பழந்தமிழ் இலக்கியங்களில் உளவியல்
உலகு எங்கிலும் உள்ள எட்டு நபர்களில் ஒருவர் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. இன்றைய உலகில் ஏறத்தாழ 100 கோடி மக்கள் மனச்சிக்கலால் துன்புறுகின்றனர். உளநலத்தின் இயல்பு, உளநலத்தை வளர்ப்பதற்கான
வழிமுறைகள் குறித்து சிக்மண்ட் பிராய்டு என்பவர் ஏராளமான ஆய்வுகளை நடத்திக் காட்டியுள்ளார்.
இலக்கிய உருவாக்கத்திற்கும் உணர்வுகளின் கலவையாக இருக்கும் மனிதர்களின் செயல்பாடுகள்,
பண்புகள் போன்றவற்றை இலக்கியத்தில் படைப்பதற்கும் பல்வேறுபட்ட உணர்வுகளே அடிப்படையாக
அமைகின்றன. இந்த அடிப்படையில் ஓர் இலக்கியத்தை அணுகுவது உளவியல் அணுகுமுறை எனப்படுகின்றது.
தமிழ் இலக்கியங்களில் உளவியல்
சங்க இலக்கியப் பாடல்கள் பெரும்பான்மையும் உளவியல்
நோக்கிலேயே பாடப்பட்டுள்ளன. உயிர்களின் அறிவுநிலையை, அதற்கான உறுப்புகளை வரிசைப்படுத்திய
தொல்காப்பியர், “ஆறறிவதுவே
அவற்றொடு மனனே” (மரபியல்) என்று கூறியுள்ளார். ஆறு அறிவு என்பது கண்ணுக்குப் புலப்படாத மனம் என்று, “மனநலமே மன்னுயிர்க்கு ஆக்கம்” என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
தொல்காப்பிய மெய்ப்பாடுகள்
தொல்காப்பியர் வரையறுத்துள்ள மெய்ப்பாடுகளை உற்று
நோக்கும்போது, மனிதனின் மனநிலையை நன்குணர்ந்தவர்கள் தமிழர்கள் என்பது அறியப்படுகின்றது.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெரமிதம் வெகுளி உவகை என்ற
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப (தொல்.பொருள்.252)
என்று மனித உணர்வுகளை வகைப்படுத்தியுள்ளார் தொல்காப்பியர்.
இதனை இக்கால உளவியல் அறிஞர்கள், அச்சம்சார் உணர்ச்சிகள் (அச்சம், கவலை, பீதி, வெட்கம்),
சினம்சார் உணர்ச்சிகள் (சினம், பொறாமை, வெறுப்பு), அன்புசார் உணர்ச்சிகள் (அன்பு, காதல்,
மகிழ்ச்சி, நகை, உற்சாகம்) என வகைப்படுத்தியுள்ளனர். இக்கால அறிவியல் அறிஞர்களுக்கு
முன்னோடியாகத் தமிழர்கள் விளங்கியிருந்தனர் என்பது வியப்பான ஒன்று.
மெய்ப்பாடுகளும் உடல் பாதிப்புகளும்
அச்சம், கவலை, பீதி, வெட்கம், அழுகை போன்றவற்றால்
உடல் உள்ளுறுப்புகளிலும் வெளியுறுப்புகளிலும் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டு முகபாவனை மாற்றம்,
குரல் வெளிப்பாட்டில் மாற்றம், குருதி அழுத்தம், அதிகரிப்பு, இதயத்துடிப்புச் சீரற்று
இருத்தல், நாடித்துடிப்பு அதிகரித்தல், செரிமான உறுப்புகளில் மாற்றம் ஏற்படுதல், அதன்
காரணமாகப் பசியின்மை, சோர்வு, உடல் மெலிதல் ஆகியவை ஏற்படுகின்றன. சான்றாக, வருவேன்
என்று கூறிய தலைவன் வரவில்லை. தலைவன் பொய்யுரைக்க மாட்டான் என்று அவன் மீது நம்பிக்கைக்
கொண்டிருக்கின்றாள் தலைவி. அவன் வராததை காலம் உறுதி செய்தபோது,
யாருமில்லை தானே கள்வன்
தானது பொய்ப்பின் யான் எவன் செய்கோ (குறுந்.25)
எனத் தலைவன் தன்னைக் கைவிட்டால் தன் நிலைமை என்னாகும்
என்று தலைவி நம்பிக்கை இழந்த மனிநிலைக்குத் தள்ளப்படுகின்றாள். இனி அவனை நினைத்து ஒன்றுமில்லை
என்று எண்ணி அவனை மறந்து விடலாம் என்று எண்ணும்போது,
உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பினெம் அளவைத் தன்றே (குறு.102)
என்று தன் மனம் தன் கட்டுப்பாட்டில் இல்லாமல்
தன்னிலை இழந்ததை உணர்கின்றாள். மேலும்,
மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஆ ஒல்லெனக் கூவுனே கொல் (குறு.28)
என்று புலம்பித் தீர்க்கின்றாள். ”உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்” என்று ஊராரைப் பழிக்கின்றாள். இது மனச் சிதைவின்
உச்சம் என்று கொள்ளலாம். உண்ணும் அளவைக் குறைத்தல், உடல் அழகு குறைதல், உடல் மெலிதல்,
பசலை பூத்தல் போன்ற பல மாற்றங்கள் அவளிடம் நிகழ்கின்றன. இது போன்று மெய்ப்பாடுகளில்
ஏற்படுகின்ற சிதைவுகள் உடலையும், உள்ளத்தையும் ஒருங்கே பாதிக்கின்றன என்பதை உணர்ந்தே,
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று வலியுறுத்தியுள்ளனர் நம் முன்னோர்.
அறத்தொடு நிற்றல்
தலைவியின் காதலை நன்கு அறிந்த தோழி, அவளுடைய காதலை
பெற்றோரிடம் தெரிவிக்கும் முறை சிறந்த உளவியல் பண்புகளைக் கொண்டது. காதலால் தவிக்கின்ற
தலைவியின் உள்ளத்திற்கு அருமருந்து தலைவனைப் பற்றிய செய்தியைப் கேட்பதுதான் என்பதை
உணர்ந்த தோழி,
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக் கோப்பன்ன நன்னெடுங்கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே
அவர் நன்னெடுங்குன்றம் பாடிய பாட்டே (குறுந்.23)
என்று பாடுகின்றாள். தலைவியின் உளநோயைத் தீர்க்கும்
மருத்துவச்சியாகத் தோழி செயல்படுவதைக் காண முடிகின்றது.
தலைவனின் உள நோய்
தலைவிக்கு உள நோய் ஏற்படும் முறையைப் பலவாறு வெளிப்படுத்தியுள்ள
தொல்காப்பியர், தலைவனுக்கும் உள நோய் ஏற்படும் என்றும், அதனால் அவனுக்குள் பல மாற்றங்கள்
ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை,
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு (தொல்.களவு.97)
என்ற நூற்பாவால் அறியலாம். தலைவியின் நினைவால்
வாடுகின்ற தலைவன் தன் இயல்பினை உரைக்கின்ற தன்மையை,
காமம் காமம் என்பர் காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச் சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளாயே (குறுந்.204)
என்று பாடுகின்றான்.
முடிவுரை
மனநலம், உடல் நலம் இரண்டுமே மனிதனுக்குத் தேவை என்பதை பழந்தமிழ் இலக்கியங்கள்
வலியுறுத்துகின்றன. உள்ளத்தில் உள்ளவற்றை வெளியே கொட்டிவிட வேண்டும் என்பதற்காகவே தலைவனும்
தலைவியும் அஃறிணைப் பொருள்களிடம் பேசுவது, அவற்றையே தூதாக அனுப்ப எண்ணுவது, தன் தோழி,
பாங்கன் ஆகியோரிடம் முறையிடுவது, வாயில்கள் அவர்களுக்கு உதவி செய்வது எனப் பல உளவியல்
முறையை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளமை வியப்பிற்குரியதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக