புதன், 26 மார்ச், 2025

குடும்ப விளக்கு - முதியோர் காதல்

பாரதிதாசன்

குடும்ப விளக்கு - முதியோர் காதல்

பாரதிதாசனின் குடும்ப விளக்கு என்னும் நூல் ஒவ்வொரு தனி மனிதனும் ஒழுக்கத்துடன், நேர்மையுடன், தன் கடமையை நிறைவேற்றுபவனாக இருந்தால் வீடும் நாடும் சிறப்படையும் என்ற கருத்தை முன்னிறுத்தி இயற்றப்பட்டுள்ளது. இக்காவியத்தில் குடும்பத்தலைவரும் குடும்பத்தலைவியும் மனமொத்த தம்பதியர்களாக வாழ்ந்து, பிள்ளைகளைப் பெற்று அவர்களை நன்முறையில் வளர்த்து, தங்கள் கடமைகளை எல்லாம் முடித்து விட்டு, பெயரன் பெயர்த்திகளோடு மகிழ்ந்து வாழ்வதாகப் படைக்கப்பட்டுள்ளனர். இந்நூலின் ஐந்தாம் பகுதியான முதியோர் காதல் சிறப்பு மிக்க பகுதியாக அமைந்துள்ளது.

மூத்த பிள்ளை முதியவரோடு

மணவழகர் மணியம்மை இருவரும் தம்பதியர்கள். அவர்களுக்கு வேடப்பன், வெற்றிவேல் என்ற இரு மகன்கள். வெற்றிவேல் தன் மனைவி பிள்ளைகளுடன் வேடப்பனின் வீட்டில் வாழ்கின்றான். வேடப்பன் தன் தந்தை வீட்டில் தன் குடும்பத்தோடு பெருமையோடு வாழ்கின்றார். அவரின் பெற்றோர் முதுமை வயதை அடைந்து விட்டனர்.

முதியோருக்கு மருமகள் தொண்டு

வேடப்பன் மனைவி நகைமுத்து அன்பானவள். தன் மாமனார் மாமியாரின் தேவைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து நிறைவேற்றுகின்றாள். அவர்களின் மனம் கோணாதவாறு அவர்களுக்குத் தொண்டு செய்கின்றாள். வாழ்க்கை என்னும் நாடகத்தில் ஆடி ஆடி ஓய்ந்து போனவர்கள் என்ற பெருமையுடன் அவர்களை மதிப்புடன் நடத்துகின்றாள்.

அறையில் மணவழகர் தங்கம் அம்மையார்

வீட்டின் முதல் அறையில் மணவழகரும் தங்கம் அம்மையாரும் இருக்கின்றனர். மணவழகர் இலக்கியம் படிக்க, தங்கம் அம்மையார் அதை மகிழ்வுடன் கேட்டுக் கொண்டு இருக்கின்றார். உலர்ந்த பூங்கொடி போல தங்கம் அம்மையார் உடல் தளர்ந்து, ஓர் இடத்தில் அமர்ந்து தன் கணவர் படிப்பதைக் கேட்டு, பற்பல உரையாடி, மன மகிழ்வோடு உறங்குகின்றார்.

மணவழகர் உடல்நிலை

மணவழகருக்கு முன்புபோல தோளில் வலிமை இல்லை. கண் பார்வையில் ஒளி குறைந்து விட்டது. கண்ணாடியின் துணையின்றி எதுவும் செய்ய முடியாது. பனை போன்ற உடல் தற்போது சருகாக பலம் இழந்து காணப்படுகின்றது. வாயில் பற்கள் இல்லை. தலைமுடி முழுவதும் வெண்மையாகிவிட்டது. பாலின் கஞ்சிதான் உணவு. சிறிது தூரம் மட்டுமே டக்க முடியும் என்ற நிலையில் இருக்கின்றார்.

தங்கம் அம்மையாரின் உடல்நிலை

தங்கம் அம்மையாரின் ஒளி வீசிய கூந்தல் தற்போது நரைத்து விட்டது. அந்த முடியைக் கொண்டையாகப் போட்டிருக்கின்றார். முகத்தில் ஒளி குறைந்து விட்டது. அன்பை மட்டுமே வழங்கி அறம் செய்து வாழ்ந்த உடல் தோய்ந்து விட்டது. ஆயிரம் பிறைகளைக் கண்ட முதியவள். அவருடைய உடல் வானவில் போல வளைந்து விட்டது.

முதியோர் அறைக்கு மக்கள் பேர்ர் வருதல்

வீட்டின் முன்னறை இவ்விரு பெரியவர்களையும் தாங்கி, தன் பங்குக்குப் பெருமை சேர்த்துக் கொள்கின்றது. அவர்களின் பிள்ளைகள் அந்த அறைக்கு வந்து, முதியவர்களிடம் நல்ல செய்திகளைக் கற்றுக் கொள்கின்றனர். பெயரன் பெயர்த்தி வந்து சிறிது நேரம் அவர்களோடு விளையாடிவிட்டு, உரையாடிவிட்டு பள்ளிக்கூடம் செல்கின்றனர்.

நிரம்பிய உள்ளம்

பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து இருக்கிறோம்.  மகளுக்கும் கல்வியறிவு கொடுத்த்திருக்கிறோம். நம் கடமையை முடித்துவிட்டாம். இப்போது இனிமையாக வாழ்கின்றாம். உற்றார் உறவினர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையையும் குறைவில்லாமல் செய்து முடித்தோம். இந்தநாள் வரை யாருக்கும் துன்பம் செய்யாமல் வாய்மையோடு வாழ்ந்திருக்கின்றாம்என்று மணவழகரும் தங்கம் அம்மையாரும் கொண்ட கடமையினின்று வழுவாது நம் வாழ்க்கையை வாழ்ந்துள்ளோம் என்ற மனநிறைவைக் கொள்கின்றனர்.

நாட்டுக்கு நலம் செய்தல்

ஒரு நாடு சிறப்புற வேண்டுமெனில், ஒவ்வொரு வீடும் சிறப்புற வேண்டும். அந்த வகையில் நாட்டிற்கு நலம் செய்வதற்காகவே இல்லறத்தை நல்லறமாக நடத்தினோம். நம்மால் பிறர்க்கு எந்த ஒரு தீமையும் நடந்தது இல்லை. நன்மை செய்தவர்களை மறந்ததும் இல்லை என்று அந்த இரு முதியவர்களும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பெருமை கொள்கின்றனர்.

முதியவளே வாழ்கின்றாள் நெஞ்சில்

மணவழகர் தன் மனைவி தங்கம் அம்மையாரைக் கண்டு பெருமை கொள்கின்றார். “என் இளமையில் அவளைக் கண்டதும், என் உள்ளத்தை அவளிடம் விதைத்து விட்டேன். அந்தக் காதல் கதைகள் கதையாகி கனவாகி விட்டது. எனினும், எப்போதும் அந்த முதியவளே என் நெஞ்சில் நிறைந்து இருக்கிறாள்.

எது எனக்கு இன்பம்

அவளுடைய உடல் இப்போது புதிதாக பூத்த மலர் போன்று இல்லை. காய்ந்த புல் கட்டு போல் தளர்ந்து விட்டது. ஓடியாடும் நடை இப்போது இல்லை. நடக்கும்போதே தள்ளாடி விழுகின்ற முதுமை அவளுக்கு வந்து விட்டது. சந்திரனைப் போன்று இருந்த முகம் இப்போது வறண்ட நிலமாகக் காட்சியளிக்கின்றது. கண்களில் குழி விழுந்து விட்டன. ஆயினும் அவள் என் கண் எதிரில்  இருக்கின்றாள் என்பது மட்டுமே எனக்கு இன்பத்தைத் தருகின்றது.

நினைக்கின்றாள் நினைக்கின்றேன் நான்.

இப்போதெல்லாம் தமிழ்ப் பாடி இசைக்கின்ற ஆற்றல் அவளுக்கு இல்லை. ஆதலால் நான் ஒரு புறமும் அவள் ஒரு புறமும் தனித்து இருக்கின்றோம். என்னைக் கண்டு, என்னைத் தொட்டுப் பேச முடியவில்லை அவளுக்கு. ஆனால் அவள் என்னை நினைக்கின்றாள். நான் அவளை நினைக்கின்றேன். இதுவே எங்களுக்கு ன்பத்தைத் தருகின்றது. லும்புகளும் தோலும் வற்றிப்போய், ஊன்றுகோல் உதவியுடன் நடக்கின்ற அவளுடைய உடல் காலத்தின் கோலத்தில் தளர்ந்து விட்டது. என் முதுமையான விழியைக் காண்பதற்கும் அவளால் முடியவில்லை. எனினும் அவளுடைய அன்புள்ளத்தை நான் காண்கின்றேன். மனதால் மகிழ்ச்சி கொள்கின்றேன்என்று மணவழகர் தன் உள்ளத்தில் உள்ள காதலை அழகாக விவரிக்கின்றார்.

முடிவு

இளமையில் இருந்த அதே காதல், நரை தோன்றி, முதுமைப் பருவம் எய்தி, நடக்க முடியாமல் தள்ளாடும் சூழலிலும் அவள் மீது நான் கொண்ட காதல் மாறவே இல்லை என்பதை மிக நுட்பமாக விவரிக்கின்றது முதுமைக்காதல் என்னும் பகுதி.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக