வாண்டவனே செய்தான்.

நூல் நிலம் காட்சியால் நுனித்த கால் உணர்

மீன் நிலம் கடந்து எலாம் ஆளும் வேந்து தான்

தேனில் அம் கருணையால் தெளிந்த எல்வையில்,

கான் நிலம் தவத்தினால் கருப்பம் ஆயதே. (44)

வேத நூலுக்கு நிலைக்களனாகிய தெய்வக் காட்சியால் ஒவ்வொன்றிற்கும் கருதிய காலத்தை உணர்ந்தவனாய், விண்மீன் உலகத்தையும் கடந்து நின்று எல்லாவற்றையும் ஆளும் அரசனாகிய ஆண்டவன், தேனிலும் இனிய கருணையால் தான் தெளிந்து குறித்த சமயத்தில், தெய்வ மணத்திற்கு நிலைக்களனாய்ப் பெற்றோர் செய்த தவத்தின் பயனாகக் கருப்பம் உண்டாகியது.

கொலை முகந்து அழன்ற வேல் கொற்றத் தாவிதன்

தலை முகந்து ஒழுகிய குலம் சகோபு அவன்

சிலை முகந்து அவிர் நுதல் தேவி நீப்பி இன்பு

அலை முகந்து உவந்து சூல் அணிந்து உள் ஓங்கினாள். (45)

கொலைகளை அள்ளிக்கொண்டு கொதித்த வேலின் வெற்றி படைத்த தாவிதனைத் தலையாகக் கொண்டு தொடர்ந்துவந்த குலத்தில் வந்தவன் சகோபு என்பவன். அவன் மனைவி வில்லின் வடிவங் கொண்டு ஒளிரும் நெற்றியை உடைய நீப்பி என்பவள். அவள் இன்ப அலையில் மூழ்கி மகிழ்ந்து கருப்பம் கொண்டு உள்ளத்தில் எழுச்சி கொண்டாள்.

மணி பழித்து அருங் கவின் மங்கை உள் உவந்து,

அணி பழித்து அணிந்த நல் கருப்பம் ஆய கால்,

பிணி பழித்து உறு நயம் பெருகி மேல் எழீஇ,

பணி பழித்து ஒளி முகம் பொறித்த பான்மையே. (46)

மணிகளைப் பழித்து அரிய அழகு கொண்ட நீப்பி என்னும் மங்கை, உள்ளம் மகிழ்ந்து, அணிகலன்களைப் பழித்ததுபோல அணிந்த நல்ல கருப்பம் உற்றாள். அப்பொழுது கருப்பத்தால் வரும் துன்பத்தையெல்லாம் பழித்து மிக்க இன்பம் பெருகி மேல் எழுந்தது. அணிகலன்களைப் பழித்து ஒளிகொண்ட அவளது முகம் சித்திரமாகத் தீட்டிய தன்மையாய் விளங்கிற்று.

தாரொடு சனித்த தேன் தன்மையோ? வளை

ஏரொடு கொண்ட முத்து இலங்கும் தன்மையோ,

நீரொடும் ஐந்து தம் பகையை நீத்து, ஒரு

சீரொடு, வேற்று இல சிறந்த சூல் அதே? (47)

நீரோடும் ஐந்து பூதங்கள் தம் பகையை நீக்கி ஒரு சீராய் இணைந்து, வேற்றுமை இல்லாமல் சிறந்து அமைந்த அந்தக் கருப்பம், மாலையின் மலரோடு பிறந்த தேனின் தன்மை என்போமோ? சங்கு அழகோடு சூல் கொண்ட முத்து உள்ளிருந்து ஒளிரும் தன்மை என்போமோ?

அறை வளர் மனையினுள் அரசன் புக்கு என,

இறை வளர் அன்பின் ஓர் உயிர் இயற்றி, வெண்

பிறை வளர் நலமென வளர்ந்த பீள் உள

சிறை வளர் உடலினுள் செலுத்தினான் அரோ. (48)

அறை வீடுகள் நிறைந்துள்ள ஒரு மாளிகையுள் அரசன் புகுந்தது போல், ஆண்டவன் மிகுந்த அன்போடு ஓர் உயிரைப் படைத்து, வெண் பிறை வளரும் அழகுபோல் வளர்ந்த கருப்பத்தைக் கொண்டுள்ள சிறைபோல் அமைந்த உடலினுள் செலுத்தினான்.

வாய் வழி பரவிய நஞ்சின் வண்ணமே,

காய் வழி ஆதன் முன் கனிந்து அருந்திய

தீய் வழி, கரு வழி சேரும் தொல் செயிர்

ஓய் வழி பொறாது, இறை ஒழிய முன்னினான். (49)

வாய் வழியே சென்று உடலெல்லாம் பரவிய நஞ்சினைப்போல் விலக்கப்பட்ட கனியின் வழியாக முன் படைப்புக் காலத்தில் மனித இனமுதல்வனான ஆதன் மனம் இசைந்து அருந்திய பாவத்தின் வழியாக, மானிடர் அனைவர்க்கும் கருப்பத்தின் வழியாக வந்து சேரும் பழைய பாவம், திருமகனின் பாடுகளின் பயனாக ஓயும் வழி ஏற்படும் வரையில் பொறுத்திராது, அப்பொழுதே வளனுக்கு ஒழித்துவிட ஆண்டவன் நினைத்தான்.

புரப்ப ஓர் பொது முறை பொறாத தன்மையால்

கருப்பம் ஓர் எழு மதி கடக்கும் முன் வினை

பரிப்ப ஓர் சிறப்பு அருள் பயத்தின் சூல் செயிர்

விருப்பமோடு இறையவன் விலக்கினான் அரோ  (50)

பிறை வளரும் அழகுபோல் வளர்ந்த கருப்பத்தைக் கொண்டுள்ள சிறைபோல் அமைந்த உடலினுள் செலுத்தினான். (கருவிலுள்ள சூசையின் உறுப்புகளுக்கு அறை வீடுகளும், உடலுக்கு மாளிகையும், உயிருக்கு அரசனும் உவமை)

தீயவை விலக்கிய சிறப்பின், தேவு அருள்

தூயவை பதி வரத் தொகையின் சூல் இடத்து

ஆயவை அறிந்திலள், அளவுஇல் உள் மகிழ்

தாய் அவள் வியப்பு உறீஇ, தளர்வு அற்று ஓங்கினாள். (51)

பாவத்தோடு தொடர்ந்த தீயவற்றை யெல்லாம் நீக்கிய சிறப்பினோடு, தெய்வ அருளால் தூயனவாகப் பதிந்த வரங்களின் தொகையால் தன் கருப்பத்தினுள் நிகழ்ந்தவற்றை அறியாதவளாய், அளவில்லாது உள்ளம் மகிழ்ந்த தாயாகிய நீப்பி என்பவள் வியப்படைந்து, தளர்வு நீங்கி எழுச்சி கொண்டாள்:

தேன் முகம் புதைத்த சூல் செறித்த சீர் கொடு

கான் முகம் புதைத்து அவிழ் கமலப் பூ என,

சூல் முகம் புதைத்த சீர்த் தொகை புறப்பட,

தான் முகம் புதைத்து ஒளி தயங்கும் தாய் அரோ. (52)

தேனைத் தன்னில் மறைத்து, சிறப்போடு வாசனையையும் உள்ளே புதைத்து வைத்திருந்து பின் இரண்டும் புலப்பட விரியும் தாமரை மலர் போல, அத்தாயும் தனது கருப்பத்தில் மறைந்து கிடந்த சிறப்புகளின் மிகுதி உள்ளடங்கமாட்டாது வெளிப்படவே, அவ்வொளி முகமெல்லாம் மூட ஒளிர்ந்து விளங்குவாள்.

சொல் ஆர் நிகர் கெட ஓர் வனப்பின் பைம்பொன் சூல் முற்றி

அல் ஆர் இருள் கெட மீ முளைத்த திங்கள் அணி மணி போல்

எல் ஆர் முகத்து இலங்கி பிறந்த தோன்றல் எழில் கண்டு

பல்லார் உடை மம்மர் கெட தாய் இன்ப பயன் கொண்டாள்  (53)

சொற்களில் நிறைந்த ஒப்புமையெல்லாம் கெடத்தக்கதோர் அழகோடு பசும் பொன் போன்ற கருப்பம் முதிர்ந்து, இரவில் நிறைந்துள்ள இருள் கெடுமாறு மேல் வானத்தில் தோன்றிய சந்திரன் கொண்ட அழகுபோல் ஒளி நிறைந்த முகத்தோடு பிறந்த மகனின் அழகைக் கண்டு, பலரும் கொண்டிருந்த துன்ப மயக்கமெல்லாம் கெட, தாயாகிய நீப்பி இன்பப் பயனை அடைந்தாள்.

கண்டார் எவரும் உளத்து உவப்ப மேல் ஓர் கனி இன்பம்

கொண்டார் அருள் பொறித்த முகத்தின் மாமை கொழித்த கதிர்

உண்டார் தெளிவு உண்டார் கடவுள்-தன் தாட்கு உவகை செயும்

தண் தார் இவன் ஆவான் என்ன வாழ்த்தி சயம் சொன்னார்  (54)

குழந்தையைக் கண்டவர் யாவரும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் மேலான ஓர் இன்பமும் கொண்டனர்; தெய்வ அருள் பொறிக்கப்பட்ட முகத்தின் அழகு வீசிய கதிரை உண்டனர்; தெளிவு கொண்டனர்: "இவன் கடவுளின் திருவடிகட்கு மகிழ்ச்சியூட்டும் குளிர்ந்த மாலை போல் ஆவான்", என்று வாழ்த்தி வெற்றி கூறினர்.

மாசை மிக்க நிற மணியின் சாயல் மகன் நோக்கி

ஆசை மிக்க கனி ஈன்றாள் கற்றோர் அரும் தொடைப்பா

ஓசை மிக்க அற தொகையின் பீடத்து உயர் வளர்க

சூசை என்று அவனை ஏற்றி எந்தை தொழுகின்றாள்  (55)

ஆசை மிக்க கனி போன்ற அம்மகனைப் பெற்றவள், பொன்னினும் மிக்க நிறமும் மணியின் சாயலுமுள்ள மகனைக் கூர்ந்து நோக்கி, பின் "சூசையே! கற்ற புலவர் இயற்றும் அரிய தொடையுறுப்புகள் கொண்ட செய்யுளின் புகழோசையினும் மிகுந்த புண்ணியத் தொகையாகிய பீடத்தில் உயர்ந்து வளர்வாயாக!" என்று வாழ்த்தி அவனைக் கைகளில் ஏந்தி நம் தந்தையாகிய ஆண்டவனைத் தொழுகின்றாள்.  எனவே, தாய் இட்ட பெயர் சூசை என்றும், அதன் தமிழாக்கமே வளன் என்றும் அறிக.

எல்லின் கதிர் திரட்டி திலகம் திங்கட்கு இட்டது போல்

வில்லின் முகத்து இன் தாய் மகனை ஏந்தி விழைவு உற்ற

சொல்லின் முகத்து இறையோன் தாளை தாழ்ந்து இ தோன்றல் அறத்து

அல்லின் வேந்தன் என வளர்தற்கு ஆசி அருள்க என்றாள் . (56)

பகலவனின் கதிரைத் திரட்டிச் சந்திரனுக்குப் பொட்டு இட்டது போல், ஒளி பொருந்திய முகமுள்ள இனிய தாய் தன் மகனை ஏந்தி, ஆண்டவன் திருவடிகளைப் பணிந்து, "இம்மகன் புண்ணியத்தில் இரவுக்கு அரசனாகிய சந்திரன் போல் வளர்வதற்கு ஆசி அருள்வாயாக", என வேண்டினாள்.

வீடா வான் நலம் செய் நோக்கு நோக்கி விண் இறையோன்

கோடா வரத்து ஆசி செய் வான் மேல் ஓர் குரல் தோன்றி

ஆடா நிலை அறத்து என் மார்பில் தேம்பா அணி ஆவான்

வாடா அருள் மகன் என்று அம் பூ_மாரி வழங்கிற்றே (57)

வானுலகத்து ஆண்டவன், வானுலக நலங்களைச் செய்யும் நோக்கத்தோடு அக்குழந்தையை நோக்கி, ஆசி வழங்கும் ஒரு குரலில், "வாடாத அருள் கொண்ட இம் மகன் அசையாத நிலையுள்ள அறத்தோடு என் மார்பில் வாடாத மாலையாய் அமைவான்," என்று கூற, அழகிய மலர் மாரி பொழிந்தது.    ஆண்டவன் செயல் குரலின் மேல் ஏற்றப்பட்டது.

மை நூற்று என கரும் பூம் குழலாள் வாய்ந்த மகன் நலம் கேட்டு

எ நூல் திறத்தினும் மேல் அடியின் வீழ்ச்சி இனிது இயற்றி

மெய்ந்நூல் திறத்த மறை முறையின் விள்ளா வினை எல்லாம்

 கைந்நூல் திறத்து அறவோர் இயற்றி ஆசி கனிந்து உரைத்தார் (58)

மையினால் நூற்றது போன்ற கரிய அழகிய கூந்தலை உடையவளாகிய தாய், தனக்கு வாய்ந்த மகனின் நலத்தைக் கேட்டறிந்து, இறைவனின் பாதத்தில் விழுந்து தொழுதாள். அதனைத் தொடர்ந்து, வேத முறையினின்று விலகாத சடங்குச் செயல்களையெல்லாம் ஒழுக்க நூல் முறையில் தேர்ந்த அறவோராகிய குருக்கள் நிறைவேற்றி, ஆசி மொழி கனிந்து கூறினர்.

கூம்பா அணி மகற்கு கணிதம் மிக்கோர் கூறு புகழ்

ஓம்பா அணி ஆக அனைத்தும் நீக்கி ஒருங்கு உடன் ஓர்

சாம்பா அணி ஆக இரங்கி எந்தை தான் புகழ்ந்த

தேம்பாவணியே என்று அணி மிக்கு அம் பூண் சேர்த்தினரே  (59)

சுருங்குதல் இல்லாத அழகுள்ள அம் மகனுக்குச் சோதிடக் கணித அறிவுமிக்கோர் கூறும் புகழெல்லாம் பேண வேண்டாத அழகென்று விலக்கிவிட்டு, “புகழெல்லாம் ஒருங்கு கூட்டி எம் தந்தையாகிய ஆண்டவனே இரக்கங்கொண்டு ஒப்பற்ற வாடாத மாலை என்று புகழ்ந்த தேம்பாவணியே!” என்று புகழ்ந்து, அங்குக் கூடி நின்றோர் அக்குழந்தையின் அழகு மிகுமாறு அழகிய அணிகலன்களைஅணிவித்தனர்.

செய் வாய் வான் உடு சூழ் குழவி திங்கள் சீர் பொருவ

பெய் வாய் கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப பெய்து சுடர்

வை வாய் மணி ஆழி இட்டு பைம் பூ மலர் கிடத்தி

மொய் வாய் கடல் உலகின் திலதம் என்பார் முகம் கண்டார் (60)

செந்நிறம் பொருந்திய வானத்தில் விண்மீன்கள் சூழ்ந்துள்ள பிறைச் சந்திரனின் சிறப்பிற்கு ஒப்பாக அக்குழந்தையின் முகம் விளங்கக் கண்டு நின்றோர், மணிகள் வைத்த சதங்கையும் சிலம்பும் ஒலிக்குமாறு கால்களில் அணிவித்து, ஒளி பொருந்திய இரத்தின மோதிரத்தை விரலில் இட்டு, பசுமையான அழகிய மலர் மெத்தையில் கிடத்தி, “அலைகள் திரண்ட கடல் சூழ்ந்த உலகிற்கு இவனே ஒரு திலகம் ஆவான்”, என்று போற்றுவர்.

வான் மேல் வைத்த சுடர் கிடக்கும் வண்ண வடிவு என்பார்

கான் மேல் வைத்த தவம் இனி நன்று இங்கண் காட்டும் என்பார்

நூல் மேல் வைத்த மறை விளக்கும் நுண் மாண் சுடர் என்பார்

நால் மேல் வைத்த புகழ் விள்ளார் கொண்ட நயம் விள்ளார்  (61)

சூழ நின்றோர் சிலர், “வானத்தின் மேல் உள்ள கதிரவன் இம் மண்ணுலகில் வந்து கிடக்கும் அழகிய வடிவமே இக் குழந்தை”, என்பர். வேறு சிலர், “காட்டில் பொருந்த நின்ற தவத்தை இவன் இனி நாடாகிய இங்கே பொருந்தக் காட்டுவான்”, என்பர். இன்னும் சிலர், “நூல்களுக்கெல்லாம் மேலாக வைக்கப்பட்டுள்ள வேதத்தை விளக்கிக் காட்டும் நுண்ணிய மாண்புள்ள சுடர் விளக்கே இம்மகன்”, என்பர். இவ்வாறு நான்கு வகைக்கும் மேலாக புகழ்ச்சிகளைக் கூறி, இன்பம் எய்தினர்.

வளன் சனித்த படலம் முற்றும்.