ஞாயிறு, 7 மார்ச், 2021

திருக்குறள் - கண்ணோட்டம்

 

கண்ணோட்டம்

குறள்:1

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு.

குறள் விளக்கம்:

இரக்கம் என்று சொல்லப்படும் மிகப்பெரிய அழகு அரசனிடம் இருப்பதனால் தான், இந்த உலகம் அழியாமல் நிலைத்திருக்கிறது.

 

குறள்:2

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை.

குறள் விளக்கம்:

கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

 

குறள்:3

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

குறள் விளக்கம்:

பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும்? அதுபோல், கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்?

 

குறள்:4

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண்.

குறள் விளக்கம்:

அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்?

 

குறள்:5

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும்.

குறள் விளக்கம்:

கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண் என்று உணரப்படும்.

 

குறள்:6

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ

டியைந்துகண் ணோடா தவர்.

குறள் விளக்கம்:

இரக்கத்தைக் காட்டும் கண்களை உடையவராயிருந்தும் இரக்கத்தை காட்டாதவர், மண்ணோடு பொருந்தி நிற்கின்ற மரத்தினைப் போன்றவர்.

 

குறள்:7

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.

குறள் விளக்கம்:

கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.

 

குறள்:8

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்திவ் வுலகு.

குறள் விளக்கம்:

கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.

 

குறள்:9

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை.

குறள் விளக்கம்:

தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் இரக்கம் கொண்டு அவர் செய்த குற்றத்தைப் பொறுத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

 

குறள்:10

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

குறள் விளக்கம்:

கருணை உள்ளமும் நாகரிகமான பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதனை உண்டு அவரோடு கலந்திருப்பர்.


நன்றி

http://thirukkural.co.in

திருக்குறள் - சுற்றம் தழால்

 

சுற்றம் தழால்

குறள்:1

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

சுற்றத்தார் கண்ணே உள.

குறள் விளக்கம்:

ஒருவன் தன் செல்வமெலாம் அழிந்து வறியவனான காலத்திலும், அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.


குறள்:2

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா

ஆக்கம் பலவும் தரும்.

குறள் விளக்கம்:

எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.

 

குறள்:3

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்று.

குறள் விளக்கம்:

சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.


குறள்:4

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்.

குறள் விளக்கம்:

ஒருவன் செல்வம் பெற்றதனால் அடையும் பயனாவது, சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி நடந்து கொள்வதாகும்.


குறள்:5

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும்.

குறள் விளக்கம்:

ஒருவன் சுற்றத்தாருக்கு வேண்டுவன கொடுத்தும், இன்சொல் பேசுதலையும் செய்ய வல்லவனாயின், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.


குறள்:6

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத்து இல்.

குறள் விளக்கம்:

பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.


குறள்:7

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள.

குறள் விளக்கம்:

காக்கை தனக்கு கிடைத்ததை மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.


குறள்:8

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.

குறள் விளக்கம்:

சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.


குறள்:9

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்

காரணம் இன்றி வரும்.

குறள் விளக்கம்:

முன் சுற்றத்தாறாக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.


குறள்:10

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத்திருந்து எண்ணிக் கொளல்.

குறள் விளக்கம்:

தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.


நன்றி

http://thirukkural.co.in/

திருக்குறள் - காலமறிதல்

 

காலமறிதல்

குறள்:1

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

குறள் விளக்கம்:

தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.

 

குறள்:2

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு.

குறள் விளக்கம்:

காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

 

குறள்:3

அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.

குறள் விளக்கம்:

செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டோ?

 

குறள்:4

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்.

குறள் விளக்கம்:

ஏற்ற காலத்தை அறிந்து, இடத்தோடு பொருந்தச் செய்வானாயின், அவன் உலகம் முழுதையும் தானே ஆளக்கருதினும், அதுமுடியும்.

 

குறள்:5

காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.

குறள் விளக்கம்:

உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

 

குறள்:6

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.

குறள் விளக்கம்:

ஊக்கம் மிகுந்தவன் காலத்தை எதிர்பார்த்து அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.

 

குறள்:7

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

குறள் விளக்கம்:

அறிவுடையவர் பகைவர் தீங்கு செய்த அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், வெல்வதற்கு ஏற்ற காலத்தை நோக்கிச் சினத்தை மனத்திற்குள் அடக்கி வைத்திருப்பர்.

 

குறள்:8

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை.

குறள் விளக்கம்:

பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.

 

குறள்:9

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.

குறள் விளக்கம்:

கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

 

குறள்:10

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.

குறள் விளக்கம்:

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

நன்றி

http://thirukkural.co.in