வியாழன், 20 ஜனவரி, 2022

சூளாமணி

 

சூளாமணி

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி  சமண சமயம் சார்ந்த நூல். பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம்.  ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் எழுதப்பட்டது இந்நூல். 12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2131 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒட்டியுள்ளது.

நூல் அமைப்பு

சூளாமணிக் காப்பியம் பாயிரமும், 12 சருக்கங்களும், 2131 விருத்தப் பாக்களும் கொண்டது. பாயிரப் பகுதி 6 பாடல்களைக் கொண்டது. நாட்டுச் சருக்கம், நகரச் சருக்கம், குமார காலச் சருக்கம், இரத நூபுரச் சருக்கம், மந்திர சாலைச் சருக்கம், தூதுவிடு சருக்கம், சீயவதைச் சருக்கம், கல்யாணச் சருக்கம், அரசியற் சருக்கம், சுயம்வரச் சருக்கம், துறவுச் சருக்கம், முத்திச் சருக்கம் எனப் பன்னிரு சருக்கங்களைக் கொண்டது சூளாமணிக் காப்பியம்.

நூல் ஆசிரியர்

சூளாமணியை இயற்றியவர் தோலாமொழித்தேவர். இவர் சமண சமயத்தவர். காலம் 10-ஆம் நூற்றாண்டிற்கு முன். இவரை விசயன் என்ற மன்னர் ஆதரித்துள்ளார். மைசூர் மாநிலத்தில் உள்ள சிரவணபெலகோலாக் கல்வெட்டு இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

கதை கூறும் செய்தி

இக்கதை சுரமை நாட்டின் இளவரசனான திவிட்டன் என்பவன், வித்தியாதர நாட்டு இளவரசி ஒருத்தியை மணந்து கொண்டதனால் ஏற்பட்ட சிக்கல்களையும் அதனால் திவிட்டன் நிகழ்த்திய வீரச் செயல்களையும் கூறுகிறது. இந்தப் பின்னணியில் இதன் ஆசிரியர் சமண சமயத் தத்துவங்களை விளக்குகிறார்.

சமணத் தத்துவங்கள் மற்றும் நான்கு வகையான பிறவிகள் பற்றி விரிவாக விளக்குகிறது இந்நூல். இந் நான்கு பிறவிகளுள் மனிதப் பிறவியில் மட்டுமே வீடுபேறு அடைவதற்கான முயற்சிகளைச் செய்யும் வாய்ப்பு உண்டென்றும் அதனால் மனிதப் பிறவி எடுத்த அனைவரும் அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்றும் கருதும் சமணக் கோட்பாடுகளின் வழி நின்று அதற்கான வழிமுறைகளையும் இந்நூல் எடுத்தியம்புகிறது.

காப்பியக் கதை

பரத கண்டத்தில் சுரமை நாட்டின் தலைநகர் போதன மாநகர். அதன் அரசன் பயாபதி. அவனுக்கு மிகாபதி, சசி என இரு மனைவியர். அவர்களுக்கு வெண்ணிறமான விசயன்கருநிறமான திவிட்டன்  ஆகிய இருவரும் பிறந்தனர். இவர்கள் பலராமன், கண்ணன் அவதாரமாகக் கருதப்பட்டனர். திவிட்டன் வித்தியாதர நாட்டு இளவரசியை மணப்பான் என்று நிமித்திகன் (சோதிடன்) கூறுகிறான். அதே நேரத்தில், வித்தியாதரர் (வானவர்) உலகிலுள்ள இரத நூபுரம் என்ற நகரில் ஆட்சி புரியும் சுவலனசடி தன் மகளுக்குச் சுயம்வரம் நடத்த எண்ணுகிறான். சுவலனசடியின் மகள் சுயம்பிரபை. அவளைப் பூலோகத்தில் உள்ள திவிட்டனே மணப்பான் என்று நிமித்திகன் கூறுகிறான். தன் சோதிடக் குறிப்பிற்குச் சான்றாக, திவிட்டன் ஒரு மாதத்திற்குள் ஒரு சிங்கத்தை அடக்குவான் என்கிறான். எனவே சுவலனசடிமருசி என்பவனைப் பயாபதியிடம் மணத் தூதாக அனுப்புகிறான். பயாபதியின் ஒப்புதலை அறிந்த சுவலனசடி, திவிட்டன் சிங்கத்தை அடக்குகிறானா என்பதை அறிய விரும்புகிறான். சுவலனசடி திவிட்டனுக்குப் பெண் கொடுக்க இருப்பதை அறிந்த மற்றொரு வித்தியாதர அரசன் அச்சுவ கண்டன் பயாபதியைத் தனக்குத் திறை செலுத்த ஆணையிட்டுத் தூதனுப்புகிறான். அத்தூதுவனைத் திவிட்டன் விரட்டியடித்து விடுகிறான். விரட்டியடிக்கப்பட்ட தூதுவன், அச்சுவ கண்டனிடத்தே செல்வதற்கு அஞ்சி, அவனுடைய அமைச்சனாகிய அரிமஞ்சு என்பவனிடம் சென்று திவிட்டன் செயலைக் கூறினான். அதுகேட்ட அவ்வமைச்சன் மாயவித்தையில் வல்ல அரிகேது என்பவனை மாயச் சிங்க உருவில் பயாபதி நாட்டுக்கு அனுப்பி அச்சுறுத்துகிறான். வீரன் திவிட்டன் விட்டுவிடுவானா? அம்மாயச் சிங்கத்தைக் கொல்லும் பொருட்டுத் துரத்திச் செல்கிறான். மாயச்சிங்கமாகிய அரிகேதுவோ உயிருக்குப் பயந்து, உண்மைச் சிங்கம் உறங்கும் ஒரு குகைக்குள் புகுந்து மறைந்து விடுகிறான். உண்மையான சிங்கம் குகையை விட்டு வெளிவர, திவிட்டன் அதனோடு எதிர்த்துப் போரிட்டு, அதன் வாயைப் பிளந்து கொன்று விடுகிறான்.

நிமித்திகன் கூற்று மெய்யாகி விட்டதல்லவா? சுவலனசடிக்கு மிகுந்த மகிழ்ச்சி. தன் மகளைத் திவிட்டனுக்கு மணம் செய்து மகிழ்கிறான். பழியுணர்ச்சியால் குமுறுகிறான் அச்சுவ கண்டன். தன் பெரும்படையுடன் தாக்குகிறான். ஆனால் திவிட்டன் கண்ணனுடைய அவதாரமல்லவா? எனவே அவனிடம் திருமாலின் ஆயுதங்களான பாஞ்ச சன்னியமும் சக்கரமும் வந்து தாமே பொருந்தின. கருடன் வந்து அவன் தோளிலே தங்கினான். பின் கேட்கவா வேண்டும்! போரில் திவிட்டனுக்கே வெற்றி கிடைக்கிறது. வெற்றி வாகை சூடிய திவிட்டனை வாசுதேவன் என்றும், விசயனைப் பலராமன் என்றும் வாழ்த்தி முடி சூட்டினர். கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கியது போலத் திவிட்டனும் கோடிமாசிலை என்ற மலையைத் தூக்கித் தன் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தினான். உரிய காலத்தில் திவிட்டன் - சுயம்பிரபை தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர்; சுயம்பிரபை தமையன் அருக்க கீர்த்திக்கும் ஒருமகனும் மகளும் பிறக்கின்றனர் இவர்கள் வளர்ந்து திருமண வயதுக்கு வர, முறைப்படி அவர்களுக்கு சுயம்வரம் நடத்தித் திருமணம் நடத்தப்படுகிறது. பயாபதி தன் தேவியருடன் துறவு பூண்டு தவம் மேற்கொண்டு முக்தி அடைய முயற்சி மேற்கொள்கிறான். திவிட்டன், விசயன் நாட்டை நன்முறையில் ஆளுகின்றனர். இத்துடன் இக்காப்பியக் கதை முற்றுப் பெறுகிறது.

இக்காப்பியத்தில்  இடம்பெற்றுள்ள நாட்டுச் சருக்கம், நகரச்சருக்கம், தூதுச் சருக்கம், கல்யாணச் சருக்கம், சுயம்வரச் சருக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து சில பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

நாட்டுச் சருக்கம்

சுரமை நாட்டின் சிறப்பு

மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர்

இஞ்சிசூழ் அணி நகர் இருக்கை நாடது

விஞ்சைநீள் உலகுடன் விழாக் கொண்டன்னது

துஞ்சுநீள் நிதியது சுரைமை என்பவே.

விளக்கம்

முகில்களால் சூழப் பெற்ற, அரிய மணிகளை உடைய கோடிக்குன்றம் என்னும் மலையை, கைகளால் தூக்கிய திருமாலின் அவதாரமெனக் கருதப்படுகின்றான் திவிட்டன். அவன் அரசு வீற்றிருக்கின்ற, மதில்கள் சூழ்ந்த அழகிய போதனம் என்னும் நகரம் தேவர் உலகத்தைக் காட்டிலும் செல்வவளத்தால் சிறப்புடைய நாடாகக் காட்சியளிக்கின்றது.

நகரச் சருக்கம்

சுரமை நாட்டுப் போதனமா நகரம்

சொன்னநீர் வளமைத் தாய சுரமை நாட்டகணி சார்ந்து

மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட

பொன்னவிர் புரிசை வேலிப்போதன மென்ப துண்டோர்

நன்னகர் நாகலோக நகுவதொத் தினிய தொன்றே.

விளக்கம்

நீர்மையும் வளப்பமும் உடைய சுரமை நாட்டின் நடுவில் அமைந்துள்ள, அந்நாட்டு அரசன் வீற்றிருந்து வாழ்வதற்கு ஏற்ற இடமாக அமைந்து, சிற்ப நூல் வல்லவர்களால் அமைக்கப்பட்ட, அழகு விளங்குகின்ற மதிலினால் சூழப்பட்ட, போதனம் என்னும் ஊர் தேவருலகத்தை இகழ்ந்து நகைப்பதைப் போன்று பலவகைச் சிறப்புகளை உடையது. தேவருலகத்தைக் காட்டிலும் ஒரு நல்ல நகரம் நிலவுலகத்தில் உள்ளதெனில் அது போதனம் என்னும் நகரே ஆகும்.

தூது விடு சருக்கம்

பொழிலிலுள்ள மரங்கள், மகிழ், தேமா, சுரபுன்னை, புன்கு முதலியன

மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம்

திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா

வரிமருவிய மதுகரம்முண மணம் விரிவனநாகம்

பொரிவிரிவன புதுமலரென புன் குதிர்வன புறனே

விளக்கம்

நுறுமணத்தால் இனிமையுடைய மகிழ மரங்களில் தேன் பெருகியுள்ளன. அழகான மலர்கள் பொருந்தப் பெற்றுள்ளன. தேமா மரங்கள் அழகு பொருந்திய நல்ல நிழலையுடையனவாக, செந்நிறமான தளிர்களை உடையனவாகக் காணப்படுகின்றன. சுரபுன்னை மரங்கள் கோடுகள் பொருந்தியதாய் வண்டுகள் உண்ணுமாறு மணம் பொருந்திய தேன் பெருக அமைந்துள்ளன. புன்னை மரங்கள் நெற்பொரியை போன்றஅன்றலர்ந்த மலர்களைக் கொண்டு விளங்குகின்றன. வெளியெங்கும் அம்மலர்கள் உதிரப் பெற்றுள்ளன. இப்படிப்பட்ட அழகுடையதாக அச்சோலை காணப்பட்டது.

கல்யாணச் சருக்கம்

செங்கண் மால் சிங்கம்வென்று செழுமலர்த் திலகக் கண்ணி

திங்கண்வாள் வண்ணனோடுந் திருநகர்  பெயர்ந்த பின்னை

அங்கண் மாற்குரிய நங்கையரும் பெறல் அவட்குத்  தாதை

வெங்கண் மால்களிறன் னான்தன்திறம் இனிவிளம்பலுற்றேன்

விளக்கம்

    சிவந்த கண்களையுடைய திருமாலாகிய திவிட்டன், அரிமாவைக் கொன்று செழித்த மலரால் இயன்ற தலை மாலையையுடைய, திங்கள் போன்ற சிறந்த வெண்மையான நிறம் உடைய விசயனுடனே அழகிய போதன நகரத்தை அடைந்தான்.  அத்திவிட்டனுக்கு மண உரிமை உடையவளான சுயம்பிரபை என்னும் அந்நங்கைக்குத் தந்தையாகிய பெரிய யானையின் வீரத்தை ஒத்த சுவலனசடி என்னும் அரசனுடைய திறத்தை இனி கூறுகின்றேன்.

சுயம்வரச் சருக்கம்

தேவருமனிதர் தாமும் செறிகழல் விஞ்சையாரும்

மேவருந் தகைய செல்வம் விருந்து பட்டனகடோற்ற

மாவரசழித்த செங்கண் மணிவண்ணன் மகிழ்ந்த காலைத்

தாவிருஞ் செல்வமொன்று தலைவந்தது ரைக்கலுற்றேன்.

விளக்கம்

    தேவர்களும், மனிதர்களும் வீரக்கழல் கட்டிய விச்சாதாரர்களும் பெறற்கரிய பெருமையுடைய செல்வங்கள், புதுமை மிக்க இன்பங்களை தந்து நிற்க, விலங்கின் வேந்தனாகிய அரிமாவை பிளந்து கொன்ற சிவந்த கண்ணையுடைய திவிட்டன், அவ் இன்பங்களை நுகர்ந்து மகிழ்ந்திருக்கும்போது, குற்றமற்ற பெரும் செல்வம் ஒன்று திவிட்டனுக்கு இனிது வந்து எய்தியதை உரைக்கத் தொடங்குகின்றேன்.

 

 

 

 

 

 

மலைவளம் - திருக்குற்றாலக் குறவஞ்சி

 

திருக்குற்றாலக் குறவஞ்சி

திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.

நூலாசிரியர்

குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல்  திரிகூட ராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர். திருக்குற்றாலநாதரின் முன்னிலையில் இந்நூல் அரங்கேற்றப்பட்டது.

கதை அமைப்பு

குறவஞ்சி நாடகத்திற்கென வரையறை செய்யப்பட்ட கதை அமைப்போடே இந்நூலும் விளங்குகிறது. குற்றாலநாதரின் திருவுலா எழுச்சியைக் குறித்து முன்னரே கட்டியங்காரன் கூறுகிறான். திருவுலா தொடங்குகிறது. மூவர் தமிழும் நான்மறைகள் முழங்க குற்றலாநாதர் வீதியில் உலா வருகிறார். குற்றாலநாதாரின் திருவுலாவைக் காண பெண்கள் எழுந்து வருகின்றனர். அப்பொழுது பந்து ஆடிக்கொண்டிருந்த வசந்தவல்லி (கதைத்தலைவி) என்பவளும் திருவுலாக்காண வருகிறாள். தோழியின் வாயிலாக இறைவனைப் பற்றி அறிந்த வசந்தவல்லி இறைவன் மீது காதல்கொண்டு தோழியைத் தூதனுப்புகிறாள். இந்நிலையில் குறிசொல்லும் குறத்தி தெருவழியே வருகிறாள். தோழி அவளைக் குறிசொல்ல அழைத்தவுடன் குறப்பெண் தன்நாட்டு மலைவளமும் தொழில்வளமும் சிறப்பாக எடுத்துக்கூறுகிறாள். பின் வசந்தவல்லி கையைப் பார்த்து அவள் குற்றாலநாதர் காதல் கொண்டுள்ள செய்தியையும், (தலைவனின்) குற்றாலநாதரின் புகழ்பற்றியும் எடுத்துச் சொல்லி வசந்தவல்லியின் எண்ணம் நிறைவேறும் என்று குறி சொல்லிப் பரிசு பெறுகிறாள் குறத்தி தலைவி. அவள் கணவன் தலைவன் அவளைக் காணத் தேடிவருகிறான். குறத்தியைக் கண்ட தலைவன் குறத்தி நடந்ததைச் சொல்ல இருவரும் குற்றாலநாதரைப் பாடி இன்பம் அடைகின்றனர். இவ்வாறு கதை முடிகிறது.

நூலின் சிறப்புகள்

குறவஞ்சி நூல்களுள் பாராட்டுக்குரியதாக விளங்கி வருவதும், இன்றும் நாட்டிய நாடகமாக மேடைகளில் நடிக்கப்பட்டு வருவதும், இக்குற்றாலக் குறவஞ்சி ஆகும். குற்றாலக் குறவஞ்சியானது இறைவன்மீது பாடப்பெற்றதால் திருக்குற்றாலக் குறவஞ்சி எனும் பெயர் பெற்றது. நாடகச்சுவை நிரம்பிய இந்நூல் சந்த (ஓசை) நயத்தோடு கூடிய பாடல்களையும் கற்பனை நயம் கொண்ட பாடல்களையும் நிரம்பப் பெற்றுள்ளது.

 

 குறத்தி மலைவளம் கூறுதல்

பாடல் – 1

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

   மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்

   கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்

தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்

   செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்

   குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே;

விளக்கம்

ஆண் குரங்குகள் பல்வகைப் பழங்களைப் பறித்துக் கொடுத்துப் பெண் குரங்குகளோடு தழுவும்; அக் குரங்குகளால் சிதறியெறியப்படுகின்ற பழங்களை வானுலகத்தில் வாழும் தேவர்கள் இரந்து இரந்து வேண்டிக் கேட்பார்கள். வனவேடர்கள் தம் கண்களால் ஏறெடுத்துப் பார்த்து உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள்; வானின் வழியாகச் செல்கின்ற சித்தர்கள் கீழிறங்கி வந்து காயசித்தி மருந்துகளாகிய வன மூலிகைகளை வளர்ப்பார்கள்; தேன் கலந்த மலையருவியினது அலைகள் மேலெழுந்து வானத்தினின்றும் வழிந்து ஓடும்; அதனால் செந்நிற ஞாயிற்றின் தேரிற்பூட்டிச் செல்லும் குதிரைக் கால்களும் தேர்ச்சக்கரமும் வழுக்கி விழும்; வளைந்துள்ள இளம் பிறையைச் சூடியிருக்கின்ற சடைமுடியையுடைய அழகரான திருக்குற்றால நாதர் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றாலமாகிய இச் சிறப்புவாய்ந்த திரிகூடமலையே எங்களுக்குரிமையாக நாங்கள் வாழ்கின்ற மலையாகும்;

பாடல் - 2

முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும்

   முற்றம்எங்கும் பரந்துபெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்

கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்

   கிம்புரியின் கொம்பொடித்து வேம்புதினை இடிப்போம்

செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப்பந் தடிக்கும்

   தேன்அலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும்

வழங்குகொடை மகராசர் குறும்பலவின் ஈசர்

   வளம்பெருகும் திரிகூட மலைஎங்கள் மலையே;

விளக்கம்

ஒலிக்கின்ற அலைகளையுடைய நீர் வீழ்ச்சி, செல்லும் வேகத்தில் கழங்காடுகின்றது என்று எண்ணும்படி முத்துக்களை ஒதுக்கிச் செல்லும்; அவ்வருவி, மக்கள் வாழ்கின்ற வீட்டின் முற்றங்களிலெல்லாம் பரவிச் சென்று சிறுமிகளின் மணல்வீடுகளை அழித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கும்; நாங்கள் மலைக்கிழங்குகளைத் தோண்டியும், தேன் இறால்களைப் பிய்த்து எடுத்தும், மலையின் செழிப்பைப் பாடிக்கொண்டே கூத்தாடுவோம்; பூண்கட்டிய யானைக்கொம்புகளை ஒடித்து உலக்கையாகக் கொண்டு வறுத்த தினைத் தானியத்தை இடிப்போம். இளமை பொருந்திய குரங்குகள் இனிமையுள்ள மாம் பழங்களையே பந்தாகக் கொண்டு அடித்து விளையாடும்; தேன் பெருகி ஓடுகின்ற செண்பகப் பூவின் மணம், தேவருலகினிடத்தே போய்ப் பரவும்; அருட்கொடை வழங்குகின்ற தேவாதி தேவராகிய குறும்பலா மரத்தினடியில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதருக்குரியதான எல்லா வளப்பமும் பெருகியிருக்கின்ற திருக்குற்றாலமலையே எங்களுக்குரியதாக நாங்கள் வாழுகின்ற மலையாகும்;

 பாடல் - 3

ஆடுமர வீனுமணி கோடிவெயில் எறிக்கும்

   அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும்

வேடுவர்கள் தினைவிரைக்கச் சாடுபுனந் தோறும்

   விந்தைஅகில் குங்குமமுஞ் சந்தனமும் நாறும்

காடுதொறும் ஓடிவரை ஆடுகுதி பாயும்

   காகமணு காமலையில் மேகநிரை சாயும்

நீடுபல வீசர்கயி லாசகிரி வாசர்

   நிலைதங்கும் திரிகூடமலை எங்கள் மலையே;

விளக்கம்

ஆடுகின்ற நாகப் பாம்புகள் கக்கிய எண்ணிறந்த மணிகள் எங்கும் ஒளிகொடுக்கும்; யானைகளானவை திங்களைத் தாம் உண்ணும் கவள உருண்டையென எண்ணி அது செல்கின்ற வான்வழியில் போகவொட்டாமல் தடைசெய்யும், மலைக் குறவர்கள் தினைப்பயிரை விதைப்பதற்காக அழிக்கப் படுகின்ற காடுகளிலெல்லாம் உள்ள பலவகை மரங்களும் அகில் குங்குமம் சந்தனமரங்களும் கண்டோர் வியக்கும்படி தம் மணங்களைப் பரப்பும்; காடுகளில் எங்கும் ஓடிச்சென்று வரையாடுகள் துள்ளிக் கீழே பாயும்; காகமும் பறவாத உயர்ந்த மலையில் மேகக் கூட்டங்கள் உச்சியில் சாய்ந்தோடும்; நீண்ட குறும்பலாவடியில் எழுந்தருளியிருக்கின்றவரும் கைலை மலையில் வாழ்பவருமாகிய திருக்குற்றாலநாதரின் நிலைபெற்றிருக்கின்ற திருக்குற்றாலமலையே எங்களுக்குரியதாக நாங்கள் வாழ்கின்ற மலையாகும்;

பாடல் - 4

கயிலைஎனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே

   கனகமகா மேருஎன நிற்குமலை அம்மே

சயிலமலை தென்மலைக்கு வடக்குமலை அம்மே

   சகலமலை யுந்தனக்குள் அடக்குமலை அம்மே

வயிரமுடன் மாணிக்கம் விளையுமலை அம்மே

   வான்இரவி முழைகள்தொறும் நுழையுமலை அம்மே

துயிலுமவர் விழிப்பாகி அகிலமெங்கும் தேடும்

   துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே;

விளக்கம்

திருக்கைலைமலையென்று கூறப்படுகின்ற வடக்குப் பக்க மலைக்குத் தென்பக்கத்தில் இருக்கின்ற மலையாகும்; இது பெரிய பொன்மலை என்னும் மேருமலை போன்ற உயர்ந்த மலை அம்மே! சிவசைலம் என்னும் தெற்கு பக்கமுள்ள மலைக்கு வடக்குப் பக்கமாக இருக்கின்ற மலை இஃது அம்மே! இம்மலை மற்ற எல்லா மலைகளின் சிறப்பெல்லாம் தனக்குள் நிறையக்கொண்டிருக்கும் வளமுடையது அம்மே! அது வைரமணியுடன் பலவகை மணிகளையும் விளைத்துத் தருவது அம்மே! வான்வழியாகச் செல்லும் ஞாயிறு குகைகளையே வழியாகக்கொண்டு நுழைந்து செல்வதற்கு இடனாக இருப்பதும் அந்த மலைதான் அம்மே! அறிதுயில் புரிகின்ற திருமாலான வருங்கூடத் துயில் விட்டெழுந்து எல்லா உலகங்களிலும் போய்த் தேடுகின்ற மேன்மையாளராகிய திரிகூடநாதப் பெருமானுக்குரிய திரிகூட மலைதான் எங்களுக்குரியதாக நாங்கள் வாழ்கின்ற மலையாகும் அம்மே!

பாடல் - 5

கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே

   கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே

எல்லுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே

   இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே

சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே

   தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே

செல்இனங்கள் முழவுகொட்ட மயிலினங்கள் ஆடும்

   திரிகூடமலை யெங்கள் செல்வமலை அம்மே;

விளக்கம்

கொல்லி மலையானது எனக்குப் பின் பிறந்த செல்லி என்னும் பெயருடையாளுக்குரிய மலையாகும்; அவளின் கணவனுக்கு இருப்பது பழனிமலை ஆகும் அம்மே! ஞாயிறு மேலே செல்கின்ற விந்தை என்னும் மலையே என் தந்தைக்குரிய மலையாகும் அம்மே! இமயமலை என்னுடைய தமையனுக்குரிய மலையாகும் அம்மே! சொல்லுதற்கரிய சுவாமி மலை என்னும் மலையே என் மாமியாளுக்குரிய மலையாகும் அம்மே! என் தோழிக்குரிய மலையோ நாஞ்சில் நாட்டிலுள்ள வேள்வி யென்னும் மலையாகும் அம்மே! மேகங்கள் குமுறலாகிய பறையை முழக்க, அதற்கேற்ப மயிலினங்கள் நடனஞ்செய்கின்ற திரிகூட மென்னும் திருக்குற்றாலமலையே எங்களுக்குச் செல்வப்பொருளாக இருக்கின்ற நாங்கள் வாழும் மலையம்மே!

பாடல் - 6

ஒருகுலத்திற் பெண்கள்கொடோம் ஒருகுலத்திற் கொள்வோம்

   உறவுபிடித் தாலும்விடோம் குறவர்குலம் நாங்கள்

வெருவிவருந் தினைப்புனத்திற் பெருமிருகம் விலக்கி

   வேங்கையாய் வெயில்மறைந்த பாங்குதனைக்குறித்தே

அருள்இலஞ்சி வேலர்தமக் கொருபெண்ணைக் கொடுத்தோம்

   ஆதினந்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்

பரிதிமதி சூழ்மலையைத் துருவனுக்குக் கொடுத்தோம்

   பரமர்திரி கூடமலை பழையமலை அம்மே.

விளக்கம்

எங்கள் குலம் தவிர வேறொரு சாதியில் நாங்கள் பெண்கள் கொடுக்கமாட்டோம்; வேறொரு குலத்தில் பெண்களை மணம் செய்யவும் மாட்டோம்; குறவர் சாதியினராகிய நாங்கள் ஒருவரை நட்புக் கொண்டால் இடையில் அந்நட்பை விட்டுவிடமாட்டோம்; நாங்கள் அச்சங்கொள்ளும்படி தினைப் புனத்தினிடத்தே வருகின்ற யானை முதலிய விலங்குகளைத் துரத்தி வேங்கை மரமாக நின்று எங்களுக்கு நிழல் தந்த முருகப் பெருமானுக்கு வள்ளி யென்னும் ஒரு பெண்ணை முன்பு கொடுக்கலானோம்; அதற்காக எங்களுக்குரிமையான வேறு மலைகள் எல்லாவற்றையும் மகட்கொடைப்பொருளாக வழங்கலானோம்; ஞாயிறு திங்கள் சுற்றிவருகின்ற மேருமலையைத் துருவன் என்பவனுக்குக் கொடுத்துதவினோம்; சிறந்தவராகிய திருக்குற்றால நாதருக்குரிய இத்தகைய திரிகூட மலையே எங்களுக்குரியதாக நாங்கள் வாழ்கின்ற மலையாகும் அம்மே!

 

நன்றி  

  • kalloorithamizh.blogspot.com
  • wikipedia

புதன், 19 ஜனவரி, 2022

ஏமாங்கத நாட்டு வளம் - சீவகசிந்தாமணி

 

சீவகசிந்தாமணி

  • சீவகசிந்தாமணி என்னும் காப்பியம் திருத்தக்கதேவரால் இயற்றப்பட்டது
  • சீவகன்  என்பவனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டது. 
  • சீவகசிந்தாமணி விருத்தப்பாக்களால் ஆனது. 
  • வடமொழியில் உள்ள சீவகன் கதைகள் பலவற்றைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல். 
  • இதற்கு முதல் நூல் "க்ஷத்திர சூடாமணி" என்பர்.  
  • சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஒரு மணியாகும். அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். 
  • அதனால்தான் 'சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம்' என்ற பொருளில் இதற்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பியத்தின் ஆசிரியர் திருத்தக்கதேவர்.

நூலமைப்பு

சீவக சிந்தாமணி மொத்தம் 3145 பாடல்களைக் கொண்டது. பதின்மூன்று இலம்பகங்களையுடையது. இலம்பகம் என்பதற்கு மாலை என்பது பொருளாகும். முத்தி இலம்பகம் தவிர ஏனையவை மகளிர் பெயரையே பெற்றுள்ளன. பெரும்பாலான இலம்பகங்களில் மணநிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. சீவகன் எட்டு பெண்களை மணக்கின்ற நிகழ்ச்சி எட்டு இலம்பகங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே இக்காப்பியத்திற்கு 'மணநூல்' என்ற பெயரும் உண்டு.

காப்பியக் கதை

மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். அச்சணந்தி என்னும் ஆசானிடம் கல்வி பயின்ற இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன், மிகுந்த அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான்.

சீவக சிந்தாமணியில் இடம்பெற்றுள்ள நாமகள் இலம்பகத்தில் கூறப்படும் ஏமாங்கத நாட்டின் வளம் கூறும் பத்துப் பாடல்கள் இங்கே பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

ஏமாங்கத நாட்டு வளம்

பாடல் - 1

காய் மாண்ட தெங்கின் பழம் வீழ கமுகின் நெற்றி

பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து

தேமாங்கனி சிதறி வாழை பழங்கள் சிந்தும்

ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டே

விளக்கம்

தென்னை மரத்திலிருந்து விழுகின்ற தேங்காய், பாக்கு மரத்தின் உச்சியில் உள்ள தேனடையைக் கிழித்தது. பின்னர் பலாப் பழத்தைப் பிளந்து, மாங்கனியை சிதற வைத்தது. வாழைப்பழங்களை உதிரச் செய்தது. இத்தகைய வளமுடைய நாடு ஏமாங்கத நாடு. அதன் புகழ் திசையெங்கும் பரவியிருந்தது. (உயர்வு நவிற்சி அணி)

பாடல் - 2

இலங்கல் ஆழியினான் களிற்று ஈட்டம் போல்

கலங்கு தெண் திரை மேய்ந்து கண மழை

பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி

விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே

விளக்கம்

பரதேசுவரர் என்னும் சக்கரவர்த்தியின் யானைக் கூட்டம் போன்ற மேகங்கள், அலைகளை உடைய கடல் நீரைப் பருகின. மேகங்கள் கருக்கொள்ளும் வரை மலைகளில் தங்கின. பிறகு வானில் பரவி சிவபிரானின் சடையைப் போல மின்னி வாய்விட்டு முழங்கின.

பாடல் - 3

தேன் நிரைத்து உயர் மொய் வரை சென்னியின்

மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண்

கோல் நிரைத்தன போல் கொழும் தாரைகள்

வான் நிரைத்து மணந்து சொரிந்தவே

விளக்கம்

முகில்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கடுக்காகக் கூடி, தேன் கூடுகள் நிறைந்த மலையுச்சியின் மேல், வெள்ளியால் செய்த வெண்மையான கோல்களை வானத்தில் வரிசையாக அமைத்தது போன்று, மழைநீர்த் தாரைகளை நிரைத்து நறுமணத்துடன் சொரிந்தன.

பாடல் - 4

குழவி வெண் மதி கோடு உழ கீண்டு தேன்

முழவின் நின்று அதிர் மொய் வரை சென்னியின்

இழியும் வெள் அருவி திரள் யாவையும்

குழுவின் மாட துகில் கொடி போன்றவே

விளக்கம்

மலையின் உச்சியிலிருந்து முழங்கி வழிந்த வெண்மையான நீர் அருவிகள் மாடங்களில் உள்ள வெண்துகிற் பொடிபோல இருந்தன. பிறைச் சந்திரனால் கிழிப்புண்டு முழவின் ஒலிபோல் அதிர்ந்து வரும் தேனருவி செந்துகிற் கொடி போல இருந்தன. (உயர்வு நவிற்சி அணி)

பாடல் - 5

இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல்

விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவை

நலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால்

கலன் பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே

விளக்கம்

அவ் அருவிகள் மலையில் இருந்து விழும் பொழுது நீண்ட இந்திரன் மார்பில் பிணைந்து விழுந்த முத்துவடம் போன்று காட்சியளித்தன. அவை பொன்னையும், அழகிய மணிகளையும் சிந்துவதால் இந்திரனுடைய அணிகலப் பெட்டியைக் கவிழ்த்துக் காட்டப் பெற்ற அணிகளைப் போன்றும் விளங்கின.

பாடல் - 6

வள்ளல் கைத்தல மாந்தரின் மால் வரை

கொள்ளை கொண்ட கொழு நிதி குப்பையை

உள்ளம் இல்லவர்க்கு ஊர்-தொறும் உய்த்து உராய்

வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே

விளக்கம்

நன்மனம் கொண்ட செல்வர்களைப் போல, வெள்ளமானது மலையின் உச்சியிலிருந்து வளம்மிக்க செல்வத்திரளை வாரிக் கொண்டு வந்து ஊர்தோறும் கொடுத்தது.

பாடல் - 7

மையல் யானையின் மு மதம் ஆர்ந்து தேன்

ஐய பொன் அசும்பு ஆடி அளைந்து உராய்

செய்ய சந்தனம் தீம் பழம் ஆதியா

நைய வாரி நடந்தது நன்று-அரோ

விளக்கம்

மழை வெள்ளம், மயங்கிய யானைகளின் மும்மதங்களையும் உள்ளே நிறைத்துத் தேனைப் பூசி, வியத்தகும் பொன் துளிகளைக் கலந்து, நறுமணச் சந்தனம், இனிய பழம் முதலிய பிறவற்றையும் வாரிக் கொண்டு காடு வருந்தும்படி, நாடு நோக்கி நடந்தது.

பாடல் - 8

வீடு இல் பட்டினம் வௌவிய வேந்து என

காடு கையரி கொண்டு கவர்ந்து போய்

மோடு கொள் புனல் மூரி நெடும் கடல்

நாடு முற்றியதோ என நண்ணிற்றே

விளக்கம்

வீடுகள் இல்லாத ஊரைக் கொள்ளை கொண்ட வேந்தனைப் போல, வெள்ளமானது அலைகளாகிய கைகளால் காட்டை அரித்து, அதனுள் கிடந்த பொருள்களைக் கவர்ந்து சென்று, பெரிய நீண்ட கடல், நாட்டை வளைத்துக் கொண்டதோ என்று மக்கள் வருந்தும்படி அந்நாட்டை அடைந்தது.

பாடல் - 9

திரை பொரு கனை கடல் செல்வன் சென்னி மேல்

நுரை எனும் மாலையை நுகர சூட்டுவான்

சரை எனும் பெயர் உடை தடம் கொள் வெம் முலை

குரை புனல் கன்னி கொண்டு இழிந்தது என்பவே

விளக்கம்

சரை என்னும் பெயரை உடைய வெள்ளம், தன் கணவனாகிய கடலை அடைந்து, அவனுக்குச் சூட்டுவதற்காக அருவி கொண்டு வந்த பொருள்களோடு, நுரையாகிய மாலையையும் சுமந்து கொண்டு வந்தது.

பாடல் - 10

பழம் கொள் தெங்கு இலை என பரந்து பாய் புனல்

வழங்க முன் இயற்றிய சுதை செய் வாய் தலை

தழங்குரல் பம்பையில் சாற்றி நாடு எலாம்

முழங்கு தீம் புனல் அகம் முரிய மொய்த்தவே

விளக்கம்

காய்ந்த தென்னை ஓலைகளைப் போல நெருங்க நீர் செல்லுமாறு வாய்க்கால்களில் அவ்வெள்ளம் புகுந்து மோதுவதால் வாய்க்கால்களின் உட்கரைகள் முரிந்தன. நீரின் வரவினை ஒலிக்கும் பம்பை என்னும் பறையினால் நாட்டு மக்களுக்கு அறிவிக்க, சுண்ணாம்பினால் கட்டப்பட்ட மதகுகளிடத்தில்  கூடினர்.