கலித்தொகை
பாடியவர் - கபிலர்
திணை - குறிஞ்சி
துறை - “புகாஅக்காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி பகாவிருந்தின் பகுதிக்கண்” தலைவி தோழிக்குக் கூறியது.
துறை விளக்கம்
தலைவன் தலைவியைக் காண வேண்டும் என ஆசையுற்றான். அதனால் தான் புகுதற்குத் தகுதியில்லாத பகற்பொழுதில் தலைவன், உணவு நேரத்தில் தலைவியின் வீட்டுக்குள் புகுதல். அவ்வாறு புகுந்தவனைத் தலைவி காட்டிக்கொடுக்காமல் தாயின்முன் சமாளித்து ஏற்றுக்கொள்ளல்.
புகாஅக்காலை : உணவு உண்ணும் நேரம். பகல் சாப்பிடும் நேரம் பார்த்து ஒரு வீட்டிற்குள் புகுதல்.
பகாஅ விருந்து - ஆனால் தலைவன் விலக்கப்படாத விருந்தாக தலைவி (காதலி) ஏற்றுக் கொள்கிறாள்.
பாடல்
சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,
நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே! 5
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,
'அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்: என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு, 10
'அன்னாய்! இவனொருவன் செய்தது காண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம் 15
செய்தான், அக் கள்வன் மகன்.
பாடல் விளக்கம்
ஒளிமிக்க வளையல் அணிந்த தோழியே! நான் சொல்வதைக் கேள். தெருவில் நாம் மணலால் செய்த சிறுவீட்டைத் தன்காலால் கலைத்தும், நாம் கூந்தலில் சூடிய மலர்மாலையை அறுத்தும், வரியை உடைய நாம் விளையாடிக் கொண்டிருந்த பந்தைப் பறித்துக் கொண்டு ஓடியும் நாம் வருந்தத் தக்க செயல்களைச் செய்யும் சிறியவனாகக் கட்டுக்கடங்காமல் திரிந்தான். முன்பு ஒருநாள் தாயும் (அம்மாவும்) நானும் வீட்டில் இருந்தபோது வந்தான். வீட்டின் வாசலில் நின்று, “வீட்டில் இருப்பவர்களே! உண்ணும் நீரை உண்ண விரும்பினேன்” என்று குரல் கொடுத்தான். அவ்வாறு வந்து கேட்டவனுக்கு என் தாய், என்னிடம், “ஒளி வீசும் அணிகலன்களை அணிந்தவளே. தங்கத்தாலான குவளையில் கொண்டு போய் நீர் கொடுத்து வா” என்றாள். அவ்வாறு தாய் சொன்னதால் வந்தவன் சிறு பட்டியாய் இருக்கும் தன்மை அறியாமல் தண்ணீர் கொண்டு போனேன். நான் சென்றதும் வளையல் அணிந்த முன் கையைப் பிடித்து இழுத்தான். (சிறுபட்டி எனில் பட்டியில் அகப்படாத மாடு போன்றவன் எனப் பொருள்) அதனால் நான் வருந்தி அம்மா என அலறி இவன் செய்த செய்த செயலைப் பார்த்தாயா? என்றேன். அம்மா அலறிக்கொண்டு ஓடி வந்தாள். நான் அவன் செய்த குறும்புச் செயலை மறைத்து, இவன் நீர் குடிக்கும் போது விக்கல் எடுத்து வருந்தினான், அதனால் கத்தினேன்” என்றேன். நான் மறைத்துக் கூறியதை ஏற்று அம்மாவும் அவன் முதுகைப் பலமுறை தடவிக் கொடுத்தாள். அப்போது அக்கள்வன் மகன் (அந்தத் திருடன்) தன் கடைக்கண்ணால் என்னைக் கொல்வது போல் திருட்டுப்பார்வை பார்த்தான். தன் புன்முறுவலால் என்னை மயக்கி என்னுள்ளத்தில் புகுந்தான்” என்று தன் தோழியிடம் தலைவி கூறுகின்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக