செவ்வாய், 19 அக்டோபர், 2021

வள்ளலார் - பிள்ளைச் சிறு விண்ணப்பம்

பிள்ளைச் சிறு விண்ணப்பம்

வள்ளலார்

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடியவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர். இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள மருதூரில் 5.10.1823இல் கருணீகர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார்.  இவரை, அருளாசிரியர், இதழாசிரியர், இறையன்பர், உரையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், பண்பாளர் என்றெல்லாம் அழைப்பர்.

எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதைக் குறிக்கும் வண்ணம் அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவுநெறி விளங்க சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். மக்களின் பசித்துயர் போக்க சத்திய தரும சாலையையும் நிறுவினார்.

இராமலிங்க அடிகளாரின் கொள்கைகள்

1.   இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.

2.   எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

3.   எந்த உயிரையும் கொல்லக்கூடாது.

4.எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

5. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.

6. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.

7.   புலால் உணவு உண்ணக்கூடாது.

8.   கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.

9.   சாதிமதம், இனம்மொழி முதலிய வேறுபாடு கூடாது.

10. மத வெறி கூடாது.

பதிப்பித்த நூல்கள்

1.   சின்மய தீபிகை

2.   ஒழிவிலொடுக்கம்

3.   தொண்டைமண்டல சதகம்

இயற்றிய உரைநடைகள்

1.   மனுமுறைகண்ட வாசகம்

2.   ஜீவகாருண்ய ஒழுக்கம்

திருவருட்பா

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டுதிருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டு உள்ளது.

         திருவருட்பாவின் ஆறாம் திருமுறையில் அமைந்துள்ள பிள்ளைச் சிறு விண்ணப்பம் என்ற பகுதியில் இருந்து ஐந்து பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

பிள்ளைச் சிறு விண்ணப்பம்

வள்ளல் பெருமான் இறைவனிடம் வேண்டிய வரங்களை விண்ணப்பங்கள் என்றுரைக்கின்றார். பிள்ளைப் பருவத்தில் தன் உள்ளத்தில் எழுந்த விருப்பங்கள் சிலவற்றை எடுத்துரைத்து இறைவனை வேண்டுகின்றார். தான் செய்த குற்றங்களைப் பொறுத்தருள வேண்டுவது, இறைவன் தம்மை வெறுத்துவிடக்கூடாது என்று விரும்புவது, பொய்ம்மையை வெறுப்பது, மாந்தர் அனைவரையும் அன்பால் போற்றி வாழ்வது, புலை, கொலை தவிர்க்கும் அருள் வேட்கையை விரும்புவது, சமரச ஞான சுத்த சன்மார்க்க நெறியை விளக்குவது, பிறவித் துன்பமற வரம் பெற விழைவது உள்ளிட்ட பல விண்ணப்பங்கள் இப்பகுதியில் ஓதப்படுகின்றன. உயிர்களின் இடர் களைவதே இவ்விண்ணப்பங்களின் அடிநாதமாக விளங்குகின்றது.

பாடல் - 1

டித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்

பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்

பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை

அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்.

விளக்கம்

தன் மகன் ஒரு தவறு செய்தால் தந்தை அவனை அடித்துக் கண்டிக்கும்போது, தாய் அவரைத் தடுத்துத் தன் மகனை அணைத்துக் கொள்வாள். தாய் அடித்தால் தந்தை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்வார். அம்மையும் அப்பனுமாகிய எம் பெருமானே! எனக்குத் தாயும் தந்தையும் நீயே ஆதலால் இதுவரை உலகியல் துன்பங்களால் என்னை அடித்தது போதும். இனி பொறுக்க முடியாது. ஆகவே, உன் அருளால் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

பாடல் - 2

பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால்

மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும்

கொற்றவ ஓர்எண்குணத்தவ நீ தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள் 

முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என்றனைநீ முனிவதென் முனிவு தீர்ந்தருளே 

விளக்கம்

அம்பலத்தில் திருநடனம் புரியும் அருளரசனே! என்னைப் பெற்ற அருள் வள்ளலே! தம் பிள்ளைகளின் குணங்களைப் பெற்றோரைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை. அதுபோல என் குணங்கள் அனைத்தையும் அறிந்தவன் நீ! அறிந்திருந்தும் என்னை வெறுப்பது ஏன்? வெறுப்பகன்று என்னை ஆட்கொள்க.

பாடல் - 3

வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரியச்

சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற தந்தைதாய் மகன்விருப் பாலே

இம்மதிச்சிறியேன் விழைந்ததொன்றிலைநீ என்றனைவிழைவிக்க விழைந்தேன்

செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.

விளக்கம்

தீய பண்புடைய தன் மகன் பிறருக்குக் கொடிய செயல் செய்ய விரும்பினால், மகன் மீது உள்ள பாசத்தால் அவனைப் பெற்றவர்கள் அவன் புரியும் கொடுஞ்செயலுக்கு உடன்படுகின்றனர்.  சிறியவனாகிய நான் குற்றமொன்றும் செய்யவில்லை. என் மனதில் உன் மீது அன்பு உண்டாகச் செய்தமையால் நான் உன்பால் அன்பு கொண்டேன். அறிஞர்கள் மதிக்கும் திருநெறியினையே கடைபிடிக்கின்றேன். இவை அனைத்தும் உன் திருவுள்ளம் அறியும்.

பாடல் - 4

பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர் புல்முனை ஆயினும் பிறர்க்கு

நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால் நண்ணிய கருணையால் பலவே

கைபிழை யாமை கருதுகின் றேன்நின் கழற்பதம் விழைகின்றேன் அல்லால்

செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய்.

விளக்கம்

என் தந்தையாகிய சிவபெருமானே! பொய் கூறுதல், புறம் உரைத்தல், இன்னா மொழிதல் முதலான குற்றங்கள் பலவற்றை உடையவனாயினும், அவற்றுள் புல்லின் நுனியளவும் பிறர்க்கு வருத்தம் உண்டாகச் செய்யும் குற்றத்தை நான் வாயால் உரைப்பதில்லை. பிறர் மீது கொண்ட அருளுணர்வால் அவர்களுக்குச் சிறு பிழைகள் செய்ய நினைத்ததில்லை! உன்னுடைய திருவடியின் மீது ஆர்வம் கொண்டதைத் தவிர வேறு ஒரு பிழையும் செய்ததில்லை. என்னுடைய இந்த நிலைமையை நீ நன்கு அறிவாய்!

பாடல் - 5

அப்பணி முடி என் அப்பனே மன்றில் ஆனந்த நடம்புரி அரசே

இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட் டிந்தநாள் வரையும்என் தனக்கே

எப்பணி இட்டாய்  அப்பணி அலதென் இச்சையால் புரிந்ததொன் றிலையே

செப்புவ தென்நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய்.

விளக்கம்

கங்கையைத் தன் சடை முடியின் மீது சூடிய எம் தந்தையே! ஆனந்த நடனம் புரியும் அருளரசனே! எனக்கு நல்லறிவு தோன்றிய நாள் முதல் இந்நாள் வரை நான் எத்தகைய பணி செய்ய வேண்டும் என நீ ஏற்பாடு செய்தாயோ, அதைச் செய்வதன்றி வேறு எதுவும் செய்தது இல்லை. நான் செய்வது அனைத்தும் உன் திருவுள்ளம் நன்கு அறியும்.


தாயுமானவர் - பைங்கிளிக்கண்ணி

 


பைங்கிளிக்கண்ணி

தாயுமானவர்

1. இவர் திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யத்தில் பிறந்தவர். 

2.இவர் தந்தையார் கேடிலியப்பர், தாயார் கெஜவல்லி அம்மையார் ஆவார். 

3.இவர் வடமொழிதமிழ்மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். 

4.திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்தவர். பின்னர் அப்பதவியைத் துறந்து  மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார்.

5.தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வழிபட்டார்.

6. இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.

7.தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர். 

8.வள்ளலாரும், பாரதியாரும் எளிய கவிதைகள் பாடுவதற்கு இவரே  முன்னோடியாகத் திகழ்ந்தார்.  

9.தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன.  அவற்றுள் பைங்கிளிக்கண்ணி என்ற தலைப்பில் அமைந்த பாடல்களுள் ஐந்து பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

பைங்கிளிக்கண்ணி

1.    அந்தமுடன் ஆதி அளவாமல் என்னறிவில்

சுந்தரவான் சோதி துலங்குமோ பைங்கிளியே.

2.    அகமேவும் அண்ணலுக்கென் அல்லலெல்லாஞ் சொல்லிச்

சுகமான நீபோய்ச் சுகங்கொடுவா பைங்கிளியே.

3.    ஆவிக்குள் ஆவிஎனும் அற்புதனார் சிற்சுகந்தான்

பாவிக்குங் கிட்டுமோ சொல்லாய்நீ பைங்கிளியே.

4.    ஆருமறி யாமல்எனை அந்தரங்க மாகவந்து

சேரும்படி இறைக்குச் செப்பிவா பைங்கிளியே.

5.    ஆறான கண்ணீர்க்கென் அங்கபங்க மானதையுங்

கூறாத தென்னோ குதலைமொழிப் பைங்கிளியே.

விளக்கம்

1. முதலும் முடிவும் இல்லாத அருட்பெருஞ்சோதியான இறைவன் என் அறிவில் தங்கி, எனக்கு அருள் செய்வாரோ? சொல் பைங்கிளியே!

2.  பைங்கிளியே! என் மனதின்கண் பொருந்தியிருக்கின்ற இறைவனிடம் நீ சென்று, என் துன்பத்தை எல்லாம் எடுத்துக்கூறி, எனக்கு முடிவில்லா இன்பம் பெற்று வந்து தருவாயாக.

3.   உயிர்க்கு உயிர் என்று கூறப்படுகின்ற அற்புத மூர்த்தியாகிய இறைவனின் ஞானத்தால் பெறப்படுகின்ற சுகம், இந்தப் பாவியாகிய எனக்குக் கிடைக்குமோ? நீ சொல் பைங்கிளியே!

4.  பைங்கிளியே! யாரும் அறியாத வண்ணம், இரகசியமாக வந்து என்னை அணைத்து ஆட்கொள்ளும்படி, என் தலைவனாகிய இறைவனிடம் நீ சொல்லி வருவாயாக.

5. மழலைச்சொல் பேசும் பைங்கிளியே! ஆறுபோல பெருகிய என் கண்ணீரின் அளவுக்கு என் தேகம் வருந்திய வருத்தத்தினை நீ இறைவனிடம் சொல்லாமல் வந்தது ஏன்?

தமிழ்விடுதூது

 

தமிழ்விடுதூது

சிற்றிலக்கிய வகைகளுள் தூது இலக்கியமும் ஒன்று. இது தலைவன் மேல் காதல் கொண்ட தலைவி தன் காதல் நோயின் துன்பத்தைக் காதலனுக்கு எடுத்துக்கூறி மாலை வாங்கி வாஎன்றும், “தூது சொல்லி வாஎன்றும் உயர்திணைப் பொருள்களையோ, அஃறிணைப் பொருள்களையோ தூது விடுவதாகப் புலவர்கள் பாடுகின்றனர். தலைவன் தூது விடுத்ததாக விறலி விடு தூது என்ற ஒரு நூல் மட்டுமே காணப்படுகிறது. தலைவி விடுத்த தூது நூல்களே பெரும்பாலும் காணக் கிடைக்கின்றன.

தமிழ்விடுதூது

மதுரையில் கோயில் கொண்டு விளங்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் தன் காதல் நோயைக் கூறி வருமாறு தமிழ்மொழியைத் தூது விடுவதாக அமைந்த நூல் தமிழ்விடுதூது என்பதாகும். இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால், நூலை ஆராய்ந்து பார்க்கின், அவர் பரந்த தமிழ்நூற் பயிற்சியும், செந்தமிழ்ப் பற்றும் கொண்டவர் என்பது தெரிகிறது.

இந்நூலில் தமிழின் சிறப்போதும் 16 கண்ணிகள் நமக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

பாடல்

1.    சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்

தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண்

2.    டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு

விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே

3.    செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு

கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற்

4.    கூடல் புரந்தொருகாற் கூடற் புலவரெதிர்

பாடலறி வித்த படைவேளும் - வீடகலா

5.    மன்னுமூ வாண்டில் வடகலையுந் தென்கலையும்

அன்னைமுலைப் பாலி னறிந்தோறும் - முன்னரே

6.    மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்

ஈன்றுதரச் சொல்லி னிசைத்தோருந் - தோன்றயன்மால்

7.    தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரிற்

பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி

8.    மட்டோலைப் பூவனையார் வார்ந்தோலை சேர்த்தெழுதிப்

பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் முட்டாதே

9.    ஒல்காப் பெருந்தமிழ்மூன் றோதியருண் மாமுனியும்

தொல்காப் பியமொழிந்த தொன்மொழியும் மல்காச்சொற்

10. பாத்திரங்கொண் டேபதிபாற் பாய்பசு வைப்பன்னிரண்டு

சூத்திரங்கொண் டேபிணித்த தூயோரும் – நேத்திரமாம்

11. தீதில் கவிதைத் திருமா ளிகைத்தேவர்

ஆதி முனிவ ரனைவோருஞ் - சாதியுறும்

12. தந்திரத்தி னாலொழியாச் சார்வினையைச் சாற்றுதிரு

மந்திரத்தி னாலொழித்த வல்லோரும் செந்தமிழிற்

13. பொய்யடிமை யில்லாப் புலவரென்று நாவலர்சொல்

மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள்

14. காடவருஞ் செஞ்சொற் கழறிற் றறிவாரும்

பாடவருந் தெய்வமொழிப் பாவலரும் - நாவருங்

15. கல்லாதார் சிங்கமெனக் கல்விகேள் விக்குரியர்

எல்லாரு நீயா யிருந்தமையாற் - சொல்லாரும்

16. என்னடிக ளேயுனைக்கண் டேத்தினிடர் தீருமென்றுன்

பொன்னடிக ளேபுகலாப் போற்றினேன்

விளக்கம்

மதுரைச் சொக்கநாதர் மீது காதல் கொண்ட ஒரு பெண், அவரிடம் தன் காதல் நோயைக் கூறி வருமாறு தமிழ்மொழியைத் தூது விடுக்கின்றாள். அதனால் தமிழைப் போற்றுகின்றாள்.

1.மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக வீற்றிருந்த சிவபெருமான்,

2.எல்லாத் திசைகளிலும் வெற்றியைத் தரும் தடாதகைப் பிராட்டியாகிய பார்வதி தேவி,

3.விருப்பத்துடன் சிவஞானத் திரட்டைக் கையிலெடுத்த கணபதி,

4.தமிழ்ச்சங்கத்தில் புலவர்களுக்கெதிராக அமர்ந்து பாடல் அறிவித்த முருகப்பெருமான்,

5.மூன்று வயதிலேயே பார்வதிதேவியின் அருளால் பாலருந்தி தமிழ்மொழியும் வடமொழியும் கற்றுத் தேர்ந்த திருஞானசம்பந்தர்,

6.மூன்று வருடங்களுக்கு முன்பு முதலை விழுங்கிய பிள்ளையைச் சிவபெருமானிடம் ஈன்று தரச் சொல்லிப் பாடல் இசைத்த சுந்தரர்,

7.பிரமனும் திருமாலும் தேடியும் அடைய முடியாத சிவனின் திருமுடியையும், திருவடியையும் தேடாமலேயே திருநல்லூரில் தேவாரம் பாடித் தன் தலை மீது முடியாகப் பெற்றுக் கொண்ட திருநாவுக்கரசர்,

8.சிவபெருமானே விரும்பி வந்து தம் ஓலையில் எழுதிக்கொள்ள திருவாசகத்தையும், திருக்கோவையாரையும் அருளிய மாணிக்கவாசகர்,

9.முத்தமிழ் ஓதிய அகத்தியர்,

10.பழந்தமிழ் இலக்கணம் உரைத்தத் தொல்காப்பியர்,

11.சிவனைத் தேடிச்செல்லும் உயிர்கள் குறித்துத் தம் சிவஞானபோதத்தில் பன்னிரண்டு நூற்பாக்களில் விளக்கமுரைத்த மெய்கண்ட தேவர்,

12.திருவிசைப்பா எனும் தீதில்லா கவிதைகளைத் தந்த திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது முனிவர்கள்,

13.வினைகளால் வந்தடைகின்ற தந்திரங்களைத்  திருமந்திரத்தால்  நீக்கிய திருமூலர்,

14.பொய்யடிமையில்லாப் புலவர்கள் என்று போற்றப்படும் சங்கத்துப் புலவர்கள்,

15.அரசபதவி துறந்து சிவனை நாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார்,

16.பிற உயிர்கள் பேசுவதைக் கேட்கும் திறன் பெற்றதால் கழற்றறிவார் எனப் பெயர் பெற்ற சேரமான் பெருமாள் நாயனார்,

17.தெய்வமொழிப் பாவலர் திருவள்ளுவர் எனக் கல்வி, கேள்விக்குரிய எல்லோரும், தமிழே! நீயாகவே இருக்கின்றாய்.

18.கல்லாதார்க்குச் சிங்கமெனத் திகழ்கின்றாய்!  

சொற்கள் நிறைந்த என் செய்யுளே! உன் பொன் போன்ற திருவடிகளைத் துதித்து வணங்கினால் என் இடர் தீரும் என்பதால் உன் பொன்னடிகளை நான் போற்றுகின்றேன்.