சமயக் காப்பியங்கள்
1. கம்பராமாயணம்
கம்பராமாயணத்தைத் தமிழில் இயற்றிய
பெரும் புலவர்
கம்பர். அவரது கவிச்சிறப்பு
தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாகப் போற்றப்படுகிறது. வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தைத் தமிழில்
இராமகாதையாகப் படைத்தார் கம்பர். இக்காப்பியம் கம்பநாடகம்,
கம்ப சித்திரம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.
இந்நூலில், பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்களும், 113 படலங்களும்,
10,500க்கும் மேற்பட்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
கம்பர்
கம்பர் சோழநாட்டில் திருவழுந்தூரில்
பிறந்தவர். தந்தையார்
பெயர் ஆதித்தன். காளியின் அருளால் கவி பாடும் ஆற்றல்
பெற்றவர். இவரது காலம் கி.பி.
9ஆம் நூற்றாண்டு எனவும் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனவும் கூறப்படுகின்றது. இவரை
ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார். தம்மை ஆதரித்த வள்ளலைக் கம்பர் தம் காப்பியத்தில் பத்து இடங்களில்
பாடியுள்ளார். இராமகாதையைத் தவிர ஏர் ஏழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
2.பெரியபுராணம்
பெரிய புராணம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் என்பவரால் இயற்றப்பட்டது. சைவ சமயத்தின் பெருநூலாக இந்நூல் கருதப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொடர் திருவந்தாதி ஆகியவற்றை மூல
நூல்களாகக் கொண்டும், சேக்கிழார் பல ஊர்களுக்குச் சென்று
திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் ஆக்கப்பட்டது. இதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர். இந்நூல் 2 காண்டங்களையம் 13 சருக்கங்களையும், 4253 விருத்தப்பாக்களையும்
கொண்டுள்ளது. 63 நாயன்மார்களின் வரலாற்றையும், 9 தொகையடியார்களின் வரலாற்றையும் கூறுகின்றது. பன்னிரு
திருமுறைகளுள் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுகிறது.
சேக்கிழார்
இந்நூலை இயற்றியவர் சேக்கிழார். இவர் தொண்டை மண்டலத்தில் புலியூர்க்
கோட்டத்துக் குன்றத்தூரில் வேளாளர் மரபில், சேக்கிழார்
குடியில் தோன்றிவர். இயற்பெயர் அருண்மொழித் தேவர்.
சோழநாட்டை ஆண்ட குலோத்துங்கச் சோழன், சேக்கிழாருக்கு
உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டம் கொடுத்துத் தன் அமைச்சராக்கிக் கொண்டான். இவ்வேந்தனது வேண்டுகோளுக்கிணங்கி பெரியபுராணத்தை இயற்றினார் சேக்கிழார்.
இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.
3.சீறாப்புராணம்
முகமது
நபியின் வரலாற்றைப் பாடும் இசுலாமியக் காப்பியமாகும். இக்காப்பியத்தை இயற்றியவர் உமறுப்புலவர்.
நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினைக் கம்பர் போன்று பாடவேண்டும் என்ற விருப்பம்
கொண்டு, தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளை மீறாமல் காப்பியமாகப் படைத்தவர். சீறா என்பது
சீரத் என்னும் அரபுச் சொல்லின் திரிபாகும். இது வரலாறு என்னும் பொருளை உடையது. இந்நூலில்
விலாதத்துக் காண்டம், ஹிஜரத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம் என்ற மூன்று காண்டங்கள்
அமைந்துள்ளன. 5027 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
உமறுப்புலவர்
இந்நூலின் ஆசிரியரான
உமறுப்புலவரின் இயற்பெயர் செய்யது காதர் மரைக்காயர். வள்ளல் சீதக்காதி என்பவரால் ஆதரிக்கப்பட்டவர்.
உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார்
4.இயேசு காவியம்
இக்காப்பியம்
இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் கூறுகின்றது. இந்நூலை இயற்றியவர் கவிஞர்
கண்ணதாசன். திருச்சி கலைக்காவிரி என்ற அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க இக்காவியத்தைப்
படைத்தார் என்பர். குற்றாலத்திலும், திருச்சியிலும் பல நாட்கள் அவர் தங்கியிருந்து,
கிறித்துவ இறையியல் அறிஞர்கள் பலர் உடனிருந்து துணை செய்ய இக்காவியத்தை இயற்றினார்.
1982ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் வெளியிடப்பட்டபோது, அன்றைய தமிழக முதல்வர் திரு எம்.ஜி.இராமச்சந்திரன்
இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். இந்நூல் ஐந்து பாகங்களைக் கொண்டுள்ளது.
கண்ணதாசன்
கண்ணதாசனின் இயற்பெயர்
முத்தையா. இவர் காரைக்குடியில் உள்ள சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர்
சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி. ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது
அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன். இவர் புகழ் பெற்ற திரைப்படப் பாடலாசிரியர்.
சிறந்த கவிஞர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட
திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள்,
திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர்.
ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம் முதலான காப்பியங்களையும், ஈழத்துராணி, ஒரு
நதியின் கதை, கண்ணதாசன் கதைகள், பேனா நாட்டியம், மனசுக்குத் தூக்கமில்லை முதலான சிறுகதைகளையும், அரங்கமும் அந்தரங்கமும்,
கடல் கொண்ட தென்னாடு, சேரமான் காதலி முதலான உரைநடை நூல்களையும் இயற்றியவர். இவருடைய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற இந்து சமய நூல் மிகவும் புகழ்ப் பெற்றது.
5.இராவண காவியம்
இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக்
காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் - என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும்,
3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.
புலவர் குழந்தை
இந்நூலின் ஆசிரியர் 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக்
கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இயற்கையாகவே இளமையிலேயே கவி
பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார். ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள்
பணியாற்றினார். தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
விதவை மணம், கலப்பு மணம், சீர்த்திருத்த மணம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தினார். வேளாண்
வேதம் என்னும் மாத இதழை நடத்தினார்.