குறுந்தொகை
திணை – குறிஞ்சி
பாடியவர் – தேவகுலத்தார்
துறை - தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து
கொள்வது வேண்டி, தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.
துறை விளக்கம் – தலைவன் தலைவி வீட்டின் அருகே வந்து நின்றான். தலைவியை அவன் மணந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் இயல்புகளை இகழ்ந்து கூறுகின்றாள் தோழி. அதைக் கேட்ட தலைவி, தலைவனின் இயல்புகளைப் புகழ்ந்து கூறுகின்றாள்.
பாடல்
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே- சாரல்
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
பாடல்
விளக்கம்
“எம் தோழியே! கரிய கொம்புகளில் பூத்துக் குலுங்குகின்ற குறிஞ்சிப் பூக்களில் உள்ள
தேனை எடுத்து, மலையில் உள்ள உயர்ந்த மரங்களில் தேனடைகளைச் சேகரித்து வைக்கின்ற மலைநாட்டில் வாழ்கின்றவன் எம் தலைவன். அவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது,
வானத்தை விட உயர்ந்தது. கடலைவிட ஆழமானது” என்று தலைவி தோழிக்குக் கூறுகின்றாள்.
குறிப்பு
தலைவன் மீது
தலைவி கொண்ட அன்பு மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் அளந்து காண்பதற்கு அரிது என்பதைத்
தலைவி நிலம், வானம், கடல் ஆகியவற்றோடு ஒப்ப வைத்து எண்ணுகின்றாள். நிலம் நீரின்றிப்
பயன்படாது. வானம் மேல் நின்ற அளவில் பயன்படாது. கடல் சூழ்ந்து நின்றாலும் பயன்தருவதில்லை.
மாறாக, மேகங்கள் கடல் நீரை முகந்து, வானத்தில் உயர்ந்து எழுந்து, மழையாகப் பொழிந்தால்
மட்டுமே நிலத்திற்குப் பயன் உண்டாகும். இம்மூன்றன் சேர்த்கை போல எங்கள் இருவருடைய நட்பும்
இயைந்த நட்பு என்ற தலைவி கூறுகின்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக