சனி, 19 ஆகஸ்ட், 2023

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி - புறநானூறு

 புறநானூறு

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

திணை விளக்கம்

வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும் எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.

துறை: பொருண்மொழிக்காஞ்சி.

துறை விளக்கம்

துறவியர்கள் கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது இத்துறையாகும்.

பாடல்

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;    5

பிறவும் எல்லாம் ஓரொக் குமே;

அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;

துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.        

பாடல் விளக்கம்

  • இந்த உலகம் முழுவதையும் தனக்கே உரிமை கொண்டு ஆட்சி செய்கின்ற மன்னனாக இருந்தாலும், இரவிலும் பகலிலும் உறக்கம் கொள்ளாமல் விலங்குகளை வேட்டையாடித் திரிகின்ற கல்வியறிவற்ற ஒருவனாக இருந்தாலும் இவ்விருவருக்கும் உண்பது, உடுப்பது ஆகிய இரண்டு செயல்களும் பொதுவானதே. 
  • இதைப் போன்றே பிற தேவைகளும் பொதுவானதாகவே இருக்கும். இதுவே இயற்கையின் நியதி. 
  • ஆதலால், தான் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுவதே வாழ்வின் பயனாகும். அதை விடுத்து, தான் ஈட்டிய செல்வத்தைத் தானே அனுபவிப்பேன் என்று இறுமாப்பு கொண்டு வாழ்ந்தால் அறம், பொருள், இன்பம் என்ற வாழ்வின் உறுதிப் பொருளை இழக்க நேரிடும் என்று கூறுகின்றார் நக்கீரர்.

1 கருத்து: