திங்கள், 24 மார்ச், 2025

வாக்குச் சீட்டுகளுக்கு ஓர் அர்த்தம் வரட்டும்

 

ஈரோடு தமிழன்பன்

வாக்குச் சீட்டுகளுக்கு ஓர் அர்த்தம் வரட்டும்

மதச்சார்பற்ற எமது நாட்டில்

எல்லோர்க்கும் உரிய

மாபெரும் பண்டிகை

தேர்தல்!

ஐந்தாண்டுக்கு

ஒருமுறை சிலவேளை

காலக்கணக்கு பிசகி

முன்னதாகவும் முகம் காட்டும்!

தேர்தல் கன்னியின் கண்சிமிட்டல்களே

வாக்குச்சீட்டுகள்!

ஜாதி விலங்குகளுக்குப்

புதுமுலாம் பூசும் நாள்கள்!

குப்பென்று மனிதநேயம்

பூத்து..அம்மா, தங்கச்சி,

அண்ணே என்று உறவு மொழிகள்

தோரணம் கட்டும் பருவம்!

சேரிகள் ஒரு

சின்னச் சிங்காரத்தில்

கிறங்கிடும் காலம்!

வாக்குச்சீட்டுகள் ஒருநாள் ரொட்டிக்கு

டோக்கன்களாக ஏழை இந்தியர்

எல்லோர்க்கும் வழங்கப்படும்!

தாய்க்குலத்துக்குத் தனி மவுசு

எவரெஸ்டுக்கும் அவர்களது

உயரம் காண

அன்றைக்கு ஏணி தேவைப்படும்!

இறுதிவரை மனிதராகாமலேயே

மரணமாகும் சிலரைஇடையில்

தலைவர்களாய் ஆட்சித்

தவிசிலேற்ற குடியாட்சி முறை

கண்டெடுத்த அரிய சாதனம்

வாக்குச்சீட்டு!

நாக்கின் பகட்டு

நாட்டியத்தில் உதிர்ந்துவிடும் இது

சத்திய கீதத்திற்குத்

தலையசைக்கின்றதா?

இங்கே வயதுகளைக்கூடத்

தேர்தல்களாலேயே

கணக்கிடுவர்!

ஓட்டுப்போடுவதற்கென்றே

பிறந்தவர் நாம்.!

பின் வாழ்வதற்கா?

ஜனநாயகப் புறாவின்  சிறகுகள்

என்று வாக்குச் சீட்டுகளை

வருணித்து வரவேற்றோம்.

ஆனந்தக் கண்ணீரால்

அவற்றை முழுக்காட்டியபோது

உள்ளிருந்த  உண்மை நிறம்

பீறிட்டது.

வாக்குச் சீட்டுகள் ஜனநாயக மங்கையின்

புன்னகையாக  இருந்தால் சரிதான்!

அவளது அதரத்தை அரிக்கும்

புழுக்களானால்?

இமைகளை விழிகளுக்குக்

காவலாக நிறுத்தினோம்.

அவை விழிகளைக்

கொத்தும் கழுகுகளானால்?

வாக்குச் சீட்டுகள் மட்டும்

ஜனநாயகத்தின் மூச்சுக்கு

அத்தாட்சிகள் அல்ல..

அவை அதன் மூக்குத் துளைகளை

மூடியடைக்கும் அபாயம் உண்டு!

பிறகு வாயால் சுவாசித்து

ஜனநாயகம் எத்தனை நாள்கள் வாழும்!

ஜனநாயகம் ஒரு

பூப்பின்னலாகச் சர்வாதிகாரத்தின்

சாளரத் திரைகளிலும் காணப்படும்!

பணநாயகத்தின் படிக்கட்டுகளிலும்

இந்தப் பூக்கோலம்  போடப்படுவதுண்டு.

வாழ்க்கை சமமாகாத நாட்டில்

வாக்குரிமை சமமாகும்!

ஜனநாயகம் ஜனங்களோடு

ஏதோ மனம்விட்டுப் பேச

விரும்பும் வேளை..

குரங்குச் சின்னம்

பார்த்துப் போடுங்கம்மா ஓட்டு

என்ற வீங்கிய சத்தம்

மேல் வந்து விழுந்து

அந்தப் பேச்சில் விரிசல்களை

உண்டாக்குகின்றது.

கொடி மரங்களைப் போலவே

கட்சிகளுக்கும் இங்கே

இலட்சிய வேர் இல்லை.

தெருவில் மூலை முடுக்கெல்லாம்

விறைத்து நிற்கும்

அஃறிணைப் பிணங்கள்!

உச்சியில் மரணம், அவற்றின்

பொய்மை நாக்கைப் புறத்தே

தள்ளியது போலக் கொடிகள்! – காற்று

அவற்றை அசைத்துப் பார்த்து

மரணத்தை உறுதிப்படுத்துகிறது!

அழுக்குச்  சுவரொட்டிகளை

ஆபாசச் சுவர் வாக்கியங்களைச்

சுவாசித்து வாழும் ஜனநாயகத்திற்கு

ஆரோக்கியம் ஏது? ஜனங்களைக்

காப்பதற்குரிய நிதி ஜனநாயகத்தின்

ஊதாரித்தனத்தால் கரைந்து போகிறது!

எமது பாரதத்திற்கு

எப்போதுமே பாலகாண்டம் தான்

சின்னப் படம் போடாமல்

விளங்காத சின்ன வயசு!

தேர்தல் சுயம்வரம் சுயத்தில்

இல்லை பணத்தின்

வரத்தில் இருக்கிறது!

மற்றவர் குனியும்போது

ஆகாயத்தையும்

நிமிரும்போது நிலத்தையும்

சுருட்டிக்கொள்ள வல்லமை

படைத்த  அரசியல்வாதிகள்..

இந்த வாக்குச் சீட்டுகளை

வழிப்பறி செய்வது கடினமானதல்ல..

திருட்டு ஓட்டுப்பெட்டி ஜனநாயகத்தின்

கருவறையா? கல்லறையா?

நாடு நடத்த வேண்டிய

வழக்காடு மன்றம்

எமது பாரத ஜனநாயகம்

பரந்த நோக்கம் உடையது

செத்தவர்கள் எல்லோரும்

கூட அன்று வந்து

வாக்களித்துவிட்டுப் போகலாம்

காந்தி காமராஜ்

அண்ணா பெரியார்

இவர்கள் கட்சிகளுக்குச்

செத்தும் கொடுத்த சீதக்காதிகள்!

ஒவ்வொரு வாக்குச் சீட்டும்..

இவர்கள் கல்லறையிலிருந்து

இது வருகிறது!

இனி

இனி, இனியேனும்

ஜனநாயகம் கட்சிகளை

விவாகரத்து செய்துவிட்டு

ஜனங்களுக்கு மாலை சூடட்டும்!

வாக்குச் சீட்டுகளுக்கு

ஒரு அர்த்தம் வரட்டும்!

 

பாடல் விளக்கம்

மதச்சார்பற்ற நம் நாட்டில் அனைவருக்கும் உரிய பண்டிகையாகத் தேர்தல் அமைகின்றது. அது ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். சில வேளைகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலோ, தலைவர்கள் இறந்து விட்டாலோ காலக் கணக்குத் தவறி இடையிலேயே கூட தேர்தல் வந்து விடும்.

தேர்தல் காலத்தில் நடைபெறும் செயல்கள்

தேர்தல் என்பது அரசியல்வாதிகளைக் கவருகின்ற ஒரு நிகழ்வாக அமைந்துவிட்டது. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் ஓட்டுகளை வாங்க முயற்சி செய்வர். அதுவரை மறந்திருந்த மனிதநேயம் திடீரென்று மலர்ந்து அம்மா, தங்கச்சி, அண்ணே என்ற உறவு மொழிகள் கூறி ஓட்டுக் கேட்டு அரசியல்வாதிகள் வருவர். கவனிக்கப்படாத சேரிகள், குடிசைகள் எல்லாம் தேர்தல் காலத்தில் அலங்கரிக்கப்பர். பசியோடு இருக்கின்ற ஏழைகள் அனைவருக்கும் தேர்தல் அன்று, ஒரு நாள் டோக்கனாக உணவு தந்து, அவர்களைத் தம் வசப்படுத்தி, ஓட்டு வாங்குவர். தாய்க்குலத்தைத் தனியாகச் சந்தித்து இலவசமாகப் பல பொருட்களை வழங்கி,  அவர்களை விலை கொடுத்து வாங்கி விடுவர்.

வாக்குச் சீட்டின் நிலை

மக்களுக்கு நன்மை தருகின்ற செயல்களைச் செய்ய மறந்து, இறுதிவரை மனிதராகாமலேயே மரணமாகிவிடுகின்ற சிலரைத் தலைவர்களாக ஆட்சியில் அமரச் செய்ய குடியாட்சி முறை கண்டுபிடித்த சாதனமாக வாக்குச் சீட்டு அமைந்துவிட்டது. அரசியல்வாதிகளின் நயவஞ்சகப் பேச்சில் குடிமக்கள் மயங்கி அவர்களை முழுவதுமாக நம்பி ஓட்டுப் போடுகின்றனர். ஆனால் குடிமக்கள் நிம்மதியாக வாழ்வதில்லை.

ஜனநாயகம்

மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கின்ற தலைவர்களைக் கொண்டதுதான் ஜனநாயகம். அது சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பாதுகாவலாக இருத்தல் அவசியம். ஆனால், ஜனநாயகம் சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கி இருக்கின்றது. சுதந்திரமாகச் செயல்படக் கூடிய தன்மையை இழந்துவிட்டது. மக்களின் வாழ்க்கையைக் குறித்த எந்தவொரு கொள்கையும் இன்றி செயல்படுகின்றது. அதனால், ஜனநாயகம் மக்களின் புன்னகையை அழிக்கின்ற புழுக்கள் என்றும், விழிகளைக் கொத்தும் கழுகுகள் என்றும் கவிஞர் கூறுகின்றார். வாழ்க்கை சமமாகாத நாட்டில் வாக்குரிமை மட்டும் எப்படி சமமாக இருக்க முடியும். இதையெல்லாம் உணர்ந்து மக்கள் மனம் விட்டுப் பேச விரும்பும் வேளை, உடனே தேர்தல் வந்து விடுகின்றது. “குரங்குச் சின்னம் பார்த்து போடுங்கம்மா ஓட்டு என்ற சத்தம் அந்தப் பேச்சில் விரிசல்களை உண்டாக்கி விடுகின்றது. கொடி மரங்களைப் போலவே கட்சிகளுக்கும் இங்கே இலட்சிய வேர் இல்லை.

மக்களின் அறியாமை

மக்கள் தேர்தலை ஒரு விளையாட்டாகவே எண்ணுகின்றனர். அது ஒரு பொறுப்பான செயல் என்பதை ஏற்க மறுக்கின்றனர். மக்களுக்குச் கட்சியின் சின்னம் போட்ட படம் இல்லையென்றால் தலைவர்களை அடையாளம் காண தெரியவில்லை. அந்த அளவிற்கு அறியாமையில் இருக்கின்றனர்.

அரசியல்வாதிகளின் செயல்கள்

மற்றவர்கள் குனியும்போது ஆகாயத்தையும், நிமிரும்போது நிலத்தையும் சுருட்டிக் கொள்ளும் வல்லமை படைத்தவர்கள் அரசியல்வாதிகள். பணத்திற்காக மட்டுமே அவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வாக்குச் சீட்டுகளை விலை கொடுத்து வாங்குவது அவர்களுக்குக் கடினமான வேலையல்ல. எனவே, திருட்டு ஓட்டுப் பெட்டி ஜனநாயகத்தின் கல்லறையா? கருவறையா? என்று வழக்காடு மன்றம் நடத்த வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டு விட்டது.  இறந்து போனவர்களின் பெயரால் கள்ள ஓட்டு போடப்படுகின்றது.  காந்தி, காமராஜர், அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களைக் கூறிக் கூறியே வாக்குச் சீட்டுகளை அள்ள முயல்கின்றனர்.

முடிவுரை

நாட்டின் அவல நிலையை உணர்ந்து, மக்களுக்கு நன்மை தருகின்ற செயலில் அரசியல்வாதிகள் ஈடுபட வேண்டும். அப்போதான் வாக்குச் சீட்டுகளுக்கு ஓர் அர்த்தம் வரும் என்று குறிப்பிடுகின்றார். கவிஞர்.

 

 

திருக்குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்

 திருக்குற்றாலக் குறவஞ்சி

திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.

நூலாசிரியர்

குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல்  திரிகூட ராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர். திருக்குற்றாலநாதரின் முன்னிலையில் இந்நூல் அரங்கேற்றப்பட்டது.

கதை அமைப்பு

குறவஞ்சி நாடகத்திற்கென வரையறை செய்யப்பட்ட கதை அமைப்போடே இந்நூலும் விளங்குகிறது. குற்றாலநாதரின் திருவுலா எழுச்சியைக் குறித்து முன்னரே கட்டியங்காரன் கூறுகிறான். திருவுலா தொடங்குகிறது. மூவர் தமிழும் நான்மறைகள் முழங்க குற்றலாநாதர் வீதியில் உலா வருகிறார். குற்றாலநாதாரின் திருவுலாவைக் காண பெண்கள் எழுந்து வருகின்றனர். அப்பொழுது பந்து ஆடிக்கொண்டிருந்த வசந்தவல்லி (கதைத்தலைவி) என்பவளும் திருவுலாக்காண வருகிறாள். தோழியின் வாயிலாக இறைவனைப் பற்றி அறிந்த வசந்தவல்லி இறைவன் மீது காதல்கொண்டு தோழியைத் தூதனுப்புகிறாள். இந்நிலையில் குறிசொல்லும் குறத்தி தெருவழியே வருகிறாள். தோழி அவளைக் குறிசொல்ல அழைத்தவுடன் குறப்பெண் தன்நாட்டு மலைவளமும் தொழில்வளமும் சிறப்பாக எடுத்துக்கூறுகிறாள். பின் வசந்தவல்லி கையைப் பார்த்து அவள் குற்றாலநாதர் காதல் கொண்டுள்ள செய்தியையும், (தலைவனின்) குற்றாலநாதரின் புகழ்பற்றியும் எடுத்துச் சொல்லி வசந்தவல்லியின் எண்ணம் நிறைவேறும் என்று குறி சொல்லிப் பரிசு பெறுகிறாள் குறத்தி தலைவி. அவள் கணவன் தலைவன் அவளைக் காணத் தேடிவருகிறான். குறத்தியைக் கண்ட தலைவன் குறத்தி நடந்ததைச் சொல்ல இருவரும் குற்றாலநாதரைப் பாடி இன்பம் அடைகின்றனர். இவ்வாறு கதை முடிகிறது.

நூலின் சிறப்புகள்

குறவஞ்சி நூல்களுள் பாராட்டுக்குரியதாக விளங்கி வருவதும்இன்றும் நாட்டிய நாடகமாக மேடைகளில் நடிக்கப்பட்டு வருவதும்இக்குற்றாலக் குறவஞ்சி ஆகும். குற்றாலக் குறவஞ்சியானது இறைவன்மீது பாடப்பெற்றதால் திருக்குற்றாலக் குறவஞ்சி எனும் பெயர் பெற்றது. நாடகச்சுவை நிரம்பிய இந்நூல் சந்த (ஓசை) நயத்தோடு கூடிய பாடல்களையும் கற்பனை நயம் கொண்ட பாடல்களையும் நிரம்பப் பெற்றுள்ளது.

 

 குறத்தி மலைவளம் கூறுதல்

பாடல் – 1

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

   மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்

   கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்

தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்

   செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்

   குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே;

விளக்கம்

ஆண் குரங்குகள் பல்வகைப் பழங்களைப் பறித்துக் கொடுத்துப் பெண் குரங்குகளோடு தழுவும்; அக் குரங்குகளால் சிதறியெறியப்படுகின்ற பழங்களை வானுலகத்தில் வாழும் தேவர்கள் இரந்து இரந்து வேண்டிக் கேட்பார்கள். வனவேடர்கள் தம் கண்களால் ஏறெடுத்துப் பார்த்து உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள்; வானின் வழியாகச் செல்கின்ற சித்தர்கள் கீழிறங்கி வந்து காயசித்தி மருந்துகளாகிய வன மூலிகைகளை வளர்ப்பார்கள்; தேன் கலந்த மலையருவியினது அலைகள் மேலெழுந்து வானத்தினின்றும் வழிந்து ஓடும்; அதனால் செந்நிற ஞாயிற்றின் தேரிற்பூட்டிச் செல்லும் குதிரைக் கால்களும் தேர்ச்சக்கரமும் வழுக்கி விழும்; வளைந்துள்ள இளம் பிறையைச் சூடியிருக்கின்ற சடைமுடியையுடைய அழகரான திருக்குற்றால நாதர் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றாலமாகிய இச் சிறப்புவாய்ந்த திரிகூடமலையே எங்களுக்குரிமையாக நாங்கள் வாழ்கின்ற மலையாகும்;

ஞாயிறு, 23 மார்ச், 2025

பழந்தமிழ் இலக்கியங்களில் உளவியல்

 

பழந்தமிழ் இலக்கியங்களில் உளவியல்

உலகு எங்கிலும் உள்ள எட்டு நபர்களில் ஒருவர் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. இன்றைய உலகில் ஏறத்தாழ 100 கோடி மக்கள் மனச்சிக்கலால் துன்புறுகின்றனர். உளநலத்தின் இயல்பு, உளநலத்தை வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து சிக்மண்ட் பிராய்டு என்பவர் ஏராளமான ஆய்வுகளை நடத்திக் காட்டியுள்ளார். இலக்கிய உருவாக்கத்திற்கும் உணர்வுகளின் கலவையாக இருக்கும் மனிதர்களின் செயல்பாடுகள், பண்புகள் போன்றவற்றை இலக்கியத்தில் படைப்பதற்கும் பல்வேறுபட்ட உணர்வுகளே அடிப்படையாக அமைகின்றன. இந்த அடிப்படையில் ஓர் இலக்கியத்தை அணுகுவது உளவியல் அணுகுமுறை எனப்படுகின்றது.

தமிழ் இலக்கியங்களில் உளவியல்

சங்க இலக்கியப் பாடல்கள் பெரும்பான்மையும் உளவியல் நோக்கிலேயே பாடப்பட்டுள்ளன. உயிர்களின் அறிவுநிலையை, அதற்கான உறுப்புகளை வரிசைப்படுத்திய தொல்காப்பியர், “ஆறறிவதுவே அவற்றொடு மனனே” (மரபியல்) என்று கூறியுள்ளார். ஆறு அறிவு என்பது கண்ணுக்குப் புலப்படாத மனம் என்று, “மனநலமே மன்னுயிர்க்கு ஆக்கம்” என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

தொல்காப்பிய மெய்ப்பாடுகள்

தொல்காப்பியர் வரையறுத்துள்ள மெய்ப்பாடுகளை உற்று நோக்கும்போது, மனிதனின் மனநிலையை நன்குணர்ந்தவர்கள் தமிழர்கள் என்பது அறியப்படுகின்றது.

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெரமிதம் வெகுளி உவகை என்ற

அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப (தொல்.பொருள்.252)

என்று மனித உணர்வுகளை வகைப்படுத்தியுள்ளார் தொல்காப்பியர். இதனை இக்கால உளவியல் அறிஞர்கள், அச்சம்சார் உணர்ச்சிகள் (அச்சம், கவலை, பீதி, வெட்கம்), சினம்சார் உணர்ச்சிகள் (சினம், பொறாமை, வெறுப்பு), அன்புசார் உணர்ச்சிகள் (அன்பு, காதல், மகிழ்ச்சி, நகை, உற்சாகம்) என வகைப்படுத்தியுள்ளனர். இக்கால அறிவியல் அறிஞர்களுக்கு முன்னோடியாகத் தமிழர்கள் விளங்கியிருந்தனர் என்பது வியப்பான ஒன்று.

மெய்ப்பாடுகளும் உடல் பாதிப்புகளும்

அச்சம், கவலை, பீதி, வெட்கம், அழுகை போன்றவற்றால் உடல் உள்ளுறுப்புகளிலும் வெளியுறுப்புகளிலும் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டு முகபாவனை மாற்றம், குரல் வெளிப்பாட்டில் மாற்றம், குருதி அழுத்தம், அதிகரிப்பு, இதயத்துடிப்புச் சீரற்று இருத்தல், நாடித்துடிப்பு அதிகரித்தல், செரிமான உறுப்புகளில் மாற்றம் ஏற்படுதல், அதன் காரணமாகப் பசியின்மை, சோர்வு, உடல் மெலிதல் ஆகியவை ஏற்படுகின்றன. சான்றாக, வருவேன் என்று கூறிய தலைவன் வரவில்லை. தலைவன் பொய்யுரைக்க மாட்டான் என்று அவன் மீது நம்பிக்கைக் கொண்டிருக்கின்றாள் தலைவி. அவன் வராததை காலம் உறுதி செய்தபோது,

யாருமில்லை தானே கள்வன்

தானது பொய்ப்பின் யான் எவன் செய்கோ (குறுந்.25)

எனத் தலைவன் தன்னைக் கைவிட்டால் தன் நிலைமை என்னாகும் என்று தலைவி நம்பிக்கை இழந்த மனிநிலைக்குத் தள்ளப்படுகின்றாள். இனி அவனை நினைத்து ஒன்றுமில்லை என்று எண்ணி அவனை மறந்து விடலாம் என்று எண்ணும்போது,

உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது

இருப்பினெம் அளவைத் தன்றே (குறு.102)

என்று தன் மனம் தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிலை இழந்ததை உணர்கின்றாள். மேலும்,

மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்

ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு

ஆஆ ஒல்லெனக் கூவுனே கொல் (குறு.28)

என்று புலம்பித் தீர்க்கின்றாள். ”உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்” என்று ஊராரைப் பழிக்கின்றாள். இது மனச் சிதைவின் உச்சம் என்று கொள்ளலாம். உண்ணும் அளவைக் குறைத்தல், உடல் அழகு குறைதல், உடல் மெலிதல், பசலை பூத்தல் போன்ற பல மாற்றங்கள் அவளிடம் நிகழ்கின்றன. இது போன்று மெய்ப்பாடுகளில் ஏற்படுகின்ற சிதைவுகள் உடலையும், உள்ளத்தையும் ஒருங்கே பாதிக்கின்றன என்பதை உணர்ந்தே, உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று வலியுறுத்தியுள்ளனர் நம் முன்னோர்.

அறத்தொடு நிற்றல்

தலைவியின் காதலை நன்கு அறிந்த தோழி, அவளுடைய காதலை பெற்றோரிடம் தெரிவிக்கும் முறை சிறந்த உளவியல் பண்புகளைக் கொண்டது. காதலால் தவிக்கின்ற தலைவியின் உள்ளத்திற்கு அருமருந்து தலைவனைப் பற்றிய செய்தியைப் கேட்பதுதான் என்பதை உணர்ந்த தோழி,

அகவன் மகளே அகவன் மகளே

மனவுக் கோப்பன்ன நன்னெடுங்கூந்தல்

அகவன் மகளே பாடுக பாட்டே

இன்னும் பாடுக பாட்டே

அவர் நன்னெடுங்குன்றம் பாடிய பாட்டே (குறுந்.23)

என்று பாடுகின்றாள். தலைவியின் உளநோயைத் தீர்க்கும் மருத்துவச்சியாகத் தோழி செயல்படுவதைக் காண முடிகின்றது.

தலைவனின் உள நோய்

தலைவிக்கு உள நோய் ஏற்படும் முறையைப் பலவாறு வெளிப்படுத்தியுள்ள தொல்காப்பியர், தலைவனுக்கும் உள நோய் ஏற்படும் என்றும், அதனால் அவனுக்குள் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை,

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்

ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்

நோக்குவ எல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கம் சாக்காடு (தொல்.களவு.97)

என்ற நூற்பாவால் அறியலாம். தலைவியின் நினைவால் வாடுகின்ற தலைவன் தன் இயல்பினை உரைக்கின்ற தன்மையை,

காமம் காமம் என்பர் காமம்

அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்

முதைச் சுவற் கலித்த முற்றா இளம்புல்

மூதா தைவந் தாங்கு

விருந்தே காமம் பெருந்தோளாயே (குறுந்.204)

என்று பாடுகின்றான்.

முடிவுரை

மனநலம், உடல் நலம் இரண்டுமே மனிதனுக்குத் தேவை என்பதை பழந்தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. உள்ளத்தில் உள்ளவற்றை வெளியே கொட்டிவிட வேண்டும் என்பதற்காகவே தலைவனும் தலைவியும் அஃறிணைப் பொருள்களிடம் பேசுவது, அவற்றையே தூதாக அனுப்ப எண்ணுவது, தன் தோழி, பாங்கன் ஆகியோரிடம் முறையிடுவது, வாயில்கள் அவர்களுக்கு உதவி செய்வது எனப் பல உளவியல் முறையை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளமை வியப்பிற்குரியதாகும்.