வியாழன், 16 ஜூலை, 2020

காரைக்காலம்மையார் புராணம்

காரைக்காலம்மையார் புராணம்

        சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் கூறப்பட்டுள்ள 63 நாயன்மார்களில் காரைக்காலம்மையாரும் ஒருவர். சிபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டச் சிறப்புக்குரியவர். இறைவனால் மாங்கனி தந்து ஆட்கொள்ளப்பட்டவர். இசைத் தமிழால் இறைவனைப் பாடியவர்இவருடைய வரலாற்றை பெரியபுராணத்தின்வழி கதையாகக்  காண்போம்.

பிறப்பு:

வணிகர்குலத் தலைவர் தனதத்தன், சிவபெருமானை எண்ணித் தாம் கொண்ட தவத்தால் புனிதவதியார் என்ற பெண் குழந்தையைப் பெற்றார். புனிதவதியார் சிறு வயது முதலே சிவபெருமானின் மீது தணியாத பற்றுக் கொண்டவராக இருந்தார்.

திருமணம்:       

திருமண வயது நெருங்கி, அழகே வடிவாகக் காட்சியளிக்கும் தன் மகளுக்கு மணம் பேச எண்ணினார் தனதத்தன். வணிகர் குலத்தில் பெரும்புகழ் பெற்ற நிதிபதியின் மகனான பரமதத்தனுக்குத் தன் மகளை மணம் பேச இசைந்தார். ஒரு நல்ல நாளில் புனிதவதியாருக்கும் பரமதத்தனுக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. புனிதவதியார் ஒரே மகள் ஆதலால், காரைக்காலிலேயே தங்கி, அவர்களுக்குத் தன் அருகிலேயே அழகிய மாளிகையை அமைத்துக் கொடுத்தார் தனதத்தன். அந்த மாளிகையில் பரமதத்தனும், புனிதவதியாரும் அன்பு பொருந்திய காதலுடன் தம் இல்வாழ்க்கையைப் பண்பு பிறழாது வாழ்ந்து வந்தனர்.

புனிதவதியாரின் சிவத்தொண்டு:

புனிதவதியார் இறைவனின் அடியார் தம்மை நாடி வந்தால் நல்ல உணவை அளித்து செம்பொன், நவமணிகள், செழுமையான ஆடைகள் ஆகியவற்றைத் தந்து மகிழ்ந்தார்.

மாங்கனியால் நேர்ந்த அதிசயம்:

ஒரு நாள் பரமதத்தனைக் காண வந்த சிலர் அவனுக்கு இரண்டு மாம்பழங்களைக் கொடுத்தனர். அவன் அம்மாம்பழங்களை ‘வீட்டில் கொண்டு போய்க் கொடுக்க’ என்று தன் பணிமக்களிடம் கூறினான். அங்ஙனம் தன் கணவன் அனுப்பிய இரண்டு பழங்களையும் பெற்றுக் கொண்டு தம் இல்லத்தில் வைத்தார் புனிதவதியார்.

அப்போது சிவபெருமானின்  தொண்டர் ஒருவர் அவருடைய இல்லத்திற்கு வந்தார். சிவபெருமானின் மெய்த்தொண்டர் மிகவும் பசித்த நிலையில் இருப்பதைக் கண்டு அவருக்கு விரைவாக உணவு அளிக்க எண்ணினார். முதலில் அவருடைய பாதங்களை நீரால் சுத்தம் செய்தார். சிவனடியாரை அமரச் செய்து வாழை இலையைத் திருத்தி இட்டு உணவு அளித்தார். அப்போது கறிகள் சமைக்கப் பெறாமல், சாதம் மட்டும் சமைத்த நிலையில் இருக்க, வேறு வழியில்லாமல் கணவன் கொடுத்தனுப்பிய பழங்களில் ஒன்றினை அவருக்குப் பரிமாறினார். அடியாரும் நல்விருந்து உண்ட மகிழ்ச்சியில் அம்மையாரை வாழ்த்திச் சென்றார்.

வீட்டிற்கு வந்த பரமதத்தன் குளித்து உணவருந்த எண்ணினார். புனிதவதியாரும் கணவனுக்கு இலை போட்டு உணவு பரிமாறி மாங்கனிகளில் ஒன்றைக் கொண்டு வந்து வைத்தார். மாங்கனியைச் சுவைத்த பின்பு அதன் சுவையில் மயங்கிய பரமதத்தன் மற்றொரு மாங்கனியைக் கொண்டு வரக் கூறினார். கணவன் சொல் தட்டாமல், அதை எடுத்து வருபவர்போல் அங்கிருந்து நீங்கிய புனிதவதியார் சிவபெருமானின் திருவடிகளை மனதில் பொருத்தி வணங்கினார். அப்போது அவருடைய கையில் மாங்கனி ஒன்று வந்து பொருந்தியது. தம் கையில் வந்த பழத்தைக் கண்டு மகிழ்ந்து அதைக் கொண்டு வந்து பரமதத்தன் இலையில் இட்டார். அதை உண்ட பரமதத்தன் அதன் சுவை அமுதத்தை விட மேலானதாக இருக்கவே ‘இது நான் தந்த மாங்கனி அன்று. இது மூன்று உலகங்களிலும் பெறுதற்கு அரியதான கனியாக உள்ளது. இதை நீ எங்கு பெற்றாய்’ என புனிதவதியாரிடம் வினவினார்.

தாம் சிறிதும் எதிர்பாராத அந்த வினாவைக் கேட்ட புனிதவதியார் இறைவன் தமக்கு அருளிய நிலையினைத் தம் கணவரிடம் கூறினார். ‘கனி அளித்தது ஈசன் அருளே’ எனக் கூறக் கேட்ட பரமதத்தன் ‘இக்கனி ஈசன் அருளால் பெற்றதென்றால், இதைப் போன்று இன்னொரு கனியை அவர் அருளால் பெற்றுத் தருவாயாக’ என்று கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் புனிதவதியார். இருப்பினும் சிவபெருமானைத் துதித்து ‘இப்போது இதை நீ அளிக்காது போனால் நான் முன்னம் சொன்ன சொல் பொய்யாகி விடும்’ என்று மனமுருக வேண்டினார். இறைவன் அருளால் மற்றொரு மாங்கனி அவர் கையில் வந்து பொருந்தியது. இதைக் கண்ட பரமதத்தன் வியந்து அதனைத் தன் கையில் வாங்கினான். வாங்கிய அக்கனி சற்று நேரத்தில் மறைந்து போனதைக் கண்டு அச்சம் ஏற்பட்டுத் தம் மனைவியைத் தெய்வம் என்று கருதி அவருடனான இல்வாழ்க்கையிலிருந்து விலகினார். புனிதவதியாரை விட்டு நீங்க எண்ணியவராய் ‘பெருஞ்செல்வம் திரட்டி வருவேன்’ என்று கூறிக் கடல்வழிப் பயணத்தை மேற்கொண்டார்.

மறுமணம் புரிதல்:     

பாண்டிய நாட்டில் ஒரு கடற்கரைப் பட்டினத்தில் இறங்கி, அங்கே தன் வணிகத்தை வளம்படுத்தி, நல்லதொரு பெண்மணியை மணந்து கொண்டார். ஒரு பெண் மகவையும் பெற்றெடுத்தார். அக்குழந்தைக்குத் தெய்வத் தன்மை நிரம்பிய தன் முதல் மனைவியின் நினைவாக புனிதவதியார் என்று பெயரிட்டார்.

புனிதவதியார் பரமதத்தனைச் சந்தித்தல்:

பரமத்தனைச் சந்தித்த வணிகர்கள் சிலர் புனிதவதியாரிடம் ‘உன் கணவன் வேறொரு பெண்ணுடன் இனிதே இல்லறம் நடத்தி வருகின்றான்’ என்று கூற, அதைக்கேட்ட உறவினர்கள் ‘புனிதவதியாரை பரமதத்தனிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதே கடமையாகும்’ என்று கூறி அவர் இருந்த இடத்திற்குச் சென்றனர். புனிதவதியார் தம்மைச் சந்திக்க வருகிறார் என்பதைக் கேள்விப்பட்ட பரமதத்தன் ‘அவர்கள் இங்கே வருவதற்கு முன்பு நானே அங்கு சென்று அவர்களைச் சந்திப்பேன்’ என்று கூறி, புனிதவதியார் இருக்குமிடம் தேடித் தம் மனைவியுடனும் தன் பெண் குழந்தையுடனும் வந்து சேர்ந்தார். புனிதவதியாரின் கால்களில் குடும்பத்தோடு விழுந்து ‘உன் அருளால் வாழ்வேன்’ என்று  கூறி வணங்கினார். அவரின் இச்செயல் கண்டு அச்சமுற்றவராய் ஒதுங்கி நின்றார் புனிதவதியார். சுற்றத்தார் யாவரும் மலைத்து நிற்க, அவர்களிடம் பரமதத்தன் ‘இவர் மனிதப் பிறவியுடையவர் அல்லர். தெய்வம் ஆவார். அவர் தெய்வமானதை நான் கண்ட பின்னரே விலகி, வேறொரு வாழ்க்கையினைத் தேடிக்கொண்டேன். அவருடைய பொன்னடிகளை வணங்கினேன். அதுபோல நீங்களும் வணங்குங்கள்’ என்று கூறி மாங்கனியால் நேர்ந்த அதிசயத்தை விளக்கினார். உறவினர்களும் வியந்து புனிதவதியாரைப் போற்றினர்.


சிவனிடம் புனிதவதியார் வேண்டியது:

அதனைக் கண்ட புனிதவதியார் இவர் கொண்ட கொள்கை மேலானது. இனி இவருக்காகத் தாங்கி நின்ற இந்த அழகை விட்டொழிந்து நின் அடிகளைப் போற்றும் பேய் வடிவத்தை எனக்கு அருள வேண்டும்’ என்று சிவனிடம் வேண்டித் துதித்து நின்றார். புனிதவதியாரின் வேண்டுதலுக்கு இணங்கி, எலும்புக்கூடான உடலையே அவருடைய மேனியாக மாற்றி, மேல் உலகமும், மண் உலகமும் வணங்கத்தக்க பேயான சிவகண நாதரின் வடிவத்தைக் கொடுத்தார் சிவபெருமான். அப்போது மலர்மழை பொழிந்தது. தேவர்களும் முனிவர்களும் கலந்து மகிழ்ந்தனர். பூதகணங்கள் கூத்தாடின. சுற்றத்தார்கள் அவரைத் தொழுது அஞ்சி நீங்கிச் சென்றனர்.

பேய் வடிவப் பெருமை:

அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட பேய் வடிவத்தைக் கண்டவர் வியப்படைந்து அச்சம் கொண்டு அங்கிருந்து ஓடலாயினர். அதைக் கண்ட புனிதவதியார் சிவபெருமான் என்னை அறிவார். ஐயறிவுடைய மக்களுக்கு நான் எந்தக் கோலம் தாங்கினதாகக் காணப்பட்டாலும் எனக்கு ஆவது ஒன்றும் இல்லை’ என்று கூறித் தன் சிவத்தொண்டைத் தொடங்கினார்.

சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கையிலை மலையினை அடைந்து காலால் நடந்து செல்வதை விட்டுத் தன் தலையால் நடந்து சென்றார். ‘தலையால் நடந்து இம்மலை மீது எறி வரும் ஓர் எலும்புக் கூடு பெற்ற அன்புதான் என்னே’ என்று உமையம்மையார் வியந்து அவருக்கு அருள் செய்தார்.  அதற்குச் சிவபெருமான் ‘உமையே இவள் நம்மைப் பேணும் அம்மை ஆவார். அந்தப் பேய் வடிவத்தை அவர் விரும்பியே ஏற்றுக் கொண்டார்என்று கூறி காரைக்காலம்மையாரை ‘அம்மையே’ என்று அழைத்தார். அதைக் கேட்டு பக்தி மேலிட சிவபெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கினார் காரைக்காலம்மையார்.

சிவபெருமானிடம் பெற்ற வரங்கள்

அவரிடம் சிவபெருமான் ‘தாங்கள் வேண்டும் வரம் யாது?’ என்று வினவ, அப்பா! இனி நான் பிறவாதிருக்கும் வரம் வேண்டும். மீண்டும் பிறப்புண்டேல் உன்னை மறவாது இருக்க வேண்டும். அறவா!  நீ திருக்கூத்து ஆடும்போது உம் திருவடியின்கீழ் இருக்க வேண்டும்’ என்று வேண்டினார். சிவபெருமானும் ‘திருவாலங்காட்டில் நான் ஆடும் பெருங்கூத்தைக் கண்டு எப்போதும் ஆனந்தத்துடன் கூடி நம்மைப் பாடிக்கொண்டிருப்பாயாக’ என்று வரமளித்தார். வரம் பெற்ற அம்மையார் இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு திருவாலங்காட்டுக் கோயிலுள் புகுந்தார்.

பாடிய நூல்கள்

சிவபெருமானைத் துதித்து, அற்புதத் திருவந்தாதி, திருஇரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகம் போன்ற நூல்களைப் பாடினார்.


காரைக்காலம்மையார் புராணம் - பாடல்கள்

 1. மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில்              

 ஊனமில் சீர்ப் பெரு வணிகர் குடி துவன்றி  ஓங்கு பதி     

 கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக் 

 கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால்  

 

 2. வங்க மலி கடல் காரைக்காலின் கண் வாழ் வணிகர்   

 தங்கள் குலத் தலைவனார் தனதத்தனார் தவத்தால்      

 அங்கு அவர் பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து           

 பொங்கிய பேர் அழகு மிகப் புனிதவதியார் பிறந்தார்         

 

 3. வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளியபின் 

 அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடைப் பருவத்தே

 பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெறத்         

 தணிவில் பெரு மனக் காதல் ததும்ப வரும் மொழி பயின்றார்

 

 4. பல் பெரு நற்கிளை உவப்பப் பயில் பருவச் சிறப்பு எல்லாம்  

 செல்வ மிகு தந்தையார் திருப் பெருகும் செயல் புரிய      

 மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர் பால்          

 அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார்

 

 5. நல்லவென உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி

 மல்கு பெரு வனப்பு மீக் கூர வரு மாட்சியினால்  

 இல்லிகவாப் பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும் 

 தொல் குலத்து வணிகர் மகன் பேசுதற்குத் தொடங்குவார்         

 

 6. நீடிய சீர்க் கடல் நாகை நிதிபதி என்று உலகின் கண்      

 பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்குத்     

 தேடவரும் திருமரபில் சேயிழையை மகன் பேச

 மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார்   

 

 7. வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து           

 தந்தையாம் தனதத்தன் தனை நேர்ந்து நீ பயந்த   

 பைந் தொடியை நிதிபதி மைந்தன் பரம தத்தனுக்கு          

 முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார்  

 

 8. மற்றவனும் முறைமையினால் மணமிசைந்து செலவிடச்சென்று         

 உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்புப்         

 பெற்றனன் போல் உவந்து தனிப் பெரு மகட்குத் திருமலியும் 

 சுற்றம் உடன் களி கூர்ந்து வதுவை வினைத் தொழில் பூண்டான்        

 

 9. மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள்              

 அணைய வதுவைத் தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே  

 இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி       

 பணை முரசம் எழுந்து ஆர்ப்பக் காரைக்கால் பதி புகுந்தார்          

 

 10. அளி மிடை ஆர்த்த தன தத்தன் அணி மாடத்துள் புகுந்து      

 தெளிதரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்துத்

 தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ் தார்க் காளைக்குக்         

 களி மகிழ் சுற்றம் போற்றக் கலியாணம் செய்தார்கள்     

 

 11. மங்கலமா மண வினைகள் முடித்து இயல்பின் வைகு நாள்            

 தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தன தத்தன்              

 பொங்கொலி நீர் நாகையினில் போகாமே கணவன் உடன்          

 அங்கணமர்ந்து இனிதிருக்க அணி மாடம் மருங்கமைத்தான்            

 

 12. மகள் கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பில் தனம் கொடுத்து அதன்பின்           

 நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி தன் குல மகனும்            

 தகைப்பில் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி 

 மிகப் புரியும் கொள்கையினில் மேம் படுதல் மேவினான்          

 

 13.  ஆங்கவன் தன் இல்வாழ்க்கை அரும்துணையாய் அமர்கின்ற              

 பூங்குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடிக் கீழ்      

 ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிகப் பெருகப்       

 பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார்      

 

 14. நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும்

 செம்பொன்னும் நவ மணியும் செழுந் துகிலும் முதலான           

 தம் பரிவினால் அவர்க்குத் தகுதியின் வேண்டுவகொடுத்தும்              

 உம்பர் பிரான் திருவடிக் கீழ் உணர்வு மிக ஒழுகு நாள்     

 

 15. பாங்குடைய நெறியின் கண் பயில் பரம தத்தனுக்கு  

 மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப       

 ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே  

 ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான்     

 

 16. கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கைக் கொண்டு 

 மணம் மலியும் மலர்க் கூந்தல் மாதரார் வைத்து அதற்பின்     

 பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத் தொண்டர்      

 உணவின்மிகு வேட்கையினால் ஒருவர் மனையுள் புகுந்தார்              

 

 17. வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த் தொண்டர் நிலை கண்டு          

 நாதன் தன் அடியாரைப் பசி தீர்ப்பேன் என நண்ணிப்          

 பாதங்கள் விளக்க நீர் முன் அளித்துப் பரிகலம் வைத்து               

 ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார்

 

 18. கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட 

 வெறிமலரமேல் திரு அனையார் விடையவன் தன் அடியாரே             

 பெறல்அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும்            

 அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார் 

 

 19. இல்லாளன் வைக்க எனத்தம் பக்கல் முன் இருந்த     

 நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு         

 வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால்    

 அல்லல் தீர்ப்பவர் அடியார் தமை அமுது செய்வித்தார் 

 

 20. மூப்புறும் அத் தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கைத்

 தீப் பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத் தொண்டர்          

 வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்திப்     

 பூப்பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார்        

 

 21. மற்றவர் தாம் போயின பின் மனைப் பதி ஆகிய வணிகன்   

 உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்திப்        

 பொற்புற முன் நீர் ஆடிப் புகுந்து அடிசில் புரிந்து அயிலக்              

 கற்புடைய மடவாரும் கடப் பாட்டில் ஊட்டுவார்  

 

 22. இன்அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன்பின்            

 மன்னிய சீர்க் கணவன் தான் மனை இடை முன் வைப்பித்த    

 நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல்

 அன்ன மனையார் தாமும் கொடு வந்து கலத்து அளித்தார்        

 

 23. மனைவியார் தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி            

 தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன்       

 இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என           

 அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார்   

 

 24. அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு  அங்கு என்செய்வார்     

 மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான்   

 தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார்       

 கைம் மருங்கு வந்து இருந்தது அதிமதுரக் கனி ஒன்று  

 

 25. மற்றதனைக் கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில்  

 உற்ற சுவை அமுதினும் மேல் பட உளதாயிட இது தான்             

 முன் தரு மாங் கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிதால்       

 பெற்றதுவேறு எங்கு என்று பெய் வளையார் தமைக் கேட்டான்           

 

 26. அவ்வுரை கேட்டலும் மடவார் அருள்உடையார் அளித்து அருளும்       

 செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார்

 கை வரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமை               

 மெய் வழி அன்று என விளம்பல் விட மாட்டார் விதிர்ப்பு உறுவார்     

 

 27.  செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார்     

 மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி              

 எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு 

 மொய் தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார்    

 

 28.  ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான் 

 வாச மலர்த் திரு அனையார் தமை நோக்கி மற்று இது தான்    

 தேசுடைய சடைப் பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர்   

 ஆசில்கனி அவனருளால் அழைத்தளிப்பாய் என மொழிந்தான்             

 

 29. பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார் தமைப் பரவி  

 ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன    

 மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை 

 ஆங்கு அவன் கைக் கொடுதலுமே அதிசயித்து வாங்கினான்  

 

 30. வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான்  

 தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி       

 அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி நீங்கும்  

 துணிவுகொண்டு எவர்க்கும்சொல்லான் தொடர்வின்றிஒழுகு நாளில்       

 

 31. விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான்              

 படுதிரைப் பரவை மீது படர் கலம் கொண்டு போகி              

 நெடு நிதி கொண்வேன் என்ன நிரந்தபல் கிளைஞர் ஆகும்          

 வடுவில் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள்        

 

 32. கலஞ் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும்    

 புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி 

 சலம் தரு கடவுள் போற்றித் தலைமையாம் நாய்கன் தானும்

 நலம் தரு நாளில் ஏறி நளிர் திரைக் கடல் மேல் போனான்          

 

 33. கடல் மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயம் தன்னில்             

 அடை உறச் சென்று சேர்ந்து அங்கு அளவில் பல் வளங்கள் முற்றி   

 இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அக் கலத்தில் ஏறிப்   

 படர் புனல் கன்னி நாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான்        

 

 34. அப் பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும்        

 ஒப்பில் மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்து

 மெய்ப் புகழ் விளங்கும் அவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்ற         

 செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான்           

 

 35. பெறல் அரும் திருவினாளைப் பெரு மணம் புணர்ந்து முன்னை    

 அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம்    

 புறம் ஒரு வெளி உறாமல் பொதிந்த சிந்தனையின் ஓடு              

 முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில்    

 

 36. முருகலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும்        

 இரு நிதிக் கிழவன் எய்திய திருவின் மிக்குப்           

 பொருகடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால்            

 பெருகொளி விளக்குப் போல் ஓர் பெண்கொடி அரிதில் பெற்றான்        

 

 37. மடமகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித்தான் முன்பு              

 உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவி யாரைத்             

 தொடர் அற நினைந்து தெய்வத் தொழு குலம் என்றே கொண்டு          

 கடன் அமைத்தவர் தம் நாமம் காதல் செய் மகவை இட்டான் 

 

 38. இந்நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும்     

 கன்னி மா மதில் சூழ் மாடக் காரைக்கால் வணிகன் ஆன            

 தன் நிகர் கடந்த செல்வத் தனதத்தன் மகளார் தாமும்    

 மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக

 

 39. விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரம தத்தன்           

 வளர் புகழ்ப் பாண்டி நாட்டு ஓர் மா நகர் தன்னில் மன்னி              

 அளவில் மாநிதியம் ஆக்கி அமர்ந்தினிது இருந்தான் என்று              

 கிளர்ஒளி மணிக் கொம்புஅன்னார் கிளைஞர்தாம் கேட்டார் அன்றே           

 

 40. அம் மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும்          

 தம் உறு கிளைஞர்ப் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு         

 மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர்  

 கொம்மை வெம்முலையின் ஆளைகொண்டு போய்விடுவது என்றார்       

 

 41. மாமணிச் சிவிகை தன்னில் மட நடை மயில் அன்னாரைத்             

 தாமரைத் தவிசில் வைகும் தனித் திரு என்ன ஏற்றிக்    

 காமரு கழனி வீழ்த்துக் காதல் செய் சுற்றத்தாரும்             

 தே மொழியவரும் சூழச் சேண் இடைக் கழிந்து சென்றார்            

 

 42. சில பகல் கடந்து சென்று செம் தமிழ்த் திருநாடு எய்தி             

 மலர் புகழ்ப் பரம தத்தன் மா நகர் மருங்கு வந்து   

 குல முதல் மனைவியாரைக் கொண்டு வந்து அணைந்த தன்மை      

 தொலைவில் சீர்க் கணவனார்க்குச் சொல்லி முன் செல்ல விட்டார் 

 

 43. வந்தவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன் தானும்

 சிந்தையில் அச்சம் எய்திச் செழு மணம் பின்பு செய்த     

 பைந் தொடி தனையும் கொண்டு பயந்த பெண் மகவின் ஒடு     

 முந்துறச் செல்வேன் என்று மொய்குழல் அவர்பால்வந்தான்              

 

 44. தானும் அம் மனைவியோடும் தளிர்நடை மகவினோடும்               

 மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே    

 யான் உமது அருளால் வாழ்வேன் இவ் இளம் குழவி தானும்   

 பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான்    

 

 45. கணவன் தான் வணங்கக் கண்ட காமர் பூங்கொடியனாரும்

 அணைவுறும் சுற்றத்தார் பால் அச்ச மோடு ஒதுங்கி நிற்ப          

 உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி தன்னை         

 மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என் கொல் என்றார்         

 

 46. மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர்          

 நற் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு               

 பெற்ற இம் மகவு தன்னைப் பேர் இட்டேன் ஆதலாலே  

 பொற்பதம்பணிந்தேன் நீரும்போற்றுதல் செய்மின் என்றான்               

 

 47. என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல் என்று நின்றார்       

 மன்றலங் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளாக்        

 கொன்றவார் சடையினார் தம் குரை கழல் போற்றிச் சிந்தை             

 ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார்           


 48.  ஈங்குஇவன் குறித்த கொள்கை இதுஇனி இவனுக்கு ஆகத்              

 தாங்கியவனப்புநின்ற தசைப்பொதி கழித்து இங்குஉன் பால்               

 ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப்      

 பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார்        

 

 49.  ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே  

 மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்         

 ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக            

 வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார்         

 

 50. மலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம்   

 உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும்          

 குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற

 தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார்  

 

 51. உற்பவித்து எழுந்த ஞானத்துஒருமையின் உமைகோன் தன்னை           

 அற் புதத் திரு அந்தாதி அப்பொழுது அருளிச் செய்வார்  

 பொற்புடைச் செய்ய பாத புண்ட ரீகங்கள் போற்றும்         

 நற் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி         

 

 52.  ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடி 

 ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள் 

 காய்ந்தவர் இருந்த வெள்ளிக்கைலை மால்வரையை நண்ண              

 வாய்ந்த பேர் அருள் முன் கூற வழி படும் வழியால் வந்தார்     

 

 53. கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று ஓடுவார்கள்      

 கொண்டது ஓர் வேடத் தன்மை உள்ளவாறு கூறக் கேட்டே      

 அண்ட நாயகனாரென்னை அறிவரேல் அறியா வாய்மை            

 எண் திசை மக்களுக்கு யான் எவ்வுருவாய் என் என்பார்

 

 54. வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று            

 தொடை அவிழ் இதழி மாலைச் சூல பாணியனார் மேவும்          

 படர் ஒளிக் கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்குக் காலின்     

 நடையினைத் தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார்   

 

 55. தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி        

 மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்

 கலை இளம் திங்கள் கண்ணிக் கண் நுதல் ஒரு பாகத்துச்            

 சிலை நுதல் இமய வல்லி திருக் கண் நோக்குற்றது அன்றே    

 

 56. அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித் தாழ்ந்து       

 தம் பெருமானை நோக்கித் தலையினால் நடந்து இங்கு ஏறும்                

 எம் பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன            

 நம் பெரு மாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான்               

 

 57.  வரும் இவன்நம்மைப் பேணும் அம்மைகாண் உமையே மற்றிப்    

 பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை    

 பெருகுவந்து அணையநோக்கி அம்மையே என்னும் செம்மை             

 ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்         

 

 58. அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று       

 பங்கயச் செம்பொன் பாதம் பணீந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச்           

 சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால்             

 இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார்      

 

 59. இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்          

 பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்              

 மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி           

 அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்           

 

 60. கூடு மாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில் என்றும்       

 நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலம் காட்டில்    

 ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்          

 பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான்      

 

 61. அப் பரிசு அருளப் பெற்ற அம்மையும் செம்மை வேத

 மெய்ப்பொருள் ஆனார் தம்மை விடைகொண்டு வணங்கிப் போந்து               

 செப்பரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலம் காடாம்               

 நற் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே            

 

 62.  ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற            

 கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு           

 மூலம் காண்பரியார் தம்மை மூத்த நல் பதிகம் பாடி        

 ஞாலம் காதலித்துப் போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில்           

 

 63. மட்டவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும்      

 இட்ட மிகு பெருங் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி    

 எட்டி இலவம் மீகை என எடுத்துத் திருப் பதிகம்   

 கொட்ட முழவம் குழகன் ஆடும் எனப் பாடினார்   

 

 64. மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி          

 கொடுத்து அருளப் பெற்றாரைக் குலவிய தாண்டவத்தில் அவர்           

 எடுத்து அருளும் சேவடிக் கீழ் என்றும் இருக்கின்றாரை               

 அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவாயினது அம்மா     


காரைக்காலம்மையார் புராணம் - தளங்களின் இணைப்பு:

https://shaivam.org/thirumurai/twelveth-thirumurai/885/periya-puranam-thiruninra-charukkam-karaikkal-ammaiyar-puranam

http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக