செவ்வாய், 15 டிசம்பர், 2020

புதுக்கவிதை - ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

 

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

கவிஞர் இன்குலாப்

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

பறவைகளோடு எல்லை கடப்பேன்

பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்

எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்

நீளும் கைகளில் தோழமை தொடரும்

நீளாத கையிலும் நெஞ்சம் படரும்

எனக்கு வேண்டும் உலகம் ஓர்கடலாய்

உலகுக்கு வேண்டும் நானும் ஓர்துளியாய்

கூவும் குயிலும் கரையும் காகமும்

விரியும் எனது கைகளில் டையும்

போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்

பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்

எந்த மூலையில் விசும்பல் என்றாலும்

என்செவிகளிலே எதிரொலி கேட்கும்

கூண்டில் மோதும் சிறகுகளோடு

எனது சிறகிலும் குருதியின் கோடு!

சமயம் கடந்த மானுடம் கூடும்

சுவரில்லாத சமவெளிதோறும்

குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்

மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்.

கவிதையின் விளக்கம்

இயற்கையோடு இணைந்து வாழ்வதும், பிற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதும், துன்பப்படும் உயிர்களைக் காப்பதும், சாதி, மதம், இனம் என்ற பேதமைகளை நீக்கி ஒன்றுபட்டு வாழ்வதும், சமத்துவ உலகைப் படைப்பதுமே மனிதம் ஆகும் என்ற கருத்தை இக்கவிதையின் வழி எடுத்துரைக்கின்றார் கவிஞர். ஆகையால் தன்னைப் பறவையாக, மரமாக, கடலாக உருவகப்படுத்திக் கொள்கின்றார்.

புல்லைப் பெயர் சொல்லி அழைப்பேன்

          பரந்துபட்ட இவ்வுலகத்தில் உள்ள உயிரினங்கள் யாவும் ஏதோ ஒரு நோக்கத்தை நிறைவேற்றவே படைக்கப்பட்டிருக்கின்றன. புல் உயிரினம், அளவில் சிறியது எனினும், புல் உள்ள இடமே உயிரினங்கள் வாழத் தகுதியுள்ள இடமாகும். ஆகவே, மனிதர்களை எவ்வாறு பெயர் சொல்லி அழைக்கின்றேனோ அதுபோல, உலகம் இயங்கக் காரணமாக இருகு்கும் ஒவ்வொரு புல்லையும் நான் பெயர் சொல்லி அழைத்து மகிழ்வேன்.

பறவைகளோடு எல்லை கடப்பேன்

மனம் விரும்பிய திசையெல்லாம் பறந்து, திரிந்து, எல்லைகளைக் கடந்து, தம் வாழ்வின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் இயல்புடையவை பறவைகள். அப்பறவைகள் போன்று மனிதர்களை இனம் பிரிக்கும் சாதி, இனம், மதம், மொழி என்ற எல்லைகளைக் கடந்து, மனித குலத்திற்குப் பயனுள்ள மனிதனாக வாழ்ந்து என் படைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற விரும்புகின்றேன்.

கல்லுக்கும் மண்ணுக்கும் பெயரிடுவேன்

          கற்களும் மணல்பரப்புகளும் இவ்வுலகம் நிற்காமல் இயங்கத் துணை புரிகின்றன. அவற்றை மகிழ்வுடன் காத்து அக்கல்லுக்கும் மண்ணுக்கும் நான் விரும்பிய பெயர் சூட்டி மகிழ்வேன்.

தோழமை கொள்வேன்

இவ்வுலகில் மனித உயிரினம் தவிர வேறு எந்த உயிரினங்களும் வேற்றுமை கொண்டு வாழ்வதில்லை. அவற்றைப்போல நானும் அனைத்து மக்களிடமும் வேற்றுமை பாராது நட்பு கொள்ள விரும்புகின்றேன். தோழமையோடு நீளுகின்ற என் கரங்களை ஏற்றுக் கொள்பவர்களிடம் அன்பு பாராட்டுவேன். என்னை விரும்பாதவர்களிடம் என் பாசத்தையும், பரிவையும் பகிர்ந்து கொள்வேன்.

கடலில் நான் ஒரு துளியாவேன்

கடல் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும் இயல்புடையது. அது எண்ணற்ற உயிரினங்களின் புகலிடமாக விளங்குகின்றது. தன்னிடத்து வரும் நன்மையோ, தீமையோ அனைத்தையும் தனக்குள் அடக்கும் வல்லமை கொண்டது. ஆகையால், இந்த உலகமே எனக்குக் கடலாக மாற வேண்டும். உலகுக்கு நன்மை பயக்கும் செயல்களைச் செய்து அந்தக் கடலில் நானும் ஒரு துளியாக இணைய வேண்டும்.

மரமாவேன்

உயிரினங்கள் வாழவும், அவற்றைப் பசியாற்றவும் வல்லவை மரங்கள். கூவுகின்ற குயிலும், கரைககின்ற காகமும் வேற்றுமை பாராது எவ்வாறு ஒரே மரத்தில் இளைப்பாறுகின்றனவோ, அதுபோல மனிதர்களிடத்து எவ்வித வேற்றுமையும் பாராது, நானும் விருப்பு வெறுப்பின்றி செயல்படவே விரும்புகின்றேன் .

சமத்துவப்புனல்

போதி மரத்தினடியில் ஞானம் பெற்ற புத்தனும், சிலுவையின் நிழலில் இளைப்பாறும் கிறித்துவனும், பிறையின் ஒளியில் வாழ்கின்ற இசுலாமியனும் சமத்துவம் என்ற கடலில் கரைந்து ஒன்றாக வேண்டும்.

எவ்வுயிரும் தம்முயிரே

எவ்வுயுிரையும் தம் உயிர்போல் எண்ணுபவனே இந்த உலகில் வாழத் தகுதியுள்ளவன் ஆவான். எங்கு மனிதர்கள் துன்பப்படுகின்றனரோ, எங்கு மனிதர்கள் வாழ முடியாமல் தத்தளிக்கின்றனரோ, அங்கெல்லாம் எம் உதவிக்கரங்கள் நீள வேண்டும்.

கூண்டில் அடைப்பட்ட பறவைகள் கூண்டைவிட்டு வெளியேற முயற்சிக்கும்போது சிறகுகள் முறிந்து குருதி வழிய துன்பப்படும். ஆனால் கூண்டை உடைத்து வெளியே வந்துவிட்டால், அந்த வலிகள் யாவும் நீங்கிச் சுதந்திரக் காற்றை மகிழ்வோடு சுவாசிக்கும்.  அதுபோல, மனிதனாகப் பிறந்த யாவரும் தனக்குத் துன்பம் விளைவிக்கின்ற சூழ்நிலைகளில் இருந்து வெளியேற முயற்சிக்கும்போது காயங்கள் ஏற்படினும், வெற்றியுடன் வாழலாம் என்ற தத்துவத்தை அப் பறவைகளிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அதனால் எனது சிறகிலும் குருதியின் கோடு படிந்திருக்கின்றது.

சமயம் கடந்த மானுடம்

புற்களைப்போல, பறவைகள்போல, மரங்களைப்போல, கடலைப்போல வாழ்ந்து காட்டுவேன். சமத்துவ உலகைப் படைப்பேன். கோவில், தேவாலயம், மசூதி என்ற சுவர்கள் இல்லாத சமவெளிகளில், மதத்தை, இனத்தைக் குறிக்கின்ற அடையாளங்கள் ஏதும் இல்லாத முகங்களில் விழிப்பேன். அப்போது மனிதம் என்றொரு பாடலை இசைத்து மகிழ்வேன் என்று கூறுகின்றார் கவிஞர். இக்கவிதையின் மூலமாக, சமத்துவ உலகைக் காண விரும்பிய கவிஞரின் கனவை அறியமுடிகின்றது.

 

 

 

8 கருத்துகள்:

  1. இந்துமதி.தே
    B.com general,
    மிகவும் நன்றி அம்மா இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    பதிலளிநீக்கு