வியாழன், 9 ஜூலை, 2020

மனுமுறை கண்ட வாசகம்

மனுமுறை கண்ட வாசகம்  

இராமலிங்க அடிகளார்


ஆசிரியர் குறிப்பு

இராமலிங்க அடிகளார் தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரத்திற்கு அருகே மருதூரில் பிறந்தவர். பெற்றோர் இராமையா பிள்ளைசின்னம்மாள். காலம் கி.பி.1823 – 1874. இவரை இறையருள் பெற்ற திருக்குழந்தை என்பர். இவரின் வழிபடு கடவுள் முருகன். வழிபடு குரு திருஞானசம்பந்தர். வழிபடு நூல் திருவாசகம். இளமையிலேயே ஓதாமல் உணர்வு பெற்றுக் கவி பாடும் ஆற்றல் பெற்றவர். இவரது முதல் நூல் சென்னைக் கந்தகோட்டத்து முருகன் மீது பாடியதெய்வமணி மாலைஎன்னும் நூலாகும். இவர் பாடிய பாடல்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டு திருவருட்பா எனப்பெயரிடப்பட்டுள்ளது. இவருடைய ஆன்மீக நெறி ஆன்மநேய ஒருமைப்பாடு எனப்படுகிறது.  இவருக்குத் திருவருட்பிரகாச வள்ளலார் என்று பெயரிட்டவர் தொழுவூர் வேலாயுத முதலியார் ஆவார்.

இயற்றிய உரைநடை நூல்கள்

  •  மனுமுறை கண்ட வாசகம்
  •  ஜீவ காருண்ய ஒழுக்கம்

பதிப்பித்த நூல்கள்

  •  ஒழிவில் ஒடுக்கம்
  •   தொண்டைமண்டல சதகம்
  •   சின்மய தீபிகை

நிறுவிய நிறுவனங்கள்

  •  சன்மார்க்க சங்கம்
  • ·சத்திய தருமசாலை
  • ·சத்திய ஞானசபை
  • ·சித்திவளாகம்

இவருடைய கொள்கை

1.   கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதியாக உள்ளார்.

2.   சாதி, மத, இன வேறுபாடு கூடாது.

3.   எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

4.சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.

5.பசித்தவர்களுக்குச் சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.

6.   புலால் உணவு உண்ணக்கூடாது.

 

மனுமுறை கண்ட வாசகம்

மனுமுறை கண்ட வாசகம் என்னும் உரைநடை நூல் கொல்லா நெறியை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. சென்னையில் இராமலிங்க அடிகளார் தங்கியிருந்தபோது சாத்திர விளக்கச் சங்கத்தார் வேண்டிக் கொள்ள, பெரிய புராணத்தில் உள்ள மனுநீதி கண்ட புராணத்தை முதல் நூலாகக் கொண்டு, மனுநீதிச் சோழன் பசுவிற்கு முறை செய்த வரலாற்றை மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலாக எழுதி அருளினார் என்பர். இந்நூல் 1854 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டதாகும்.

 

உரைநடையின் சுருக்கம்

மனுநீதியின் சோழ நாட்டு வளம்

காவிரி நதி ஓடுவதால் எந்த காலத்திலும் குறைவுபடாத நீர்வளமுடையது சோழநாடு. வாழை, பலா, மா, தென்னை, கமுகு, கரும்பு சோலைகள் அணிஅணியாகச் சூழ்ந்திருந்தன. அசோகு, சண்பகம் போன்ற மரங்களும், தாமரைக் குளங்களும் நிறைந்திருந்தன. ஓடைகள், பொய்கைகள், ஏரிகள், குளங்கள் என நீர்வளம் உடையதாக இருந்தது சோழநாடு. செந்நெல் பயிர்கள் நன்கு செழித்திருந்தன.

திவ்விய தேசங்கள்

சிதம்பரம், பஞ்சநாதம், மத்தியார்ச்சுனம் (திருவிடைமருதூர்), சம்புகேச்சுரம் (திருவானைக்கா) முதலான திவ்விய தேசங்களால் நிறைந்திருந்தது சோழநாடு.

நீர்நிலைகள்

தெய்வதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வசந்தஓடை, செங்குவளை ஓடை முதலான நீர்நிலைகள் இருந்தன.

அரண்மனைச் சிறப்பு

            தேர், யானை, குதிரை, சேனைகளுக்கான இடங்கள், ஆஸ்தான, விசித்திர, விநோத, நியாய, நிருத்த, கல்வி, கணக்கறி மண்டபங்கள் எனப் பல மண்டபங்கள் இருந்தன.  சிலம்பக்கூடம், ஆயுதசாலை, அமுதசாலை, அறச்சாலைகளும் இருந்தன.

நகரச்சிறப்பு

கடை வீதி முதல் வைதீகர் வீதி வரை பல வீதிகளை உடையதாகத் திருவாரூர் நகரம் அமைந்திருந்தது.

மனுநீதிச் சோழனின் ஆட்சிச் சிறப்பு

சூரிய குலத்தில் பிறந்த சோழ அரசர்களில் சிறந்தவராய், ஆயகலைகளில் வல்லவராய், கேள்வி ஞானம் உடையவராய், எல்லா உயிர்களுக்கும் இதமளிப்பவராய் விளங்கினார். வேதம் ஓதுதல், யாகம் செய்தல், பகைவரை அழித்தல் போன்ற ஆறு தொழில்களிலும் வல்லவராய் இருந்தார்.

செல்வக்குடிகள், மாறாத பொருள்கள், மதிநுட்ப மந்திரி, நட்பு, பகைவரால் அழிக்கமுடியாத கோட்டை, நீதி, இனிய சொல், விவேகம், பெரியோர் சகாயம், சுற்றந்தழுவல், கண்ணோட்டம் உடையவராய் உலகியற்கை அறிந்து நல்லொழுக்கத்துடன் நடப்பவராயிருந்தார். மேலும், குடிகளுக்குத் தாயாய், தந்தையாய், குருவாய், தெய்வமாய், தோழனாய், உயிராய் விளங்கினார். மக்களுக்குப் பொன்புதையலைப் போன்றும், மேகத்தைப் போன்றும், கற்பகம், காமதேனு, சிந்தாமணியின் குணங்களைக் கொண்டும் இந்திரனைப் போன்றிருந்தார்.

உலகெலாம் இவர் குடை நிழலில் இருந்ததால் மன்னர்களெல்லாம் திறை செலுத்தி வணங்கினர். விநோதமுள்ள உயிர்களெல்லாம் நட்புடன் வாழ்ந்திருந்தன. இயற்கைப் பேரிடர்கள் இல்லாமல் நல்ல காற்றும் மிதமான வெள்ளமும் பருவமழையும் தவறாமல் இருந்தன. மனுநீதிச் சோழனின் நாடு பொருள் பறிப்பாரும், கடின மனமுள்ளவர்களும், மது உண்போரும், அடிபடுவோரும், வறுமையுற்றோரும், துக்கப்படுவோரும், பொய் பேசுபவர்களும் இல்லாமல் மேன்மையே சிறந்து விளங்கியது.

சோழனின் மனவருத்தமும், மகனைப் பெறுதலும்

மனுநீதிச் சோழனுக்குக் குழந்தைப் பேறு இல்லாததால் மனம் வருந்தியிருந்தார். சிவனின் திருவருளைப் பெற வேண்டி, தன் மனைவியுடன் கமலாலயம் என்னும் புண்ணிய தீர்த்தத்தில் குளித்துக் கோயிலை வலம் செய்து மனமுருகி நாள்தோறும் இறைவனை வேண்டினார். இறையருளால் அரசமாதேவி கருவுற்றாள். அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் மிகுந்த பேரழகுடன் ஒரு மகன் பிறந்தான்.

மனுநீதியின் மகிழ்ச்சி

மகன் பிறந்த செய்தி கூறிய தோழியர்க்கு விலையுயர்ந்த ஆபரணங்களை அளித்தார். பிராமணர்களுக்கு விதைத்தானம், சொர்ணதானம், கஜதானம், பூதானம், கோதானம் முதலான தானங்களை அளித்தார். மகன் பிறந்த நாள் முதல் 12 ஆண்டுகளுக்கு மக்களுக்கு வரிவிலக்கும், அரசர்களுக்கு 7 ஆண்டுகளுக்குத் திறை விலக்கும், கைதிகளுக்கு விடுதலையும் அளித்தார். கருவூலத்தைத் திறந்து விட்டு நாட்டில் உள்ள யாவரும் ஏழுநாள் வரை வேண்டியதை எடுத்துக் கொள்ளச் சொன்னார்.  தியாகராஜப் பெருமானது திருவருளால் மகன் பிறந்ததால் அவனுக்கு வீதி விடங்கன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

வீதிவிடங்கனின் சிறப்பு

மனுநீதிச் சோழன் தன் மகனுக்கு ஐந்தாம் வயதில் கல்வி பயில்விக்கும் சடங்கினைச்  செய்தார். ஏழாம் வயதில் சகல தேசத்தலைவர்க்கும் தெரிவித்து நகரை அலங்கரித்து, அனைவரும் ஆசீர்வதிக்க இளவரசர்கள், அமைச்சர்கள், உறவினர் முதலானவர்கள் கண்டுகளிக்க, சுமலிங்கப் பெண்கள் மங்கலப் பாடல் பாட, மங்கல வாத்தியங்கள் முழங்க நல்ல நாளில் வேத முறைப்படி பூணூல் அணிவித்தார். சில நாட்களில் வீதிவிடங்கன் சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் முதலான கலைகளில் ஆசிரியனைப் பார்க்கிலும் எண்மடங்கு வல்லமையுள்ளவனானான். மேலும், யானையேற்றம், குதிரையேற்றம், வில்வித்தை, வாள்வித்தை முதலான வித்தைகளையும் குறைவறக் கற்றான்.

நல்ல அழகும், ஆண்சிங்கம் போல ஆண்மையும், மதயானை போல் நடையும், கொடைத்தன்மையும் உள்ளவனாக இருந்தான். சிவபக்தி, சீவகாருண்யம், பொறுமை, அன்பு, மனிதநேயம் முதலான நற்குணங்கள் பெற்று, இளம் பருத்திலேயே இளவரசு பட்டத்திற்குத் தகுதியுடையவனாக இருந்தான்.

கோயிலுக்குச் செல்ல அனுமதி கேட்டல்

ஒரு நாள் வீதிவிடங்கன் தியாகராஜப் பெருமானைத் தரிசித்து வர வேண்டும் என்று தந்தையின் அனுமதி கேட்டான். தந்தையும், “உனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு ஆண்டவனைத் தரிசித்து விட்டு வருகஎன்று கட்டளையிட்டான். வீதிவிடங்கனின் தாய்நான் உன் மணக்கோலத்தைக் கண்டு களிப்படையும் வரத்தைப் பெற்று வாஎன்று  வழியனுப்பினாள்.

கோயிலுக்குச் செல்லும் வழியில் கன்று இறத்தல்

     தியாகராஜப் பெருமானைத் தரிசனம் செய்ய வீதிவிடங்கன் செல்லும்போது, தேரில் உள்ள குதிரைகள் தேர்ப்பாகன் வசத்தைக் கடந்து, தெய்வத்தின் வசமாகி அதிவேகமாக அத்தேரை இழுத்துக் கொண்டு சென்றன. இத்தருணத்தில் தாய்ப்பசு பின்னேவர, முன்னே வந்த அழகுள்ள ஒரு பசுங்கன்று துள்ளிக் குதித்துக் கொண்டு, மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்தது. யாரும் எதிர்பாராத வகையில் வேகமாகச் செல்லும் தேர்ச்சக்கரத்தில் அகப்பட்டு உடல் முறிந்து குடல் சரிந்து உயிர்விட்டது.


வீதிவிடங்கன் வருத்தம்

பசுங்கன்று தன் தேர்ச்சக்கரத்தில் அகப்பட்டதைக் கண்ட வீதிவிடங்கன் மனம் பதறினான். கண்களில் நீர் பெருக, தியாகராஜப் பெருமானை வேண்டினான். இறைவனைத் தரிசிக்க கால் வருந்த நடந்து வராமல், செல்வச் செருக்கில் தேரிலேறி வந்ததால் இந்தத் தண்டனையோ? என் தந்தைக்குப் பெரும் பழியைச் சுமத்தினேனேஎனக் கலங்கினான்.

சான்றோர் கூறிய சமாதானம்

வீதிவிடங்கன் கதறி அழுததைக் கண்ட அமைச்சர் முதலானோர்கர்ம வினையால்  கன்று மடிந்தது. அதற்கு நீ பொறுப்பல்ல. ஏதேனும் பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம். தேரில் ஏறுங்கள் செல்லலாம்என்று கூறி அழைத்துச் சென்றனர்.

 தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை அடித்தல்

தன் கன்று இறந்து கிடப்பதைக் கண்ட தாய்ப்பசு மனம் கலங்கி, நம் துன்பத்தை மனுநீதிச் சோழனிடம் கூறச் சென்றது. அரசனின் வாயிலுக்கு வந்து அவர் கட்டியிருக்கும் ஆராய்ச்சி மணியை அடித்தது. மணியோசை கேட்ட அந்நகர மக்கள் ஒரு காலத்திலும் கேட்டறியாத ஆராய்ச்சி மணி ஒலிக்கிறதே என்ற அச்சத்துடன் அரண்மனைக்கு வந்தனர். ஆராய்ச்சி மணியின் ஓசை கேட்ட மனுநீதிச் சோழன் திகைப்படைந்தார். உடல் நடுங்கி உள்ளம் பதைத்து அதிவேகமாக அரண்மனை வாயிலுக்கு வந்தார். அப்போது வாயில் காவலன்மன்னா, ஒரு தாய்ப்பசுவானது தன் கொம்பினால் ஆராய்ச்சி மணியை அடித்து ஓசை உண்டாக்கியதுஎன்றுரைத்தான்.

மனுநீதியின் புலம்பல்

அமைச்சன் ஒருவன் தாய்ப்பசுவிற்கு நேர்ந்த நிலையை மன்னனிடம் விளக்கினார். அதைக் கேட்ட மன்னன்முன்னோர்கள் காலம் தொட்டு யாதொரு குறையுமில்லாமல் வாழ்ந்து வருகிறேன் என்று எண்ணிக் களித்தேனே. நம் பிள்ளை நாட்டைக் காப்பான் என்று எண்ணியிருந்தேனே. இப்படி ஒரு தீராப் பழியை சுமந்து வந்து நிற்கின்றானேஎன்று அரற்றினான். “சிவதரிசனம் செய்ய விரும்பியவன் தேரில் சென்றிருக்கக் கூடாதே. அவ்வாறு போவதானால் நாற்புறத்திலும் ஆட்களை விட்டு நடப்போர்களை விலக்கும்படிச் செய்து விட்டு மெல்ல தேரை விட வேண்டும். பயமறியாது செய்து விட்டானேஎன்று வருந்தினார்.

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ?
வழிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ?
தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ?
கலந்த சிநேகரை கலகம் செய்தேனோ?


மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ?
குடி வரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ?
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ?
தருமம் பாராது தண்டம் செய்தேனோ?


மண்ணோரம் பேசி வாழ்வளித்தேனோ?
உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ?
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ?
பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ?


ஆசை காட்டி மோசம் செய்தேனோ?
வரவு போக்கு ஒழிய வழி அடைத்தேனோ?
வேலையாட்களுக்குக் கூலி குறைத்தேனோ?
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ?


இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ?

கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ?

நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ?

கலங்கி ஒளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ?


கற்பிழந்தவளைக் களித்திருந்தேனோ?

காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ?

கணவன் வழிநிற்போரைக் கற்பழித்தேனோ?

கர்ப்பம் அழித்துக் களித்திருந்தேனோ?


குருவை வணங்கக் கூசி நின்றேனோ?

குருவின் காணிக்கைக் கொடுக்க மறந்தேனோ?

கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ?

பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ?


பஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனா?

கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ?

ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ?

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ?


அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ?

குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ?

வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழித்தேனோ?

பகை கொண்டு அயலோர் பயிரழித்தேனோ?


பொது மண்டபத்தைப் போயி இடித்தேனோ?

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ?

சிவனடியாரைச் சீறி வைத்தேனோ?

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ?


தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ?

தெய்வமிகழ்ந்து செருக்கடைந்தேனோ?

என்ன பாவம் செய்தேனோ?

இன்னதென்று அறியேனே?

என்று புலம்பி வருந்தினார்.

அமைச்சர்கள் சமாதானம்

மனுச்சக்கரவர்த்தியின் அருகிலிருந்த அமைச்சர்கள் மன்னனைத் தொழுது விதிவசத்தாலே வலிய வந்து மடித்த இளங்கன்றைக் குறித்து நீர் துன்பப்பட வேண்டாம். உம் மகன் உயிரினங்கள் எதிர்வந்து அகப்பட்டுக் கொள்ளுமோ என்று அஞ்சியஞ்சி நடக்கின்றவன். ஆகவே, வினை வசத்தால் நேரிட்ட இந்தக் கன்றின் கொலைக்குத் தக்க பரிகாரத்தைச் செய்வதே முறைஎன்று கூறினர்.

மன்னனின் கோபம்

அமைச்சர்கள் கூறியதைக் கேட்டு வெகுண்ட மன்னன் நீங்கள் கூறிய நீதியை தருமதேவதை ஒப்புக் கொள்வாளா? தன்னைக் கொடுத்தாவது தருமத்தைத் தேட வேண்டும் என்று எனக்கு அடிக்கடி நீங்கள் அறிவுறுத்திய சொல் இப்போது என்னவாயிற்று?” என்று சினம் கொண்டான்.

மன்னன் மகனைப் பலியிடத் துணிதல்

தாய்ப்பசு எவ்வாறு தன் கன்றை இழந்து தவிக்கின்றதோ அதுபோல நானும் என் பிள்ளையை இழந்து தவிப்பதே சரியான நீதிஎன்றுரைத்தார். மன்னனின் சொற்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர்கள் அறநூல்களில் உள்ள தர்ம நியாயங்களை எல்லாம் சுட்டிக் காட்டினர்.

கலாவல்லபன் உயிர் இழத்தல்

மன்னன் மனம் மாறாததைக் கண்ட அமைச்சர் கலாவல்லபன்உயிருக்கு உயிர் தான் பதில் என்றால் தன் உயிரை வீதிவிடங்கன் உயிருக்குப் பதிலாகத் தருகிறேன்என்று கூறி அதிவேகமாகத் தன் உடை வாளை உறையிலிருந்து உருவித் தன் கழுத்தை அரிந்து கொண்டு உயிரிழந்து விழுந்தான். அது கண்ட சில ஒற்றர்கள்  வேகமாகச் சென்று மனுநீதி சோழனிடத்தில் கலாவல்லபன் என்னும் அமைச்சன் இறந்த செய்தியைக் கூறினர். ஒற்றர் கூறியதைக் கேட்டு மன்னன் துடிதுடித்து மனம் கலங்கினார்.

வீதிவிடங்கன் அரண்மனையைத் திரும்புதல்

            நம் தந்தை சொல்கின்ற தீர்ப்பின்படி நடந்து கொள்வோம் என்று கருதி தேகம் மெலிந்து மேனி வேறுபட்டு முகம் சோர்ந்து தன் அரண்மனைக்குத் திரும்பினான் வீதிவிடங்கன். செய்தி கேட்ட அரசமாதேவிபாவியாகிய விதி என் பாக்கியத்தை அழித்ததே!” என்று புலம்பினாள். தாயைத் தேற்றி விட்டுத் தன் தந்தையிடம் சென்றான்.

வீதிவிடங்கனைத் தேர்க்காலில் இட்டுக் கொல்லுதல்

மன்னன் தன் காவலர்களை அழைத்து, “பசுங்கன்று இந்து கிடக்கின்ற வீதிக்குச் சென்று பசுங்கன்றை அப்புறப்படுத்திவிட்டு அவ்விடத்தில் வீதிவிடங்கனைக் கிடத்தி வையுங்கள்என்று ஆணையிட்டான். மன்னன் ஆணை கேட்ட வீரர்கள் மனம் கலங்கி நிற்க, வீதிவிடங்கன் தன் மாதா, பிதா, குரு முதலானவர்களை மனதில் நிறுத்தி வடக்கே தலையும், தெற்கே காலும்  வைத்துப் படுத்துக் கொண்டு இரண்டு கண்ளையும் மூடிக்கொண்டான். அப்போது மன்னன் இறைவனை வணங்கி விட்டுபசுங்கன்றை கொலை செய்தபடியால், தாயப்பசுவின் துயர் தீர்க்க, இதோ தேர்க்காலில் ஊர்ந்து இவனைக் கொல்கிறேன் என்று கூறி வீதிவிடங்கன் மேல் தேரை ஓட்டினான். உடல் சிதறி நசுக்குண்டு வீதிவிடங்கன் இறந்தான்.



தேவர்களின் வருத்தம்

நடந்ததைக் கண்ட தேவர்கள் அருமையாகப் பெற்ற மகன் என்றும் பாராமல் நீதியை நிலைநாட்டிய மன்னனே! “உனக்கு நலம் உண்டாவதாகஎன வாழ்த்தினர். இனி எக்காலத்தில் வீதிவிடங்கனைக் காண்போம் என்று வருந்தினர். மனுநீதிச் சோழன் தன் அமைச்சரின் பழிக்காகத் தன் உயிரைக் கொடுக்கத் துணிந்து தேரிலிருந்து கீழே இறங்கினார்.

தியாகராஜப் பெருமாள் தோற்றமும் அருளும்

அப்போது  ஆனைமுகக் கடவுளும், ஆறுமுகக்கடவுளும் இருபக்கங்களிலும் இசைந்து வர, உமாதேவியார் இடப்பக்கத்தில் இருக்க தியாகராஜப் பெருமான் எழுந்தருளி மனுநீதிச் சோழனுக்குத் தரிசனம் அளித்தார். “மனுநீதிச் சோழனே! உன் நீதியின் பெருமையை உலகோர் அறியும் பொருட்டு இவ்வாறு சோதித்தேன். இனி ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம்என்றார். அக்கணமே இறந்து கிடந்த பசுங்கன்றும், கலாவல்லப அமைச்சனும், வீதிவிடங்கனும் உயிர்பெற்று எழுந்தனர்.

மனுநீதிச் சோழனின் மகிழ்ச்சி

இறைவனின் அருள் பெற்ற மனுநீதிச் சோழன்உள்ளம் குளிர்ந்தேன். உயிர் தழைத்தேன். பசுங்கன்றும், அமைச்சனும் என் மைந்தனும் உயிர் பெற்று எழுந்து கொள்ள வரம் பெற்றேன். வாழ்வடைந்தேன். துயர் எல்லாம் நீங்கினேன்என்று இறைவனடியைப் போற்றினார்.


மனுமுறை கண்ட வாசகம் முற்றும்


நிழற்பட இணைப்பு - https://stockresearch52.wordpress.com/

 

 

 

 

 

 

 

 

 

 

 



1 கருத்து: