செவ்வாய், 15 டிசம்பர், 2020

புதுக்கவிதை - ஒரு கடிதம் அனாதையாகிவிட்டது

 

ஒரு கடிதம் அனாதையாகிவிட்டது

 கவிஞர் மு.மேத்தா

என் முதல் காதல் கடிதம்

முகவரி

சரியாக எழுதப்படாத

ஒரு கடிதம்

எங்கெங்கோ சென்று

முட்டி மோதி அலைந்துவிட்டு

என்னிடமே திரும்பி விட்டது.

ஒரு கடிதம் அனாதையாகிவிட்டது!

சேரும் முகவரி சரியில்லை

அனுப்பிய முகவரி அதில் இல்லை

பற்பல ஊர்களின்

முத்திரை பதிந்தது !

பற்பல தெருக்களில்

விசாரணை நடந்தது!

பற்பல தினங்கள்

பறந்து கடந்தது!

பிறந்த இடத்தின்

பெயரே இல்லை!

புகுந்த இடமோ

புரியவில்லை!

அந்தக் கடிதத்தை

அஞ்சல் நிலையங்கள்

ஆராய்கள் செய்தன!

ஒட்டியிருந்த

உறையின் உள்ளே

இருந்த தாளில்

எழுதியிருந்தது இப்படி!

“ஒருவாரத்திற்குள்

உங்கள் பதில் வரவேண்டும்

இல்லாவிட்டால்

உயிர்ப் பறவை சிறகடிக்கும்

கடைசி முத்தமிட என்

கல்லறைக்கு வரலாம்”.

இங்குக் கடிதம் மட்டுமல்ல…

என் காதலும் அனாதையாகி விட்டது!

கவிதையின் விளக்கம்

ஒரு செய்தியை அதிவிரைவாகப் பரிமாற்றம் செய்து கொள்ள இன்றைய தொழில்நுட்பங்கள் உதவி செய்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியை எட்டாத அக்காலச் சூழலில் செய்தி பரிமாற்றக் கருவியாகக் கடிதங்கள் செயல்பட்டன. அந்தக் கடிதங்கள் உரியவரிடம் சேர குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் தேவைப்படும். சேர வேண்டிய முகவரியும், அனுப்புபவரின் முகவரியும் தெளிவாக எழுதப்படவில்லையெனில் அக்கடிதம் உரியவரிடம் சேராமல் அஞ்சல் நிலையங்களையே சுற்றிச்சுற்றி வரும். சில வேளைகளில் எழுதியவருக்கே போய்ச் சேர்வதும் உண்டு. இச்சூழலை “ஒரு கடிதம் அனாதையாகிவிட்டது” என்ற கவிதையில் படைத்துக் காட்டுகின்றார் கவிஞர்.

சுற்றித் திரிந்த கடிதம்

காதல் கொண்ட  ஒரு பெண், தன் காதலனுக்குத் தன் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கடிதம் எழுதுகின்றாள். அவசரத்தில் முகவரியைச் சரியாக எழுதவில்லை. தன் முகவரியையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை. கடிதத்தை அப்படியே கொண்டு போய் அஞ்சல் நிலையத்தில் சேர்த்து விட்டாள்.

முகவரி சரியாக எழுதப்படாததால், அக்கடிதம் எங்கெங்கோ சென்றது. பல ஊர்களுக்குப் பயணப்பட்டது. பல அஞ்சல் நிலையங்களின் முத்திரையை வாங்கிக்கொண்டது. தெருக்கள் தோறும் அக்கடிதம் குறித்து விசாரணை நடந்தது. நாட்கள் பல கடந்து சென்றன. யார் எழுதியது என்பது தெரியவில்லை. யாருக்கு எழுதியது என்பதும் புரியவில்லை. அஞ்சல் நிலையங்கள் அக்கடித்தை ஆராய்ச்சி செய்து தோற்றன. இறுதியாக, அக்கடிதம் அந்தக் காதலியிடமே வந்து சேர்ந்தது.

கடிதத்தோடு காதலும் அனாதையாகிவிட்டது

கடிதத்தின் உள்ளே ஒருவாரத்திற்குள் உங்கள் பதில் வரவேண்டும். இல்லாவிட்டால்  உயிர்ப் பறவை சிறகடிக்கும்.  கடைசி முத்தமிட என் கல்லறைக்கு வரலாம்” என்று எழுதியிருந்தது. தான் அனுப்பிய கடிதம் உரியவனிடம் சேராமல் தனக்கே வந்து சேர்ந்ததை எண்ணிக் கலங்கியவளாய், “இங்குக் கடிதம் மட்டுமல்ல, என் காதலும் அனாதையாகிவிட்டது” என்று வருத்தம் கொள்கின்றாள்.

கருத்து

ஒரு செய்தி முறையாக, மிகக் கவனமாகப் பரிமாற்றம் செய்யப்படவில்லையெனில் வாழ்க்கை பல நேரங்களில் கேள்விக்குறியாகி விடுகின்றது என்பதை இக்கவிதையின்வழி எடுத்துரைக்கின்றார் ஆசிரியர். கவிஞர் தம் முதல் காதலைக் கூறுவதாகவும் இக்கவிதையைப் புரிந்து கொள்ளலாம்.

 

4 கருத்துகள்: