அம்பா பாடல்
அம்பா பாடல் என்பது நாட்டுப்புறத்
தொழிற்பாடல்களுள் ஒன்று. இது மீனவ சமுதாயத்தினருக்குரியது. இயற்கையின் பேராற்றல் மிக்க
சக்திகளுள் ஒன்றாகிய கடலில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, மீன் பிடிக்கும் தொழிலில்
ஈடுபடுகின்ற மீனவர்கள், கடலுக்குச் சென்றது முதல் கரைக்குத் திரும்பும் வரை தமது குடும்பத்தினரையும்,
உறவினரையும் எண்ணி மனம் கலங்குவர். அதனால், இயற்கைச் சீற்றங்களாலும், வலிமை பொருந்திய
நீர் விலங்குகளாலும் எவ்வித துன்பங்களும் நேரக்கூடாது என்று கடவுளை வணங்கி, தங்கள்
மனச்சோர்வுகளைப் போக்கிக்கொள்வதற்காக, கடலில் தோணிகளைச் செலுத்தும்போது பாடல்கள் பாடிச்செல்வர்.
இப்பாடல்கள்,
மீனவப்பாடல், அம்பா பாடல், கப்பற்பாடல், தோணிப்பாடல், ஓடப்பாடல், ஏலேலோப் பாடல் என்ற
பெயர்களில் வழங்கப்படுகின்றது. இவ்வகையான பாடல்களைப் பாடும்போது ஐலசா, ஏலேலோ என்ற சொற்களை
இசைக்காகப் பயன்படுத்துகின்றனர்.
அம்பா பாடல் – பெயர்க்காரணம்
· அம்பா என்ற சொல்லுக்குத் தாய், பார்வதி, பரதவர் பாடல் எனப் பல விளக்கங்கள்
கூறப்படுகின்றன.
· ‘அம்பா’ என்பதில் ‘அம்’ என்பதற்கு
‘நீர்’ என்று பொருள். ஆதலால், அம்பாபாடல் என்பதற்கு ‘நீர்
மேல் பாடும் பாட்டு’ என்று பொருளுரைக்கின்றனர் சான்றோர்.
· அம்பா என்பது அழகிய பாடல் (அம் – அழகிய, பா- பாடல்) என்றும் பொருள் உண்டு.
· அம்பி என்றால் ஓடம், தெப்பம், மரக்கலம், தோணி என்ற பொருள்கள் உண்டு. அம்பி
குறித்துப் பாடப்படும் பாடல் ஆகையால் அம்பிப்பாடல் என்ற சொல் உருவாகி, நாளடைவில் அச்சொல்
அம்பா பாடல் என்று மாறியிருக்கலாம் என்கின்றார் இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர் திரு.புஷ்பராஜன்.
· அம்பாயம் என்ற சொல் உழைப்பினால் உண்டாகும் வலியைக் குறிக்கும். எனவே, உடல்
உழைப்பின்போது பாடப்பட்டப் பாடல் அம்பாயப்பாடல் என்று அழைக்கப்பட்டு, பின்னர் அம்பா
பாடல் என மாறியிருக்கலாம் என்றும் கூறுவர்.
· கடல் தெய்வத்தைக் கன்னிமா என்று அழைப்பர் மீனவர். கன்னிமா என்றால் அம்பாள்
என்று பொருள் உண்டு. கன்னிமாவை வாழ்த்திப் பாடும் அம்பாள் பாடல்கள், பிற்காலத்தில்
அம்பா பாடல் என்றும் வழங்கியிருக்கலாம் என்று திரு நா.வானமாமலை குறிப்பிடுகின்றார்.
அம்பா பாடல் – வகைகள்
· வேலையின் தன்மை மற்றும் கால அளவு ஆகியவற்றிற்கு ஏற்ப, அம்பா பாடலை ஒற்றை
அம்பா, இரட்டை அம்பா என்று வகைப்படுத்துகின்றனர்.
·
அமெரிக்க நாட்டார் வழக்காற்றியலறிஞர்,
1. குறைந்த இழுப்புப்பாடல் – பாய் மரக் குறுக்குக் கட்டைகளை இழுத்துக் கட்டுதல்,
பாயை மேலே ஏற்றுதல் போன்ற பணிகளில் பாடப்படுவது.
2. நீண்ட இழுப்புப்பாடல் – நங்கூரத்தை இழுத்து நிறுத்துதல், உச்சி பாய் மரத்தை
நிறுத்துதல், தண்ணீர் பம்புகள் அடித்து இயக்குதல் போன்ற கடுமையான பணிகளில் பாடப்படுவது
என்று இருவகைப்படுத்துகின்றார்.
அம்பா பாடல்
விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா
விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா
அடிக்கும் அலையே நம்தோழன் – ஐலசா
அருமை மேகம் நமது குடை- ஐலசா
பாயும் புயல் நம் ஊஞ்சல் - ஐலசா
பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா
காயும் ரவிச்சுடர்கூரை - ஐலசா
கட்டு மரம் வாழும் வீடு - ஐலசா
பின்னல் வலை அரிச்சுவடி - ஐலசா
பிடிக்கும் மீன்கள் நம் பொருட்கள் – ஐலசா
மின்னல் இடி காணும் கூத்து – ஐலசா
வெண்மணலே பஞ்சுமெத்தை - ஐலசா
முழுநிலாதான் கண்ணாடி - ஐலசா
மூச்சடக்கி நீந்தல் யோகம் - ஐலசா
தொழும் தலைவன் பெருவானம்- ஐலசா
தொண்டு தொழிலாளர் நாங்கள்- ஐலசா
ஒத்துமை கொண்டாடணும்-
ஐலசா
உரிமையை உயர்த்திடணும்- ஐலசா
பாடல் விளக்கம்
மீனவர்களின் வாழ்க்கையோடு பின்னிப்
பிணைந்திருப்பது கடல். அதுவே அவர்களின் வாழ்வாதாரம். கடல்மேல் தாங்கள் கொள்ளும் வழிப்பயணத்தின்
சிக்கல்களை இப்பாடல்வழி எடுத்துரைக்கின்றனர் மீனவர்கள்.
1.விடிவெள்ளி என்று அழைக்கப்படும் வெள்ளி நட்சத்திரமே, பகல், இரவு என்று பாராமல் நடுக்கடலில்
மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு வெளிச்சம் தரும் விளக்காக, திசை காட்டும்
வழிகாட்டியாக விளங்குகின்றது.
2.வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளையும், இயற்கையின் பல அதிசயங்களையும் கற்றுத் தருவதால்
பரந்து விரிந்திருக்கும் கடல் மீனவர்களின் பள்ளிக்கூடம் ஆகின்றது.
3.கடல் அலைகளின் வேகத்தைப் பொறுத்தே அவர்களின் தொழில் நடைபெறும் என்பதால்,
அலைகளைத் தங்கள் தோழனாகப் பாவிக்கின்றனர்.
4.மீன்பிடிக்கும்போது எங்கு திரும்பினாலும் கடல்நீர் மட்டுமே தென்படும் சூழலில்,
அவர்களைப் பாதுகாக்கும் குடையாக மேகங்கள் திகழ்கின்றன.
5.புயல் காற்று அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி, ஊசலாட வைக்கும்
ஊஞ்சலாக அமைகின்றது.
6. உப்பு நீரால் காய்ந்து போன அவர்களின் உடம்பிற்குப் பனி மூட்டங்களே
போர்வையாகின்றன.
7.வெப்பம் வீசும் சூரியனின் சுடர்களே அவர்களின் கூரையாகின்றன.
8.அவர்களின் வாழ்நாட்கள் வீட்டில் இருப்பதைவிட கட்டுமரத்தில் இருப்பதுதான்
அதிகம். ஆதலால் கட்டுமரமே அவர்களின் வீடாக இருக்கின்றன.
9.வலை வீசி மீன் படிப்பது அவ்வளவு எளிதன்று. வலையை எப்படி வீசுவது, எவ்வாறு
கையாள்வது, மீன்கள் சிக்கிக் கொண்டால் அவற்றை எவ்வாறு வலையோடு இழுப்பது என்பதைக் கற்றுக்
கொண்டு, அவற்றில் நன்கு பயிற்சி எடுத்தவர்களே கடலுக்குச் செல்வர். ஆகையால் பின்னிய
வலைகள் மீன் பிடிக்கும் தொழிலை அறிந்து
கொள்ள உதவும் அரிச்சுவடியாக விளங்குகின்றன.
10.வலைகளில் விழுகின்ற மீன்கள் அவர்களின் உடைமை. அவற்றைக் கொண்டே
அவர்களின் வாழ்க்கையைப் பெருக்கிக்கொள்ள முடியும்.
11.நடுக்கலில் பயணிக்கும்போது, மின்னுகின்ற மின்னல்களும், பெரும் சத்தத்துடன்
இடிக்கின்ற இடியும் அவர்கள் காணுகின்ற கூத்துகளாக அமைகின்றன.
12.மீனவர்கள் கடல் மண்ணைத் தெய்வமாக வணங்குவர். தாய் மடியில் படுத்துறங்குவதுபோல்
மகிழ்ச்சி கொள்வர். அதனால், கடற்கரையின் வெண் மணல்கள் அவர்களுக்குப் பஞ்சு மெத்தையாகக்
காட்சியளிக்கின்றது.
13.மீன் பிடிக்கும் தொழிலுக்கு நிலவொளி மிக்க உறுதுணையாக இருக்கும். அவர்களின்
வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்ற கண்ணாடியாக நிலவு காட்சியளிக்கின்றது.
14.படகு கவிழ்ந்தாலோ, திசை மாறிச் சென்றாலோ மூச்சடக்கி நீந்தினால்
மட்டுமே உயிர் பிழைக்க முடியும். அதை அவர்கள் ஒரு தவமாகவே எண்ணிப் பயிற்சி எடுத்துக்
கொள்வர்.
15.தெளிந்த வானமே அவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரம். ஆகவே, வானத்தைத் தங்கள்
தலைவனாகத் தொழுகின்றனர்.
16.வானம் இருக்கும்வரை அதன் தொழிலாளர்களாகத் தாங்கள் செயல்படுவோம்
என்பது மீனவர்களின் நம்பிக்கை.
17.தங்கள் உயிரைத் துச்சமாக மதித்துத் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அனுதினமும்
கடலில் சாகசங்களைச் செய்து வாழும் எங்களை பிற மனிதர்களை மதிப்பது போல்மதிக்க வேண்டும்.
எங்களோடு ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எங்களுக்கான உரிமைகளைத் தரவேண்டும் என்று பாடுகின்றனர்.
.................................................................................................................
விடிவெள்ளியும் மீனவர்களும்
சூரியனைத் தவிர்த்து மிக வெளிச்சமாக விளங்கும் கோள் வெள்ளிக்கோள். இது
பூமியின் அருகில் இருக்கும்போது அதன் ஒளி 4.9 ஆகவும், சூரியன் பின்னோக்கி வீசும்போது
இதன் ஒளி 3 ஆகவும் மங்குகின்றது. காற்றின் துணைகொண்டு
மட்டுமே பாய்விரித்து பெரிய மரக்கலன்கள் அரபிக்கடலிலும் இந்துமகா சமுத்திரத்திலும்
பயணிக்கும். அப்போது அவர்களின் வழிகாட்டியாகவும், திசைகாட்டியாகவும் காலநிலைகளை உணர்த்தும்
கருவியாகவும் வெள்ளி திகழ்ந்திருக்கிறது. உதாரணமாக, கோடைக்காலங்களில் வெள்ளி மிகவும்
அதிகமாக மிளிரும். குளிர்காலங்களில் மங்கலாகவும் மழைக்காலங்களில் தொலைவில் இருப்பது
போலவும் காணப்படும். கோடைக்காலங்களில் வெள்ளி அதிக அளவு மின்னும் போது கடலில் புயல்கள்
வரும் சூழல் உள்ளதைப் புரிந்து கொண்டு அதற்கான பாதுகாப்பு முறையைக் கையாண்டனர். கோடைக்காலங்களில்
கடல்மட்டத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக சில இடங்களில் வெற்றிடம் தோன்ற அந்த வெப்பச்சலனத்தால்
சூறாவளியுடன் கூடிய மழை உண்டாகிறது. இதுபோன்ற காலமாற்றம் ஏற்படும் வேளைகளுக்கு முன்பு
வெள்ளி அதிகமாக ஒளிவிட ஆரம்பிக்கிறது. இதிலிருந்து நமது மூதாதையர்கள் சூறாவளியின் அளவைக்
கணக்கிட்டு கடலில் பயணம் செய்துள்ளனர்.
இணையக் குறிப்பு
·http://www.periyarpinju.com/new/yearof2014/74-january-2014/1790--7.html
· https://ta.wikipedia.org/wiki
Indhumathi
பதிலளிநீக்குB.com general 👌🏻👌🏻
Naresh
பதிலளிநீக்குB.com general
Super material amma
மிக்க மகிழ்ச்சி. நன்றி
நீக்குநன்றி. மிக்க மகிழ்ச்சி
நீக்கு