வியாழன், 16 ஜூலை, 2020

ஐம்பெருங்காப்பியங்கள்

ஐம்பெருங்காப்பியங்கள்

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐந்து நூல்களும் தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் எனப்போற்றப்பெறுகின்றன.

1.சிலப்பதிகாரம்

      இது தமிழில் தோன்றிய முதல் காப்பியம். சிலம்புஅதிகாரம் என்ற இரு பொருள்களைக் கொண்டது. சிலம்பு காரணமாக விளைந்த கதை என்பதால் சிலப்பதிகாரம் என்று கூறப்படுகிறது. ஆசிரியர் இளங்கோவடிகள். காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டு என்பர்.

நூல் எழுந்த வரலாறு

சேரன் செங்குட்டுவன் மலைவளம் காணச் சென்றபோது, அங்கே இருந்த மலைவாழ் மக்கள், “வேங்கை மரத்தடியில் ஒரு பெண் தங்கள் கண்முன்னே புட்பக விமானத்தில் ஏறி விண்ணகம் சென்றைதைக் கண்டோம்” என்று வியந்து கூறினர். உடனிருந்த சீத்தலைச் சாத்தனார் கண்ணகியின் வரலாற்றை இளங்கோவடிகளுக்கு விவரித்தார். “அடிகள் நீரே அருளுகஎனச் சாத்தனார் வேண்ட, இளங்கோவடிகள் கண்ணகியின் வரலாற்றைச் சிலப்பதிகாரமாகப் படைத்தார்.

நூல் அமைப்பு

சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்ற மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது. புகார்க்காண்டத்தில் 10 காதைகளும், மதுரைக்காண்டத்தில் 13 காதைகளும், வஞ்சிக்காண்டத்தில் 7 காதைகளும் இடம்பெற்றுள்ளன.

சிலம்பு கூறும் மூன்று உண்மைகள்

1.அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்

2.உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

3.ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

சிலம்பின் வேறு பெயர்கள்

          உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், புதுமைக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், புரட்சிக் காப்பியம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.

சிலம்பில் காணப்படும் புதுமைகள்

1.சாதாரண குடிமக்களாகிய கோவலன், கண்ணகியைக் கதைத் தலைவனாக, தலைவியாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.

2.கணிகையர் குலத்தைச் சார்ந்தவளாக இருப்பினும்  மாதவி ஒருவனுக்கு ஒருத்திஎன்று வாழ்ந்து நற்குடிப் பெண்ணாக உயர்ந்தமை.

3.மாதவி தன் மகள் மணிமேகலையைத் துறவு பூணச் செய்தமை.

4.பல்வேறு பாக்களைப் பயன்படுத்தியுள்ளமை.

5.ஆண்களுக்கு மட்டுமே உரியதாக இருந்த நடுகல் வழிபாடு பெண்ணிற்கும் உரியதாக்கிப்     பத்தினிக் கோட்டத்தை எழுப்பியமை.

எனப் பல புதுமைகளை உள்ளடக்கியது.

காப்பியக் கதை

கோவலன் கண்ணகியை மணந்து அவளுடன் சில ஆண்டுகள் இன்பமாக வாழ்ந்தான். பரத்தையர் குலத்தில் பிறந்த மாதவியின் மேல் காதல் கொண்டு கண்ணகியை விட்டு நீங்கி மாதவியுடன் வாழ்ந்து வந்தான். மாதவிக்கும் கோவலனுக்கும் மணிமேகலை என்ற குழந்தை பிறக்கின்றது. இந்திரவிழாவின்போது மாதவி பாடிய கானல்வரிப் பாடலின் பொருளைத் தவறாக உணர்ந்த கோவலன் அவளை விட்டுப் பிரிந்து கண்ணகியை அடைந்தான். மாதவியின் தாய் மூலமாகப் பொருள் முழுவதும் இழந்ததால் கோவலன் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான். அங்கே கண்ணகியின் கால் சிலம்பை விற்று வணிகம் செய்ய விரும்பினான். பொற்கொல்லன் சூழ்ச்சியினால் கள்வன் எனக் கருதப்பட்டு கொலை செய்யப்பட்டான். கண்ணகி தன் கணவன் கள்வன் அல்லன் என்பதைப் பாண்டியன் அவையில் வழக்காடி வெற்றி பெற்றாள். சினம் தணியாத கண்ணகி மதுரையை எரித்து விட்டு, சேர நாடு சென்று ஒரு வேங்கை மரத்தின் அடியில் தங்கினாள். வானோர்களுடன் கோவலன் வந்து அவளை அழைத்துக் கொண்டு சென்றான். இதை உணர்ந்த சேர மன்னன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் எழுப்பி விழா எடுக்கின்றான்.

 

2.மணிமேகலை

இது தமிழில் தோன்றிய இரண்டாவது பெருங்காப்பியம். சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி இந்நூலில் அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார். காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டு. மணிமேகலைத் துறவு என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது. பௌத்த சமயத்தை வலியுறுத்துகின்றது. சிலப்பதிகாரம் போன்று மணிமேகலையும் 30 காதைகளைப் பெற்றுள்ளது. இந்நூல் பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, சாதி ஒழிப்பு முதலிய சமுதாயச் சீர்த்திருத்தக் களஞ்சியமாக விளங்குகின்றது.

நூலின் சிறப்பு

1.கதைத் தலைவியின் பெயரால் பெயர் பெற்ற காப்பியம்

2.பரத்தையர் குலத்தைச் சார்ந்த மாதவிக்குப் பிறந்த மணிமேகலை காவியத் தலைவியாக உயர்வு பெறுகின்றாள்.

3.பல கிளைக்கதைகள் உடையது.

4.புத்த மதக் கருத்துகள் அழகிய தமிழில் தரப்பட்டுள்ளன.

காப்பியக் கதை

          கோவலன் கொலையுண்ட பின் மாதவி பெளத்த மதத்தில் சேர்ந்தாள். தன் மகள் மணிமேகலையையும் பௌத்த துறவியாக்கினாள். மணிமேகலையை வான் வழியே தூக்கி வந்த மணிமேகலாத் தெய்வம் அவளை மணிபல்லவத் தீவில் இறக்கி விடுகின்றது. அங்கு புத்தர் பீடத்தின் முன் தன் முற்பிறவியை உணர்கின்றாள். தீவத்திலகை என்னும் பெண்தெய்வத்தின் உதவியால் ஆபுத்திரனின் அமுதசுரபியைப் பெறுகின்றாள். அதன்மூலம் பசித்திருப்போரின் பசிப்பிணியை நீக்குகின்றாள். தன்னை விரும்பிய உதயகுமரனிடம் இருந்து தப்பிக்க காயசண்டிகை உருவிற்கு மாறினாள். தன் மனைவி காயசண்டிகை உருவில் இருப்பவள் மணிமேகலை என்று அறியாது, உதயகுமரனை வாளால் வெட்டி வீழ்த்தினான் காயசண்டிகையின் கணவன். இதனால் சிறை செல்கின்றாள் மணிமேகலை. சிறைச்சாலையை அறச்சாலை ஆக்கினாள். சமயக் கணக்கரிடம் வாதிட்டு புத்த மதத்தை நிலைநிறுத்தினாள்.

இரட்டைக் காப்பியங்கள்

சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

1.இவ்விரு காப்பியங்களும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

2.சாத்தனார் கூற இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். அதைப்போன்று இளங்கோ முன்னிலையில் மணிமேகலையை சாத்தனார் அரங்கேற்றினார்.

3.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகியோரின் வாழ்க்கையை இரு நூல்களும் விவரிக்கின்றன.

4.இரு காப்பியங்களும் 30 காதைகளைக் கொண்டுள்ளன.

5.இரு காப்பியங்களிலும் பதிகம் என்ற அமைப்பு உள்ளது.

6.இரு காப்பியங்களிலும் கடவுள் வாழ்த்து எனத் தனியாக ஒன்றில்லை.

7.பெண்ணின் பெருமையை இவ்விரு காப்பியங்களும் பேசுகின்றன.

8.இந்திர விழா குறித்து இரு நூல்களும் கூறுகின்றன.

9.தெய்வம் இரு காப்பியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

10.மாதவி தன் மகள் மணிமேகலையைக் கண்ணகியின் மகள் என்றே சிறப்பிக்கின்றாள்.

11.ஊழ்வினைக் கொள்கை இரு நூல்களிலும் காணப்படுகின்றன.

12.இரு நூல்களும் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டுள்ளன.

13.முற்பிறப்பு நம்பிக்கைகள் இரு நூல்களிலும் கூறப்பட்டுள்ளன.

இத்தகு காரணங்களால் சிலம்பும் மேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்பட்டாலும்,

1.சிலம்பு சமணம் சார்ந்தது, மணிமேகலை பௌத்தம் சார்ந்தது.

2.சிலம்பில் சமய ஒற்றுமை உண்டு. மணிமேகலையில் பௌத்த கருத்துகள் மட்டுமே வலியுறுத்தப்படுகின்றன.

3.சிலம்பில் தனித்தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றிருக்க, மணிமேகலையில் வடமொழிச் சொற்கள் காணப்படுகின்றன

என்பன போன்ற காரணங்களால் இரண்டும் இரட்டைக் காப்பியங்கள் அல்ல என்று கூறுவோரும் உண்டு.


3.சீவகசிந்தாமணி

இக்காப்பியத்தை இயற்றியவர் திருத்தக்க தேவர். சமண சமயத்தை வலியுறுத்துகிறது. காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு. 13 இலம்பகங்களையும், 3147 பாடல்களைக் கொண்டுள்ளது. இக்காப்பியத்திற்கு மணநூல் என்ற வேறு பெயர் உண்டு. வடமொழியில் உள்ள சத்திர சூடாமணி, சத்திய சிந்தாமணி, ஸ்ரீபுராணம் போன்ற நூல்களைத் தழுவி எழுதியது என்பர். விருத்தப்பாவால் ஆன முதற் காப்பியம் இது. சமண மதத்தை வலியுறுத்துகிறது.

காப்பியம் தோன்றிய கதை

     மதுரை திரமிள சங்கத்தைச் சேர்ந்த புலவர்கள் திருத்தக்கதேவரிடம்சமணத்துறவியர்க்குக் காமச்சுவை ததும்ப காப்பியம் எழுத இயலாது” என்றனர். இக்கூற்றை மறுக்க, தானே அத்தகைய நூலை இயற்ற வேண்டி தன் ஆசிரியர் அச்சணந்தியிடம் அனுமதி கேட்டார். தேவரின் புலமையைச் சோதித்தறிய, தொலைவில் ஓடிய “நரியைப் பற்றிப் பாடுக” என்றார். உடனே, திருத்தக்கதேவர் இளமை, யாக்கை, செல்வங்களின் நிலையாமைகளை விளக்கும் வகையில் நரிவிருத்தம் என்னும் காப்பியம் படைத்தார். இவரது திறமையை உணர்ந்த அச்சணந்தி முனிவர் காமச்சுவை உடைய காப்பியம் பாட அனுமதி கொடுத்தார். தேவரும் எட்டே நாளில் சீவக சிந்தாமணியைப் பாடி முடித்தார்.

காப்பியக் கதை

ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன் தன் மனைவி விசயை மீது கொண்ட நாட்டத்தால் அரசாட்சியை அமைச்சன் கட்டியங்காரனிடம் ஒப்படைத்தார். கட்டியங்காரன் தன் சூழ்ச்சியினால் நாட்டைக் கைப்பற்ற முனைவதை அறிந்த மன்னன், நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவி விசயையை, மயிற்பொறி ஒன்றில் ஏற்றி விட்டுக் கட்டியங்காரனுடன் போரிட்டு இறந்து விடுகிறான். மயிற்பொறியில் ஏறிச் சென்ற விசயை சுடுகாட்டில் இறங்கி சீவகனைப் பெற்றெடுக்கிறாள். சச்சந்தன் இறந்து விட்டான் என்பதைக் கேட்ட விசயை தவம் மேற்கொள்ளச் செல்கிறாள். இறந்த தன் மகனைப் புதைக்க வந்த கந்துக்கடன் என்பவன் சீவகனை எடுத்துச் செல்வதைக் கண்டு நிம்மதியடைகின்றாள். அச்சணந்தி என்பவரிடம் சீவகன் கல்வி கேள்வி பயில்கின்றான். காந்தருவதத்தை முதல் எட்டு பேரை மணம் புரிகின்றான். தன் நாட்டைக் கட்டியங்காரனிடம் இருந்து மீட்டு முடிசூடுகின்றான். உலகின் நிலையாமையை உணர்ந்து துறவுநிலை அடைந்து வீடுபேறு பெறுகிறான்.

4.வளையாபதி

இக்காப்பியத்தை இயற்றியவர் யார் என்பது தெரியவில்லை. சமண சமயத்தை வலியுறுத்துகிறது. காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு. இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை.  73 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதன் கதை வைசிக புராணத்தால் அறியப்படுகின்றது. நவகோடி நாராயணன் என்னும் வணிகன் வேறு குலத்தைச் சேர்ந்த பெண்ணை மணக்கிறான். அதனால் அவனது குலத்தோரால் நவகோடி நாராயணன் வெறுத்து ஒதுக்கப்படுகிறான். மனம் வெறுத்த அவன் வேறு நாட்டிற்குத் தனியாகப் போய் காலம் கழிக்கின்றான். அவனுக்குப் பிறந்த மகன் தன் தாய் மூலம் தந்தையைப் பற்றிய உண்மையை அறிந்து நவகோடி நாராயணனைக் கண்டுபிடித்துத் தன் தாயோடு சேர்த்து வைக்கிறான். இது வளையாபதியின் கதையாகக் கூறப்படுகிறது. இக்கதையில் இளமை, இன்பம், பொருள் முதலானவை நிலையில்லை என்ற கருத்துக்கள் கூறப்படுகின்றன.

5.குண்டலகேசி

இக்காப்பியத்தை இயற்றியவர் நாதகுத்தனார். காலம் கி.பி.8ஆம் நூற்றாண்டு. 19 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பௌத்த சமயத்தைப் பாடுகின்றது. பத்திரை என்னும் வணிக்குலப் பெண் காளன் என்னும் கள்வனை மணம் புரிந்து கொள்ள விரும்பினாள். எனவே, அரசனால் காவலில் வைக்கப்பட்டிருந்த கள்வனைத் தன் தந்தையின் செல்வாக்கால் மீட்டு மணம் புரிந்து கொள்கிறாள். ஒருநாள் பத்திரை சினம் கொண்டிருந்த வேளையில் கணவனைக் கள்வன் தானே  என்று கூறி விடுகிறாள். வெகுண்ட காளன் பத்திரையை வஞ்சமாகக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறான். பத்திரையை வஞ்சகமாக மலை உச்சிக்கு அழைத்துச் செல்கின்றான். மலை உச்சியில் இருந்து பத்திரையைத் தள்ளிவிடக் காளன் முயற்சிக்கிறான். அவனது சூழ்ச்சியை அறிந்து கொண்ட பத்திரை “தற்கொல்லியை முற்கொல்” என்னும் முடிவுக்கு வந்துசாகும் முன் கணவனை மும்முறை வலம் வரவேண்டும்” என்று கூறி, கணவனை வலம் வருவது போல் நடித்து மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொன்று விடுகிறாள். பின்னர், வாழ்வை வெறுத்து  துறவு கொண்டு புத்த மதம் சார்ந்து சமயவாதம் புரிந்து பிற சமயத்தவரை வெல்கிறாள். 

 

 

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக